Friday, July 5, 2019

கம்ப இராமாயணம் - குருதிச் சேற்று வெள்ளத்துள் திரிபவள்

கம்ப இராமாயணம் - குருதிச்  சேற்று வெள்ளத்துள் திரிபவள்


இலக்குவனால் மூக்கும், காதும், முலைகளும் துண்டிக்கப்பட்ட சூர்ப்பனகையின் துன்பத்தை மேலும் கம்பன் விவரிக்கிறான்.

அவளால் ஒரு இடத்தில் நிற்கவோ உட்காரவோ முடியவில்லை. அங்கும் இங்கும் நடக்கிறாள். குதிக்கிறாள், வலி தாங்க முடியாமல். உடம்பில் இருந்து இரத்தம் ஊற்று போல் குபுக் குபுக் என்று வந்து கொண்டே இருக்கிறது. அப்படி வந்ததால் அந்த இடம் எல்லாம் சேறாகிப் போனது. அந்த இரத்தச் சேற்றில் அவள் நடக்கிறாள். வலி தாங்காமல் அரற்றுகிறாள். அவளின் அவல ஓலம், தேவர்களை நடுங்க வைத்தது. யமனும் அஞ்சினான் அவள் அலறல் கேட்டு. தன் குலத்தில் உள்ளவர்கள் பெயரை எல்லாம் ஒவ்வொன்றாக கூப்பிட்டு அலறுகிறாள்.....

பாடல்

ஊற்றும் மிக்க நீர் அருவியின் 
     ஒழுகிய குருதிச் 
சேற்று வெள்ளத்துள் திரிபவள், 
     தேவரும் இரிய, 
கூற்றும் உட்கும் தன் குலத்தினோர் 
     பெயர் எலாம் கூறி, 
ஆற்றுகிற்கிலள்; பற்பல பன்னி 
     நின்று, அழைத்தாள்.

பொருள்

ஊற்றும் = கொட்டும்

மிக்க =மிகுந்த

நீர் அருவியின் = நீர் அருவி போல

ஒழுகிய = ஒழுகிய

குருதிச்  = இரத்த

சேற்று வெள்ளத்துள் = சேற்று வெள்ளத்தில்

திரிபவள்,  = நோக்கம் எதுவும் இன்றி அங்கும் இங்கும் அலைதல்

தேவரும் = தேவர்களும்

இரிய = பயந்து ஓட

கூற்றும் = யமனும்

உட்கும் = பயந்து தலை குனிந்து நிற்க

தன் குலத்தினோர் = தன்னுடைய குலத்தில் உள்ளோர்

பெயர் எலாம் கூறி,  = அனைத்து பெயர்களையும் கூறி

ஆற்றுகிற்கிலள்; = கூப்பிடுகிறாள்

பற்பல பன்னி  = மீண்டும் மீண்டும் பல செயல்களை செய்து

நின்று, அழைத்தாள். = நின்று அழைத்தாள்


"பற்பல பன்னி  நின்று, அழைத்தாள்" என்ற வரியில் வரும் "பன்னி " என்ற சொல், பன்னுதல் என்பதில் இருந்து வந்தது.

பன்னுதல் என்றால் மீண்டும் மீண்டும் சொல்லுதல், (செய்தல்) என்று பொருள்.

இராம, இலக்குவ, பரத , சத்துருகனர்கள் பிறந்த போது அனைவருக்கும் வசிட்டன் பெயரிட்டான்.

பரதனுக்கு மட்டும் "பரதன்" என்ற பெயரை பன்னினான் என்கிறான் கம்பன். மீண்டும் மீண்டும் சொன்னானாம் வசிட்டன்.

"பரதன் எனப் பெயர் பன்னினன் அன்றே." என்பான் கம்பன். பரதன் மேல் அவ்வளவு வாஞ்சை வசிட்டனுக்கு.

கரம் தலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப
விரதம் மறைப் பொருள் மெய்ந் நெறி கண்ட
வரதன் உதித்திடும் மற்றைய ஒளியைப்
‘பரதன் ‘எனப் பெயர் பன்னினன் அன்றே.


அது ஒரு புறம் இருக்கட்டும்.

சில சமயம், காப்பியம் என்ன சொல்கிறது என்பதை விட காப்பியம் என்ன சொல்லாமல் விட்டது என்பதில் மிகுந்த சுவாரசியம் இருக்கும்.


இராமனும், சீதையும் இருந்த குடிசைக்கு பக்கத்தில் இருந்த சோலைக்கு சீதை சென்றாள். அவளை பின் தொடர்ந்து சூர்ப்பனகை சென்றாள். சூர்பனகையை  இலக்குவன் அங்கு வைத்துதான் மூக்கையும், காதையும், முலையையும்  வெட்டினான்.  அங்குதான் சூர்ப்பனகை அலறினாள். அவள் அலறிய அலறல் தேவ லோகம் வரை கேட்டது என்றான் கம்பன்.

உடனே நீங்கள் என்ன நினைப்பீர்கள் ? அருகில் தானே இராமன் இருந்தான். சந்தியா வந்தனத்தை  முடித்து விட்டு ஓடி வந்திருப்பான். என்னவோ பெரிய அலறல் கேட்கிறதே  என்று வந்திருப்பான். என்ன நடந்தது என்று விசாரித்திருப்பான்.

