Tuesday, March 31, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வாழை இலை

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வாழை இலை 


வாழை இலை பார்த்து இருக்கிறீர்களா?

அதன் நடுவில் ஒரு தண்டு மாதிரி இருக்கும். இரண்டு இலையை அந்தத் தண்டுப் பகுதியில் ஒட்டி வைத்த மாதிரி இருக்கும்.

அது எப்படி வந்தது தெரியுமா?

அதற்கு ஒரு கதை இருக்கிறது.

இராவண வதம் முடிந்த பின், தாங்கள் வரும் செய்தியை பரதனுக்கு சொல்லி வரும்படி அனுமனை இராமன் அனுப்பினான். அனுமனும் சொல்லிவிட்டு மீண்டும் இராமனிடம் வருகிறான். இப்படி பரதன் தீக்குளிக்க இருந்தான், அவனை தடுத்து நீங்கள் வரும் செய்தியைக் கூறி விட்டு வந்தேன் என்று சொன்னான்.

அனுமன் வருகிற சமயம் பார்த்து, இராமர் உணவு அருந்திக் கொண்டு இருந்தார். அனுமனுக்கும் பசிக்கும் தானே?

அனுமனுக்கு ஒரு இலை போட்டச் சொல்லலாம். அதற்கு கொஞ்சம் நேரம் ஆகும். பாவம், பக்தன் பசியாக இருப்பான் என்று, தன்னுடைய இலையிலேயே, தான் உண்ணும் உணவையே சாப்பிடும் படி சொன்னாராம் இராமர்.

'இந்தா இந்த உணவு உனக்கு, இந்தப் பகுதி எனக்கு" என்று கையால் இலையில் பிரித்து  வைத்தாராம். அப்படி பிரித்த பின் தான் வாழை இலை இரண்டு பகுதியாக மாறியது என்று   ஒரு கதை உண்டு.

"இராமரும் அனுமனும் ஒரே இலையில் சாப்பிட்டார்களா? கேள்விப் பட்டதே இல்லையே...இராமாயணத்தில் எங்கே வருகிறது இப்படி" என்று கேட்காதீர்கள்.

இராமாயணத்தில் இல்லை, நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இருக்கிறது.

திருமங்கை ஆழ்வார் அருளிய பாசுரம்.

பாடல்

வாத மாமகன் மர்க்கடம் விலங்கு மற்றோர் சாதியென் றொழிந்திலை, உகந்து

காதல் ஆதரம் கடலினும் பெருகச் செய்த தகவினுக் கில்லைகைம் மாறென்று

கோதில் வாய்மையி னாயொடு முடனே உண்பன் நான் என்ற ஓண்பொருள் எனக்கும்

ஆதல் வேண்டுமென் றடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே.


பொருள்

வாத = வாதம் என்றால் காற்று. வாயு

மாமகன் = வாயு புத்திரனான அனுமன்

மர்க்கடம் = குரங்கு

விலங்கு = விலங்கு

மற்றோர் சாதி  = மனித ஜாதி அல்லாத வேறு ஒரு ஜாதி

யென் றொழிந்திலை = என்று தள்ளி வைக்கவில்லை

உகந்து = மனம் மகிழ்ந்து

காதல் = அன்புடன்

ஆதரம் = அன்பு

கடலினும் பெருகச் = கடலை விட பெரிதாக

செய்த = அனுமன் செய்த

தகவினுக் உதவிக்கு

 கில்லைகைம் மாறென்று = பதில் உபகாரம் ஒன்று இல்லை என்று

கோதில் = குற்றமற்ற

வாய்மையி னாயொடு முடனே  = உண்மையானவனான அனுமனோடு

உண்பன் நான் = நான் உண்பேன்

என்ற = என்ற

ஓண்பொருள் = சிறந்த விஷயம்

எனக்கும் = எனக்கும் (திருமங்கை ஆழ்வாருக்கும்)

ஆதல் வேண்டுமென்று  = வேண்டும் என்று

றடியிணை யடைந்தேன் = உன் திருவடிகளை அடைந்தேன்

அணி பொழில்திரு வரங்கத்தம் மானே. = சோலைகளை அணிகலமாக கொண்ட திருவரங்கத்தில் உள்ள  அம்மானே

போதுமா?

இராமன், அனுமனோடு ஒன்றாக உண்டான் என்று  ஆழ்வார் சொல்கிறார்.

உண்டாரா, இல்லையா என்பதல்ல கேள்வி. இதில் நாம் உள்ளே உள்ள கவி உள்ளதை அறிய வேண்டும்.

