Monday, November 11, 2019

கம்ப இராமாயணம் - ஆவியும் சிறிது உண்டு கொலாம்

கம்ப இராமாயணம் - ஆவியும் சிறிது உண்டு கொலாம் 


நாம் யார் மீதாவது ரொம்ப அன்பு வைத்து இருந்தால், அவர்களின் பிரிவு நம்மை மிகவும் வாட்டும் அல்லவா?

ஒரு சோர்வு, ஒரு தளர்வு, ஒரு அயர்ச்சி வரும் அல்லவா?

அது போல, சீதையை பிரிந்த இராமன், அயர்ந்து போகிறான்.

இராஜ்யமே போனது. கவலை இல்லை. அவன் பாட்டுக்கு காட்டுக்கு மர உரி தரித்துக் கொண்டு கிளம்பிவிட்டான். ஆனால், சீதையின் பிரிவு அவனை வாட்டுகிறது. அவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை விட, சீதையின் அருகாமை பெரிதாகப் படுகிறது அவனுக்கு.

அன்பென்றால் அது.

"காவி, கருங்குவளை, நெய்தல், காயம் பூ போன்ற மலர்களின் நிறத்தைக் கொண்ட இராமன், புலம்பி, தளர்ந்து, உயிர் உடலில் இருக்கிறதா என்று நினைக்கும் அளவுக்கு சோர்ந்து போய் , புலம்ப ஆரம்பிக்கிறான்"

பாடல்


காவியும், கருங் குவளையும்,
      நெய்தலும், காயாம் -
பூவையும் பொருவான் அவன்,
      புலம்பினன் தளர்வான்,
'ஆவியும் சிறிது உண்டு
      கொலாம்' என, அயர்ந்தான்,
தூவி அன்னம் அன்னாள் திறத்து,
      இவை இவை சொல்லும்:


பொருள்

காவியும் = காவி மலரும்

கருங் குவளையும் = கருங்குவளை மலரும்

நெய்தலும், = நெய்தல் மலரும்

காயாம் = காயாம்

பூவையும் = பூவையும்

பொருவான் = அந்த மலர்களின் நிறத்தை பெற்றவன்

அவன் = அவன் இராமன்,

புலம்பினன் = புலம்பினன்

தளர்வான் = தளர்வான்

'ஆவியும் = உடலில் ஆவியும்

சிறிது = கொஞ்சம்

உண்டு கொலாம்' = இருக்கிறதா

என, அயர்ந்தான், = என்று அயர்ந்தான்

தூவி அன்னம் = மெல்லிய சிறகை உடைய அன்னத்தைப் போன்ற

அன்னாள் திறத்து = சீதையின் பொருட்டு

இவை இவை சொல்லும் = இவ்வாறு சொல்ல ஆரம்பிக்கிறான்

மனைவியின் பிரிவு, இராமனையே புரட்டிப் போடுகிறது என்றால் மற்றவர்கள்   நிலை எப்படி இருக்கும்? அதாவது, மற்ற பெண்கள் சீதை மாதிரி இருந்தால்.

எவ்வளவு அன்போடு இருந்தார்கள் என்று காட்டுகிறது இந்தப் பாடல்கள்.


interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_11.html

Saturday, November 9, 2019

கம்ப இராமாயணம் - அது வருத்தோ?

கம்ப இராமாயணம் - அது வருத்தோ?


மனைவி இருந்தால் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பாள். அது செய்யல, இது செய்யல, என்று ஏதாவது பட்டியல் வாசித்துக் கொண்டே இருப்பாள். என்னடா இது எந்நேரம் பார்த்தாலும் இதே பாட்டுத் தானா என்று பல கணவன்மார்கள் அலுத்துக் கொள்வார்கள்.

மனைவி ஊருக்குப் போய் விட்டால் ஒரு இரண்டு நாளைக்கு நிம்மதியா இருப்பது போலத் தெரியும். ஆனால், அவள் இல்லாவிட்டால் ஏதோ ஒரு வெறுமை இருக்கத்தான் செய்யும். குயில் போல் இல்லாவிட்டாலும், அவள் குரல் கேட்டுக் கொண்டாவது இருக்கும். அவள் இல்லாமல், அவள் குரல் இல்லாமல், வீடே கொஞ்சம் 'வெறிச்" என்று இருப்பது போல இருக்கும்.