ஏதாவது சொல்லி இருப்பான்.

எங்கேயோ அடிபட்ட மாரீசனின் குரல் குடிசையில் இருக்கும் இலக்குவனுக்கும், சீதைக்கும் கேட்டது என்றால், அருகில் இருந்த சோலையில்  இருந்து வந்த சூர்ப்பனகையின் அலறல் இராமனுக்கு கேட்டிருக்காதா என்ன?

கேட்டிருக்கும் தானே.

இராமன் என்ன செய்திருப்பான் என்று நினைக்கிறீர்கள்? என்ன சொல்லி இருக்க வேண்டும் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_5.html

Thursday, July 4, 2019

கம்ப இராமாயணம் - மெய் வெயர்க்கும்

கம்ப இராமாயணம் - மெய் வெயர்க்கும் 


இலக்குவனால் மூக்கும், காதும், முலைக் கண்களும் அறுபட்ட சூர்ப்பனகை வலியில் , அவமானத்தில் துடிக்கிறாள்.

நேரில் பார்த்தது போல கம்பன் அவள் துயரத்தை பாட்டில் வடிக்கிறான்.

"துணியை எடுத்து இரத்தம் வழியும் தன் மூக்கில் ஒற்றி எடுப்பாள். கொல்லன் உலை தீ போல பெரு மூச்சு விடுவாள். ஐயோ, என்ன செய்வது என்று தெரியவில்லையே என்று கைகளால் தரையில் ஓங்கி அடிப்பாள். தன்னுடைய அறுபட்ட மார்பகங்களை கையால் ஏந்தி பார்த்து பதறுவாள். பயத்தில் உடல் எல்லாம் வியர்ப்பாள். என்ன செய்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடுவாள். பின், இரத்தம் வழிய தரையில் சோர்ந்து விழுவாள்"

என்கிறான் கம்பன்.

பாவங்களில் பெரிய பாவம் எது என்று பட்டியல் போட்ட பரிமேல் அழகர், பசுவின் மடியை அறுப்பது பெரிய பாவம் என்று குறிப்பிடுகிறார். பசுவின் மடியை அறுப்பது பெரும் பாவம் என்றால்....ஒரு பெண்ணின் மார்பை அறுப்பதோ?

பாடல்

ஒற்றும் மூக்கினை; உலை உறு
    தீ என உயிர்க்கும்;
எற்றும் கையினை நிலத்தினில்;
    இணைத் தடங் கொங்கை
பற்றும்; பார்க்கும்; மெய் வெயர்க்கும்;
    தன் பரு வலிக் காலால்
சுற்றும் ஓடும்; போய்ச் சோரி
    நீர் சொரிதரச் சோரும்.

பொருள்

ஒற்றும் மூக்கினை = மூக்கில் வழியும் இரத்தத்தை ஒத்தி எடுப்பாள். இரத்தம் நிற்காதா என்று

உலை உறு = கொல்லன் உலைக் களத்தில்

தீ என உயிர்க்கும்; = தீ போல மூச்சு விடுவாள்

எற்றும் கையினை நிலத்தினில் = கைகளை போட்டு நிலத்தில் அடிப்பாள். ஏன்? மார்பில் அடித்துக் கொள்ள முடியாதே

இணைத் = இணையான

தடங் = பெரிய

கொங்கை = மார்பகங்களை

பற்றும் =கையில் ஏந்திப்

பார்க்கும் = பார்ப்பாள்

மெய் வெயர்க்கும்; = உடல் வியர்ப்பாள்

தன் பரு வலிக் காலால் = தன்னுடைய பருத்த வலிய கால்களால்

சுற்றும் ஓடும் = சுற்றி சுற்றி ஓடுவாள்

போய்ச் = பின் ஓரிடத்தில் நின்று

சோரி  = இரத்தம்

நீர் சொரிதரச் = அருவி நீர் போல சொரிந்து விழா

சோரும். = சோர்ந்து விழுவாள்

அவலத்தின் உச்சம்.

இதுவா அவதார நோக்கம் ?

தவறு செய்தவன் இராவணன் என்றே வைத்துக் கொண்டாலும், தண்டனை அவன் தங்கைக்கா?

உலகியல் கண்ணோட்டத்தில், அன்று இருந்த அறம் சார்ந்த சட்ட திட்டங்கள் படி, இராவணன் இதுவரை தவறு ஒன்றும் செய்யவில்லை. மாற்றான் மனைவியை கவர்ந்து செல்லவில்லையே இன்னும். அவனே தவறு செய்யாத போது, அவன் தங்கைக்கு எதற்கு தண்டனை.

சூர்ப்பனகை தவறு செய்யவில்லை...செய்ய நினைத்தாள்.  அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா ?

இலக்குவன் குடும்பத்தில் யாருமே தவறு செய்யவில்லையா?

அரச நீதியை, மரபை மாற்றி குழி தோண்டி புதைக்கவில்லையா ? அப்படிச் செய்தார்களா இல்லையா என்று நாம் சந்தேகம் கொள்ள வேண்டாம். இலக்குவனே , தன் வாயாலேயே சொல்லி இருக்கிறான்.