முதலாவது,  பக்தன் கேட்கவே இல்லை. எனக்கு பசிக்கிறது என்று அனுமன் சொல்லவே இல்லை.  அவனுக்கு பசிக்குமே என்று அறிந்து, இராமர் அவனுக்கு உணவு  அளிக்கிறார். எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுபவர்கள்  ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும். உங்களுக்கு என்ன வேண்டும் என்று  கூட அறியாத அவனால் அதை எப்படித் தர முடியும்?

இரண்டாவது, என்ன வேண்டும் என்றால் அதை உடனே தர வேண்டும் என்பது  ஆண்டவன் விருப்பம். இன்னொரு இலை போட்டால் அதற்கு நேரம் ஆகும் என்று, என் இலையிலேயே சாப்பிடு என்கிறார்.  எதை, எப்போது தர வேண்டும்  என்று அவனுக்குத்  தெரியும்.

மூன்றாவது,  குரங்குதானே, தாழ்ந்தது தானே என்று இராமர் நினைக்கவில்லை. கணவன் சாப்பிட்ட இலையில் சாப்பிடுவது, அல்லது மனைவி சாப்பிட்ட இலையில்  கணவன் சாப்பிடுவது என்றால் கூட கொஞ்சம்  சங்கடம் இருக்கும். ஒரு குரங்கை, தன்னோடு ஒரே இலையில் சாப்பிடச் சொல்ல முடியுமா?

நான்காவது, ஏதோ கடமைக்கு சொல்லவில்லை. கடல் போன்ற அன்போடு ஒன்றாக  உணவு அருந்தச் சொன்னார்.  மனிதர்களுக்கு மனிதர் வேறுபாடு   காட்டும் இந்த உலகில்,  ஒரு குரங்கோடு அன்போடு ஒன்றாக உணவு உண்டார்.  இராமரை வணங்குபவர்கள், பின் பற்றுபவர்கள் ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும்.

ஐந்தாவது,  "குரங்கையே ஒன்றாக சேர்த்து உணவு உண்ணச் சொன்னாயே இராமா,  நான் குரங்கை விட மோசமானவனா ? எனக்கும் அந்த அருள் வேண்டும் " என்று தாழ்ந்து வேண்டுகிறார் ஆழ்வார்.

அடுத்த முறை வாழை இலையில் உணவு உண்ணும் போது, இந்த பாசுரத்தை  நினைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பாசுரம் என்றாலும், மனம் எல்லாம் நிறைந்து போகிறது அல்லவா?

இப்படி கிட்டத்தட்ட 4000 பாசுரம்.

ஒரு நாளைக்கு ஒரு பாசுரம் என்று வைத்துக் கொண்டு படித்தாலும், பத்து பதினோரு வருடம் ஆகி விடும்.

முழுவதும் படிக்க முடியாவிட்டாலும், முடிந்த வரை படிக்கலாமே.

interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_31.html

Thursday, March 26, 2020

திருக்குறள் - வாழ்க்கை துணை நலம் - ஒரு முன்னோட்டம்

திருக்குறள் - வாழ்க்கை துணை நலம்  - ஒரு முன்னோட்டம் 


இல்லறத்தை நடத்தும் பொறுப்பை கணவனிடம் கொடுத்து இருக்கிறது நம் கலாச்சாரம்.

அந்தப் பொறுப்பில், அவனுக்கு துணை செய்யும் பொறுப்பை மனைவிக்கு கொடுத்து இருக்கிறது.

இது வள்ளுவர் சொன்னது அல்ல. வள்ளுவர் இதை கண்டு பிடிக்கவில்லை. வள்ளுவர், இருந்த அறத்தை தொகுத்துச் சொன்னார். அது மட்டும் தான் அவர் வேலை.

சரி, அது என்ன ஆண்களுக்கு பொறுப்பு, பெண்களுக்கு வெறும் துணை செய்வது மட்டும் தானா? ஏன் பெண்கள் பொறுப்பு எடுத்துக் கொண்டு, ஆண்கள் துணை செய்யக் கூடாதா என்று கேட்கலாம்.

இதெல்லாம் ஒரு பெண்ணாதிக்க சிந்தனை. பெண்ணடிமைத் தனத்தின் வெளிப்பாடு. வள்ளுவரும் ஒரு ஆணாதிக்க சிந்தனை வாதிதான். திருக்குறள் ஒரு பிற்போக்கு சிந்தனை உள்ள நூல் என்று சில படித்த மேதாவிகள் சொல்லக் கூடும்.

எது யாருக்கு இயல்பாக வருகிறதோ, அதை அவர்கள் செய்ய வேண்டும்.

