Friday, March 6, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வான் மறந்த காலத்தும்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வான் மறந்த காலத்தும் 


எத்தனையோ சோதனைகள், எத்தனையோ சிக்கல்கள், கவலைகள் வருகின்றன. என்ன சாமி கும்பிட்டு என்ன பயன். நடக்கிறது என்னமோ நடந்துக்கிட்டுதான்  இருக்கு. இந்த சாமி என்பதெல்லாம் ஒரு வேளை சும்மா கற்பனைதானோ என்ற எண்ணம் அவ்வப்போது எழலாம்.

என்ன செய்வது?

சில சமயம் வானம் பொய்த்துப் போவது உண்டு.  மழை பெய்யாமல் போய் விடும். பயிர் பச்சை எல்லாம், "சரி தான், இந்த மேகத்தை நம்பி பயன் இல்லை, நாம் வேறு வழி பார்க்க வேண்டியதுதான்" என்று கிளம்பி விடுவது இல்லை.  வானம் என்னதான் பொய்த்தாலும், அந்த மேகத்தை, அது தரும் மழையை எதிர்பார்த்தே பயிர்கள் வாழும்.

வித்துவக்கோட்டம்மானே, நீ எனக்கு எவ்வளவு தான் துயரம் தந்தாலும், என் துயரத்தை போக்கா விட்டாலும், என் மனம் என்னவோ எப்போதும் உன் மேல் தான் இருக்கும்..

என்கிறார் குலா சேகர ஆழ்வார்.

பாடல்


எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்

மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைப்போல்

மெய்த்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட்

டம்மாஎன் சித்தம்மிக வுன்போலே வைப்ப னடியேனே

பொருள்

எத்தனையும் = எவ்வளவுதான்

வான் = வானம்

மறந்த காலத்தும் = மழை பெய்ய மறந்த காலத்தும்

பைங்கூழ்கள் = பசுமையான தாவரங்கள்

மைத்தெழுந்த = மை போல கறுத்து எழுந்த

மாமுகிலே  = பெரிய மேகங்களையே

பார்த்திருக்கும் = பார்த்து இருக்கும்

மற்றவைப் போல் = அவற்றைப் போல

மெய்த்துயர் = உண்மையான துன்பத்தை

வீட் டாவிடினும் = தீர்க்காவிடினும்

விற்றுவக்கோட் டம்மா  = வித்துவக்கோட்டத்தில் உள்ள என் அம்மானே

என் சித்தம் = என் மனம்

மிக வுன்போலே  = மிகவும் உன் மேலே

வைப்ப னடியேனே = வைப்பன் அடியேனே

மனதை உருக்கும் பாடல்கள்.

காதலும் பக்தியும் அப்படித்தான். துன்பம் தந்தாலும், யார் மேல் பக்தி உள்ளதோ, அவர்களையே நினைத்து உருகும்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_23.html

தேவாரம் - குறிக்கோள் இல்லாது கெட்டேன்

தேவாரம் - குறிக்கோள் இல்லாது கெட்டேன் 


யாரைக் கேட்டாலும், "நேரமே இல்லை" என்பதே பதிலாக இருக்கிறது.

எதுக்குமே நேரம் இல்லை. ஆனால்,எல்லோரும் பரபரப்பாக ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் அறிவியல் , நேரத்தை சேமிக்க புது புது சாதனங்களை தந்து கொண்டே இருக்கிறது. இன்னொரு புறம், மனிதன் நேரம் இல்லை என்று தவித்துக் கொண்டு இருக்கிறான்.

இருக்கிற அதே நேரத்தில் பில் கேட்ஸ், இளைய இராஜா, என்று சிலர் மிகப் பெரிய பேரும் புகழும் படைக்கிறார்கள். நமக்கும் அதே அளவு நேரம் தான் இருக்கிறது. ஏன், நம்மால்  அந்த அளவு பெரிய சாதனைகள் செய்ய முடியவில்லை?

திருநாவுக்கரசர் சொல்கிறார்.

குறிக்கோள் இல்லாத வாழ்க்கை.  என்ன செய்யப் போகிறோம், என்ன சாதிக்கப் போகிறோம் என்ற குறிக்கோள் இல்லாத வாழ்க்கை. இன்று இப்படி, நாளை எப்படியோ என்று வாழ்க்கையை  ஒவ்வொரு நாளாக கழிப்பது. எப்படி, எதையும் அடைய முடியும் ?


