Sunday, April 21, 2019

கம்ப இராமாயணம் - மகளிர் சிந்தை நல் நெறி பால அல்ல

கம்ப இராமாயணம் - மகளிர் சிந்தை நல் நெறி பால அல்ல 


"உன்னிடம் ஒரு காரியம் ஆக வேண்டும்" என்று சூர்ப்பனகை சொன்னாள். அதை கேட்டவுடன் இராமன், "பெண்கள் மனதை யாராலும் அறிய முடியாது. பெரும்பாலும் அது நல்ல வழியில் செல்வது அல்ல. போகப் போக இவள் எண்ணம் என்ன என்று தெரியும்" என்று மனதில் நினைத்துக் கொண்டு "அழகிய வளையல்களை அணிந்த பெண்ணே, நீ மனதில் நினைத்து வந்த காரியத்தை கூறு. முடிந்தால் செய்து தருகிறேன்" என்றான்.

பாடல்


அன்னவள் உரைத்தலோடும், ஐயனும், 
     'அறிதற்கு ஒவ்வா 
நல் நுதல் மகளிர் சிந்தை நல் 
     நெறிப் பால அல்ல; 
பின் இது தெரியும்' என்னா, 'பெய் வளைத் 
     தோளி! என்பால் 
என்ன காரியத்தை? சொல்; அஃது இயையுமேல் 
     இழைப்பல்' என்றான்.

பொருள்

அன்னவள் = அந்த சூர்ப்பனகை

உரைத்தலோடும் = சொன்னவுடன்

ஐயனும்,  = இராமனும்

'அறிதற்கு  ஒவ்வா = அறிந்து கொள்ள முடியாத

நல் நுதல் = சிறந்த  நெற்றியை உடைய

மகளிர் = பெண்கள்

சிந்தை = சிந்தனை

நல் நெறிப் பால அல்ல;  = நல்ல நெறியில் செல்பவை அல்ல

பின் இது தெரியும்' = பின்னால் இது தெரியும்

என்னா, = என்று

'பெய் வளைத் தோளி!  = வளையல்களை அணிந்த கைகளை உடையவளே

என்பால்  = என்னிடம்

என்ன காரியத்தை? = என்ன காரியம் வேண்டி வந்தாய்

சொல்; = சொல்

அஃது = அதை

இயையுமேல் = முடிந்தால்

இழைப்பல்' = செய்து தருகிறேன்

என்றான். = என்றான்


"அறிதற்கு ஒவ்வா  நல் நுதல் மகளிர் சிந்தை"


பெண்கள் மனதை அறிந்து கொள்ள முடியாது.

பெரிய பெரிய ஞானிகள், மேதாவிகள் எல்லாம் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.


ஆாழி என்ன அளவு படா வஞ்ச நெஞ்சப்
பாழான மாதர் மையல் பற்று ஒழிவது எந்நாளோ

கடல் போன்ற ஆழம் உள்ள வஞ்ச நெஞ்ச பாழான மாதர் என்று குறிப்பிடுகிறார்  தாயுமானவர் என்ற மிகப் பெரிய ஞானி.

அத்தி மலரும்  அருங்காக்கை வெண்ணிறமும் 
கத்துபுனல் மீன் பதமும் கண்டாலும் -பித்தரே 
கானார் தெரியற் கடவுளரும் காண்பாரோ 
மானார் விழியார் மனம் 

என்பது நீதி வெண்பா

பெண்ணின் மனம், கடவுளுக்கும் தெரியாது என்கிறது.


பெண் என படுவோ கேண்மோ ....ஓராயிரம் மனத்தவாகும் என்கிறது சீவக சிந்தாமணி.

ஒரு மனம் அல்ல, ஆயிரம் மனம் என்கிறது.

இராமன் ஒரு படி மேலே போகிறான்.

பெண் மனம் என்பது அறிய முடியாதது மட்டும் அல்ல, அது நல்ல வழியில் செல்வதும் அல்ல  என்கிறான்.

"மகளிர் சிந்தை நல்நெறிப் பால அல்ல"

சீதை உள்ளே இருக்கிறாள். அது இராமனுக்கும் தெரியும்.

இருந்தும் இராமன் சொல்கிறான்.

"....நித்தநித்தம் பொய்யடா பேசும் புவியின் மட மாதரை விட்டு உய்யடா உய்யடா உய்"

என்பார் பட்டினத்தடிகள்.


கணவன் தூங்கிய பின், அவன் கையை மெல்ல, அசையாமல்  எடுத்து தள்ளி வைத்து விட்டு , வெளியில் சென்று விட்டு வந்து உறங்குபவளை எப்படி நான் நம்புவேன் இறைவா கச்சியேகம்பனே என்று பாடுகிறார் பட்டினத்து ஸ்வாமிகள்

 கைப்பிடி நாயகன் தூங்கையிலே யவன்கையெடுத்து
அப்புறங்தன்னி லசையாமல் முன்வைத் தயல்வளவில்
ஒப்புடன்சென்று துயில்நீத்துப் பின்வந் துறங்குவளை
எப்படிநான் நம்புவேன்? இறைவா ! கச்சியேகம்பனே


கம்பன் பல பாடல்களை கவி கூற்றாக சொல்லி இருக்கிறான். அதாவது, இது என் கருத்து.  எந்த கதா பாத்திரத்தின் கருத்தும் அல்ல என்று கூறி இருக்கிறான்.  ஆனால், இந்தக் கருத்தை , இராமன் வாயிலாக சொல்ல வைக்கிறான் கம்பன்.

என்ன காரணமாக இருக்கும் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_21.html


2 comments:

  1. என்ன அநியாயம்!

    இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் அனைவருமே ஆண்கள். அவர்கள் பெண்களை நிந்திப்பதை நாம் புகழவும் வேண்டுமா? அவர்களுக்குத் தங்கள் ஆண்குறியை ஆடைக்குள் வைத்துக்கொள்ளத் தெரியவில்லை. அதை வீட்டுப் பெண்களை ஏசுகிறார்கள்.

    இராமன் ஜொள்ளு வழிகிறான். அதை விட்டு, சும்மா பெண்கள் வழி மோசமானது என்று எண்ணுகிறான். சுத்த நெறியில்லாத கயவாளித்தனம்.

    ReplyDelete
    Replies
    1. பொட்டச்சிங்க எப்போமே கேடிங்கதான்

      Delete