Sunday, February 13, 2022

திருக்குறள் - இன் சொல் சொல்வதால் என்ன பயன் ?

 திருக்குறள் - இன் சொல் சொல்வதால் என்ன பயன் ?


திருவள்ளுவர் இன்சொல் சொல் என்கிறார். அப்படி சொல்வதால் என்ன பயன். எதுக்காக அவ்வளவு முயன்று இன்சொல் சொல்ல வேண்டும்? 


அல்லவை தேய அறம் பெருகும் என்று முந்தைய குறளில் கூறினார். 


அறம் பெருகிட்டு போகட்டும். அதனால் என்ன பயன் என்ற கேள்வி வரும் அல்லவா? அதற்கும் பதில் சொல்கிறார் வள்ளுவர்.


"பிறருக்கு பயன் தரும் இனிய சொல்லைச் சொன்னால், விரும்பபட்டதைத் தந்து ஒருவனுக்கு நன்மை தரும்"


என்கிறார். 


பாடல் 


நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_13.html


(pl click the above link to continue reading)


நயன் ஈன்று = விரும்பியதை தந்து 


நன்றி பயக்கும் = நலன் விளைவிக்கும் 


பயன்ஈன்று = பயன் தரக்கூடிய 


பண்பின் = இனிய சொல்லை 


தலைப்பிரியாச் சொல் = சேர்த்துச் சொன்னால் 



தெரிந்த சொற்கள் என்றாலும் புரியாத மாதிரி இருக்கும். 


நயன், நன்றி, பயன், தலைப்பிரியா என்ற சொற்கள் புரிந்த மாதிரி இருந்தாலும் கொஞ்சம் குழப்பமாகவும் இருக்கிறது. 


சொல்லுக்குப் பொருள் தெரிந்தாலும், குறளுக்கு பொருள் தெரிய வேண்டும் என்றால் பரிமேலழகரைத்தான் பிடிக்க வேண்டும். 


முதலாவது, "பண்பின்" என்ற சொல்லுக்கு இனிய சொற்களை கூறும் பண்பு என்று பொருள் சொல்கிறார். அது எப்படி, பண்பு என்றால் இனிய சொல் என்று கூறலாம்? பண்பு என்றால் எந்த பண்பாக வேண்டுமானாலும் இருக்கலாம் அல்லவா? "அதிகார முறைமையால் பெறப் பட்டது" என்கிறார். அதாவது, இந்த அதிகாரம் "இனியவை கூறல்" என்ற அதிகாரம். எனவே, இங்கே பண்பு என்பது இனிய சொற்களை கூறும் பண்பு என்று கொள்ள வேண்டும் என்கிறார். 


இலையில் இட்லி, சட்னி, சாம்பார், கேசரி இருக்கிறது. "இனிப்பு கொஞ்சம் கூட" என்றால் எதில் என்று கேட்க மாட்டோம் அல்லவா? கேசரியில் இனிப்பு கூட என்று அறிந்து கொள்கிறோம் அல்லவா? 


இரண்டாவது, "தலைப்பிரியா" என்றால் ஒரு வார்த்தை என்கிறார். தலை + பிரியா என்று பிரிக்கக் கூடாது. தலைப்பிரியா என்றால் சேர்ந்தே இருத்தல் என்று பொருள். 


எது சேர்ந்து இருக்க வேண்டும் ?


மூன்றாவது "பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியா". நாம் சொல்லும் சொல்லினால் பயனும் இருக்க வேண்டும். அதை இனிமையாகவும் சொல்ல வேண்டும். பயனும், இனிமையும் சேர்ந்தே இருக்க வேண்டும். 


நான்காவது, "பயன் ஈன்று" என்றால் என்ன? பயன் என்றால் பலன். புரிகிறது. என்ன பலன்? புரியவில்லை. பரிமேலழகர் கூறுகிறார் "கேட்பவனுக்கு இம்மை, மறுமை பயன் தந்து" என்கிறார். யாருக்குச் சொல்கிறோமா, அவனுக்கு இம்மைப் பயன் இருக்க வேண்டும் அல்லது மறுமைப் பயன் இருக்க வேண்டும். இரண்டும் இல்லாத சொல்லை சொல்லவே கூடாது. 


நாம் என்ன சொல்லப் போகிறோம். அதனால் கேட்பவருக்கு இம்மை, மறுமைப் பயன் ஏதாவது விளையுமா என்று யோசிக்க வேண்டும். எனக்குத் ஏதோ தெரியும் என்பதை காட்டுவதற்காக எதையும் சொல்லக் கூடாது. கேட்பவருக்கு பலன் விளைய வேண்டும். 


நான் பல பேரிடம் தேவை இல்லாமல் வாதம் செய்து இருக்கிறேன். அதனால் என்ன விளைந்தது என்று யோசிக்கிறேன். கேட்பவருக்கு ஒரு பலனும் இல்லை. அத்தனையும் வீண். இனிமேலாவது பயன் தராத சொற்களை பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று முயற்சி செய்வேன். 


நான்காவது, பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியா சொல்லை சொன்னால் என்ன ஆகும்? "நயன் ஈன்று நன்மை பயக்கும்" என்கிறார். பரிமேலழகர் சொல்கிறார் "ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்" என்று. 


நீதி என்றால் உலகுடன் ஒத்து வாழ்தல். பயனுள்ள சொல்லை இனிமையாக கூறினால் உலகில் எல்லோரும் நம்மிடம் அன்பாக இருப்பார்கள். எனவே அதை "நீதி" என்றார். நீதி என்றால் ஏதோ சட்டம், நீதி, ஒழுங்கு என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. ஊருடன் ஒத்துப் போகாததுதான் அநீதி. மறுமைக்கு அறத்தைத் தரும் என்கிறார். அதவாது இம்மைக்கும், மறுமைக்கும் பயன் தரும் என்கிறார். 


இப்போது குறளை மீண்டும் வாசிப்போம், கொஞ்சம் சொற்களை மாத்திப் போட்டு. 


பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச்  சொல் 

நயன் ஈன்று நன்மை பயக்கும் 


முயற்சி செய்வோம். 





No comments:

Post a Comment