வலிந்து கொண்டு நானும் செய்கிறேன் என்று  இயற்கைக்கு புறம்பாக செய்யத் தலைப்பட்டால், காலால் நடப்பதை விட்டு விட்டு கையினால் நடப்பதைப் போன்றது அது.

ஏன், கால்தான் நடக்க வேண்டுமா? நாங்களும் நடப்போம் என்று தலைகீழாக  கையை ஊன்றி நடக்கலாம். தப்பில்லை. அது எவ்வளவு அறிவீனமான செயல்  என்று புரிந்து கொள்ள வேண்டும்.

எங்கோ ஒரு பெண் பெரிய பதவியில் இருக்கலாம். சாதனைகள் செய்து இருக்கலாம். இல்லை என்று சொல்வதற்கு இல்லை.

சர்க்கஸில் கரடி சைக்கிள் ஓட்டும்.  "பார், எங்களுக்கும் சைக்கிள் ஓட்டத் தெரியும்.  இத்தனை நாள் எங்களை சைக்கிள் ஓட்ட விடாமல் அடிமையாக வைத்து விட்டீர்கள். இனிமேல் நாங்கள் காட்டில் சைக்கிளில் தான் போவோம், வருவோம் " என்று எல்லா கரடிய வாதிகளும் கொடி பிடித்தால்  என்ன  செய்வது? சரி ஓட்டுங்கள் என்று விட்டு விட வேண்டியதுதான். பேசுவதால் பயனில்லை.

சரி, திருக்குறளுக்கு வருவோம்.

அது என்ன வாழ்க்கை துணை நலம்.

துணை என்றால் கீழே என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. aasisstant அல்ல.

தமிழில் துணை என்றால் ஒரு படி மேலே. ஒரு படி அல்ல, பல படி மேலே உள்ளதைத்தான் துணை என்று  கூறுவது வழக்கம்.

அபிராமி பட்டர், அம்பாளை துணை என்பார்.  தன்னை விட கீழே இருப்பவள் என்ற அர்த்தத்திலா சொல்லி இருப்பார்?

துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் – பனி மலர்ப் பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்

அணையும், திரிபுர சுந்தரி – ஆவது அறிந்தனமே!


அருணகிரிநாதர் , துணை என்று எதையெல்லாம் சொல்கிறார் பாருங்கள்


விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள், முன்புசெய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.


துணை என்று சிவனைச் சொல்கிறார் அப்பரடிகள்

"துணையா என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ" என்பது அப்பர் வாக்கு.



அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன்புடைய மாமனும் மாமியும் நீ

ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ

துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய்நீ துணையா என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ

இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே



நல்ல துணை ஆவது நமச்சிவாயவே என்பதும் அப்பர் வாக்கே.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே




"துணையோடு அல்லது நெடு வழி போகேல்" என்பது ஒளவை வாக்கு.






எனக்கு ஒரு இடத்துக்குப் போக பயமாக இருக்கிறது என்றால் எனக்கு துணையாக  யாரை அழைத்துச் செல்வேன்? என்னை விட பயந்த ஒருத்தனையா அல்லது  என்னைவிட தைரியம் உள்ள ஒருவனையா?

துணை என்பது நம்மால் செய்ய முடியாததை செய்ய உதவி செய்வது.

காரியம் செய்வதற்கு முன்னால்

முருகா துணை, பிள்ளையார் துணை என்று எழுதிவிட்டு தொடங்குவோம்.

அவர்கள் நம்மை விட தாழ்ந்தவர்கள் என்பதாலா?

இல்லற பொறுப்பு என்பது மிகப் பெரிய பொறுப்பு. அதை ஒரு ஆடவனால் தனியாக செய்யவே முடியாது. அவனுக்கு துணை வேண்டும். அவனை விட  திறமையான, புத்திசாலியான ஒரு துணை வேண்டும்.

அதை பெண்ணிடம் கொடுக்கிறார் வள்ளுவர். மனைவியிடம் கொடுக்கிறார்.

எனவே அவள் வாழ்க்கை துணை நலம்.

வாழ்க்கையில் நல்லது செய்வதற்கான துணை.

வீடு அதிகாரம் அனைத்தையும் அவள் கையில் தருகிறார் வள்ளுவர்.

இனி வரும் பத்து குறள்களில் அவற்றை விரிவாக காண இருக்கிறோம்.

இருக்கிறோம் தானே?

மாறாக, என்ன தான் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. வள்ளுவர் ஒரு பிற்போக்கு வாதி.  ஆணாதிக்க சிந்தனை உள்ளவர். அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.  எங்களுக்கு எல்லாம் தெரியும்...என்று நினைப்பவர்கள்,  அடுத்து வரும் பத்து குறள் சம்பந்தப்பட்ட ப்ளாகுகளை தவிர்ப்பது  நலம்.

