Tuesday, July 30, 2019

திருவருட்பா - தயவு செயல் வேண்டும்

திருவருட்பா - தயவு செயல் வேண்டும் 


நம்மால் என்ன செய்ய முடியும்.

தலை முடி நரைக்கிறது. அதை நிறுத்த முடியுமா? நம் தலை முடி, நம் கட்டுப்பாட்டில் இல்லை.

நேற்று படித்தது இன்று மறந்து விடுகிறது.

இதில் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், சில பல புத்தகங்களை படித்து, தினம் சில பாடல்களை மனப்பாடமாக கிளிப் பிள்ளை போல் ஒப்பித்து, கற்பூரம், ஊதுவத்தி கொளுத்தி இது போன்ற சடங்குகளை செய்து நேரே ஸ்வர்கம் போய் விடலாம் என்று.

நம்முடைய ஆணவம்தான் எவ்வளவு பெரிதாக இருக்கிறது.

நினைத்த நேரம் தூங்க முடிவதில்லை, ஆசைப் பட்டதை சாப்பிட முடியவில்லை, சாப்பிட்டதை எல்லாம்  செரிக்க முடிவதில்லை, நம் கணவனோ, மனைவியோ, பிள்ளையோ நாம் சொல்வதை கேட்பதில்லை, இருந்தும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் நாம் பெரிய ஆள் என்று.

நாம் விரும்பியதை நம்மால் செய்ய முடியுமா ? நினைத்ததை பேச முடியுமா ? மனதில் பட்டதை சொல்லவாவது முடியுமா ?

நம்மிடம் ஒரு சுதந்திரமும் இல்லை.

வள்ளலார் சொல்கிறார், இறைவனிடம்

"என்னால் ஒரு துரும்பைக் கூட அசைத்து எடுக்க முடியாது. எனக்கு ஒரு சுதந்திரமும் இல்லை. இறைவா, நீ தான் பெரிய ஆள். தயவு செய்து எனக்கு உதவி செய். உன் அருள் இல்லாமல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது"

பாடல்

“என்னாலோர் துரும்பும் அசைத்தெடுக்க முடியாதே
எல்லாஞ் செய் வல்லவன் என்றெல்லாரும் புகழும்
நின்னால் இவ்வுலகிடை நான் வாழ்கின்றேன் அரசே
நின்னருள் பெற்றழியாத நிலையை அடைந்திடவென்
தன்னாலோர் சுதந்தரமும் இல்லை கண்டாய் நினது
சகல சுதந்திரத்தை யென்பால் தயவு செயல் வேண்டும்”

பொருள்

“என்னாலோர் = என்னால் ஒரு

துரும்பும் அசைத்தெடுக்க முடியாதே = ஒரு சிறிய துரும்பைக் கூட அசைத்து எடுக்க முடியாதே

எல்லாஞ் = எல்லாவற்றையும்

செய் வல்லவன் = செய்யத்தக்க வல்லவன்

என்றெல்லாரும் = என்று எல்லாரும்

புகழும் = புகழும்

நின்னால் = உன்னால்

இவ்வுலகிடை = இந்த உலகத்தில்

நான் வாழ்கின்றேன் அரசே = நான் வாழ்கின்றேன் அரசே

நின்னருள் = உன்னுடைய அருளை

பெற்றழியாத = பெற்று , அழியாத

நிலையை அடைந்திடவென் = நிலையை அடைந்திட என்

தன்னாலோர் = தன்னால் ஓர்

சுதந்தரமும் = சுதந்திரமும்

இல்லை = இல்லை

கண்டாய் = கண்டு கொள்வாய்

நினது = உன்

சகல சுதந்திரத்தை = அனைத்து சுதந்திரத்தையும்

யென்பால் = என் பால்

தயவு செயல் வேண்டும்” = தயவு செயல் வேண்டும்

அதாவது, வள்ளலார் சொல்கிறார், எனக்குத்தான் சுதந்திரம் எதுவும் இல்லை. உனக்குத்தான்  எல்லா சுதந்திரமும் இருக்கிறதே. எனக்கு உதவி செய்ய உனக்கு என்ன  தடை. யார் உன்னை என்ன சொல்ல முடியும். கவலைப் படாமல், தயவுசெய்து எனக்கு உதவி செய் என்கிறார்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பார் மணிவாசகர்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_30.html

2 comments:

  1. மிக எளிமையான வார்த்தைகளால் சிறந்த விளக்கம். நன்றி.

    ReplyDelete
  2. இந்த பாடல் சற்று எளிதாக இருந்தாலும் அதை விளக்கின விதம் மிக அருமை! நன்றி.

    ReplyDelete