நமக்கு இருக்கும் சொற்ப வாழ்நாளில்,கொஞ்சம் சிறு பிள்ளை வயதில், ஒன்றும் தெரியாமல் போய் விடுகிறது. பின்னாளில் வயதாகி, கண் தெரியாமல், காது கேட்காமல் வயோதிகத்தில் கொஞ்சம் போய் விடுகிறது. நடுவில் நாட்களில் காதல், கல்யாணம், பிள்ளை வளர்ப்பு என்று பெரும் பகுதி போய் விடுகிறது.  இதையெல்லாம் விடுத்து, இருக்கிற நேரத்தில் நல்ல குறிக்கோள் இல்லாமல்  ஏனோ தானோ என்று வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு போவது சரிதானா?

பாடல்

பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளு மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்தநாளுங் குறிக்கோளி லாதுகெட்டேன்
சேலுலாம் பழனவேலித் திருக்கொண்டீச் சரத்துளானே.


பொருள்

பாலனாய்க் கழிந்த நாளும் = சிறு பிள்ளையாய் கழிந்த நாட்களும்


பனிமலர்க் கோதை மார்தம் = குளிர்ந்த மலர் போன்ற பெண்கள் தம்

மேலனாய்க் கழிந்த நாளும் = அவர்கள் பின் சென்றும், திருமணம் முடித்து அவர்களோடு செலவழித்த நாட்களும்

மெலிவொடு மூப்பு வந்து = மெலிந்து, மூப்பு வந்து வயதாகி

கோலனாய்க் கழிந்தநாளுங் = கோல் ஊன்றி கழித்த நாட்களும்

குறிக்கோளி லாதுகெட்டேன் = எந்தவிதமான குறிக்கோளும் இல்லாமல் கெட்டேன்

சேலுலாம் = மீன்கள் உலாவும்

பழனவேலித் = நீர் நிறைந்த நிலங்களை வேலியாகக் கொண்ட

திருக்கொண்டீச் சரத்துளானே. = திரு கொண்டீச்சரம் என்ற தலத்தில் உள்ளவனே

வாழ்வில் ஏதாவது ஒரு குறிக்கோள் வேண்டும். அதை நோக்கி தினம் நகர வேண்டும்.

வெந்ததை தின்று விதி வந்தால் மாள்வோம் என்று வாழ்வது ஒரு வாழ்க்கையா?

திருமணம் முடிக்காமல், பிள்ளை குட்டிகள் இல்லாத, திருநாவுக்கரசர் சொல்கிறார்.

அவர் பாடே அப்படி என்றால், நாம் எல்லாம் .... என்ன சொல்ல?

https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_15.html
கம்ப இராமாயணம் - கொன்று இறந்த பின் கூடுதியோ?

சீதையிடம் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி இராவணன் வேண்டுகிறான்.

அந்த அநாகரீகமான வேண்டுகோளை கூட இராவணன் வாயிலாக கம்பன் எவ்வளவு அழகாகச் சொல்கிறான்.



பாடல்


இன்று இறந்தன நாளை இறந்தன
என் திறம் தரும் தன்மை இதால்; எனைக்
கொன்று இறந்தபின் கூடுதியோ? குழை
சென்று இறங்கி மறம் தரு செங்கணாய்!

பொருள்


இன்று இறந்தன = இன்றைய நாள் இறந்து போனது

நாளை இறந்தன = நாளையும் இப்படி இறந்து போகும்

என் திறம் = எனக்கு

தரும் தன்மை இதால் (நீ) தரும் தன்மை இது என்றால்

எனைக் = என்னை

கொன்று = கொன்று

இறந்தபின் கூடுதியோ? = நான் இறந்த பின் என்னிடம் கூடுவாயா ?

குழை = காதில் அணிந்த அணிகலன்

சென்று இறங்கி = சென்று திரும்பி

மறம் தரு = அதோடு சண்டை செய்யும்

செங்கணாய்! =  சிவந்த கண்களை உடையவளே



சீதையின் கண்கள் காது வரை செல்லுமாம். 