அவர்களுக்கு இலக்குவன் தந்த தண்டனை என்ன?  அவர்களுக்கும் இதே தண்டனை தந்திருந்தால் , ஏதோ ஒரு ஞாயம் இருக்கிறது என்று சொல்லலாம்.

நினைத்துப் பாருங்கள் ஒரு நிமிடம்...அறுபட்ட முலையை கையில் ஏந்தி, அதில் இருந்து இரத்தம் வழிவதை பார்க்கும் ஒரு பெண்ணின் அவல நிலையை...


நெஞ்சம் பதறவில்லை ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_4.html



Wednesday, July 3, 2019

கம்ப இராமாயணம் - பெண் பிறந்தேன் பட்ட பிழை

கம்ப இராமாயணம் - பெண் பிறந்தேன் பட்ட பிழை 


சூர்பனகையை, முடியைப் பிடித்து இழுத்து, தரையில் தள்ளி, காலால் எட்டி உதைத்து, அவளின் மூக்கையும், காதுகளையும், முலையையும் வெட்டினான் இலக்குவன்.

(நான் இதை மீண்டும் சொல்லக் காரணம், சிலர் முந்தைய ப்ளாகுகளை பார்த்திருக்க மாட்டார்கள். நேரடியாக இந்த ப்ளாகுக்கு வந்திருப்பார்கள். எனவே ஒரு முன்கதை சுருக்கம் போல சொல்லுகிறேன்).

சூர்ப்பனகை வலியால் துடிக்கிறாள்.

உடல் வெட்டுப் பட்ட வலி ஒரு புறம். பெண்மையின் அடையாளங்கள் போய் விட்டனவே, இனி எப்படி வெளியில் தலை காட்ட முடியும் என்ற வலி ஒரு புறம்.

அவளின் துயரத்தை கம்பன் படம் பிடிக்கிறான்.

கல் உருகும், புல் உருகும் அவளின் துயரத்தைக் கண்டால்.


"வலியால் துடித்து ஆகாயத்துக்கு எழுவாள். பின் அங்கிருந்து மண்ணில் விழுவாள். தரையில் கிடந்து புரளுவாள். அயர்ந்து போவாள். கை எல்லாம் நடுங்கும். என்ன செய்வோம் என்று திகைத்து நிற்பாள். உயிர் தளர்ந்து நிற்பாள். நான் பெண்ணாய் பிறந்ததால் வந்த பிழை என்று பிதற்றுவாள். வருந்துவாள். துயரம் அவர்களை தொட அஞ்சிய பழைய குடி மரபில் பிறந்த அவள் "

பாடல்



உயரும் விண்ணிடை; மண்ணிடை
    விழும்; கிடந்து உழைக்கும்;
அயரும்; கை குலைத்து அலமரும்;
    ஆர் உயிர் சோரும்;
பெயரும்; ‘பெண் பிறந்தேன் பட்ட
    பிழை ‘எனப் பிதற்றும்;
துயரும் அஞ்சி முன் தொடர்ந்திலாத்
    தொல் குடிப் பிறந்தாள்.


பொருள்


உயரும் விண்ணிடை = வானத்துக்கு போவாள்

மண்ணிடை விழும்; = அங்கிருந்து மண்ணில் விழுவாள்

கிடந்து உழைக்கும் = தரையில் கிடந்து வருந்துவாள்

அயரும்; = சோர்வாள்

கை குலைத்து = கைகளை பிசைந்து கொண்டு

அலமரும் = சுழலுவாள் . சுத்தி சுத்தி வருவாள்.

ஆர் உயிர் சோரும்; = அருமையான உயிர் சோர்ந்து நிற்பாள்

பெயரும் = உரு இடத்தை விட்டு இன்னொரு இடத்துக்குப் போவாள். அங்கும் இங்கும் நடப்பாள்

‘பெண் பிறந்தேன் பட்ட பிழை ‘எனப் பிதற்றும்; = நான் பெண்ணாய் பிறந்ததால் வந்த பிழை  என்று பிதற்றுவாள்

துயரும் = துயரமும்

அஞ்சி  = அச்சப்பட்டு

முன் = முன் எப்போதும்

தொடர்ந்திலாத் = அவர்களை தொடர்ந்திலாத

தொல் குடிப் பிறந்தாள். = பழைய குடியில் பிறந்தவள்


நமக்கெல்லாம் அப்பப்ப ஏதாவது துயரம் வரும். ஒண்ணும் இல்லாவிட்டாலும், தலை வலி, ஜலதோஷமாவது வந்து துன்பம் தரும்.

சூர்ப்பனகையின் குலத்தையே துன்பம் தொடர அஞ்சுமாம். "ஐயோ, நமக்கு எதுக்குடா  வம்பு" என்று துயரம் அவர்களை விட்டு விட்டு ஓடி விடுமாம். துயரம் என்றால்  என்ன என்றே அறியாத குலம் அவள் குலம்.

பெண்ணாய் பிறந்ததால் தானே இந்தத் துன்பம் என்று தன்னைத் தானே நொந்து கொள்கிறாள்.   பெண்ணாய் பிறந்ததால், ஆண் மீது வந்த காமம். பெண்ணாய் பிறந்ததால் இப்படி  முலை அறுபட்டு நிற்கும் அவலம் என்று தன்  பெண்மையையே அவள் நொந்து கொள்கிறாள்.