சீதையின் குரல் தேனையும், அமிழ்தையும் குழைத்து செய்தது போல இருக்குமாம். அவ்வளவு இனிமையான குரல். அந்த குரலை கேட்காமல் இராமன் தவிக்கிறான்.


"அளவு இல்லாத அந்த கார் காலம் வந்தால், தவம் புரிவோர் கூட தடுமாறுவார்கள் என்றால் அமுதையும், தேனையும் குழைத்து செய்த குரலைக் கொண்ட சீதையின் தோளில் இன்பம் கண்ட இராமனின் துன்பத்திற்கு எதை உவமை சொல்ல முடியும்"

பாடல்


அளவு இல் கார் எனும் அப்
      பெரும் பருவம் வந்து அணைந்தால்,
தளர்வர் என்பது தவம்
     புரிவோர்கட்கும் தகுமால்;
கிளவி தேனினும் அமிழ்தினும்
      குழைந்தவள் கிளைத்தோள்
வளவி உண்டவன், வருந்தும்என்றால்,
      அது வருத்தோ?


பொருள்

அளவு இல் = அளவற்ற, நீண்ட

கார் எனும் = கார் என்ற

அப் = அந்த

பெரும் பருவம் = பெரிய பருவ நிலை

வந்து அணைந்தால், = வந்து விட்டால்

தளர்வர் = தளர்ந்து போவார்கள்

என்பது = என்பது

தவம் புரிவோர்கட்கும் = தவம் செய்யும் முனிவர்களுக்கும்

தகுமால்; =பொருந்தும் என்றால்

கிளவி = மொழி, குரல்

தேனினும் = தேனையும்

அமிழ்தினும் = அமுதத்தையும்

குழைந்தவள் = குழைத்து செய்த குரலைக் கொண்ட சீதையின்

கிளைத் = மூங்கில் போன்ற

தோள் = தோள்களை

வளவி = அணைத்து

உண்டவன் = இன்பம் கண்டவன்

 வருந்தும் = வருந்தினான்

என்றால், = என்றால்

அது வருத்தோ? = அது என்ன அவ்வளவு எளிய ஒன்றா ?

பேசும்போது அப்படி பேச வேண்டும். இனிமையாக பேச வேண்டும். அடடா, அந்த குரலை கேட்க முடியவில்லையே என்று மற்றவர்கள் வருந்த வேண்டும். அன்போடு, நல்ல சொற்களை தேர்ந்து எடுத்து, இனிமையாகப் பேச வேண்டும்.

வாயைத் திறந்தாலே, எப்படா மூடுவாள் என்று நினைக்கக் கூடாது.

கோபம், வருத்தம், ஆங்காரம், வெறுப்பு போன்ற குணங்களை நீக்கி அன்போடு, பண்போடு பேசிப் பழக வேண்டும்.

செய்து பாருங்கள். உங்களிடம் பேசுவதற்காகவே மற்றவர்கள் காத்துக் கிடப்பார்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_9.html

Friday, November 8, 2019

கம்ப இராமாயணம் - யாரைக் கண்டு உயிர் ஆற்றுவான்

கம்ப இராமாயணம் - யாரைக் கண்டு உயிர் ஆற்றுவான் 


இராமனை நமக்கு பெரிய வீரனாகத் தெரியும், நல்ல மகனாகத் தெரியும், நல்ல அண்ணனாகத் தெரியும், பொறுமை உள்ள ஒரு தலைவனாகத் தெரியும்....ஆனால், மனைவியை பிரிந்து, அழுது, மனம் நொந்து, புலம்பும் இராமனை நமக்கு அவ்வளவாகத் தெரியாது.

ஆண்கள் என்றால் ஏதோ உணர்ச்சிகள் அற்றவர்கள், கல் மனம் கொண்டவர்கள், முரடர்கள் என்ற ஒரு தோற்றம் உருவாக்கப் பட்டிருக்கிறது. அந்த தோற்றத்தை காப்பாற்ற வேண்டி ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அடக்கியே வைத்து இருக்கிறார்கள். அது ஒரு புத்திசாலித்தனமான காரியம் இல்லை.

உணர்வுகளை வெளிப்படுத்தத் தெரிய வேண்டும்.

துக்கம் வந்தால், அழ வேண்டும். பிரிவு வந்தால் தவிக்க வேண்டும்.

