Thursday, April 18, 2019

கம்ப இராமாயணம் - அறந்தலை நிற்ப தானேன்

கம்ப இராமாயணம் - அறந்தலை நிற்ப தானேன்


காதலர்கள் எப்போதும் ஒருவர் விரும்புவதையே மற்றவர் செய்வர். அவனுக்கு எது பிடிக்கும் என்று அறிந்து அவள் செய்வாள்.அவளுக்கு எது பிடிக்கும் என்று அறிந்து அவன் செய்வான்.

அவனுக்கு எந்த நிறம் பிடிக்கும் என்று அறிந்து அந்த நிறத்தால் உடை அணிவாள். அவளுக்கு எந்த உணவு பிடிக்கும் என்று அறிந்து அங்கே அவளை கூட்டிச் செல்வான். இப்படி ஒருவருக்கு பிடித்ததை மட்டுமே மற்றவர் செய்வர். அதனால் காதல் செய்யும் காலம் மிகவும் இனிமையாக இருக்கும்.

நடை முறை வாழ்க்கை என்பது அப்படி அல்ல. ஒரு நாளில் ஒரு சில மணி நேரம் வேண்டுமானால் அப்படி ஒருவருக்கு பிடித்த மாதிரி இன்னொருவர் இருக்கலாம். அதுவே நாள் பூராவும் செய்ய வேண்டும் என்றால் முடியாது. சிக்கல் வரும். மனக் கசப்பு வரும். சண்டை வரும். நான் காதலித்த பெண்ணா இவள் என்று அவன் மனம் சலிப்பான். அவள் நிலையம் அதுவே.

காதலித்து ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டு பின் திருமணம் செய்து கொள்வது நல்லது என்பது வாதத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். ஒருவரை மற்றவர் அறிந்து கொள்ள முடியுமா ?

சூர்பனகையிடம் இராமன் கேட்டான் "இராவணனின் தங்கை என்கிறாய்,பார்த்தால் அப்படி இல்லையே " என்று.

சூர்ப்பனகை இராமனை பார்க்கிறாள். பார்த்தால் தர்மவான் போல் தெரிகிறது. நல்ல குடும்பத்தில் பிறந்தவன் போலத் தெரிகிறது. அவனுக்கு என்ன சொன்னால் பிடிக்கும்   என்று யோசிக்கிறாள். சரி, அறம் , தர்மம், தவம் எல்லாம் அவனுக்கு பிடிக்கும் போலத் தெரிகிறது. எனவே, அவனுக்கு பிடித்த மாதிரியே பேசி விடுவோம் என்று "அந்த அரக்கர்கள் வாழ்வை நான் மதிக்கவில்லை. அற வழியில் நிற்க முடிவு செய்து, தவம் செய்து இந்த வடிவைப் பெற்றேன் " என்றாள்.

பாடல்

தூயவன் பணியா முன்னம் சொல்லுவாள் சோர்விலாள் அம் 
மாயவல் அரக்க ரோடு வாழ்வின மதிக்க லாதேன் 
ஆய்வுறு மனத்தேன் ஆகி  அறந்தலை நிற்ப தானேன் தீவினை 
தேய நோற்றுத் தேவரின் பெற்றது என்றாள் 


பொருள்

தூயவன் = தூய்மையான இராமன்

பணியா முன்னம்  = நீ எப்படி இப்படி இருக்கிறாய் சொல் என்று பணித்த பின்

சொல்லுவாள் = சொல்லுவாள்

சோர்விலாள் = சோர்வு இல்லாதவள்

அம் = அந்த

மாய = மாயைகளில்

வல் = வல்லவர்களான

அரக்க ரோடு = அரக்கர்களோடு

வாழ்வின = சேர்ந்து வாழும் வாழ்வை

மதிக்க லாதேன்  = மதிக்க மாட்டேன், விரும்பவில்லை

ஆய்வுறு மனத்தேன் ஆகி = ஆராயும் மனதை உடையவள் நான்

அறந்தலை நிற்ப தானேன் = அறத்தினை தலையாய கடமையாக கொண்டு அந்த நெறியில் நிற்பதானேன்

தீவினை தேய = நான் செய்த தீவினைகள் தேய

நோற்றுத் = தவம் செய்து

தேவரின் = தேவர்களிடம் இருந்து

பெற்றது என்றாள்  = பெற்றது இந்த தெய்வ வடிவு என்றாள்

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_18.html


1 comment:

  1. சாமர்த்தியமாகத்தான் பேசி இருக்கிறாள்.

    ReplyDelete