Sunday, July 28, 2019

நள வெண்பா - எரிகின்ற தென்னோ இரா

நள வெண்பா - எரிகின்ற தென்னோ இரா


நடைமுறை வாழ்கை ஒரு நேரம் இல்லையென்றால் மற்றொரு நேரம் சலிப்பு தருவதாய் அமைந்து விடுகிறது. துன்பமும், குறையும், வருத்தமும் , வலியும் அவ்வப்போது வந்து போகாமால் இருக்காது.

அப்படி அலுப்பும், சலிப்பும் வரும்போது, இலக்கியத்துக்குள் புகுந்து விட வேண்டும்.

அது ஒரு தனி உலகம்.

எப்படி அந்த உலகத்துக்குள் போவது?

மனோ இரதம் என்று ஒன்று இருக்கிறது. அதில் ஏறினால் உடனே போய் விடலாம்.

"அட இப்படியும் கூட இருக்குமா" என்று ஆச்சரியப்பட வைக்கும்.

"அடடா , நமக்கு இப்படி தோன்றவில்லையே" என்று  நம் அறிவின் எல்லைகளை விரிவாக்கும்.

"ஹ்ம்ம்...எனக்கு எப்படி ஒரு எண்ணம் , உணர்ச்சி தோன்றி இருக்கிறது " என்று நம் வாழ்வை உரசி விட்டுச் செல்லும்.

பிரிவு.

காதலன்/காதலி பிரிவு. கணவன்/மனைவி பிரிவு, பெற்றோர் பிள்ளைகள் பிரிவு,  நண்பர்கள் பிரிவு ...என்று பிரிவு என்பது நம் வாழ்வின் நிகழும் அடிக்கடி நிகழும் சம்பவம்.

பிரிவு துன்பம் தரும்.

அதிலும் காதலன் காதலி பிரிவு ஒரு ஏக்கம், காமம், காதல், பாசம் என்று எல்லாம் கலந்து ரொம்பவும் படுத்தும் .

நளனை பிரிந்த தமயந்தி தனிமையில் வருந்துகிறாள்.

இரவுப் பொழுது. குளிர்ந்த நிலா. இருந்தும் அவளுக்கு அது சூடாக இருக்கிறது. காமம்.

"இந்த இரவு ஏன் இவ்வளவு சூடாக இருக்கிறது? ஒரு வேளை இந்த நிலவு சூரியனை விழுங்கி விட்டதா? அதனால் தான் இவ்வளவு சூடாக இருக்கிறதா? இல்லை, என் மார்பகத்தில் இருந்து எழுந்த சூட்டால் இந்த உலகம் இவ்வளவு சூடாகி விட்டதா? அல்லது இந்த நிலவின் கதிர் வெப்பத்தை பரப்புகிறதா ? ஒன்றும் தெரியவில்லையே " என்று பிரிவில் தவிக்கிறாள்.

பாடல்


வெங்கதிரோன் தன்னை விழுங்கிப் புழுங்கியோ
கொங்கை அனலில் கொளுந்தியோ - திங்கள்
விரிகின்ற வெண்ணிலவால் வேகின்ற தேயோ
எரிகின்ற தென்னோ இரா.

பொருள்


வெங்கதிரோன் = வெம்மையான கதிர்களை உடைய சூரியன்

தன்னை = அவனை

விழுங்கிப் புழுங்கியோ = விழுங்கியதால் இந்த இரவு இப்படி புழுங்குகிறதா ?

கொங்கை = என் மார்பகத்தின்

அனலில் = சூட்டில்

கொளுந்தியோ = கொளுத்தப்பட்டா ?

திங்கள் = நிலவு

விரிகின்ற = பரந்து

வெண்ணிலவால் = வெண்மையான இந்த நிலவால்

வேகின்ற தேயோ = வேகின்றதோ

எரிகின்ற தென்னோ இரா. = ஏன் இந்த  இரவு எரிகிறது

நாமும்தான் தினமும் இரவையும் பகலையும் பார்க்கிறோம்.

நமக்கு என்றாவது தோன்றியது உண்டா, இரவு சூரியனை விழுங்கி இருக்கும் என்று.

கற்பனை விரிய விரிய மனம் விரியும்.

மனம் விரியும் போது, வானம் வசப்படும்.

பலவித வேலைகளுக்கு நடுவில், நல்ல இலக்கியத்துக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.

அது உங்கள் மன வளர்சிக்கு வித்திடும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_43.html

2 comments:

  1. அருமை... அருமையான பதிவுகள்... வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. இரவின் சூட்டுக்கு மூன்று காரணங்கள்! அருமை

    ReplyDelete