எல்லாவற்றையும் போட்டு உள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டிருந்தால், "இவன் என்ன மனுஷனா, இல்லை இயந்திரமா" என்ற ஐயம் வந்து விடும்.

பேராற்றல் கொண்ட இராமன், சீதையின் பிரிவினால் எப்படி வாடுகிறான் என்று கம்பன் காட்டுகிறான்.

கம்பன் விரும்பி இருந்தால், "இராமன் அந்தப் பிரிவை புன்னகையோடு ஏற்றுக் கொண்டான் " என்று எழுதிவிட்டுப் போயிருக்கலாம். அப்படிச் செய்யவில்லை.

இராமனை அழ விடுகிறான். தவிக்க விடுகிறான். புலம்ப விடுகிறான்.

அதனால், நமக்கு இராமன் மேல் உள்ள மதிப்பு குறையவில்லை. மாறாக உயர்கிறது.

இது ஆண்களுக்கு ஒரு பாடம்.

"சீதையின் முகத்தைக் காணாமல் தவித்தான். நல் உணர்வுகள் அழிந்தன. இந்த கார்காலம், என்னை வாட்ட வேண்டும் என்பதற்காகவே, இவ்வளவு மலர்களை பூத்து, மன்மதனிடம் கொடுத்து என் மேல் விடச் சொல்கிறதோ. துயரத்துக்கு ஒரு முடிவே இல்லை"

பாடல்

தேரைக் கொண்ட பேர்
      அல்குலாள் திருமுகம் காணான்,
ஆரைக் கண்டு உயிர் ஆற்றுவான்?
      நல் உணர்வு அழிந்தான்;
மாரற்கு எண் இல் பல்
      ஆயிரம் மலர்க் கணை வகுத்த
காரைக் கண்டனன்; வெந் துயர்க்கு
      ஒரு கரை காணான்.

பொருள்


தேரைக் கொண்ட = தேரின் மேல் தட்டு போன்ற

பேர் = பெரிய

அல்குலாள் = அல்குலை உடைய சீதையின்

திருமுகம் காணான், = அழகிய முகத்தை காணாமல்

ஆரைக் கண்டு = வேறு யாரைப் பார்த்து

உயிர் ஆற்றுவான்? = தவிக்கும் உயிரை ஆற்றுப் படுத்துவான்?

நல் உணர்வு அழிந்தான்; = நல்ல உணர்வுகள் அழிந்தான்

மாரற்கு = மன்மதனுக்கு

எண் இல் பல் = கணக்கில் அடங்காத பல

ஆயிரம்  = ஆயிரம்

மலர்க் கணை = மலர் அம்புகளை

வகுத்த = எய்யக் கொடுத்த

காரைக் கண்டனன் = கார் காலத்தைக் கண்டான்

வெந் துயர்க்கு = வெண்மையான துயரத்துக்கு

ஒரு கரை காணான். = ஒரு முடிவை காணாத இராமன்


சீதை மேல் அவ்வளவு உயிர் இராமனுக்கு.

மனைவியைப் பிரிந்தால், கணவன் "அப்பாடா கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கலாம் " என்று நினைக்கக் கூடாது. "ஐயோ, எப்ப வருவாளோ" என்று தவிக்க வேண்டும்.

தாம்பத்ய பாடம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_8.html

Wednesday, November 6, 2019

கம்ப இராமாயணம் - யார் என விளம்புகேன் ?

கம்ப இராமாயணம் - யார் என விளம்புகேன் ?


இன்று வணிக மேலாண்மை (business management ) யில் செய்தித் தொடர்பு (communication) என்பது பெரிய விஷயமாக பேசப் படுகிறது. எப்படி பேச வேண்டும், எப்படி பேசினால் காரியம் நடக்கும், பொருளை விற்க, வாங்க, என்று எங்கு பார்த்தாலும் செய்தித் தொடர்புதான் பெரிதாகப் பேசப் படுகிறது. மேலும், டிவி, கணனி என்று வந்த பின், செய்திகளின் பெருக்கம் அதிகமாகி விட்டது.

வெளி உலகை விடுவோம். வீட்டுக்கு வருவோம். கணவன்/மனைவி, பிள்ளைகள், பெற்றோர், நண்பர்கள், உடன் பிறந்தவர்கள் என்று எல்லோரிடமும் எப்படி பேசுவது என்று ஒரு முறை இருக்கிறது அல்லவா? அது தெரியாமல் எதையோ, எப்படியோ பேசி உறவுகளில் சிக்கல்களை உண்டாக்கி விடுகிறோம்.

