Wednesday, July 3, 2019

கம்ப இராமாயணம் - பெண் பிறந்தேன் பட்ட பிழை

கம்ப இராமாயணம் - பெண் பிறந்தேன் பட்ட பிழை 


சூர்பனகையை, முடியைப் பிடித்து இழுத்து, தரையில் தள்ளி, காலால் எட்டி உதைத்து, அவளின் மூக்கையும், காதுகளையும், முலையையும் வெட்டினான் இலக்குவன்.

(நான் இதை மீண்டும் சொல்லக் காரணம், சிலர் முந்தைய ப்ளாகுகளை பார்த்திருக்க மாட்டார்கள். நேரடியாக இந்த ப்ளாகுக்கு வந்திருப்பார்கள். எனவே ஒரு முன்கதை சுருக்கம் போல சொல்லுகிறேன்).

சூர்ப்பனகை வலியால் துடிக்கிறாள்.

உடல் வெட்டுப் பட்ட வலி ஒரு புறம். பெண்மையின் அடையாளங்கள் போய் விட்டனவே, இனி எப்படி வெளியில் தலை காட்ட முடியும் என்ற வலி ஒரு புறம்.

அவளின் துயரத்தை கம்பன் படம் பிடிக்கிறான்.

கல் உருகும், புல் உருகும் அவளின் துயரத்தைக் கண்டால்.


"வலியால் துடித்து ஆகாயத்துக்கு எழுவாள். பின் அங்கிருந்து மண்ணில் விழுவாள். தரையில் கிடந்து புரளுவாள். அயர்ந்து போவாள். கை எல்லாம் நடுங்கும். என்ன செய்வோம் என்று திகைத்து நிற்பாள். உயிர் தளர்ந்து நிற்பாள். நான் பெண்ணாய் பிறந்ததால் வந்த பிழை என்று பிதற்றுவாள். வருந்துவாள். துயரம் அவர்களை தொட அஞ்சிய பழைய குடி மரபில் பிறந்த அவள் "

பாடல்



உயரும் விண்ணிடை; மண்ணிடை
    விழும்; கிடந்து உழைக்கும்;
அயரும்; கை குலைத்து அலமரும்;
    ஆர் உயிர் சோரும்;
பெயரும்; ‘பெண் பிறந்தேன் பட்ட
    பிழை ‘எனப் பிதற்றும்;
துயரும் அஞ்சி முன் தொடர்ந்திலாத்
    தொல் குடிப் பிறந்தாள்.


பொருள்


உயரும் விண்ணிடை = வானத்துக்கு போவாள்

மண்ணிடை விழும்; = அங்கிருந்து மண்ணில் விழுவாள்

கிடந்து உழைக்கும் = தரையில் கிடந்து வருந்துவாள்

அயரும்; = சோர்வாள்

கை குலைத்து = கைகளை பிசைந்து கொண்டு

அலமரும் = சுழலுவாள் . சுத்தி சுத்தி வருவாள்.

ஆர் உயிர் சோரும்; = அருமையான உயிர் சோர்ந்து நிற்பாள்

பெயரும் = உரு இடத்தை விட்டு இன்னொரு இடத்துக்குப் போவாள். அங்கும் இங்கும் நடப்பாள்

‘பெண் பிறந்தேன் பட்ட பிழை ‘எனப் பிதற்றும்; = நான் பெண்ணாய் பிறந்ததால் வந்த பிழை  என்று பிதற்றுவாள்

துயரும் = துயரமும்

அஞ்சி  = அச்சப்பட்டு

முன் = முன் எப்போதும்

தொடர்ந்திலாத் = அவர்களை தொடர்ந்திலாத

தொல் குடிப் பிறந்தாள். = பழைய குடியில் பிறந்தவள்


நமக்கெல்லாம் அப்பப்ப ஏதாவது துயரம் வரும். ஒண்ணும் இல்லாவிட்டாலும், தலை வலி, ஜலதோஷமாவது வந்து துன்பம் தரும்.

சூர்ப்பனகையின் குலத்தையே துன்பம் தொடர அஞ்சுமாம். "ஐயோ, நமக்கு எதுக்குடா  வம்பு" என்று துயரம் அவர்களை விட்டு விட்டு ஓடி விடுமாம். துயரம் என்றால்  என்ன என்றே அறியாத குலம் அவள் குலம்.

