Sunday, June 17, 2012

கம்ப இராமாயணம் - மாசு என்று வீசினேன்


கம்ப இராமாயணம் - மாசு என்று வீசினேன் 


அனுமன் சீதையை அசோகவனத்தில் பார்க்கிறான்.

அவனுக்கு துக்கம் தாங்கவில்லை.

"என் தோளின் மேல் ஏறிக்கொள், இப்போதே உன்னை இராமனிடம் சேர்பித்து விடுகிறேன்..மத்தது எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்" என்றான். 

சீதை பதில் சொல்கிறாள்....

"துன்பம் தரும் விலங்குகளைப் போல உள்ள இந்த இலங்கை எம்மாத்திரம் ? 

எல்லையில்லா இந்த உலகம் அனைத்தையும் என் ஒரு சொல்லினால் சுட்டு எரித்து விடுவேன்.

நான் அப்படி செய்தால், அது இராமனின் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று நினைத்து அந்த எண்ணத்தை கூட குற்றம் என்று நினைத்து தூக்கி எரிந்து விட்டேன்" என்றாள்

நினைத்துப் பாருங்கள்.

ஒரு வேளை சீதை அவளே இராவணனை எரித்து விட்டு, நேரே இராமன் முன் வந்து நின்றால், எப்படி இருந்திருக்கும்?

இராமனை பற்றி இந்த உலகம் என்ன நினைக்கும் ?

கட்டிய மனைவியை எதிரியிடம் இருந்து காப்பாற்றத் தெரியாதாவன் என்று அல்லவா நினைக்கும்?

அந்த நினைப்புக்கு இடம் தரா வண்ணம் சீதை பொறுமை காத்தாள்.

அந்தப் பாடல்

அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்.


அல்லல் = துன்பம் (தரும்)

மாக்கள் = விலங்குகள் (மனிதப் பண்பு அற்றவர்கள்)

இலங்கை அது ஆகுமோ? = (நிறைந்த) இந்த இலங்கை மட்டும் என்ன

எல்லை நீத்த = எல்லையே இல்லாத

உலகங்கள் யாவும் = அனைத்து உலகங்களையும்

என் சொல்லினால் = என் சொல்லினால்

சுடுவேன்; = சுட்டு எரித்து விடுவேன்

அது = அப்படி செய்தால், அது

தூயவன் = இராமனின்

வில்லின் ஆற்றற்கு = வில்லின் ஆற்றலுக்கு

மாசு என்று வீசினேன். = குற்றம் என்று வீசினேன்



3 comments:

  1. இது என் அப்பாவுக்குப் பிடித்த பாடல். மிக அழகான சொற்பிரயோகம். ஒரு சொல்லிலேயே சுட்டு விடுவாளாம், ஆனால் மாசு என்று வீசினாளாம். என்ன அழகு!

    நன்றி.

    ReplyDelete
  2. கேள்வி ஒன்று எழுகின்றது. வல்லமை படைத்த சீதையால் வந்தது மானல்ல, மாரீசன் என ஏன் அறியமுடியவில்லை? மேலும் இராவணனை அங்கேயே தூக்கும்போதே எரித்திருக்கலாமே.

    ReplyDelete
    Replies
    1. Yes, she could have prevented the whole incident of abduction. But recall the very need for the avatAram. It was ordained that Ravana should abduct sItA and refuse to surrender and hence the denouement was fixed---annihilation of Ravana. It was all a set plan which must carry through to the predetermined end. Even in lankA Rama sends angathan as an emissary to Ravana to avoid war by giving back SitA. He knew it would not happen as per the divine plan.

      Delete