Saturday, May 2, 2020

முத்தொள்ளாயிரம் - வெறுங்கூடு காவல்கொண் டாள்

முத்தொள்ளாயிரம் - வெறுங்கூடு காவல்கொண் டாள்


அவளுக்கு அவன் மேல் காதல். அவளின் தாய்க்கு அது பிடிக்கவில்லை. அவளை வெளியே போகக் கூடாது, போனாலும் துணைக்கு ஆளை அனுப்புகிறாள்.

ஆனால், அவள் மனதுக்குள் சிரித்துக் கொள்கிறாள்...."இந்த அம்மா எதை பாதுகாக்கிறாள்? என் மனம் அவன் பின்னால் எப்போதோ சென்று விட்டது. இங்கே இருப்பது வெறும் உடம்பு மட்டும் தான். இதை காவல் செய்து என்ன செய்யப் போகிறாள்" என்று.

பாடல்


கோட்டெங்கு சூழ்கூடற் கோமானைக் கூடவென
வேட்டங்குச் சென்றெவன் நெஞ்சறியாள் - கூட்டே
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை
வெறுங்கூடு காவல்கொண் டாள். 


பொருள்

கோட்டெங்கு = கொளுத்த (பெரிய) தெங்கு (தேங்காய்)

சூழ் = நிறைந்த (தென்னை மரம் சூழ்ந்த)

கூடற் = கூடல் மாநகரின்

கோமானைக் = அரசனை

கூடவென = கூட வேண்டும் என்று

வேட்டங்குச் = வேட்கையுடன் அங்கு

சென்றெவன் = சென்ற என்

நெஞ்சறியாள் = நெஞ்சத்தை அறிய மாட்டாள் (என் அன்னை)

கூட்டே = கூட்டை விட்டு

குறும்பூழ் = சிறிய பறவை

பறப்பித்த = பறந்து போன பின் , வெறும் கூட்டை பாதுகாக்கும்

வேட்டுவன்போல்  = வேடனைப் போல

அன்னை = என் அன்னை

வெறுங்கூடு =  வெறும் கூட்டை

காவல்கொண் டாள்.  = காவல் காத்துக் கொண்டு இருக்கிறாள்


காதலிப்பதும், பெற்றோர் அதை எதிர்ப்பதும், அந்தக் காலம் தொட்டு இருந்து இருக்கிறது.

இதே பாடலின் கருத்தை பிரதிபலிக்கும் வண்ணம் ஒரு புதுக் கவிதை ...

வேலிக்கு மேலே செல்லும் கிளைகளை வெட்டும் தோட்டக்காரனே  
வேலிக்கு கீழே செல்லும் என் வேர்களை என்ன செய்வாய் ?

செடி பூக்கிறது. கிளை நீண்டு பக்கத்து வீட்டுக்கு செல்கிறது. நமக்குத் தெரிவது கிளை மட்டும் தான். உயிர் தாகம் கொண்டு, நீர் தேடி வேலிக்கு கீழே செல்லும் வேர் கண்ணுக்குத் தெரிவதில்லை.  தெரிந்தால் கூட என்ன செய்ய முடியும்? வேரை வெட்டவா முடியும்?

காலங்கள் மாறிக் கொண்டு இருக்கிறது.  காதலுக்கு பெரிதாக எந்தப் பெற்றோரும்  எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை என்றே நினைக்கிறேன்.

எது எப்படியோ,  இலக்கியம் என்பது காலக் கண்ணாடி. அன்று நடந்ததை அது இன்றும்  நமக்கு சொல்லிக் கொண்டு இருக்கிறது.

