Wednesday, February 9, 2022

திருக்குறள் - நல்லதையும் எப்படிச் சொல்ல வேண்டும்

திருக்குறள் -  நல்லதையும் எப்படிச் சொல்ல வேண்டும் 


பேசுவதில்தான் எவ்வளவு இருக்கிறது !


நல்லதை பேசுவதற்கும் ஒரு முறை இருக்கிறது. 


"நீ நல்லா படிக்கேலேனா மாடு மேய்க்கத்தான் போற" என்று பல வீடுகளில் பெற்றோர்கள் பிள்ளைகளை கடிந்து கொள்வார்கள். அவர்கள் நினைவு நல்லதுதான். பிள்ளை நல்லா படித்து பெரியவனாக வேண்டும் என்பதுதான் எண்ணம். சொன்னதும் நல்லது நடக்க வேண்டும் என்றுதான். ஆனால், சொல்லிய முறை சரி அல்ல. 


இது ஒரு உதாரணம். இப்படி பல சொல்லிக் கொண்டே போகலாம். 


மனைவிக்கு ஏதோ விடயத்தில் செலவழிக்க வேண்டும் என்று ஆசை - ஒரு வெளிநாடு சுற்றுலா, ஒரு வீடு, நல்ல கார் என்று ஏதோ ஒன்று வாங்க வேண்டும். கணவனுக்கோ பணத்தை சேர்த்து வைக்க வேண்டும். பிள்ளைகளின் எதிர்காலம் என்று. ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் செய்து மனக் கசப்பு ஏற்படலாம். இருவரும் நல்லதுக்குத்தான் பாடு படுகிறார்கள். ஆனால், அதை இனிமையாக பேசுவது இல்லை. 


வேலை பார்க்கும் இடத்தில், உறவில், நட்பில் என்று அனைத்து இடங்களிலும், நல்லதுதானே சொல்கிறேன் என்று அதை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைக்கக் கூடாது. அதையும் இனிமையாக கூற வேண்டும். 


அது மட்டும் அல்ல, நாம் இன்று பார்க்க இருக்கும் குறள் பல ஆழ்ந்த அர்த்தங்களை உள்ளடக்கியது. விரிவாக பார்ப்போம்.


பாடல் 

 

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_9.html


(Please click the above link to continue reading)


அல்லவை தேய = பாவம் தொலைய 


அறம்பெருகும் = அறம் பெருகும் 


நல்லவை = நல்லவற்றை 


நாடி = விரும்பி 


இனிய சொலின் = இனிமையாக சொன்னால் 


மேலோட்டமான பொருள் இவ்வளவுதான். 


இதில் எவ்வளவு இருக்கிறது தெரியுமா? ப்ளாகின் முடிவில் உங்களுக்கே ஒரு பிரமிப்பு வரும். 


முதலாவது, "அல்லவை தேய". அல்லவை என்றால் மற்றவை என்று அர்த்தம். அது என்ன மற்றது? அது புரிய வேண்டும் என்றால் அடுத்த சொல்லைப் பார்க்க வேண்டும். "அறம் பெருகும்" என்கிறார். அப்படி என்றால் அறத்துக்கு எதிரான பாவம் தேயும் என்று அர்த்தம். பெருகுதல். அதன் எதிர்பதம் தேய்தல். அறம் பெருகும் என்றதால் அதன் எதிர்பதமான பாவம் தேயும். 


இரண்டாவது, நம்மால் புண்ணியத்தை தேட முடியும். நல்ல காரியங்கள் செய்தால் புண்ணியம் வளரும். ஆனால், முன் செய்த பாவம் எப்படி போகும்? ஒரு புண்ணியத்துக்கு ஒரு பாவம் என்று கணக்கை நேர் செய்ய முடியாது. அது வேறு கணக்கு, இது வேறு கணக்கு. நாம் முன் செய்த பாவம் நம்மை தேடி வரும். ஆனால், புண்ணியம் செய்தால் அந்த பாவம் நம்மை பற்ற எண்ணி, முயன்று முயன்று தேய்ந்து போகும். அதன் வலிமை குன்றும் என்கிறார். நேற்றைய ப்ளாகில் "தவத்தின் முன் நில்லா பாவம்" என்ற நாலடியார் பற்றி சிந்தித்தோம்.  அறம் வளர பாவம் தேயும். 


நமக்கு இரட்டிப்பு பலன். ஒரு புறம் அறம் வளர்கிறது. இன்னொரு புறம் பாவம் தேய்கிறது. 


