Saturday, July 20, 2019

நாலடியார் - யானும் அதனை அது

நாலடியார் - யானும் அதனை அது 



செல்வத்தை சேர்க்கத் தெரிய வேண்டும், அனுபவிக்கத் தெரிய வேண்டும், சேமிக்கத் தெரிய வேண்டும்.

இந்த மூன்றும் தெரிந்தவர் உலகில் மிகச் சிலரே.

சிலர் நன்றாக சம்பாதிப்பார்கள். ஆனால், சம்பாதித்த செல்வத்தை அனுபவிக்கத் தெரியாமல் இருப்பார்கள்.

சிலர் தாட் பூட் என்று செலவழித்து அனுபவிப்பார்கள், செல்வத்தை சம்பாதிக்கத் தெரியாது. கடனை உடனை வாங்கி ஆடம்பரமாக வாழ்வார்கள்.

சம்பாதித்தாலும், செலவழித்தாலும், பிற் காலத்துக்கு வேண்டுமே என்று சரியான வழியில் அதை முதலீடு செய்யத் தெரிந்தவர்கள் மிகச் சிலரே.

சாலையில் ஒரு ஏழை போய்க் கொண்டிருந்தான். அந்த சாலையில் ஒரு பெரிய பணக்காரன் வீடு இருந்தது. அந்த வீட்டில், அந்த வீட்டின் உரிமையாளனான பணக்காரன் தோட்டத்தில் அமர்ந்திருந்தான்.

அவனைப் பார்த்த அந்த ஏழைப் பிச்சைக்காரன் சொன்னான்

"நானும் அவனும் ஒன்று" என்று.

"அது எப்படி நீயும் அவனும் ஒன்றாக முடியும். அவனோ பத்து தலைமுறைக்கு  சொத்து சேர்த்து வைத்திருக்கிறான். உன்னிடமோ அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழி இல்லை.  நீங்கள் இரண்டு பேரும் எப்படி ஒன்றாக முடியும்" என்று கேட்டார்கள்.

பிச்சைக்காரன், "அந்தப் பணக்காரன் அவன் வைத்திருக்கும் பொருளை என்னுடையது என்னுடையது என்று சொல்லிக் கொண்டு திரிகிறான். நானும் எனது பொருளை எனது எனது என்று சொல்லித் திரிகிறேன்.  அவனிடம் உள்ளை செல்வத்தை அவன் யாருக்கும் வழங்குவது இல்லை. நானும் என்னிடம் உள்ள செல்வத்தை யாருக்கும் கொடுப்பது இல்லை. அவன் தன்னுடைய செல்வத்தை அனுபவிக்காமல் இருக்கிறான். நானும், என் செல்வத்தை அனுபவிக்காமல் இருக்கிறேன். எங்களுக்குள் என்ன பெரிய வேறுபாடு ?"

என்கிறான்.

நகைச்சுவையான அந்தப் பாடல்

எனதென தென்றிருக்கும் ஏழை பொருளை
எனதென தென்றிருப்பன் யானும்;- தனதாயின்
தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான்;
யானும் அதனை அது.


பொருள்


எனதென தென்றிருக்கும் = எனது எனது என்று இருக்கும்

ஏழை = ஏழை

பொருளை = பொருளை

எனதென தென்றிருப்பன் யானும்; = எனது எனது என்று இருப்பேன் நானும்

தனதாயின் = அவனுடையது என்றால்

தானும் அதனை வழங்கான்  = அவன் அதை மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டான்

பயன்துவ்வான்; = அந்த செல்வத்தின் பயனை அவனும் அனுபவிக்க மாட்டான்

யானும் = நானும்

அதனை = அதே போல்

அது. = அதைச் செய்கிறேன்.

பணக்காரனிடம், பணம் இருக்கிறது.

நல்ல பெரிய கார் வாங்கலாம் - வாங்கவில்லை, ஆட்டோவில் போய் வந்து கொண்டிருக்கிறான் என்று   வைத்துக் கொள்வோம். அவனுக்கும், அதே போல்  ஆட்டோவில் போய் வந்து கொண்டிருக்கும் ஏழைக்கும் (பிச்சை காரனாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை )  என்ன வித்தியாசம்.

ஏழை மற்றவர்களுக்கு தானம் செய்ய முடியாது.  அவனிடம் போதிய பணம் இல்லை.

பணக்காரன் தானம் செய்ய மாட்டான். இருவருக்கும் என்ன வித்தியாசம்.

பணம் இருந்தால் அனுபவிக்க வேண்டும். மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ வேண்டும்.

இரண்டும் இல்லை என்றால், அந்த பணம் இருந்தும் ஒன்று தான், இல்லாததும் ஒன்றுதான்.

அனுபவிக்கவும், தானம் செய்யவும் தெரியாத பணக்காரன் , ஏழைக்கு சமம் என்கிறது  இந்த நாலடியார்.

பணம் இருந்தால், அனுபவியுங்கள், முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_20.html


1 comment:

  1. பணம் இருந்தாலும், இன்றைக்கு எவ்வளவு செலவழிப்பது, நாளைக்கென்று எவ்வளவு வைப்பது என்பதுதானே கேள்வி.

    ReplyDelete