காதலன் பின்னே மனதை போக விட்டு விட்டு, தனிமையில் மெலியும் அந்தப்  பெண்ணின் மெல்லிய  சோகம், நம் மனதையும் ஏதோ செய்யத்தான் செய்கிறது.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_2.html




Friday, May 1, 2020

நள வெண்பா - நெஞ்சும் போயிற்று

நள வெண்பா - நெஞ்சும் போயிற்று 


பிள்ளை உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும். தாய் வெளியே யாரிடமோ பேசிக் கொண்டிருப்பாள், அல்லது தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருப்பாள். அந்த சமயத்தில் பிள்ளைக்கு ஏதோ உபாதையில் குழந்தை லேசாக நெளியும், அல்லது இருமும் அல்லது தும்மும்...உடனே தாய் ஓடிப் போய் பார்ப்பாள். அது எப்படித்தான் தெரியுமோ? அவள் எங்கே இருந்தாலும், அவள் மனம் பிள்ளையின் பக்கத்திலேயே இருக்கும்.

கணவன் வெளியூர் போயிருப்பான். போன இடத்தில் ஏதோ கொஞ்சம் உடல் நிலை சரி இல்லாமல் போயிருக்கும். இங்கு, மனைவிக்கு மனசு என்னமோ செய்யும். அவருக்கு என்னமோ என்று கிடந்து தவிப்பாள். அங்கே அவருக்கு ஒன்று என்றால், இங்கே இவளுக்கு எப்படித் தெரியும். உடல் இங்கே இருக்கிறது. மனம் அவன் கூடவே போகிறது.

இது காதலில் மட்டும் அல்ல, கணவன் மேல், பிள்ளையின் மேல் எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். அன்பு கூடி நிற்கும் போது, அன்பு கொண்டவர் கூடவே மனம் போய் விடும்.

இதை, புகழேந்தி, நளவெண்பாவில் காட்டுகிறார்.

தமயந்தியை காண நளன் வந்தான். அவளோடு பேசி சந்தோஷமாக இருந்த பின், பிரிந்து சென்றான். அவன் கூடவே, தமயந்தியின் மனமும் சென்று விட்டது. தன் மனம் அவன் பால் சென்ற பின், பாவம் அவள் தான் என்ன செய்வாள்?

பாடல்

தூதுவந்த காதலனைச் சொல்லிச் செலவிடுத்த
மாதுவந்து பின்போன வன்னெஞ்சால் - யாதும்
அயிர்த்தாள் உயிர்த்தாள் அணிவதனம் எல்லாம்
வியர்த்தாள் உரைமறந்தாள் வீழ்ந்து.

பொருள்

தூதுவந்த காதலனைச்  = தேவர்களுக்காக தன்னிடம் தூது வந்த காதலனை (நளனை )

சொல்லிச் = பேசி

செலவிடுத்த = செல்லும் படி விட்ட

மாது = மாது, தமயந்தி

வந்து பின்போன = தன்னிடம் வந்து பின் போன

வன்னெஞ்சால் = வன்மையான நெஞ்சால். இத்தனை நாள் தன்னோடு இருந்து விட்டு, அவனைக் கண்டவுடன், அவன் கூடவே போனதால், அதை வன்நெஞ்சு என்கிறாள்.

யாதும் = அனைத்தும்

அயிர்த்தாள் = =பதறினாள்

உயிர்த்தாள் = உயிர் பிரிந்து போன மாதிரி தவித்தாள்

அணிவதனம் = ஆபரணம் அணிந்த முகம்

எல்லாம் = எல்லாம்

வியர்த்தாள் = வியர்த்தாள்

உரைமறந்தாள் = பேச மறந்தாள்

வீழ்ந்து = கால்கள் தள்ளாடி தரையில் வீழ்ந்தாள்


காதலன் போன பின், அவன் கூடவே அவள் மனமும் போய் விட்டது.

என்ன செய்ய? உடல் ஒரு பக்கமும், மனம் வேறு பக்கமும் அல்லாடுவதே அன்பு கொண்ட உள்ளங்களின்  வாடிக்கையாகிப் போனது.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post.html

Thursday, April 30, 2020

திருமந்திரம் - எப்படி அப்படி

திருமந்திரம் - எப்படி அப்படி 


ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பை பலவிதமாக பல பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

த்வைதம் சொல்கிறது, இரண்டும் வேறு வேறு. ஆனால், முயன்றால் ஜீவ ஆத்மா , பரமாத்மாவுடன் சேரலாம் என்று.

