Saturday, February 19, 2022

திருக்குறள் - வன்சொல்

திருக்குறள் - வன்சொல் 


நம்மிடம் யாராவது இனிமையாக, அன்பாக, ஆதரவாகப் பேசினால் நமக்கு எவ்வளவு இன்பமாக இருக்கிறது. அப்படி பேசுபவர்களிடம் நமக்கு ஒரு அன்பு பிறக்கிறது அல்லவா? அவர்களிடம் மேலும் மேலும் பேச வேண்டும் என்று தோன்றுகிறது அல்லவா? 


நம்மிடம் எரிந்து எரிந்து விழுபவர்களிடம், கோபம் கொள்பவர்களிடம், தவறான யோசனை சொல்பவர்களிடம் நமக்கு அன்பு பிறக்குமா? அப்படிப் பட்டவர்களை நாம் விரும்புவோமா? 


இது நம் அனுபவப் பாடம். யாரும் சொல்லித் தர வேண்டியது இல்லை. நம்மிடம் இனிமையாக பேசுபவர்களிடம் நாம் அன்போடு நட்போடு இருப்போம். மாறாக வேறு விதமாக பேசுபவர்களை விட்டு விலகி இருப்போம். 


அதுதானே யதார்த்தம். 


வள்ளுவர் அந்த யதார்த்தை அப்படியே திருப்பிப் போடுகிறார். 


உனக்கு ஒருவன் இன்சொல் சொன்னால் அது உனக்கு இனிமையாக இருக்கிறது அல்லவா? அப்படி இருக்க நீ எதற்கு மற்றவர்களுக்கு வன் சொல் சொல்கிறாய்? நீ அப்படி வன் சொல் சொன்னால், மற்றவர்கள் உன்னை வெறுப்பார்கள், உன்னை விட்டு விலகிப் போய் விடுவார்கள். வன் சொல் சொல்ல ஒரு காரணமும் இல்லை. அப்படி இருக்க, ஏன் வன் சொல்லை சொல்ல வேண்டும் என்று கேட்கிறார். 


பாடல் 


இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_19.html


(Please click the above link to continue reading)



இன்சொல்  = தன்னிடம் சொல்லப் பட்ட இனிய சொல் 


இனிதீன்றல் = தனக்கு இனிமை தருவதை 


காண்பான் = அறிந்து கொண்டவன் 


எவன்கொலோ = எவன்?


வன்சொல் வழங்கு வது. = மற்றவர்களுக்கு வன் சொல்லை வழங்குவது? சொல்லுவது? 


நம்மை மாதிரித் தானே மற்றவர்களும். 


இனிய சொல்லினால் ஆயிரம் பலன் இருக்கலாம். ஆனால், வன் சொல் சொல்லுவதால் ஒரு பலன் கூட இல்லை. பலன் இல்லாத ஒன்றைச் செய்வானேன்? 



இனியவை கூறல் என்ற அதிகாரத்தில், இனியவை கூறுவதை மட்டும் அல்ல. இனியவை அல்லாதவற்றையும் கூறக் கூடாது என்கிறார் வள்ளுவர். 


எப்போதும் இனியவை கூறுவேன், இடையிடையே கொஞ்சம் வன் சொல்லும் வரும் என்றால் அது கூடாது என்கிறார். 


எதிர்மறையானதையும் கூறி, அவற்றை விலக்கும் படியும் கூறுவார். 


கல்வி பற்றி கூறினால் போதாது என்று கல்லாமை பற்றியும் கூறுவார். 


ஈகை,ஒப்புரவு பற்றி கூறினால் மட்டும் போதாது என்று பொறாமை, சினம் பற்றியும் கூறுவார். 


இன் சொல் கூற வேண்டும். 


வன் சொல் கூறவே கூடாது. 


இதை விட எப்படி தெளிவாகச் சொல்வது?


இன்சொல் சொல்ல முடியவில்லையா, பேசாமல் இருந்து விட வேண்டும். வன் சொல் சொல்லக் கூடாது. 


ஒரு முறை திருப்பிப் பார்ப்போம்.


கடவுள் வாழ்த்து 

வான் சிறப்பு 

நீத்தார் பெருமை 

அறன் வலியுறுத்தல் 

இல்வாழ்க்கை 

வாழ்க்கைத் துணை நலம் 

புதல்வர்களைப் பெறுதல் 

அன்புடைமை

விருந்தோம்பல் 


வரை பார்த்தோம். இப்போது இனியைவை கூறல் பற்றி படித்துக் கொண்டு இருக்கிறோம். 


கல்யாணம் பண்ணி, மனைவி, குழந்தைகள் என்று குடும்பம் வந்த பின், அன்பு பெருகும். அது வீட்டைத் தாண்டி வெளியிலும் பெருகும். சுற்றமும் நட்பும் வீடு தேடி வரும். விருந்தை உபசரிக்க வேண்டும். 


எப்படி என்றால், இனிய சொல் வேண்டும். இனிமையாக பேசாவிட்டால் நம்மை நாடி ஒருவரும் வரமாட்டார்கள். விருந்து என்பது இல்லாமல் போகும். 


விருந்து தடைப்பட்டால் இல்லறம் என்ற தேர் மேலே செல்லாது. 


தன் மனைவி, குழந்தை என்று வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டியதுதான்.  


வீடு பேறு என்பதெல்லாம் மறந்து விட வேண்டும். 


நம்மை கை பிடித்து வீடு பேற்றுக்கு அழைத்துச் செல்கிறார் வள்ளுவர். இனியவை கூறல் என்பது ஒரு படி. அதைத் தாண்டி மேலே போக நிறைய இருக்கிறது. 


இவற்றை எல்லாம் பழகிக் கொள்ள வேண்டும். நடைமுறையில் கொண்டு வர வேண்டும். 


1 comment:

  1. Luke 6:31:
    And as you wish that others would do to you, do so to them.

    ReplyDelete