தெரிந்ததைப் படித்து நேரத்தை வீணாக்குவானேன்?

https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_26.html

Tuesday, March 24, 2020

நன்னூல் - தாலாட்டு

நன்னூல் - தாலாட்டு 

எப்பப் பார்த்தாலும் பக்தி, காதல், அறம் ...இதை விட்டால் தமிழில் வேற ஒன்றும் இல்லையா ?

ஏன் இல்லை?

தாலாட்டுக்கு மயங்காதவர்கள் யார்? 

குழந்தைகளை தூங்க வைக்க, தாய்மார்ககள் தாலாட்டுப் பாடுவார்கள். 

தாலாட்டு என்றால் என்ன ?

தால் என்றால் நாக்கு 

ஆட்டு என்றால் ஆட்டுவது. 

நாவை ஆட்டுவது தாலாட்டு. 

தாலாட்டில் பெரும்பாலும் 'ல' அல்லது 'ர' என்று எழுத்துக்களே வரும்.

ஆராரோ, ஆரிரரோ 

ரோ ரோ ரோ ....

லல்லாலா லல்லா லல்லா 

என்று இந்த எழுத்துக்களே பெரும்பாலும் வரும். 

ஏன் ஆடா என்றோ ஆபா என்று சொல்லுவது இல்லை. 

தமிழில் எவ்வளவு தூரம் யோசித்து இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

தமிழில் ஒவ்வொரு எழுத்தையும் எப்படி உச்சரிப்பது என்பதற்கு ஒரு இலக்கணம் இருக்கிறது.

ஒரு எழுத்தை அப்படித்தான் உச்சரிக்க வேண்டும். 

ஆங்கிலத்தில் ஒரு எழுத்தை எப்படி உச்சரிப்பது என்பதற்கு இலக்கணம் இருப்பதாகத் தெரியவில்லை. 

இந்த ல மற்றும் ர வை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று நன்னூல் கூறுகிறது. 

"அண்ணம் நுனிநா வருட ர ழ வரும் "

அண்ணம் என்றால் மேல் வாய்.  வாயின் மேல் பகுதியை நாக்கு வருட ர மற்றும்  ழ என்ற எழுத்துப் பிறக்கும். 

நாக்கு எங்கே, எதைத் தொடவேண்டும், எப்படித் தொட வேண்டும் என்று இலக்கணம் இருக்கிறது. 

ல்  மற்றும் ள் எப்படி பிறக்கும் தெரியுமா ?


அண்பல் முதலும் அண்ணமும் முறையின் நாவிளிம்பு வீங்கி ஒற்றவும் வருடவும் லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும் 

மேல் வாயின், பல்லின் அடிப் பகுதியை நாக்கின் விளிம்பு (அதாவது நாவின் நுனி) அழுத்தமாக தொடவும், வருடவும் லகரம் மற்றும் ளகரம் பிறக்கும்.

ல மற்றும் ர  இந்த இரண்டு எழுத்துக்கும் நாக்கை வருட வேண்டும். 

அப்படி வருடுவதால் அது ஆடுகிறது. 

நா ஆடுவதால் அது தாலாட்டு.

பிள்ளைகளுக்கோ , பேரப் பிள்ளைகளுக்கோ அடுத்த முறை தாலாட்டு பாடும் போது  நன்னூலை நினைத்துக் கொள்ளுங்கள். 


Friday, March 20, 2020

திருக்குறள் - வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்

திருக்குறள் - வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் 


இல் வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்று சொன்னார். இல் வாழ்வின் கடமைகள் பற்றிச் சொன்னார். பின், அதன் பயன் பற்றிச் சொன்னார். அதன் உயர்வு பற்றி சொல்லிக் கொண்டு வந்த வள்ளுவர், இறுதியாக ஒன்றைச் சொல்லி முடிக்கிறார்.

இல்வாழ்வில், அதற்கு விதிக்கப்பட்ட முறையில் வாழ்பவன், வானில் உள்ள தெய்வங்களுக்கு இணையாக வைக்கப்படும் என்கிறார்.

பாடல்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

பொருள்


வையத்துள் = இந்த உலகில்

வாழ்வாங்கு வாழ்பவன் = இல்லற தர்மத்தின் படி வாழ்பவன்

வானுறையும் = வானில் வசிக்கும்

தெய்வத்துள் = தெய்வங்களுள் ஒன்றாக

வைக்கப் படும். = வைத்து எண்ணப் படுவான்

இது கொஞ்சம் ஓவரா தெரியல? என்னதான் இல்லறம் சிறந்தது என்றாலும், அதற்காக தெய்வத்துக்கு  இணையாக சொல்ல முடியுமா?