அ-த்வைதம் சொல்கிறது, இரண்டும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான் என்கிறது. வேறு மாதிரி தெரிவது மாயை.

விசிஷ்டாத்வைதம் சொல்கிறது, இரண்டும் வேறு வேறு என்று. இரண்டும் கலக்கவே முடியாது என்கிறது.

இதில் எதை நம்புவது. மூன்றும் , வெவ்வேறு திசையில் இழுக்கின்றன.

திருமூலர் இதை எளிதாக விளக்குகிறார்.

ஒரு படி நீரில், ஒரு பிடி உப்பைப் போட்டால், நீரின் அளவு மாறாது. அது அதே ஒரு படிதான் இருக்கும். அப்படி ஆனால் உப்பு எங்கே போனது? தண்ணீருக்குள்தான் இருக்கிறது. ஆனால், அது தனியாக தெரிவது இல்லை. தண்ணீரை வற்றக் காய்ச்சினால், அந்த உப்பு மீண்டும் வரும்.

இரண்டும் ஒன்றாக கலந்ததா என்றால், ஆம்.

கலந்த பின் உப்புக்கென்று ஒரு தனி அடையாளம் இல்லாமல் போயிற்றா என்றால், ஆம்.

மீண்டும் அதை பிரித்து எடுக்க முடியுமா என்றால் , ஆம்.

அது போலத்தான் சீவனும், சிவனும் என்கிறார் திருமூலர்.

ஜீவாத்மா , பரமாத்மாவோடு இரண்டு அற கலந்து விடும். ஒரு வித்தியாசமும் தெரியாது. ஆனால், உள்ளே தனியாக இருக்கும். வேண்டும் என்றால் மீண்டும் பிரித்துக் கொண்டு வந்து விடலாம்.

இதை எப்படி விளக்குவது? அது போலத்தான் ஜீவனும், சிவனும் என்று கொள்ள வேண்டும் என்கிறார்.


பாடல்



அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்
செப்பு பராபரம் சேர்பர மும்விட்டுக்
கப்புறு சொற்பதம் மாயக் கலந்தமை
எப்படி அப்படி என்னும் அவ்வாறே.


பொருள்

அப்பினில்  = நீரினில்

உப்பென  = உப்பைப் போல

அத்தன் = இறைவன்

அணைந்திட்டுச் = சேர்ந்துக் கொண்டு

செப்பு பராபரம் = சொல்லும் பராபரம்

சேர் = சேர்ந்து

பர மும் விட்டுக் = பரத்தை விட்டு விட்டு

கப்புறு = உறுதியான

சொற்பதம் = திருவடிகளை

மாயக் கலந்தமை = மறையும்படி கலந்தது

எப்படி = எப்படி என்றால்

அப்படி என்னும் அவ்வாறே. = அப்படி நடந்ததே அதே மாதிரி

உப்பும் தண்ணீரும் கலந்த மாதிரி என்று சொல்லலாம் என்கிறார்.

எளிய உதாரணம். உயர்ந்த கருத்து.

https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_30.html

Wednesday, April 29, 2020

வெற்றி வேற்கை - எது அழகு

வெற்றி வேற்கை - எது அழகு


மானுக்கு கொம்பு அழகு.

மயிலுக்கு தோகை அழகு.

அது போல் எதற்கு எது அழகு என்று பட்டியல் தருகிறார் அதிவீரராம பாண்டியர், வெற்றி வேற்கை என்ற நூலில்.

எளிய தமிழில் அழகான கருத்துகளை தரும் நூல் அது.

அதில் இருந்து சில மாதிரிகள்....

ஒருவன் படித்தவன், அறிவாளி, கல்வி மான் என்றால் அதை எப்படி அறிந்து அறிந்து கொள்வது.

"கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல்"


ஒருவன் கல்வி கற்றவன் என்றால், கற்றதை தவறு இல்லாமல் தெளிவாக எடுத்துச் சொல்லத் தெரிய வேண்டும்.

"படிச்ச ஞாபகம் இருக்கு...ஆனா exact ஆ அது என்னனு தெரியாது" என்று சிலர் சொல்வதை கேட்டு இருப்போம். அது படித்ததற்கு அழகு அல்ல.