மூன்றாவது, "நல்லவை நாடி". ஒருவரிடம் பேசப் போகிறோம் என்றால் அவருக்கு அதனால் ஏதாவது ஒரு நன்மை கிடைக்க வேண்டும். மற்றவருக்கு நல்லது கிடைக்கும் என்றால் மட்டும் தான் பேச வேண்டும். அடுத்தவருக்கு இம்மை, மறுமை பலன் கிடைப்பதாக இருந்தால் மட்டுமே பேச வேண்டும். இதைச் சொன்னால் அவருக்கு இன்ன நன்மை கிடைக்கும் என்று அறிந்து, சொல்ல வேண்டும். சும்மா வெட்டிப் பேச்சு பேசக் கூடாது. மற்றவருக்கு நன்மை தரும் அளவுக்கு பேச நம் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். 


நான்காவது, "நாடி". நல்லது மட்ட்டும் இருந்தால் போதாது. அவர் அந்த நன்மை அடைய வேண்டும் என்ற விருப்பம் நம்மிடம் இருக்க வேண்டும். கடமைக்கு சொன்னது மாதிரி இருக்கக் கூடாது. "படி" நு சொல்ல வேண்டியது என் கடமை. சொல்லியாச்சு. அப்புறம் உன் விருப்பம் என்றால் அவன் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்ற விருப்பம் இல்லை. ஏதோ கடமை இருக்கிறது. அது அல்ல வள்ளுவர் சொல்ல வந்தது. ஒரு ஆசை, விருப்பம், நாட்டம் இருக்க வேண்டும். 


ஐந்தாவது, "இனிய சொலின்". நல்லது தான், நாட்டம் இருக்கிறதுதான் என்றாலும், அதையும் இனிமையாக சொல்ல வேண்டும். வார்த்தையில் மென்மை, அன்பு, உண்மை, வஞ்சனை இல்லாமை எல்லாம் இருக்க வேண்டும். எப்படிச் சொன்னால் என்ன?  என்ன சொல்றோம் என்பதுதானே முக்கியம். எப்படி சொல்கிறோம் என்பது முக்கியம் இல்லை என்று வாதம் செய்யக் கூடாது. நல்லதையும், இனிமையாக சொல்ல வேண்டும். 


அப்படிச் சொன்னால் என்ன ஆகும், 


வள்ளுவர் சொல்கிறார் அறம் வளரும், பாவம் தேயும் என்று. 


நாம் நடைமுறையில் சிந்தித்துப் பார்ப்போம். 


ஆறாவது, மற்றவர்களுக்கு நல்லது செய்யக் கூடிய ஆற்றலை நாம் வளர்த்துக் கொள்வோம்.  


ஏழாவது, நாம் மற்றவர்களுக்கு உண்மையிலேயே நன்மை செய்வதால் மற்றவர்கள் நம்மை விரும்புவார்கள். நமக்கு நல்லது செய்ய நினைப்பார்கள். நமக்கு ஒரு துன்பம் வந்தால் ஓடி வந்து காப்பாற்றுவார்கள். கை கொடுப்பார்கள். நாம் செய்த பாவம் நம்மை துரத்தி வந்து துன்பம் செய்தாலும், மற்றவர்கள் நமக்கு உதவி செய்து அந்த துன்பத்தில் இருந்து நம்மை காப்பார்கள். 


எட்டாவது, நமக்கு மட்டும் அல்ல. நம் சந்ததிக்கும், உறவுக்கும் பலன் தரும். "அந்தக் காலத்ல உங்க அண்ணன்/ அப்பா/தாத்தா/ அம்மா எங்க குடும்பத்துக்கு எவ்வளவோ செய்து இருக்கிறார்கள்..." என்று நாம் இன்று  மற்றவர்களுக்கு செய்யும் உதவி அடுத்த தலைமுறைக்கும் வரும். என் அனுபவத்தில் இதை நான் பல முறை கேட்டு இருக்கிறேன்.  நாம் போன பிறகும், நாம் செய்த நன்மைகள் நம் குடும்பத்தை எப்படியோ காத்து நிற்கும். 


ஏழே ஏழு சொல். ஒண்ணே முக்கால் அடி. எவ்வளவு கருத்துச் செறிவு. 


இன்னும் கூட இருக்கலாம். நான் படித்தவரை, எனக்கு தெரிந்தவரை இவ்வளவு. இன்னும் எவ்வளவு இருக்கிறதோ. 


ஒவ்வொரு குறளும் நம் வாழ்கையை நல்ல முறையில் திசை திருப்பி செம்மையாக வாழ வழி செய்யும். 


ஒரு குறளை நடை முறை படுத்தினால் போதும். 


"நல்லாத்தான் இருக்கு....அடுத்து என்ன குறள் " என்று தொடர்கதை வாசிப்பது போல வாசிக்காமல், குறளை வாழ்வில் நடைமுறைப் படுத்த முயற்சி செய்ய வேண்டும். 




1 comment:

  1. இனிமையாகப் பேச வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமான ஒன்று

    ReplyDelete