அது போகட்டும். 

அவன் பேசுகின்ற பேச்சிலும் ஒரு அவலச் சுவை தொனிப்பதை நாம் காண முடிகிறது அல்லவா?

இன்று போய், நாளை போய் என்று சொல்லவில்ல. 

இன்று இறந்து, நாளை இறந்து என்று சொல்லிக் கொண்டு போனவன்...

நான் இறந்த பின்பு தான் என் காதலை ஏற்றுக் கொள்வாயா ?

என்று கேட்கிறான். 



Wednesday, March 4, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எங்கள் மால் கண்டாய் இவை

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எங்கள் மால் கண்டாய் இவை 


நம்மாழ்வார் பாசுரம்.


புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம்-இகழோம்
மற்றெங்கள் மால். செங்கண்மால். சீறல்நீ, தீவினையோம்
எங்கள்மால் கண்டாய் இவை.

என்ன இது? ஒண்ணுக்கு ஒண்ணு முரணா இருக்கே. புகழ்வோம் அப்படினு சொல்லிட்டு, அடுத்த வார்த்தையில் பழிப்போம் அப்படினு சொல்கிறார்.

அதே மாதிரி, புகழோம், பழியோம், இகழ்வோம், மதிப்போம், மதியோம் என்று போட்டு குழப்புகிறாரே.

இறைவன் மேல் உள்ள பல பாசுரங்கள், பாடல்கள் எல்லாம் அவனை போற்றி மகிழ்கின்றன. நாம் போற்றி அவனுக்கு என்ன ஆகப் போகிறது ?

நமச்சிவாய வாழ்க என்று சொன்னால் அவர் வாழப் போகிறாரா?

பல்லாண்டு பல்லாண்டு  பல்லாயிரத்தாண்டு என்று வாழ்த்தினதால் அவர் வாழப் போகிறாரா?

இல்லையே. பின் எதற்கு இந்த வாழ்த்து?

S P பாலசுப்ரமணியம், கே ஜே யேசுதாஸ் போன்ற பெரிய பாடகர்கள் பாடலை கேட்டுவிட்டு, சங்கீதம் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கும் நான், "நீங்க நல்லா பாடுனீங்க " என்று  புகழ்ந்தால் அது அவர்களுக்கு பெருமையா, சிறுமையா? "இவன் எல்லாம் வந்து சொல்ற அளவுக்கு நம் நிலைமை மோசமா ஆயிருச்சா " என்று தலையில் அடித்துக் கொள்வார்கள் இல்லையா?. அவர்கள் பாடல் நன்றாக இருக்கிறது என்று சொல்ல எனக்கு கொஞ்சமாவது சங்கீதம் தெரிய வேண்டும் அல்லவா?

அது போல, இறைவனை நாம் புகழ்வது, அவரை இகழ்வது போலத்தான். 

சரி, புகழ்வது தான் இகழ்வது போல இருக்கிறது என்றால், புகழாமல் இருந்து விட்டாலோ? புகழாமல் இருந்தால், அந்த இகழ்ச்சி வராது அல்லவா?

சரி, அப்படினு சும்மா இருந்தால், அதுவும் ஒரு இகழ்ச்சி தானே.

வீட்டில் மனைவி ருசியாக சமைத்துப் போடுகிறாள். சாப்பிட்டுவிட்டு, சும்மா வாயை மூடிக் கொண்டு போனால், அது அந்த சாப்பாட்டைப் பற்றி சிறப்பாக சொல்ல   ஒன்றும் இல்லை. அதனால் பேசாமல் எழுந்து விட்டேன் என்று சொல்லுவது போல  ஆகிவிடும் அல்லவா?

அல்லது, "நல்லா இருக்குனு சொல்லிட்டா  என்ன, வாயில இருந்து முத்தா உதிந்திரும்...பெரிய ஆளுன்னு நினைப்பு" என்று நாம் மௌனம் கூட ஏதோ நாம் அந்த   சாப்பாட்டை இகழ்வது மாதிரி தோணலாம்.




புகழ்வோம் பழிப்போம்  = நாம் புகழ்வது பழிப்பது மாதிரித்தான்.