தமிழ் இலக்கியங்களை படிக்கும் போது, நம்மை அறியாமலேயே நாம் பேசுவது, எழுதுவது என்பது பண் படும். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல, கம்பன், இளங்கோ, வள்ளுவர் போன்றவர்களை படிக்கும் போது அவர்களின் சொல்லாற்றல் நம்மையும் பற்றிக் கொள்ளும்.

வீட்டுக்கு ஒரு பெரியவர் வருகிறார். வீட்டில் உள்ள சிறுவனுக்கு அவர் யார் என்று தெரியாது. "நீங்க யார்" என்று கேட்டால் மரியாதைக் குறைவு. கேட்காமலும் இருக்க முடியாது. என்ன செய்வது ? எப்படி பேசுவது?

இராம இலக்குவனர்களை சந்தித்தபின் , அனுமன் அந்த நிலையில் இருக்கிறான்.

அவர்கள் இருவரும் பெரிய ஆள் போலத் தெரிகின்றது. ஆனால், நீங்கள் யார் என்று கேட்டால் மரியாதைக் குறைவாகப் போய் விடலாம். எனவே, அனுமன் கேட்கிறான்

"எங்கள் அரசர் கேட்டால் உங்களை யார் என்று சொல்லட்டும் . நீங்கள் எப்படி சொல்கிறீர்களோ , அப்படியே அவரிடம் போய் சொல்கிறேன் " என்று.

பாடல்


'யார் என விளம்புகேன் நான்,
     எம் குலத் தலைவற்கு, உம்மை?
வீர! நீர் பணித்திர்! ' என்றான்,
     மெய்ம்மையின் வேலி போல்வான்;
வார்கழல் இளைய வீரன்,
     மரபுளி, வாய்மை யாதும்
சோர்வு இலன், நிலைமை
     எல்லாம் தெரிவுறச் சொல்லலுற்றான்:


பொருள்


'யார் என  = நீங்கள் யார் என்று

விளம்புகேன் நான் = சொல்லுவேன் நான்

எம் குலத் தலைவற்கு, = எங்கள் குலத் தலைவருக்கு

உம்மை? = உங்களை

வீர! = வீரர்களே

நீர் பணித்திர்! ' என்றான், = நீங்களே சொல்லுங்கள் என்றான்

மெய்ம்மையின் வேலி போல்வான் = உண்மைக்கு வேலி போன்றவன்

வார்கழல் இளைய வீரன் = வீர கழல்களை அணிந்த இளைய வீரன் (இலக்குவன்)

மரபுளி = மரபின் படி

வாய்மை யாதும் = உண்மை அனைத்தையும்

சோர்வு இலன் = சோர்வு இல்லாமல்

நிலைமை எல்லாம் = நிலைமை அனைத்தையும்

தெரிவுறச் சொல்லலுற்றான்: = தெரிந்து கொள்ள சொல்ல ஆரம்பித்தான்

என்ன ஒரு அழகு ! என்ன ஒரு நளினம் !

சொல்லின் செல்வன் என்று இராமனால் பாராட்டப் பட்டவன் அல்லவா?

நாமும் இது போல பேசிப் பழக வேண்டாமா?


https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_6.html

Tuesday, November 5, 2019

தேவாரம் - நடக்கும் நடக்குமே

தேவாரம் - நடக்கும் நடக்குமே 


இரவும் பகலும், எந்நேரமும் ஏதோ ஒன்றின் பின்னால் அலைந்து கொண்டு இருக்கிறோம்.  பணம், புகழ், ஆசை,பொறாமை, காமம், பதவி என்று ஐந்து புலன்களும் நம்மை அங்கும் இங்கும் அலைக்கழிக்கின்றன. ஒரு நிமிடம் நிற்க விடுவது இல்லை.

என்னதான் செய்வது?  எல்லாவற்றையும் விட்டுவிடலாம் என்றால் அதுவும் முடிவது இல்லை. வைத்துக் கொண்டு அல்லாடாவும் முடியவில்லை. ஒரு சில சமயம் இன்பமாக இருப்பது போல இருந்தாலும், துன்பமே மிகுதியாக இருக்கிறது.