என்ன இருந்தாலும் அவள் ஒரு பெண். அதுவும் நிராயுதபாணியாக நின்றவள்.  அவளும் சண்டைக்கு வந்திருந்தாலாவது, ஓரளவு சமாதானம் சொல்லலாம். ஒரு நிராயுதபாணியோடு சண்டையிட்டு, அதுவும் ஒரு பெண்ணோடு  சண்டையிட்டு, அவளை இவ்வாறு செய்தது...ஏதாவது அவதார நோக்கமாக இருக்கலாம்.

சரி, அது என்ன அவதார நோக்கம்.


இராவணனை அழிப்பதுதான் அவதார நோக்கமா?

இராவணனை, ஏன் அழிக்க வேண்டும் ?  அவன் என்ன தவறு செய்தான்?

தேவர்களை சிறை வைத்தான். சரி, அது தவறு என்றால், நேரடியாக சென்று சண்டை போட்டு, அவனை கொன்று, தேவர்களை விடுவிக்க வேண்டியதுதானே. யார் தடுத்தது?

தேவர்களை சிறை வைத்தது எப்படி பிழையாகும்? அவர்களோடு நேருக்கு நேர் (மறைந்து இருந்து அல்ல) நின்று சண்டை போட்டு, அவர்களை வென்று, தோற்றவர்களை சிறை வைத்தான்.  அது எப்படி தவறு ஆகும்? அது தவறு என்றால், வரலாற்றில் அனைத்து மன்னர்கள் செய்ததும் தவறு என்றே ஆகும் அல்லவா ? நேற்று நடந்த இந்தியா பாக்கிஸ்தான் போர் உட்பட.

தவறே செய்யாத ஒருவனை, தவறு செய்ய வைப்பதற்காகவே நிகழ்ந்த அவதாரமா, இராம அவதாரம்?

அது அல்ல இராவணன் செய்த தவறு. மாற்றான் மனைவியை கவர்ந்தான்  என்பதுதான்  அவன் மீதுள்ள குற்றமே தவிர தேவர்களை சிறை வைத்தது அல்ல.

மாற்றான் மனைவியை கவர்ந்தது அவதாரம் நிகழ்ந்த பிறகு. பின், அது எப்படி  அவதார நோக்கமாகும்?

அப்படி என்றால், இராவணன் சீதையை கவர்ந்து செல்ல வேண்டும் என்பதும் அவதார நோக்கமா? இராம அவதாரம் நிகழாவிட்டால், இராவணன் தவறு செய்திருக்க மாட்டான்.  சீதை இல்லை. மாற்றான் மனைவியை கவர்ந்த பிழை  அவனுக்கு வந்திருக்காது.

தேவர்களை மீட்க, சீதை பகடையாக பயன் பட்டு இருக்கிறாளா ? அவளை தூக்கிக் கொண்டு போகட்டும், அவளை மீட்கிற சாக்கில் அவனை கொன்று விடலாம்  என்பதுதான் அவதார நோக்கமா?

ஒரு வேளை , இராவணன் சீதையை தூக்கிக் கொண்டு போகாமல் இருந்திருந்தால், அவன் கொல்லப் பட்டு இருக்க மாட்டான். காலத்துக்கும் தேவர்கள் சிறை இருக்க வேண்டியதுதான்.  அவதார நோக்கம் ?

இவர்கள் அரசியலில் பகடை காய்களாக நகர்த்தப் பட்டவர்கள்தான் பெண்களா ?

"அப்பாடா, அவதாரம் செய்து, சீதையை திருமணம் செய்து கொண்டு, காட்டுக்கு வந்து, ஒரு வழியாக இராவணன் அவளை தூக்கிக் கொண்டு போய் விட்டான்.  இனி நாம் வந்த அவதார நோக்கமான இராவண வதத்தை    நிகழ்த்தலாம் " 



மேலும் சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_3.html


Tuesday, July 2, 2019

கம்ப இராமாயணம் - உருகியது உலகம்

கம்ப இராமாயணம் - உருகியது உலகம்


சீதையை கவர வந்த சூர்ப்பனகையின் முடியை பிடித்து இழுத்து, தரையில் தள்ளி, காலால் அவளை உதைத்து, அவளின் மூக்கு, காது மற்றும் முலை கண்களை வாளால் வெட்டினான் இலக்குவன்.

பெண்ணின் மார்பு என்பது அவளின் குழந்தைகளுக்கு பால் தர அமைந்த ஒரு அவயம். காலப் போக்கில் அது ஒரு கவர்ச்சிக்கு இடமான ஒன்றாக ஆகிப் போனது காலத்தின் கோலம்.


ஒரு தாய் பிள்ளைக்கு பால் தரும் போது , இயற்கை அவளின் மார்புகளை பெரிதாக்குகிறது.  குழந்தை  நிறைய பால் அருந்த வேண்டும் என்று.

அபிராமிக்கு எத்தனை குழந்தைகள்.  பட்டர் சொல்கிறார், மலை போல பெருத்த தனங்கள் , அழும் பிள்ளைக்கு தர வேண்டி பருத்த தனங்கள்.

கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,
முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே.