புகழோம் பழியோம் = சரி, புகழாமல் இருந்து விட்டால், பழிக்காமல் இருந்து விடலாம்  என்று நினைத்தால்

இகழ்வோம் = இவ்வளவு செய்த கடவுளை புகழ்ந்து ஒரு வார்த்தையை சொல்லாமல்  வாய் மூடி இருந்தால், அது அவரை இகழ்ந்த மாதிரி ஆகிவிடும்.

எனவே, சும்மா இருக்கும் போது, இறைவனை இகழ்வது மாதிரி.

மதிப்போம் =  வெளியே சொல்ல வேண்டாம். மனதுக்குள்ளேயே ஒரு மதிப்பும்  மரியாதையும் வைத்துக் கொள்வோம் என்று பார்த்தால்.


மதியோம் = நம்மைப் போன்ற சிற்றறிவு உள்ளவர்கள் அவனை மனதில் வைத்து இருப்பது, அவனுக்கு ஒரு மதிப்பற்ற செயல் தான். இல்லையா?

இகழோம் = சரி, அப்படியா சங்கதி, அவனை நாம் மனதில் நினைப்பது அவனுக்கு இகழ்ச்சி என்றால், நாம் அவனை இகழ மாட்டோம்

மற்றெங்கள் = மாற்று எங்கள்

மால்  = மயக்கம் கொண்டவனே

செங்கண்மால் = சிவந்த கண்களை கொண்ட திருமாலே

சீறல் நீ = எங்கள் மேல் கோபம் கொள்ளாதே

தீவினையோம் = தீய வினைகள் உடைய நாங்கள்

எங்கள்மால் = நீ எங்க ஆளு

கண்டாய் இவை. = இதெல்லாம் உனக்குத் தெரியும்தானே

பக்தியின் உன்மத்த நிலை. என்ன செய்வது அறியாத தவிப்பு.

செய்தாலும் தப்பு. செய்யாவிட்டாலும் தப்பு.

நான் என்ன செய்தாலும் தப்பாகத்தான் போகப் போகிறது.

என் மேல கோபப் படாதே....என்று உருகுகிறார் நம்மாழ்வார்

இந்த ஒரு பாட்டுக்கே கண் கலங்குது. 4000 பாசுரம் இருக்கு இப்படி.

ஒரு வாழ்நாள் போதுமா?

தினம் ஒரு பாசுரம் படித்தாலும், பத்து வருடம் ஆகும் 3650 பாசுரம் படித்து முடிக்க.

அதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்கு.

https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_4.html



Tuesday, March 3, 2020

அபிராமி அந்தாதி - சயமானது அபசயம் ஆக

அபிராமி அந்தாதி - சயமானது அபசயம் ஆக 


பார்ப்பதற்கு அபிராமி எப்படி இருப்பாள்? மற்ற பெண்களைப் போல இருப்பாளா? திடீரென்று நாளை நம் முன் வந்து நின்றால், அவள் தான் அபிராமி என்று நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியுமா?

பட்டர் சொல்கிறார்....

அதிசயமான வடிவு உடையாள் ...என்ன அதிசயம் ? மூன்று கண், ஐந்து தலை என்று அதிசயமான வடிவமாக இருக்குமோ ?

மலர்களில் அழகியது தாமரை மலர். உலகில் உள்ள அனைத்து தாமரை மலர்களும் அவளுடைய முக அழகைப் பார்த்து வணங்குமாம். அப்படி ஒரு அதிசயம்.

அது மட்டும் அல்ல...

இரதி, மிக அழகானவள். அவளுடைய பதி மன்மதன், அவனும் சிறந்த அழகன். இராம பானத்துக்கு தப்பியவர்கள் கூட உண்டு, மன்மத பானத்துக்கு தப்பியவர் யாரும் கிடையாது. கரும்பு வில்லையும், மலர் அம்புகளையும் எடுத்துக் கொண்டு போருக்குப் போனால், தோல்வி என்பதே கிடையாது. வெற்றி மட்டும்தான். அப்படி எப்போதும் வெற்றி பெற்ற மன்மதன் தோற்ற இடமும் ஒன்று உண்டு. அது சிவனிடம். சிவன் மேல் மலர் அம்பை எறிந்தான். சிவனுக்கு காமம் வரவில்லை. கோபம் வந்தது. மன்மதனை எரித்து விட்டார்.