இப்படி கிடந்து  உழல்வதுதான் நமக்கு விதித்த விதியா ? இப்படியே போய் கொண்டிருந்தால் இதற்கு என்னதான் முடிவு.

நாவுக்கரசர் சொல்கிறார்

"இரவும் பகலும் ஐந்து புலன்கள் நம்மை அரித்துத் தின்ன, இந்த துன்பத்தில் இருந்து எப்படி விடுபடுவோம் என்று நினைத்து ஏங்கும் மனமே உனக்கு ஒன்று சொல்வேன் கேள். "திருச்சிராப்பள்ளி" என்று சொல். நீ செய்த தீவினை எல்லாம், உன்னை விட்டு முன்னே நடந்து போய் விடும்"

என்று.

பாடல்

அரிச்சி ராப்பக லைவரா லாட்டுண்டு
சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள்
திருச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை
நரிச்சி ராது நடக்கும் நடக்குமே. 


சீர் பிரித்த பின்

அரித்து இராப் பகல் ஐவரால் ஆட்டுண்டு 
சுரிச்சிராது நெஞ்சே ஒன்று சொல்லக்கேள்
திருச்சிராப்பள்ளி  என்றலும்  தீவினை
நரிச்சு இராது நடக்கும் நடக்குமே. 

பொருள்

அரித்து = அரித்து

 இராப் பகல் = இரவும் பகலும்

ஐவரால் = ஐந்து புலன்களால்

ஆட்டுண்டு  = ஆட்டப்பட்டு

சுரிச்சிராது = துக்கப்படாமல்

நெஞ்சே  = நெஞ்சே

ஒன்று சொல்லக்கேள் = ஒன்று சொல்வேன் கேள்

திருச்சிராப்பள்ளி = திருச்சிராப்பள்ளி

 என்றலும் = என்று சொன்னால்

  தீவினை = செய்த தீய வினைகள் எல்லாம்

நரிச்சு இராது = கூடவே இருக்காமல்

நடக்கும் நடக்குமே.  = மெல்ல மெல்ல நடந்து  சென்று விடும் , (உன்னை விட்டு)

"திருச்சி" அப்படினு சொன்னா போதுமா ? ஏன் திருச்சி, வேற ஊர் பேர் சொல்லக் கூடாதா ?

பெயர் அல்ல முக்கியம்.

எப்போதும் புலன்கள் பின்னால் அலைவதை விடுத்து மனதை நல்ல வழிகளில்  திசை திருப்பச் சொல்கிறார். புலன் இன்பம் மட்டுமே வாழ்க்கை அல்ல.  அது கொஞ்சம் கொஞ்சமாக நம் வாழ்வை அரித்து விடும்.துன்பத்தையே தரும்.  அதை அறிந்து கொண்டு, மனதை திசை திருப்பச் சொல்கிறார்.

பெரியவர்கள் சொல்லும் போது, ஏதோ ஒரு மந்திரத்தைச் சொல்,  கடவுள் பெயர், ஊர் பெயர், என்று ஏதாவது ஒன்றை பிடித்துக் கொள் என்பார்கள்.

நம்மவர்கள் உடனே, ஏன் அந்த சாமிப் பெயர், எதுக்கு அந்த ஊர், அதில் இன்னார் பெரிய  உயர்வு என்று சண்டை பிடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஏதாவது ஒரு ஊர் பெயரைச் சொல் என்றால், எந்த ஊர் என்ற கேள்வி வரும்.

இப்படி மனம் கிடந்து அலைந்து திரியும்.  காரியம் நடக்காது.

எனவேதான், ஒன்றை பிடித்துக் கொள் என்கிறார்கள். அது உயர்ந்தது என்பதற்காக அல்ல. எல்லாவற்றையும் தூக்கிப் போட்டால், எதை எடுப்பது, எதை விடுவது என்று   நாம் குழம்பிப் போவோம் என்பதற்காக.

உங்கள் மனதில் எது படுகிறதோ, எது இலயிக்கிறதோ அதைச் சொல்லுங்கள்.

"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்"

தான் உள்ளே இருக்கும்படி இந்த உலகைச் செய்தான். அனைத்திலும் அவன் இருக்கிறான் என்கிறபடியால், எதை வேண்டுமானாலும் நினைக்கலாம்.