பின் ஏன் வள்ளுவர் அவ்வாறு சொல்கிறார்?

வள்ளுவர் எந்த ஒன்றை செய்தாலும் அதற்கு இம்மை மற்றும் மறுமை பயன்கள்  இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.

ஏதோ இந்த வாழ்வில் கொஞ்சம் பயன் கிடைத்தால் போதும் என்று நினைக்க மாட்டார்.  மறுமைக்கும் பலன் இருக்க வேண்டும் என்று நினைப்பார்.

இல்லற தர்மத்தில் இருந்து வாழ்பவன், இந்த வாழ்க்கை முடிந்த பின் கட்டாயம்  மேலுலகம் சென்று அங்குள்ள தேவர்கள், தெய்வங்களோடு இருப்பான்  என்பது திண்ணம் என்பதால், அவன் "வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்"  என்றார்.

வானுறையும் தெய்வம் என்று சொல்லவில்லை.

மக்கள் அவனை தெய்வத்துக்கு இணையாக வைப்பார்கள் என்று கூறுகிறார்.

ஏன்?

தெய்வம் என்ன செய்யும்?

உதவி செய்யும். நல்லது செய்யும். துன்பம் துடைக்கும். அருள் செய்யும்.  ஆபத்தில் இருந்து காக்கும்.

இல்லறத்தில் உள்ளவனும் இவற்றை எல்லாம் செய்ய வேண்டும். செய்வான். செய்ய வேண்டியது கடமை.

இவற்றை எல்லாம் ஒருவன் செய்வதால், அவன் தெய்வத்துள் ஒன்றாக கருதப்படுவான் என்கிறார்.

"எப்படிடா இந்த சிக்கல் இருந்து தப்பிப்பது என்று தவித்துக் கொண்டிருந்தேன். தெய்வம் போல வந்து உதவி செஞ்சீங்க" என்று கூற கேட்டு இருக்கிறோம் அல்லவா?

அப்படி உதவி செய்பவர்களை, உலகத்தில் உள்ளவர்கள் தெய்வம் போல போற்றுவார்கள் என்பது கருத்து.

இல்லறத்தின் பெருமையை இதைவிட உயர்வாகச்  சொல்ல முடியாது.

மீண்டும் ஒரு முறை பத்து குறளையும் படித்துப் பாருங்கள்.

குடும்பம் என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்று தெரியும்.

ஏதோ ஒரு ஆணும் பெண்ணும்  கூடி, சுகம் அனுபவிப்பது என்பது அல்ல இல்லறம். அது ஒரு பகுதிதான்.

கோவிலுக்குப் போனால் சுண்டல் கிடைக்கும். சுண்டலுக்காக கோவிலுக்குப் போக முடியுமா ? அது போல, ஆண் பெண் சுகம் என்பது ஒரு சிறிய பகுதி அவ்வளவுதான்.

இல்லறம் என்பது மிகப் பெரிய விஷயம். நாம் அதை நீர்த்துப் போக வைத்து விட்டோம்.  அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று ஆக்கி விட்டோம்.

திருக்குறள் மனிதனை குடும்பத்தோடு பிணைக்கிறது.

குடும்பத்தை சமுதாயத்தோடு இணைக்கிறது.

மனிதன் , தான் என்ற வட்டத்தை விட்டு, குடும்பம் என்ற பெரிய வட்டத்துக்குள் வருகிறான். பின், சமுதாயம் என்ற இன்னும் பெரிய வட்டத்துக்குள் வருகிறான். பின், ஒட்டு மொத்த மனித சமுதாயத்தை நேசிக்கத் தலைப்படுகிறான்.  அங்கிருந்து வானுலகம், வீடு பேறு என்பதெல்லாம் வரும்.

வள்ளுவர்  சொர்க்கத்துக்கு எட்டு வழி சாலை போட்டுத் தருகிறார்.

அதில் அப்படியே போய் கொண்டே இருந்தால், இறைவன் திருவடி அல்லது சுவர்க்கம்  சென்று விடலாம்.

மேப் போட்டுத் தருகிறார்.

போக வேண்டியது மட்டும் தான் பாக்கி.

சரி, இத்தனை வேலை சொல்கிறார். இதை எல்லாம் ஒருவன் எப்படி செய்வது?  அதற்கு ஒரு வழி சொல்ல வேண்டாமா?

வள்ளுவர் அப்படி விட்டு விடுவாரா?