"அம்மா, நீ என் முன்னால் வர வேண்டும் என்று அழுகிறார் பட்டர்".

சரி, இலக்குவன் அப்படி செய்து விட்டான். சூர்பனகைக்கு வலித்திருக்குமா, வலித்து இருக்காதா ? அவள் அழுது இருப்பாளா ? மாட்டாளா?

அறுபட்ட வலி ஒரு புறம். ஒரு பெண்ணின் மார்பை அறுத்தால், அவள் மன நிலை எப்படி இருக்கும்?

மார்பக புற்று நோய் வந்தால், பெண்களின் மார்பகங்களை அறுவை சிகிச்சை செய்து  அகற்ற வேண்டும் என்று மருத்துவர் கூறுவார். அதை அந்த பெண்கள்  எப்படி எடுத்துக் கொள்வார்கள்? தவித்துப் போவார்கள். செத்தாலும் பரவாயில்லை,  இந்த சிகிச்சை வேண்டாம் என்று தான் நினைப்பார்கள்...என்று நான் நினைக்கிறேன்.

சவலியால் துடிக்கிறாள். வாய் விட்டு அலறுகிறாள்...

பாடல்


அக் கணத்து அவள் வாய் திறந்து
    அரற்றிய அமலை
திக்கு அனைத்தினும் சென்றது;
    தேவர்தம் செவியும்
புக்கது; உற்றது புகல்வது என்?
    மூக்கு எனும் புழையூடு
உக்க சோரியின் ஈரம் உற்று,
    உருகியது உலகம்.


பொருள்

அக் கணத்து = அந்த நேரத்தில்

அவள் = சூர்ப்பனகை

வாய் திறந்து = வாய் திறந்து

அரற்றிய அமலை = அழுத அழுகை. அமலை என்றால், இருந்து அழுவது அல்ல. வலி பொறுக்க முடியாமல் அங்கும் இங்கும் ஓடி அழுவது.

திக்கு அனைத்தினும் சென்றது = எல்லா திசைகளிலும் சென்றது

தேவர்தம் செவியும் = வானுலகில் உள்ள தேவர்களின் காதில்

புக்கது; = சென்று அடைந்தது

உற்றது  = அங்கு நடந்ததை

புகல்வது என்?  = சொல்ல என்ன இருக்கிறது ?

மூக்கு எனும் = அவளுடை மூக்கு என்ற

புழையூடு = துவாரத்தின் வழியாக

உக்க = வழிந்த

சோரியின்  = இரத்தத்தின்

ஈரம் உற்று = ஈரத்தால்

உருகியது உலகம். = உருகியது உலகம்


நனைந்து உலகம் என்று கம்பன் சொல்லவில்லை. உருகியது என்று உலகம் என்கிறான்.

ஒரு பெண் எதையும் சகிப்பாள், ஆனால் தன் அழகிற்கு ஒரு பங்கம் என்றால் அவளால் அதைத் தாங்க முடியாது.

சூர்ப்பனகையின் துன்பத்தை, அவலத்தை கம்பன் படம் பிடிக்கிறான்.

கல்லும் கரையும்.

அதைப் படித்த பின், கண்ணின் ஓரம் நீர் துளிர்க்கவில்லை என்றால்....தமிழும் கம்பனும் தோற்று விட்டார்கள்ள் என்றே சொல்ல வேண்டும்.



Monday, July 1, 2019

விவேக சிந்தாமணி - நற்போதம் வாராது

விவேக சிந்தாமணி - நற்போதம் வாராது 


நான் நிறைய பேரை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்...நிறைய படிக்க வேண்டும் என்று ஆவல் இருக்கும், சிரத்தையாக படிப்பார்கள், படிக்க முடியாவிட்டால் கூட படித்தவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பார்கள். அடடா என்ன உயரிய கருத்துகள் என்று உணர்ந்து உண்மையாகவே பாராட்டுவார்கள்.

ஆனால், அதை கடை பிடிப்பார்களா என்றால், மாட்டார்கள். கேட்டால், அது எல்லாம் நடை முறைக்கு ஒத்து வராது, வறட்டு வேதாந்தம் என்று ஏதாவது சொல்லிவிட்டு படிப்பதற்கு முன் எப்படி இருந்தார்களோ, அப்படியே இருப்பார்கள்.

உடம்பில் ஒரு நோய் வந்து விட்டது என்றால் மருத்துவரைப் போய் பார்க்கிறோம். அவரும் நோய் இன்னது என்று அறிந்து கொண்டு மருந்து எழுதித் தருகிறார். காசு கொடுத்து கடையில் போய் வாங்கி வருகிறோம்.

வந்தபின், அந்த மருந்தை உண்பது கிடையாது. கேட்டால் அது எல்லாம் நடை முறைக்கு ஒத்து வராது என்று சொல்லி விடுவது.

எனக்கு இது புரிந்ததே இல்லை.

உண்ணப் போவது இல்லை என்றால், எதற்கு மருத்துவரை பார்க்க வேண்டும், காசு போட்டு மருந்தை வாங்க வேண்டும்? நேரமும் பணமும் மிச்சப் படுத்தலாமே...ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று யோசித்து யோசித்து களைத்துப் போனேன்.