முதன் முதலில்  மன்மதனின் சயம் , அபசயம் ஆனது.

அப்படி மன்மத பானத்துக்கு மயங்காத சிவனும், அபிராமியின் அழகில் மயங்கி, தன் உடலில் இடப் பாகத்தை அவளுக்கு கொடுத்து விட்டார் என்றால், அபிராமி எவ்வளவு அழகாக இருக்க வேண்டும்?

பாடல்


அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்
மதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?


பொருள்


அதிசயம் ஆன வடிவு உடையாள் = அதிசயமான வடிவு உடையாள்

அரவிந்தம் எல்லாம் = தாமரை மலர்கள் எல்லாம்

துதி சய ஆனன = துதிக்கும்

சுந்தரவல்லி = அழகான பெண்

துணை இரதி பதி = இரதியின் துணையான பதி (மன்மதன்)

சயமானது = வெற்றியானது

அபசயம் ஆக = தோல்வியாக

முன் = முன்பு

பார்த்தவர்தம் =  நெற்றிக் கண்ணால் பார்த்தவருடைய

மதி சயம் ஆக அன்றோ = அறிவை வெற்றி கொண்டதால் அல்லவா

வாம பாகத்தை வவ்வியதே? = இடப்பாகத்தை பெற்றுக் கொண்டது

என்ன ஒரு தமிழ்.

"துணை இரதி பதி சயமானது , அபசயமக பார்த்தவர் தம் மதி சயமாக "


மன்மத அம்புக்கு மயங்காதவரையும் மயங்க வைக்கும் அழகு.



அதிசயமான வடிவு உடையாள் ....அபிராமி



https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_35.html


ஆத்திச் சூடி - படிப்பது

ஆத்திச் சூடி - படிப்பது


படிப்பது.

என்ன படிக்கிறீர்கள் என்று கேட்டால்


சில இளம் வயது ஆண்களையும் பெண்களையும் கேட்டால் "படிச்சு முடிச்சிட்டு வேலைக்கு try பண்ணிக்கிட்டு இருக்கேன் " என்பார்கள்.  படித்து முடிக்க முடியுமா?

குடும்பத் தலைவிகளை கேட்டால், "வீட்டைப் பாக்கவே நேரம் பத்தலை, இதுல எங்க போட்டு படிக்கிறது..." என்று அலுத்துக் கொள்வதை கேட்டு இருக்கிறோம்.

வயதானவர்களைக் கேட்டால்  "..ஆமா..இத்தனை வயசுக்கு அப்புறம் படிச்சு என்ன செய்யப் போறேன்...வேலைக்கா போகப் போறேன் " என்பார்கள்.

வேலைக்கு போகும் ஆண் / பெண்களைக் கேட்டால், "வேலை, வீடு, பிள்ளைகள், குடும்பம் ...இதுக்கே நேர பத்தலை...இதுல எங்கிருந்து படிக்கிறது ..." என்பார்கள்.

ஆக மொத்தம், படிப்பது என்பது ஏதோ ஒரு சிலர்க்கு மட்டும் வாய்த்த வாய்ப்பாக இருக்கிறது.

அது சரிதானா?

வள்ளுவரிடம் கேட்டால்

யாதானும் நாடாமல் ஊராமால் எவனொருவன்
சாந்துணையும் கல்லாதவாறு

என்று நீட்டி முழக்கி ஒண்ணே முக்கால் அடியில் சொல்லுவார்.

அவருக்கு சுருக்கமாகச் சொல்லாத் தெரியாது.

நம்ம கிழவி தான் சரி.

இரண்டே வார்த்தை.

"ஓதுவது ஒழியேல் "

நாங்களும் தான தினமும் whatsapp துணுக்குகள், வதந்திகள் எல்லாம் படிக்கிறோமே ,  facebook ல யார் என்ன செய்றாங்கன்னு படிக்கிறோம்...அதெல்லாம் படிப்புல வராதா என்றால்,  வராது.

ஓதுவது என்றால் மனப்பாடம் செய்ய வேண்டி மீண்டும் மீண்டும்  சொல்லுவது.

மனதுக்குள் ஏற வேண்டும்.

எதை திருப்பி திருப்பி படிப்போம்?