இதை எப்படி செய்வது என்றும் சொல்லித் தருகிறார்.

கேட்போமா?


https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_20.html

Wednesday, March 18, 2020

திருக்குறள் - அறம் என்பதே இல்வாழ்க்கை தான்

திருக்குறள் - அறம் என்பதே இல்வாழ்க்கை தான் 


மொத்த வாழ்க்கையை இரண்டாக பிரித்துக் கொண்டார்கள் நம் முன்னவர்கள்.

ஒன்று இல்லறம், இன்னொன்று துறவறம்.

இல் + அறம்

துறவு + அறம்

எந்த வழியில் போனாலும் அறம் சார்ந்தே வாழ்க்கை இருக்க வேண்டும் என்பது விதி.

இந்த இரண்டில் எது சிறந்த அறம் ? எது உயர்ந்தது என்ற கேள்வி வரும் அல்லவா?

அறம் என்றாலே அது இல்லறம்தான் என்று அடித்துச் சொல்கிறார் வள்ளுவர்.

பாடல்

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று

பொருள்


அறன் = அரம்

எனப் பட்டதே = என்று சொல்லப் பட்டதே

இல்வாழ்க்கை = இல் வாழ்க்கைதான்

அஃதும் = துறவறம்

பிறன் = மற்றவர்கள்

பழிப்பது = பழித்துச் சொல்லாமல்

இல்லாயின் நன்று = இல்லாமல் இருந்தால் நல்லது


"அறன் எனப் பட்டது இல் வாழ்க்கை" என்று சொல்லி இருக்கலாம் தானே?  ஏன்

"அறன் எனப் பட்டதே" என்று என்று சொன்னார் ?

பட்டது, பட்டதே ...என்ன வேறுபாடு?

பட்டதே என்ற சொல்லில்  வரும் ஏகாரம் பிரிநிலை ஏகாரம். பிரிநிலை என்றால் ஒன்றில் இருந்து மற்றொன்றை பிரித்துக் காட்டுவது.

சில உதாரணங்கள் பார்ப்போம்

அனைத்து மாணவர்களிலும்  அவனே சிறந்த மாணவன்

இதில் , அந்த ஒரு மாணவனை பிரித்து காட்டுகிறது.

இராமாயணத்தில் உள்ள பாத்திரங்களில் பரதனே சிறந்த பாத்திரம்.

பரதனை பிரித்துக் காட்டுவதால், இது பிரிநிலை ஏகாரம்.

ஓடுவதே சிறந்த உடற் பயிற்சி

அறம்  பல உண்டு. அதில் இருந்து இல்லறத்தை பிரித்துக் காட்டுகிறார். ஏன் என்றால்,  மற்ற அறங்களை பற்றி பின்னால் சொல்லப் போகிறார்.

என்ன சொல்கிறார்

"அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று"

இங்கே வரும் "அஃதும்" என்பது துறவறத்தை குறித்தது.

துறவறம் பழிப்புக்கு உள்ளாவது இயற்கை. ஏன் என்றால், புலன்களை அடக்கி  வாழ்வது என்பது கடினமான செயல். புலன்களை அனுபவிக்க விடாமல் அவற்றை கட்டுப் படுத்துவது என்பது இயற்கைக்கு மாறான செயல். அதை எளிதில் யாரும் நம்ப மாட்டார்கள்.

பெண் ஆசையை துறந்து விட்டேன் என்று ஒருவன் சொன்னால், அவனை யார்   நம்புவார்கள்? "நமக்குத் தெரியாமல் ஏதாவது செய்து கொண்டிருப்பான்" என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்யும். ஒரு சின்ன தவறு நிகழ்ந்தால் கூட, "நான் சந்தேகப் பட்டது சரியாகப் போய் விட்டது" என்று உலகம்  இகழ தலைப் படும். அப்படி கொஞ்சம் கூட பழி சொல் வரமால் இருந்தால் , துறவறமும் சிறந்ததுதான் என்கிறார்.

இல்வாழ்க்கை புலன் இன்பங்களை அனுபவிக்க அனுமதி தருகிறது.

அளவோடு, மென்மையாக, தேவையான அளவு அனுபவித்துக் கொள்ள வழி செய்கிறது. எனவே, இல்லறத்தில் இருப்பது என்பது ஒரு இயற்கையான செயல். இல்லறத்தின் வழியே எளிதாக செல்ல முடியும். துறவறம் கடக்க கடினமான பாதை.  பாதை தவறிவிட நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு.

எனவே, அறம் என்றாலே இல்லறம் தான் என்று சொல்கிறார் வள்ளுவர்.

அதுவே உயர்ந்த அறம்.