விவேக சிந்தாமணியில் இதற்கு விடை கிடைத்தது.

ஏன் சிலர் இப்படி இருக்கிறார்கள் என்று அது கூறுகிறது.

"நல்ல விளை நிலத்தில் நறுமணம் வீசும் கற்பூரத்தில் பாத்தி கட்டி, கஸ்தூரி மானின் இடம் இருந்து வரும் மணம் மிக்க எருவைப் போட்டு, மணம் வீசும் நல்ல நீரை பாய்ச்சினால், வெங்காயச் செடியில் இருந்து வெங்காய வாடைதான் வரும். அதில் இருந்து கற்பூர வாசமோ, கஸ்தூரி புனுகின் வாசமோ வராது. அது போல சிலர். அவர்களுக்கு என்னதான் நல்லது சொன்னாலும், எவ்வளவுதான் நல்லதை அவர்கள் படித்தாலும், அவர்களுடைய இயல்பான குணம் மாறாது."

பாடல்


”கற்பூர பாத்தி கட்டி கஸ்தூரி எருப் போட்டுக் கமழ் நீர் பாய்ச்சி
பொற்பூர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தைப் பொருத்தக் காட்டும்
சொற்போதையர்க்கு அறிவு இங்கு இனிதாக வருமெனவே சொல்லினாலும்
நற்போதம் வாராது அங்கு அவர் குணமே மேலாக நடக்கும் தானே”


பொருள்


”கற்பூர பாத்தி கட்டி = கற்பூரத்தில் பாத்தி கட்டி

கஸ்தூரி எருப் போட்டுக் = கஸ்தூரி மானின் எருவைப் போட்டு

கமழ் நீர் பாய்ச்சி =  வாசம் தரும் பன்னீர் போன்ற நீரைப் பாய்ச்சி

பொற்பூர = அழகாக

உள்ளியினை  = வெங்காயத்தை

விதைத்தாலும் = விதைத்தாலும்

அதன் குணத்தைப் பொருத்தக் காட்டும் = அதன் குணத்தை அது பொருந்தும்படி காட்டும்

சொற்போதையர்க்கு  = சொல்லில் தடுமாற்றம் உள்ளவர்களுக்கு (புத்தி இல்லாதவர்களுக்கு)

அறிவு = அறிவு

இங்கு = இங்கு

இனிதாக வருமெனவே = இனிமையாக வரும் என்று

சொல்லினாலும் = நினைத்து என்ன சொன்னாலும்

நற்போதம் வாராது = நல்ல புத்தி வராது

அங்கு  = அங்கு

அவர் குணமே மேலாக நடக்கும் தானே” = அவர்களின் இயற்கை குணமே மேலோங்கி நிற்கும்

நடு கடலுக்குப் போனாலும், நாய்க்கு நக்கு தண்ணிதான் என்று சொல்லுவார்கள்.

குணத்தை மாற்றாமல் படித்து ஒரு புண்ணியமும் இல்லை.

நேர மற்றும் பண விரயம் தான் ஆகும்.

படித்த பின், சிந்தியுங்கள்.  படித்தது ஏதாவது விளைவை உங்களில் ஏற்படுத்தியதா என்று.

இல்லை என்றால், படிப்பதை நிறுத்துவது நலம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_1.html

கம்ப இராமாயணம் - வெய்து இழையேல்

கம்ப இராமாயணம் - வெய்து இழையேல்


சீதையை கவர்ந்து செல்ல சூர்ப்பனகை சென்றாள். அவள் செல்வதைக் கண்ட இலக்குவன், சூர்ப்பனகையின் பின்னே சென்று அவள் கூந்தலை பிடித்து இழுத்து, எட்டி உதைத்து, கீழே தள்ளின்னான். அவள் கீழே விழுந்தவுடன் கையில் இருந்த வாளை  உருவினான் என்று நேற்று பார்த்தோம்.

அடுத்து என்ன நடந்தது ?

"கீழே விழுந்த சூர்ப்பனகை, விரைந்து விண்ணில் செல்வேன் என்று உந்தி எழுந்தாள். மீண்டும் கீழே வீழ்த்தி, 'கொடிய செயல் செய்யதே என்று கூறி, அவளின் மூக்கையும், காதுகளையும், அவளின் முலை கண்களையும் வெட்டினான். பின்,  அவள் கூந்தலை விட்டான்"

பாடல்

ஊக்கித் தாங்கி, ‘விண் படர்வென்‘ என்று
    உருத்து எழுவாளை
நூக்கி, நொய்தினின், ‘வெய்து
    இழையேல் ‘என நுவலா,
மூக்கும், காதும், வெம் முரண்
    முலைக் கண்களும் முறையால்
போக்கிப் போக்கிய சினத்தொடும்,
    புரி குழல் விட்டான்.