மற்றவர்களுக்கு புரியும்படி அழகாக சொல்லத் தெரிய வேண்டும்.

இன்று கணனியில் data science என்று சொல்லக் கூடிய பிரிவு மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. அதில் ஒரு உட் பிரிவு, predictive analysis என்பது. அதாவது என்ன நடக்கப் போகிறது என்று சொல்லுவது.

கையில் இருக்கும் அனைத்து செய்திகளையும் சேர்த்து, இப்படி இருந்தால், இனி இப்படி ஆகும் என்று சொல்லுவது.

உதாரணமாக,  கொரோன வைரஸின் தாக்கம் எப்படி இருக்கும், அது எப்படி பரவும், எவ்வளவு வேகமாக பரவும், இன்னும் ஒரு மாதத்தில் எவ்வளவு பேர் அதனால் பாதிக்கப் படுவார்கள்  என்று ஆராய்ந்து  சொல்லும் பிரிவு.

வெற்றி வேற்கை அதை அன்றே கண்டு சொல்லியது....

"மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்"

என்ன நடக்கப் போகிறது என்று ஆராய்ந்து சொல்லவதுதான் மந்திரிக்கு அழகு.

மந்திரி என்றால் மந்திரி மட்டும் அல்ல. மந்திரியின் பொறுப்பில் உள்ள அனைவருக்கும் அது பொருந்தும்.

சில பேர் ஏதோ கொஞ்சம் தெரிந்தால் போதும், உலகிலேயே எல்லாம் தனக்குத்தான் தெரியும் என்று தையா தக்கா என்று குதிப்பார்கள். அறிவு என்பது   அடக்கத்தைத் தர வேண்டும்.

"அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல்"

கற்று, உணர்ந்து அடங்கி இருக்க வேண்டும். அடக்கம் இல்லை என்றால், அறிவு இல்லை என்று அர்த்தம். 

இப்படி ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. 

தேடி கண்டு பிடித்துப் படித்துப் பாருங்கள். 

மிக எளிமையான நூல். 

https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_17.html

திருக்குறள் - வாழ்க்கைத் துணை

திருக்குறள் - வாழ்க்கைத் துணை 


இல்லறத்தில் ஈடுபடும் ஒரு ஆடவனின் 11 கடமைகளைப் பற்றிச் சிந்தித்தோம்.  அந்தக் கடமைகளை அவன் தனியே செய்து விட முடியாது. அவனுக்கு ஒரு துணை வேண்டும். அது, அவன் மனைவி.

இல்வாழ்க்கை என்று ஒரு அதிகாரம் எழுதினார். அதில் ஆடவனின் கடமைகளை கூறினார்.

அடுத்து வாழ்க்கை துணை என்று பெண்ணின் கடமைகளை கூற இருக்கிறார்.

ஆணுக்கு தனியே ஒரு அதிகாரம் எழுதவில்லை. பெண்ணுக்கு எழுதுகிறார்.

வாழ்க்கை துணை என்றால் யார்? வாழ்க்கை துணையாக வரும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று கூறுகிறார் முதல் குறளில்.

தாலி கட்டி கூட்டிக் கொண்டு வந்து விட்டால், அவள் வாழ்க்கை துணை என்று சொல்லவில்லை.

பல பேர் அப்படி நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். மனைவி என்ற பொறுப்பு, மிகப் பெரியது.


வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று கேட்போம்.

பாடல்

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

பொருள்

மனைத்தக்க = மனைக்கு தக்க

மாண்புடையள் ஆகித் = மாண்புகளைக் கொண்டு

தற் கொண்டான் = தன்னை கொண்டவனின் (கணவனின்)

வளத்தக்காள் = வளமைக்கு தக்க வாழ்பவள்

வாழ்க்கைத் துணை = வாழ்க்கைத் துணை என்று சொல்லப் படுவாள்

மனைக்கு தக்க மாண்புகள் என்றால் என்ன ?