துறவி எல்லாம், இல்லறத்தானுக்கு ஒரு படி கீழே.  இல்லறத்தில் இருக்கும் நீங்கள்  துறவியைப் போய் பார்க்க வரிசையில் நிற்க வேண்டாம். துறவி என்றால் ஏதோ பெரிய ஆள்  என்று அவரை சென்று வணங்க வேண்டியது இல்லை. துறவறத்தை விட இல்லறம் சிறந்தது.

"அது என்ன அப்படி சொல்லி விட்டீர்கள்? அவர் பெரிய மகான். துறவி...சாமியார்...அவரை விட நான் எப்படி உயர்ந்தவனாக இருக்க முடியும்"

என்று நீங்கள் கேட்கலாம்.

வள்ளுவர் அதையும் விளக்குறார்.

நாளை?

https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_18.html

Tuesday, March 17, 2020

திருக்குறள் - ஆற்றின் ஒழுக்கி

திருக்குறள் -  ஆற்றின் ஒழுக்கி


தவம் செய்வது என்பது லேசான காரியம் இல்லை. வீடு, வாசல், மனைவி, மக்களை துறந்து மேலும் பசி, தாகம், வெயில், குளிர் இவற்றை எல்லாம் பொறுத்து தவம் செய்வது என்பது எளிதான காரியமா?

பிரம்மச்சரியம் என்பதும் எளிதான காரியம் இல்லை. உடம்பு படுத்தும். ஹார்மோன்கள் உந்தித் தள்ளும். அவற்றைக் கட்டுக்குள் வைத்து இருப்பது என்பதும் எளிதான காரியம் இல்லை.

இப்படி எல்லாம் தங்கள் வாழ்க்கை முறையில் கஷ்டப் படுபவர்களை விட, இல்லறத்தில் இருப்பவனின் வாழ்க்கை மேலானது என்கிறார் வள்ளுவர்.

வீட்டில் சந்தோஷமாக மனைவி, பிள்ளைகள், சுற்றம் என்று இருப்பது அப்படி என்ன கடினமான காரியமா ?

ஆம் என்கிறார் வள்ளுவர்.

பாடல்

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து

பொருள்

ஆற்றின் ஒழுக்கி = சரியான வழியில் செலுத்தப்பட்டு

அறனிழுக்கா = அறன் இழுக்கு இல்லா

இல்வாழ்க்கை = இல் வாழ்க்கை

நோற்பாரின் = தவம் மேற் கொள்வாரில்

நோன்மை உடைத்து = பெருமை உடைத்து

ஆற்றின் ஒழுக்கி = ஆறு என்றால் வழி. வழி என்றாலே நல்ல வழி தான். நல்ல வழியில்  சென்று. அல்லது செலுத்தப்பட்டு.



ஆற்றின் ஒழுகி என்று சொல்லி இருந்தால், அற வழியில் நடந்து என்று பொருள் கொள்ளலாம்.

ஒழுக்கி என்றால் செலுத்தி. அதாவது மற்றவர்கள் அற வழியில் செல்ல உதவி செய்து என்று அர்த்தம்.

இல்லற வாழ்க்கையில் இருந்து, அதை அற வழியில் நடத்தி, ஒரு குற்றமும் இல்லாமல்  செலுத்திக் கொண்டு போவது என்பது மற்ற அனைவரையும் விட சிறந்தது.

ஏன்?

ஒரு துறவி தனக்கு வரும் துன்பங்களை பொறுத்துக் கொள்கிறான்.

ஒரு பிரம்மச்சாரி தனக்கு வரும் துன்பங்களை பொறுத்துக் கொள்கிறான்.

ஆனால், இல்லறத்தில் இருப்பவனோ, இவர்களை துன்பத்தில் இருந்து காப்பது மட்டும் அல்ல,  தன் துன்பத்தையும், தன் உறவினர் துன்பத்தையும்  ஏற்று, அவற்றை போக்கும் வழி காண்கிறான்.

வீட்டுக்கு ஒரு துறவி வந்தால், அவன் பசியை போக்க வேண்டியது இல்லறத்தானின் கடமை.

அதே போல் விருந்து, உறவினர், என்று அனைவரின் துன்பத்தையும் ஏற்று அவற்றை களைவது  இல்லற தர்மம்.

அதுவும் அற வழியில் ஈட்டிய பொருளால் களைய வேண்டும்.

தான் அற வழியில் நின்றால் போதாது, மற்றவர்களும் அற வழியில் செல்ல உதவ வேண்டும்.