எது கடினமானதோ, எது நமக்கு மிகவும் தேவைப் படுகிறதோ , எது பயன் உள்ளதோ, அதை திருப்பி திருப்பி படிப்போம்.

அப்படி நல்லதை, உயர்ந்ததை படிப்பதை ஒரு நாளும் விட்டு விடக் கூடாது  என்கிறாள் ஒளவை.


"ரொம்ப பிரயாணம் செய்ய வேண்டி இருந்தது"

"நாலு நாளா உடம்பு சரியில்லை"

"வீட்டுல கொஞ்சம் விருந்தாளிங்க வந்துட்டாங்க ..கொஞ்சம் பிஸி " (என்ன நாலஞ்சு நாளா பிளாக் படிக்கல போல அப்படினு கேட்டா)

"அப்பாவுக்கு உடம்பு சரியில்லை, பக்கத்து வீட்டு மாடு கன்னு போட்டு இருக்கு,  ஊருக்குள்ள நல்ல மழை, மாமனார் திவசம், "

என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போவார்கள், படிக்காமல் இருப்பதற்கு.

ஒரு சாக்கும் சொல்லக் கூடாது.

ஓதுவது ஒழியேல்.

படிப்பதை நிறுத்தாதே.

வாழ்வின் கடைசி நாள் வரை, நாழிகை வரை படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

சாப்பிடுவது ஒழியேல், ஊர் சுற்றுவது ஒழியேல் அப்படினு சொல்ல வில்லை.

ஓதுவது ஒழியேல் என்று கூறினாள்.

தினம் ஒரு பத்து பக்கமாவது நல்ல செய்திகளை படியுங்கள்.

பாட்டி சொல்லைத் தட்டாதே.


https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_3.html

Sunday, March 1, 2020

கம்ப இராமாயணம் - கூசிக் கூசி இவை இவை கூறினான்

கம்ப இராமாயணம் - கூசிக் கூசி இவை இவை கூறினான் 


தான் ஆசைப்படுவது சரி அல்ல என்று இராவணனுக்குத் தெரியும். என்ன செய்ய? ஆசை அவனை உந்தித் தள்ளுகிறது. எப்படியாவது சீதையிடம் பேசி அவளை சம்மதிக்க வைத்து விடு என்று அவன் பிடரியைப் பிடித்துத் தள்ளுகிறது.

தவறு என்று அறிவு சொல்கிறது.

அது கிடக்கட்டும், நீ போய் கேள் என்று மனம் சொல்கிறது.

இரண்டுக்கும் நடுவில் கிடந்து தள்ளாடுகிறான்.

ஆசை ஒரு பக்கம், இப்படி ஒரு தவறான செயலை செகிறோமே என்ற நாணம் ஒரு புறம்...மிகுந்த கூச்சத்துடன் சீதையை அணுகுகிறான்....

பாடல்

ஈசற்கு ஆயினும் ஈடு அழிவுற்று இறை
வாசிப்பாடு அழியாத மனத்தினான்
ஆசைப்பாடும் அந்நாணும் அடர்த்திடக்
கூசிக் கூசி இவை இவை கூறினான்.

பொருள்


ஈசற்கு ஆயினும் = சிவனே என்றாலும்

ஈடு அழிவுற்று = இணை இல்லாத

இறை = பெருமிதம், பெருமை

வாசிப்பாடு அழியாத  = கொஞ்சம் கூட குறையாத

மனத்தினான் = மனத்தை உடையவன்

ஆசைப்பாடும் = ஆசை ஒரு பக்கம்

அந்நாணும் = நாணம் ஒரு பக்கம்

அடர்த்திடக் = சேர்ந்து நெருக்கிட

கூசிக் கூசி  = கூச்சத்துடன்

இவை இவை கூறினான். = இவற்றை கூறினான்

இராவணன், சீதையிடம் பேசப் போகிறான்.

ஒரு தகாத வேண்டுகோளை இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா என்று வியக்க வைக்கும் பேச்சு.

பேச்சு ஒரு கலை.  உணர்சிகளை வார்த்தையில் அழகாக வடிப்பது என்பது  கடினமான வேலை.

கம்பனின் தமிழ் எப்படி இருக்கிறது என்று பார்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post.html