Sunday, July 21, 2019

நள வெண்பா - பெண்ணிடம் பணியாதார் யார்?

நள வெண்பா - பெண்ணிடம் பணியாதார் யார்?


பெண்ணின் கை தீண்டலுக்கு பணியாதவர் யார் இருக்கிறார்கள் என்று கேட்கிறார் நளவெண்பா எழுதிய புகழேந்தி.

பெண் தொட்டால் போதும், அந்த தொடுகைக்கு அவ்வளவு சக்தி உண்டு. அது தொடுபவரை, அந்த அன்பில், கருணையில் பணிய வைக்கும்.

அதுதான் பெண்ணின் சக்தி. பெருமை.

அது பெண், பெண்ணாக இருக்கும் வரை. ஆனால், கால மாற்றத்தில் பெண்கள், நாங்களும் ஆண்கள் போல ஆக வேண்டும் என்று மாறி வருகிறார்கள்.

நாங்களும் குஸ்தி போடுவோம், கமாண்டோ படையில் சேர்வோம், என்று ஆணுக்கு நிகராக, ஆணாகவே ஆக விரும்புகிறார்கள்.

அப்படித்தான் வேண்டும் என்றால், இயற்கை ஏன் ஆண் , பெண் என்று இரண்டு இனத்தைப் படைக்க வேண்டும்?  எல்லாம் ஆணாகவே படைத்து விட்டுப் போய் விடலாமே.

ஆண் எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும், பல சாலியாக இருந்தாலும், பெண்ணின் கை பட்ட மாத்திரத்தில் அவள் காலில் விழுவான் என்கிறார்.

அது படைப்பின் நோக்கம்.

வலிமையான ஆணை, மென்மையான பெண்ணின் முன் மண்டியிட வைத்தது இயற்கையின் பேராற்றல்.

இதை அறிந்து கொள்ளாமல், பெண்கள் அந்த பேராற்றலை விட தங்களுக்கு நிறைய தெரியும் என்று ஏதேதோ செய்து வருகிறார்கள்.


சரியா தவறா என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

நளனும் தமயந்தியும் தேரில் வந்து கொண்டு இருக்கிறார்கள். வரும் வழியில் உள்ள சோலைகளில், பெண்கள் பூ பறித்துக் கொண்டிருக்கிறார்கள். கிளையின் மேலே உள்ள பூக்களைப் பறிக்க அவர்கள் அந்த கொம்பை சற்றே இழுத்து வளைக்கிறார்கள். அதை கண்ட புலவனின் மனதில் கற்பனை பிறக்கிறது.

பெண்களின் கை பட்டதால், அந்த மரமே தாழ்ந்து அவர்களின் காலில் விழுந்த மாதிரி இருந்தது என்கிறான். பெண்ணின் கை பட்டால் யார் தான் பணிய மாட்டார்கள், இந்த பூ மரம் மட்டும் என்ன விதி விலக்கா என்று கேட்கிறான்.

பாடல்

‘பாவையர்கை தீண்டப் பணியாதார் யாவரே?
பூவையர்கை தீண்டலும்ப் பூங்கொம்பு – மேவியவர்
பொன்னடியில் தாழ்ந்தனவே பூங்குழலாய்!காண்! என்றான்
மின்னெடுவேற் கையான் விரைந்து.


பொருள்

‘பாவையர்கை = பெண்களின் கை

தீண்டப் = தீண்டினால்

பணியாதார் யாவரே? = அதற்கு பணியாதவர் யார்? (ஒருவரும் இல்லை)

பூவையர்கை = பெண்களின் கை

தீண்டலும்ப் = தீண்டப் பட்டவுடன்

பூங்கொம்பு  = மரத்தில் உள்ள பூங்கொம்பு

மேவியவர் = அந்த பெண்களின்

பொன்னடியில் = பொன் போன்ற அடிகளில்

தாழ்ந்தனவே = தாழ்ந்து வந்தது

பூங்குழலாய்!காண்!  = பூங்குழலாய் (தமயந்தியே ) கான்

என்றான் = என்று கூறினான் (நளன் )

மின்னெடு = மின்னல் போன்ற

வேற் கையான் = வேலை கையில் கொண்டவன்

விரைந்து. = வேகமாக

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_21.html

3 comments:

  1. "பெண்கள் மென்மையானவர்கள்" என்று சொல்வது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் அவர்களை குஸ்தி போடாக கூடாது என்று சொல்வது என்ன நியாயம்? "Dangal" படம் மட்டும் பார்த்துக் கைதட்டவில்லையா?

    ReplyDelete
    Replies
    1. காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று பதிவில் குறிப்பிட்டு உள்ளாரே.

      Delete
  2. பதிவில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் எல்லாத் துறையிலும் சிறந்து விளங்குவது சரி இல்லை எனக் கூறுவது போல் படுகிறதே. சிறப்பாக செயல் பட்டால் பெண்களின் பெண்மையோ வசீகரிக்கும் தன்மையோ சற்றும் குறையாது.
    பெண்ணின் கை பட்டதால் கிளையும் சாய்ந்து பணிகிறது என்கிற ஒரு பார்வை மிக அழகாக உள்ளது.

    ReplyDelete