Friday, November 8, 2019

கம்ப இராமாயணம் - யாரைக் கண்டு உயிர் ஆற்றுவான்

கம்ப இராமாயணம் - யாரைக் கண்டு உயிர் ஆற்றுவான் 


இராமனை நமக்கு பெரிய வீரனாகத் தெரியும், நல்ல மகனாகத் தெரியும், நல்ல அண்ணனாகத் தெரியும், பொறுமை உள்ள ஒரு தலைவனாகத் தெரியும்....ஆனால், மனைவியை பிரிந்து, அழுது, மனம் நொந்து, புலம்பும் இராமனை நமக்கு அவ்வளவாகத் தெரியாது.

ஆண்கள் என்றால் ஏதோ உணர்ச்சிகள் அற்றவர்கள், கல் மனம் கொண்டவர்கள், முரடர்கள் என்ற ஒரு தோற்றம் உருவாக்கப் பட்டிருக்கிறது. அந்த தோற்றத்தை காப்பாற்ற வேண்டி ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அடக்கியே வைத்து இருக்கிறார்கள். அது ஒரு புத்திசாலித்தனமான காரியம் இல்லை.

உணர்வுகளை வெளிப்படுத்தத் தெரிய வேண்டும்.

துக்கம் வந்தால், அழ வேண்டும். பிரிவு வந்தால் தவிக்க வேண்டும்.

எல்லாவற்றையும் போட்டு உள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டிருந்தால், "இவன் என்ன மனுஷனா, இல்லை இயந்திரமா" என்ற ஐயம் வந்து விடும்.

பேராற்றல் கொண்ட இராமன், சீதையின் பிரிவினால் எப்படி வாடுகிறான் என்று கம்பன் காட்டுகிறான்.

கம்பன் விரும்பி இருந்தால், "இராமன் அந்தப் பிரிவை புன்னகையோடு ஏற்றுக் கொண்டான் " என்று எழுதிவிட்டுப் போயிருக்கலாம். அப்படிச் செய்யவில்லை.

இராமனை அழ விடுகிறான். தவிக்க விடுகிறான். புலம்ப விடுகிறான்.

அதனால், நமக்கு இராமன் மேல் உள்ள மதிப்பு குறையவில்லை. மாறாக உயர்கிறது.

இது ஆண்களுக்கு ஒரு பாடம்.

"சீதையின் முகத்தைக் காணாமல் தவித்தான். நல் உணர்வுகள் அழிந்தன. இந்த கார்காலம், என்னை வாட்ட வேண்டும் என்பதற்காகவே, இவ்வளவு மலர்களை பூத்து, மன்மதனிடம் கொடுத்து என் மேல் விடச் சொல்கிறதோ. துயரத்துக்கு ஒரு முடிவே இல்லை"

பாடல்

தேரைக் கொண்ட பேர்
      அல்குலாள் திருமுகம் காணான்,
ஆரைக் கண்டு உயிர் ஆற்றுவான்?
      நல் உணர்வு அழிந்தான்;
மாரற்கு எண் இல் பல்
      ஆயிரம் மலர்க் கணை வகுத்த
காரைக் கண்டனன்; வெந் துயர்க்கு
      ஒரு கரை காணான்.

பொருள்


தேரைக் கொண்ட = தேரின் மேல் தட்டு போன்ற

பேர் = பெரிய

அல்குலாள் = அல்குலை உடைய சீதையின்

திருமுகம் காணான், = அழகிய முகத்தை காணாமல்

ஆரைக் கண்டு = வேறு யாரைப் பார்த்து

உயிர் ஆற்றுவான்? = தவிக்கும் உயிரை ஆற்றுப் படுத்துவான்?

நல் உணர்வு அழிந்தான்; = நல்ல உணர்வுகள் அழிந்தான்

மாரற்கு = மன்மதனுக்கு

எண் இல் பல் = கணக்கில் அடங்காத பல

ஆயிரம்  = ஆயிரம்

மலர்க் கணை = மலர் அம்புகளை

வகுத்த = எய்யக் கொடுத்த

காரைக் கண்டனன் = கார் காலத்தைக் கண்டான்

வெந் துயர்க்கு = வெண்மையான துயரத்துக்கு

ஒரு கரை காணான். = ஒரு முடிவை காணாத இராமன்


சீதை மேல் அவ்வளவு உயிர் இராமனுக்கு.

மனைவியைப் பிரிந்தால், கணவன் "அப்பாடா கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கலாம் " என்று நினைக்கக் கூடாது. "ஐயோ, எப்ப வருவாளோ" என்று தவிக்க வேண்டும்.

தாம்பத்ய பாடம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_8.html

3 comments:

  1. "தேரைக் கொண்ட பேர் அல்குலாள்" இப்படி ஒரு வர்ணனையா , முகம் சுளிக்க வைக்கிறதே. பக்தி காவியங்களில் ஏன் இப்படி ?

    ReplyDelete
  2. சுக்ரீவ நட்பின் பிறகு மழை காலத்தில் சீதையை கண்டு பிடிக்கும் முயற்ச்சி தாமதமாகும் நேரத்தில் போது ராமர் விரக தாபத்தினால் அல்லது சீதையின் பிரிவினால் வாடியதாக நாராயண பட்டதிரியும் சொல்லி உள்ளார். மனதில் உள்ள மெல்லிய நல்ல உணர்வுகளை வெளிப்படுத்துவது நியாயமே.

    ReplyDelete
  3. "தேரைக் கொண்ட பேர் அல்குலாள்"

    இராமாயணம் பக்தி காவியமா?

    இராமாயணத்தில் இதைப்போல பல இடங்களில் வருணனைகள் இருக்கின்றன. அவற்றை அசிங்கம் என்று எண்ணாமல், அதுவும் வாழ்வின் ஒரு பகுதியாக எண்ணுவது மேலல்லவா?

    ReplyDelete