பெண்ணாய் பிறந்ததால் தானே இந்தத் துன்பம் என்று தன்னைத் தானே நொந்து கொள்கிறாள்.   பெண்ணாய் பிறந்ததால், ஆண் மீது வந்த காமம். பெண்ணாய் பிறந்ததால் இப்படி  முலை அறுபட்டு நிற்கும் அவலம் என்று தன்  பெண்மையையே அவள் நொந்து கொள்கிறாள்.

என்ன இருந்தாலும் அவள் ஒரு பெண். அதுவும் நிராயுதபாணியாக நின்றவள்.  அவளும் சண்டைக்கு வந்திருந்தாலாவது, ஓரளவு சமாதானம் சொல்லலாம். ஒரு நிராயுதபாணியோடு சண்டையிட்டு, அதுவும் ஒரு பெண்ணோடு  சண்டையிட்டு, அவளை இவ்வாறு செய்தது...ஏதாவது அவதார நோக்கமாக இருக்கலாம்.

சரி, அது என்ன அவதார நோக்கம்.


இராவணனை அழிப்பதுதான் அவதார நோக்கமா?

இராவணனை, ஏன் அழிக்க வேண்டும் ?  அவன் என்ன தவறு செய்தான்?

தேவர்களை சிறை வைத்தான். சரி, அது தவறு என்றால், நேரடியாக சென்று சண்டை போட்டு, அவனை கொன்று, தேவர்களை விடுவிக்க வேண்டியதுதானே. யார் தடுத்தது?

தேவர்களை சிறை வைத்தது எப்படி பிழையாகும்? அவர்களோடு நேருக்கு நேர் (மறைந்து இருந்து அல்ல) நின்று சண்டை போட்டு, அவர்களை வென்று, தோற்றவர்களை சிறை வைத்தான்.  அது எப்படி தவறு ஆகும்? அது தவறு என்றால், வரலாற்றில் அனைத்து மன்னர்கள் செய்ததும் தவறு என்றே ஆகும் அல்லவா ? நேற்று நடந்த இந்தியா பாக்கிஸ்தான் போர் உட்பட.

தவறே செய்யாத ஒருவனை, தவறு செய்ய வைப்பதற்காகவே நிகழ்ந்த அவதாரமா, இராம அவதாரம்?

அது அல்ல இராவணன் செய்த தவறு. மாற்றான் மனைவியை கவர்ந்தான்  என்பதுதான்  அவன் மீதுள்ள குற்றமே தவிர தேவர்களை சிறை வைத்தது அல்ல.

மாற்றான் மனைவியை கவர்ந்தது அவதாரம் நிகழ்ந்த பிறகு. பின், அது எப்படி  அவதார நோக்கமாகும்?

அப்படி என்றால், இராவணன் சீதையை கவர்ந்து செல்ல வேண்டும் என்பதும் அவதார நோக்கமா? இராம அவதாரம் நிகழாவிட்டால், இராவணன் தவறு செய்திருக்க மாட்டான்.  சீதை இல்லை. மாற்றான் மனைவியை கவர்ந்த பிழை  அவனுக்கு வந்திருக்காது.

தேவர்களை மீட்க, சீதை பகடையாக பயன் பட்டு இருக்கிறாளா ? அவளை தூக்கிக் கொண்டு போகட்டும், அவளை மீட்கிற சாக்கில் அவனை கொன்று விடலாம்  என்பதுதான் அவதார நோக்கமா?

ஒரு வேளை , இராவணன் சீதையை தூக்கிக் கொண்டு போகாமல் இருந்திருந்தால், அவன் கொல்லப் பட்டு இருக்க மாட்டான். காலத்துக்கும் தேவர்கள் சிறை இருக்க வேண்டியதுதான்.  அவதார நோக்கம் ?

இவர்கள் அரசியலில் பகடை காய்களாக நகர்த்தப் பட்டவர்கள்தான் பெண்களா ?

"அப்பாடா, அவதாரம் செய்து, சீதையை திருமணம் செய்து கொண்டு, காட்டுக்கு வந்து, ஒரு வழியாக இராவணன் அவளை தூக்கிக் கொண்டு போய் விட்டான்.  இனி நாம் வந்த அவதார நோக்கமான இராவண வதத்தை    நிகழ்த்தலாம் " 



மேலும் சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_3.html


1 comment:

  1. இராவணன் தேவர்களை மட்டும் அல்ல, மற்றும் பிறரையும் துன்புறுத்தினான் என்று எண்ணினேன். எந்த வகையில் துன்புறுத்தினான் என்று படித்ததே இல்லை.

    ReplyDelete