எளிமையான பாடல்கள் என்பதால், நாம் சிலவற்றை கடந்து போய் விடுகிறோம்.

எல்லாவற்றிலும் பொருள் உண்டு.

"முறுக வாங்கிக் கடைய, முன் நிற்குமே"



https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_5.html

Saturday, November 2, 2019

ஆத்திச் சூடி - மிகைப்பட பேசேல்

ஆத்திச் சூடி - மிகைப்பட பேசேல் 



வாழ்க்கை என்றால் ஏதாவது அசம்பாவிதம், சிக்கல், எதிர்பாராத நிகழ்வுகள் இருக்கத்தான் செய்யும்.

அப்படி ஏதாவது நிகழ்ந்து விட்டால், ஐயோ, அப்பா என்று அதை பெரிது படுத்தக் கூடாது.

தடங்கல்களும், சறுக்கல்களும் அவ்வப்போது வரும் , போகும்.

சரி சரி என்று எடுத்துக் கொண்டு போக வேண்டும்.

சிலர், சின்ன தலை வலி வந்தால் கூட  ஏதோ உயிர் போவது போல அலட்டிக் கொள்வார்கள்.

சிலர், அடி பட்டு, எலும்பு முறிந்திருந்தால் கூட, பெரிதாக காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

சிலர், எதையும் மிகைப் படுத்திக் கூறுவதன் மூலம் தாங்களும் துன்பப் பட்டு, சுற்றி இருப்பவர்களையும் ஒரு உணர்ச்சி மிகுதியில் அழுத்தி விடுவார்கள்.

காதலித்தவர் கை விட்டு விட்டால், பரிட்சையில் தோல்வி அடைந்தால், உறவுகளில் சிக்கல் வந்தால், வியாபாரத்தில் நட்டம் வந்தால், போட்ட முதல் சரியானபடி வருமானம் தரவில்லை என்றால்...அதை எப்படி நாம் எடுத்துக் கொள்கிறோம், எப்படி நாம் மற்றவர்களிடம் சொல்கிறோம் என்பதில் இருக்கிறது  அதன் பாதிப்பு.

பிரச்சனைகளை ஊதி ஊதி பூதாகரமாக மாற்றி விடக் கூடாது.

"இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா...வாழ்க்கை என்றால் அப்படி இப்படித் தான் இருக்கும் " என்று சொல்லிப் பழக வேண்டும்.

அப்படி சொல்லிப் பழகுவதன் மூலம், பெரிய பிரச்சனை கூட சாதாரணமாய் தெரியும்.

மாறாக, "ஐயோ, எனக்கு இப்படி நிகழ்ந்து விட்டதே " என்று ஒப்பாரி வைத்தால்,  பூதக்  கண்ணாடி மூலம் பார்த்தால் எப்படி சிறிய பொருள் கூட பெரிதாய் தெரியுமோ, அப்படி சின்ன சிக்கல் கூட பெரிதாய் மாறி விடும்.


இராஜ்யமே போனால் கூட, "அன்றலர்ந்த செந்தாமரையை ஒத்தது" போல இராமன் சிரித்துக் கொண்டே சென்றான். வானுக்கும் பூமிக்கும் குதிக்கவில்லை.

எனவே தான் ஒளவை சொன்னாள்

"மிகைப்பட  பேசேல்"

என்று.

ரொம்ப அலட்டிக் கொள்ளக் கூடாது.

சாதாரணமாக பேசிப் பழக வேண்டும்.

அப்படிச் செய்தால், மனம் பதட்டம் அடையாது, நிதானம் வரும், பிரச்சனைகளை  சரி செய்யும் பக்குவம் வரும்.

பழகுங்கள்.

உங்களை சுற்றி உள்ளவர்களிடமும் சொல்லுங்கள். அவர்கள் மிகைப்பட  பேசி, உங்கள் இரத்த அழுத்தத்தை ஏற்றி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இரண்டு வார்த்தையில் வாழ்க்கை நெறியை சொல்லி விட்டுப் போகிறாள் அவள்.

ஒன்றாம் வகுப்பில் படித்த ஆத்திச் சூடி !