மனைவி, பிள்ளைகள், பெற்றோர், சுற்றம், நட்பு, விருந்து, துறவிகள், என்று எல்லோரின் பாரத்தையும் சுமக்க வேண்டியது  இல்லறத்தானின் கடமை.

'தனிக் குடித்தனம்' போய் தானும் தன்  மனைவி மக்கள் மட்டும் இன்பமாக இருப்போம் என்று நினைப்பது இல்லற தர்மம் இல்லை.

எவ்வளவு பெரிய சுமையை ஒரு இல்லறத்தானின் தலையில் வள்ளுவர் வைக்கிறார்.

நீ இதையெல்லாம் செய். இது உன் கடமை என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு போய் விடவில்லை.

இதெல்லாம் செய்தால் என்ன கிடைக்கும் என்று பலன் சொல்கிறார்.

இவற்றை செய்ய யார் துணை செய்வார்கள் என்று வழி சொல்கிறார்.

அதையம் கேட்போமா?

https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_17.html

Friday, March 13, 2020

ஆத்திச் சூடி - பேச்சு

ஆத்திச் சூடி - பேச்சு 


மிக மிக கடினமான செயல் என்றால் அழகாக பேசுவதுதான். சரியாக பேசத் தெரியாமல், எவ்வளவு சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறோம்?

கணவன் - மனைவி
பெற்றோர் - பிள்ளைகள்
உயர் அதிகாரி - கீழே வேலை செய்பவர்கள்
உறவினர் கள் - நண்பர்கள்

என்று எங்கும் இனிமையாக பேசுவதால் உறவுகள் பலப்படும், வாழ்க்கை இனிமையாகும்.

ஆனால், எப்படி இனிமையாக பேசுவது?

அது பெரிய விஷயம். அங்கொன்றும் இங்கொன்றுமாக நமக்கு பல கருத்துகள் கிடைக்கின்றன.

ஒளவை சொல்கிறாள்

"வெட்டென பேசேல்"

அப்படினா என்ன?

மனைவி: ஏங்க , இன்னிக்கு சாயங்காலம் சினிமாவுக்குப் போகலாமா?

கணவன்: முடியாது.  மனுஷனுக்கு தலைக்கு மேல வேலை கிடக்கு, இதுல சினிமாவாம்  சினிமா...நல்ல நேரம் பாத்தியே சினிமா போக

இது வெட்டென பேசுவது.

மாறாக,

கணவன்: இன்னிக்கு கொஞ்சம் கஷ்ட்டமா இருக்கும்மா....நிறைய வேலை இருக்கு. நாளைக்கு போகலாமா? என்ன சொல்ற...

செய்தி ஒண்ணுதான், சொல்லுகிற விதம் வேற.

அதிகாரி:  இந்த வருஷம் கணக்கு முடிக்கும் போது , எப்படியாவது  10% இலாபம் வரணும்...இல்லைனா பங்குதார்களிடம் பதில் சொல்ல முடியாது...

கீழே வேலை செய்பவர்:  அது எப்படிங்க முடியும். முடியவே முடியாது. ஏற்கனவே ரொம்ப   நட்டத்தில் இருக்கு, இதுல 10% சதவீதம் இலாபமா...முடியவே முடியாது.

இது வெட்டென பேசுவது.

மாறாக

"10% சதவீதமா ? கொஞ்சம் கஷ்டம் தான்...இருந்தாலும் முயற்சி செஞ்சு பாக்குறேன்...ஒரு நாள் அவகாசம் கொடுங்க...பாத்துட்டு நாளைக்கு சொல்றேன்"

மறு நாள் வந்து

"நீங்க சொன்னதால ரொம்ப முயற்சி செஞ்சு பாத்தேன்...10% சதவீதம் வராது போல இருக்கு...அதிக பட்சம் 3% சதவீதம் வரலாம்...."

இப்படி மென்மையா எடுத்துச் சொன்னால் கேட்க இதமாக இருக்கும்.

முகத்தில் அடிப்பது மாதிரி பேசக் கூடாது.

முடியாது, நடக்காது, ஆகாது, என்று பேசக் கூடாது.

அதையே மென்மையாக பேசிப் பழக வேண்டும். மற்றவர் முகம் வாடும் படி  பேசக் கூடாது.

மரத்தில் கோடாலி போடுவது மாதிரி பேசக் கூடாது. பூ பறிப்பது போல மென்மையாக இருக்க வேண்டும் பேச்சு.

அழகாக பேச ஒளவை சொல்லும் வழி.

நல்லதுன்னு தெரிஞ்சா முயற்சி செஞ்சு பாக்காமலா இருக்கப் போறீங்க? கட்டாயம் பண்ணுவீங்க தான?



https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_13.html