Saturday, April 20, 2019

கம்ப இராமாயணம் - நின்னை காணிய வந்தேன்

கம்ப இராமாயணம் - நின்னை காணிய வந்தேன் 


நீ எப்படி தனியாக வந்தாய் என்று சூர்பனகையிடம் இராமன் கேட்டான்.

அதைக் கேட்டவுடன் சூர்ப்பனகை " ஐயோ...அதை ஏன் கேட்கிறீர்கள். அவங்க கூட எல்லாம் நான் சேர்வதில்லை. மாறாக, தேவர்களையும், முனிவர்களையும் நான் அடைய விரும்புகிறேன். மேலும், உன்னிடம் ஒரு காரியம் உள்ளது. எனவே உன்னைக் காண வந்தேன்" என்றாள்.


பாடல்


வீரன் அஃது உரைத்தலோடும், 
     மெய்இலாள், 'விமல! யான் அச் 
சீரியரல்லார் மாட்டுச் 
     சேர்கிலென்; தேவர்பாலும் 
ஆரிய முனிவர்பாலும் அடைந்தனென்; 
     இறைவ! ஈண்டு ஓர் 
காரியம் உண்மை, நின்னைக் காணிய 
     வந்தேன்' என்றாள்.

பொருள்


வீரன் = இராமன்

அஃது உரைத்தலோடும், = அவ்வாறு கேட்ட பின் (நீ எப்படி தனியாக வந்தாய் என்று கேட்ட பின் )

மெய்இலாள், = உண்மை இல்லாதவளான சூர்ப்பனகை

'விமல! = மலம் என்றால் குற்றம். தவறு. வி என்றால் இல்லை என்று பொருள். விமலன், குற்றம் இல்லாதவன். தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவன் வி-நாயகன்

யான்  = நான்

அச் சீரியரல்லார் = அந்த சீர்மை இல்லாதவர்கள்

மாட்டுச் = பால், பக்கம்

சேர்கிலென்; = சேர மாட்டேன்

தேவர்பாலும் = தேவர்கள் பக்கமும்

ஆரிய முனிவர்பாலும்  = தவ முனிவர்கள் பக்கமும்

அடைந்தனென் = அடைந்தேன்

இறைவ! = தலைவா

ஈண்டு ஓர் = இங்கு ஒரு

காரியம் உண்மை = காரியம் வேண்டி

நின்னைக் காணிய வந்தேன்' = உன்னை காண வந்தேன்

என்றாள். = என்றாள்


தீயவர்கள் எப்போதும் நமக்கு பிடித்த வார்த்தைகளையே பேசுவார்கள். கேட்க மிக இனிமையாக இருக்கும்.


நம் நலம் விரும்புவார்கள் நம்மை கண்டிப்பார்கள். நம்மை, நமது விருப்பத்துக்கு மாறாக செயல்களை செய்யச் சொல்லி திருந்துவார்கள்.


நமக்கு கோவம் வரும்.


படி படி என்று பெற்றோர் உயிரை வாங்கினால் எந்த பிள்ளைக்குத்தான் கோபம் வராது?


ஆசிரியரை கண்டால் பிடிக்காது.


"வாடா, வீடியோ கேம் விளையாடலாம், சினிமாவுக்கு போகலாம், ஊர் சுற்றலாம், அரட்டை அடிக்கலாம் " என்று நண்பர்கள் கூப்பிட்டால் அது மிக இனிமையாக இருக்கும்.


சிரித்துப் பேச அல்ல நட்பு என்பது. தவறு கண்ட இடத்தில், தவறு செய்யும் நண்பனை இடித்துப் பேசி திருத்துவதுதான் நட்பு என்பார் வள்ளுவர்.


நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.



திருத்திச் சொல்ல ஆள் இல்லாத அரசன், எதிரி இன்றியும் கெட்டுப் போவான் என்பார் வள்ளுவர்.


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் 

கெடுப்பார் இலானும் கெடும். 

நம்மிடம் எப்போதும் சிரிக்க சிரிக்க பேசுபவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


இராமனுக்கு எப்படியெல்லாம் சொன்னால் அவன் மனம் குளிரும் என்று அறிந்து கொண்டு  அப்படி எல்லாம் பேசுகிறாள்.



உருவம் - மிக அழகாக இருக்கிறது.


பேச்சு - அதை விட இனிமையாக இருக்கிறது


அது தானே சிக்கல். நாம் அதில் மயங்கி தவறானவர் பின் போய் விடுகிறோம்.


சூர்ப்பனகை நமக்கு ஒரு பாடம்.


படித்துக் கொள்வோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/04/blog-post_20.html

No comments:

Post a Comment