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_2.html

Friday, November 1, 2019

கந்த புராணம் - அந்த மூன்று

கந்த புராணம் - அந்த மூன்று 


எல்லாவற்றிற்கும் அடிப்படை எது என்ற ஆராய்ச்சி எல்லா துறைகளிலும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

பொருள், அதன் அடிப்படை அணு என்றார்கள் . பின், அனுவின் அடிப்படை ப்ரோடான், நியூட்ரான், எலக்ட்ரான் என்றார்கள். பின் அதற்கும் உள்ளே போய் போஸான், Neuon, quarks என்று சொல்லுகிறார்கள். நாளை வேறு ஏதாவது வரும்.

உடல், அதன் அடிப்படை உறுப்புகள், அதற்குக் கீழே திசுக்கள், அதற்கு கீழே செல்கள், அதற்கு கீழே DNA , mitochandria, golgai bodies என்று போய் கொண்டே இருக்கிறது.


எது நிரந்தரமானது என்று தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.

மேலே சொன்னவை வெளி உலக ஆராய்ச்சி. நமக்கு எது அடிப்படை. மனித வாழ்வு, மனித உறவு, உண்மை, மெய் பொருள் இவற்றிற்கு எல்லாம் எது அடிப்படை என்று ஆராய்ந்தார்கள் நம் முன்னவர்கள்.

மிகுந்த ஆராய்ச்சிக்குப் பின், அவர்கள் மூன்று பொருள்கள் நிரந்தரணமானவை, அழிவில்லாதவை என்று கண்டு கொண்டார்கள்.

இந்த உலகம், நம் வாழ்க்கை, நம் ஆசா பாசங்கள், உறவுகள், அதில் வரும் சிக்கல்கள், வாழ்வின் நோக்கம், குறிக்கோள், தோற்றம், வளர்ப்பு, முடிவு என்ற இவை அனைத்துமே  அந்த மூன்றை அடிப்படையாகக் கொண்டது என்று கண்டு  கொண்டார்கள்.

அது என்ன மூன்று ?

நமது சித்தாந்தம் மிக மிக விரிவாக அது பற்றி சொல்கிறது.  அந்த விரிவை பின்னொரு நாள் சிந்திப்போம்.

அந்த மூன்று என்ன என்று கச்சியப்பர் சொல்லுகிறார்.

அவை பதி , பசு, பாசம் என்ற மூன்று.  நம் வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் எல்லாம் இதன் அடிப்படையில் எழுதப்பட்டவைதான் என்கிறார் கச்சியப்பர்.

பாடல்



சான்றவர் ஆய்ந்திடத் தக்க வாம் பொருள்
மூன்று உள மறை எலாம் மொழிய நின்றன
ஆன்றது ஓர் தொல் பதி ஆர் உயிர்த்தொகை
வான் திகழ் தளை என வகுப்பர் அன்னவே .


பொருள்


சான்றவர் = பெரியவர்கள்

ஆய்ந்திடத் தக்க  வாம் = ஆராய்ச்சி செய்யத் தக்க

பொருள் = பொருள்கள்

மூன்று உள = மூன்று உள்ளன

மறை எலாம் = நம் வேதங்கள், உபநிடதங்கள் எல்லாம்

மொழிய நின்றன = அதையே சொல்லி நிற்கின்றன

ஆன்றது = அது என்ன என்றால்

ஓர் தொல் பதி  = பழமையான "பதி"

ஆர் உயிர்த்தொகை = உயிர்களின் கூட்டம் - "பசு"

வான் திகழ் = பெரிதாக விளங்குகின்ற

தளை  = தளை என்றால் விலங்கு, கையில் பூட்டும் விலங்கு.  அதாவது "பாசம்"

என வகுப்பர் அன்னவே . = என்று வகுப்பார்கள்

"பதி  - பசு - பாசம்"  என்ற மூன்றும் அனைத்துக்கும் அடிப்படை.

பதி கடவுள்

பசு நாம் மற்றும் உயிர் கூட்டங்கள்

பாசம் உயிரை , இந்த உலகோடு பிணிக்கும் தளை.

இது ஒரு மிகப் பெரிய தத்துவம். இதை அடிப்படையாகக் கொண்டு நம் முன்னவர்கள்  பின்னிய  சித்தாந்த வலை இருக்கிறதே, அது மிக மிக ஆச்சரியமானது. எவ்வளவு சிந்தித்து இருக்கிறார்கள் என்று வியக்க வைக்கும்.

நேரம் ஒதுக்கி, தேடிப் பாருங்கள். கிடைக்காமலா போய் விடும்?

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post.html