பொருள் 



ஊக்கித் = ஊக்கத்துடன், முயற்சியுடன்

தாங்கி = தூக்கிக் கொண்டு

‘விண் படர்வென்‘  = விண்ணில் பறப்பேன்

என்று = என்று

உருத்து = சத்தம் இட்டுக் கொண்டு

எழுவாளை = எழும்புபவளை

நூக்கி = அழுத்தி, அமுக்கி

நொய்தினின் = எளிதாக

‘வெய்து இழையேல்  ‘ = தீயன செய்யாதே

என நுவலா, = என்று கூறி

மூக்கும் = அவளுடைய மூக்கையும்

காதும் = காதையும்

வெம் = வெம்மையான

முரண் = வலிய

முலைக் கண்களும் = முலை காம்புகளையும்

முறையால் = ஒன்றன் பின் ஒன்றாக

போக்கிப்  = வெட்டி

போக்கிய சினத்தொடும் = அதனால் குறைந்த சினத்தோடு

புரி குழல் விட்டான். = அவளுடைய கூந்தலை விட்டான்

சூர்ப்பனகை சீதையை கவரச் சென்றது தவறுதான். தவறுக்கு தண்டனை தரத்தான் வேண்டும்.

ஒரு பெண்ணின் மூக்கையும், காதையும், மார்பகத்தையும் வெட்டுவது சரியான தண்டனையா ?

சூர்பனகையிடம் தேவை இல்லாத பேச்சுக்  கொடுத்து அவள் மனதில் ஆசையை வளர்த்து விட்டது இராமன்.

சீதை இருக்கும் வரை இராமன் தன்னை நினைக்க மாட்டான் என்று நினைத்து, சீதையை சூர்ப்பனகை தூக்கச் சென்றாள். தூக்கிவிடவில்லை.

அதற்கு இலக்குவன் கொடுத்த தண்டனை இது.

இலக்குவன் செய்தது சரியா ?



Sunday, June 30, 2019

கம்ப இராமாயணம் - நில் அடீஇ

கம்ப இராமாயணம் - நில் அடீஇ 


இராமனை விட்டு வந்த சூர்ப்பனகை காமத்தில் தவிக்கிறாள். கம்பன் அவள் நிலையை விரித்துக் காட்டுகிறான். விருப்பம் உள்ளவர்கள் , தேடுங்கள், கண்டடைவீர்கள்.

பின், சூர்ப்பனகை நினைக்கிறாள்..."இந்த சீதை இருப்பதனால் தானே இராமன் என்னை ஏற்க மறுக்கிறான், அவளை தூக்கி  வந்து விட்டால், இராமனின் எண்ணம் என் பால் வரும்தானே " என்று நினைத்து அவளை தூக்கிச் செல்ல நினைக்கிறாள்.

இராமன் சந்தியா வந்தனம் செய்யப் போய் விட்டான். கம்பன் சொல்கிறான்.  சீதை தனித்து இருக்கிறாள். அவளுக்கு காவலாக இருந்த இலக்குவனை, சூர்ப்பனகை காணவில்லை. தனித்து இருக்கும் சீதையை பிடித்துக் கொண்டு போய் விடலாம் என்று நினைத்து அவள் இருக்கும் இடத்துக்கு இரகசியமாக போகிறாள்.

இவள் வருவதை இலக்குவன் பார்த்து விட்டான்.


"நில்லடி" கத்திக் கொண்டே  என்று அவளை நோக்கி விரைந்து சென்றான். அருகில் வந்த போது அவள் (சூர்ப்பனகை) பெண் என்று  அறிந்து கொண்டான். எனவே வில்லை எடுக்காது, சூர்ப்பனகையின் கூந்தலை பற்றி , கையில் அப்படியே சுற்றி, அவளை உதைத்து கீழே தள்ளி, தன் வாளை உருவுகிறான்

நமக்கு படபட என்று மனம் அடித்துக் கொள்கிறது.


பாடல்

நில் அடீஇ' என, கடுகினன், 
     பெண் என நினைத்தான்; 
வில் எடாது அவள் வயங்கு எரி 
     ஆம் என விரிந்த 
        சில் வல் ஓதியைச் செங் கையில் 
     திருகுறப் பற்றி, 
ஒல்லை ஈர்த்து, உதைத்து, ஒளி 
     கிளர் சுற்று-வாள் உருவி,


பொருள்

நில் அடீஇ'  = நில்லடி

என = என்று கூறிக் கொண்டே

கடுகினன் = விரைந்து சென்றான்

பெண் என நினைத்தான்; = பெண் என்று நினைத்தான்

வில் எடாது = வில்லை எடுக்காமல்

அவள்  = அவளுடைய

வயங்கு = ஒளி வீசும்

எரி ஆம் என  = தீ போன்ற சிவந்த

விரிந்த  =  பரந்த

சில் = சில, கொஞ்சம்

வல் =வலிய

ஓதியைச் = கூந்தலை

செங் கையில்  =சிவந்த கைகளால்

திருகுறப் = திருக்கி

பற்றி,  = வளைத்துப் பிடித்து

ஒல்லை = வேகமாக, வெடுக்கென

ஈர்த்து = இழுத்து

உதைத்து = காலால் உதைத்து

ஒளி = ஒளி வீசும்

கிளர் சுற்று-வாள் உருவி = கிளர்ந்து எழும் வாளை உருவி



என்ன ஏது என்று கேட்கவில்லை. பின்னால் போனான், அவள் முடியை பிடித்து வெடுக்கென இழுத்தான்,  அவள் நிலை தடுமாறி விழப் போன நேரத்தில், அவளை காலால் எட்டி உதைத்தான். அது மட்டும் அல்ல, தன் உடை வாளை  உருவினான்.

பெண் என்று நினைத்து வில்லை எடுக்காதவன் , பெண் என்று நினைத்து  வாளை எடுக்கிறான்.

இந்தப் பாட்டில் வரும் "ஒல்லை" என்ற சொல் ஒரு அருமையான சொல்.

ஒல்லை என்ற சொல்லுக்கு சீக்கிரம் என்று பொருள்.

தமிழுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், தமிழில் உள்ள  அழகான, அர்த்தம் பொதிந்த சொற்களை நடை முறையில் பயன்படுத்துங்கள்.  அந்த சொற்களுக்கு உயிர் கொடுங்கள்.

அதனால் இரண்டு விதமான  பலன் உண்டு.

ஒன்று, தமிழுக்கு மீண்டும் அந்த சொற்கள் கிடைக்கும். நம்மால் புது சொற்களை  உருவாக்க முடியாது. இருக்கின்ற சொற்களை பயன் படுத்தலாம்தானே.

இரண்டு, இந்த சொற்கள் பயன்பாட்டில் வந்தால், நமக்கும் , இலக்கியத்துக்கும்  உள்ள இடைவெளி குறையும். பல பாடல்கள் எளிதாகப் புரியும்.  அவற்றை இரசிக்க முடியும்.

மூன்றாவது, நாம் நம் இலக்கியத்தை எளிதாக அறிந்து  கொள்ளும் போது, நம் பண்பாடு, கலாச்சாரம் என்ன என்று அறிந்து கொள்ள முடியும். நாம் எப்படி இருந்தவர்கள்  என்று அறிந்து கொண்டால், அதில் ஒரு நிமிர்வு வரும்.

நான்காவது, அடுத்த தலைமுறைக்கு தமிழ் செல்லும். இல்லை என்றால், ஆங்கில வார்த்தை கலப்பு இல்லாமல்   பேச முடியாத ஒரு தலைமுறையில் நாம்  இருக்கிறோம். அடுத்த தலைமுறை, தமிழ் என்பதே என்ன என்று தெரியாத ஒரு  தலைமுறையாக மாறி விடும் அபாயம் உண்டு.

ஐந்தாவது, தமிழில் எவ்வளவோ நல்ல விடயங்கள் இருக்கின்றன. நம்மால் அவற்றை அணுக முடியவில்லை. நம் தாய் மொழி நமக்குப் புரியவில்லை. அதை விட்டு ரொம்ப தூரம் விலகி வந்து விட்டோம். இந்த வார்த்தைகள் நம்மை மீண்டும் மொழிக்கு பக்கத்தில் கொண்டு சேர்க்கும். மொழியில் புதைந்து கிடக்கும் நல்லவற்றை நாம் அறிந்து பயன் பெற முடியும்.

ஆறாவது, நீங்கள் ஒரு புது வார்த்தையை பழக்கத்தில் கொண்டு வந்து விட்டீர்கள் என்றால், அதில் இருந்து பல புதிய சொற் சேர்க்கைகள் வரலாம்.

உதாரணமாக, இந்த ஓலை

சரி, இந்த ஒல்லை என்ற வார்த்தையை வேறு எங்காவது பயன்படுத்தி இருக்கிறார்களா?

இராமன் மிதிலை நோக்கி வருகிறான். அப்போது அந்த கோட்டை சுவற்றில் இருந்த  கொடிகள் எல்லாம் இராமனைப் பார்த்து, "திருமகள், தாமரையை விட்டு, நான் செய்த பெரிய தவத்தினால் இங்குதான் இருக்கிறாள், இராமா "ஒல்லை  வா" என்று கூறுவது போல அசைந்தது என்கிறார் கம்பர்.


"மையறு மலரின் நீங்கி  யான்செய்மா தவத்தின் வந்து
 செய்யவள் இருந்தாள் என்று  செழுமணிக் கொடிகள் என்னும்
 கைகளை நீட்டி அந்தக்  கடிநகர் கமலச் செங்கண்
 ஐயனை "ஒல்லை வா" என்று  அழைப்பது போன்ற தம்மா"

சீக்கிரம் வா என்று அந்த  கொடிகளை பட பட என அடித்துக் கொண்டதாம்.

சொல்லிப் பாருங்கள்....

"கல்யாண வேலை நிறைய இருக்கு. நீ கொஞ்சம் ஒல்லை வந்தால், உதவியா இருக்கும்"

"ஒல்லை வந்துரு என்ன...நீ வந்த உடனே நாம் கிளம்பிரலாம்"

" எவ்வளவு தான் ஒல்லை வந்தாலும், இந்த போக்குவரத்து நெரிசலில் மாட்டி கொண்டு நேரம் ஆகி விடுகிறது "

சொல்லிப் பழகுங்கள்.

உயிரினங்கள் அழிவது போல , சொற்களும் அழிந்து கொண்டிருக்கின்றன (extinct ).  அவற்றிற்கு உயிர் கொடுக்க முனைவோம். ஒரு சில சொற்களாவது மீண்டும் உயிர் பெற்றால், நல்லது தானே. ஏதோ நம்மால் முடிந்தது.

இலக்கியம் படிப்பதில் இப்படியும் ஒரு பலன் இருக்கிறது.

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_30.html