உரை எழுதிய பரிமேல் அழகர் கூறுகிறார்

மனை அறத்துக்கு தக்க நல்ல குணங்கள் என்கிறார். அது என்ன மனை அறம் , நல்ல குணம்  என்ற கேள்விகள் வரும் அல்லவா ? 

இல்லற கடமைகள் என்று 11 கடமைகளை ஆடவனுக்கு கூறினார் அல்லவா? அவற்றை நிறைவேற்ற  மனைவி உதவ வேண்டும்.

உதாரணமாக விருந்து உபசாரம். வீட்டுக்கு வந்த விருந்தினரை உபசரிக்க வேண்டியது  ஆடவனின் கடமைகளில் ஒன்று என்று பார்த்தோம். மனைவியின் துணை இல்லாமல் அது  நடக்காது. விருந்தைப் பேணுவதில் கணவனுக்கு உதவி செய்ய வேண்டும்.

சரி செஞ்சிட்டா போகுது என்று போன் போட்டு அருகில் உள்ள பெரிய ஓட்டலில்  விலை உயர்ந்த உணவு வகைகளை வரவழைத்து தந்து விடலாமே?   விருந்தினர்கள் சந்தோஷமாக போவார்களே  என்றால் அது சரி அல்ல என்று அடுத்த  வார்த்தையில் கூறுகிறார்.

"வளத்தக்காள்" கணவனின் வளமை அறிந்து செலவு செய்ய வேண்டும். "என்னால எல்லாம் சமையல்  செய்ய முடியாது. வேணும்னா ஹோட்டல்ல ஆர்டர் பண்ணி  அவங்களுக்கு கொடுங்க" என்றால் அது வாழ்க்கைத் துணை அல்ல.

நல்ல குணங்கள் என்ற பட்டியலில் அவர் சொல்வது, "அட்டில் தொழில் வன்மை" என்கிறார். அட்டில் என்றால் சமையல்.

ஆஹா, உங்களுக்கு வடிச்சு கொட்டத்தான் நாங்க இருக்கோமா என்று வரிந்து கட்டிக் கொண்டு  சிலர் கிளம்பலாம்.

அப்படி கிளம்பினால் ஒன்றும் செய்ய முடியாது. கணவன் வெளியில்  சாப்பிடுவான். பிள்ளைகள் swiggy, zomato என்று ஆர்டர் பண்ணி உண்பார்கள். மனைவி மற்றும்   தாயின் தேவை குறைந்து போகும். அப்புறம்  "என் மேல் யாருக்கும் அக்கறை இல்லை.  நான் சொல்வதை யாரும் கேட்பது இல்லை. எனக்கு ஒரு மரியாதையே இல்லை " என்று குறை பட்டுக் கொள்ளுவதில் அர்த்தம் இல்லை.

பிள்ளைகளின் பாசம், Swiggiyin மேல் தானே இருக்கும்?

சமையல் என்பது வேலை அல்ல.

அது அன்பின் வெளிப்பாடு.

முதலில் அன்பு வரும்.

பின்பு அருள் வரும்.

அருள் துறவு நோக்கி செலுத்தும்.

திருக்குறள் என்பது ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அறிவுரைகள் தரும் நூல் அல்ல. வாழ்க்கையின் தொடக்கம் முதல் இறுதி வரை, அதையும் தாண்டியும் வழி நடத்திச் செல்லும் ஒரு நூல்.

திருக்குறள் ஒன்றுதானா வழி? வேற வழி இல்லையா? என் வழி தனி வழி என்று  சிலர் நினைக்கலாம்.

திருக்குறள் அளவுக்கு ஆழமாகவும், அகலமாகவும் சிந்தித்து ஒரு வாழ் நாள் பூராவும்  வழி நடத்திச் செல்லும் ஒரு கோட்பாட்டை கண்டு பிடித்து விட்டால், அதன் படி  செல்வதில் தவறு ஒன்றும் இல்லை.

முடியுமா அது ?

அது முடிகிற வரையில், நமக்கு கிடைத்த வழி திருக்குறள் தான்.

திருக்குறள் படி நடப்பது பின்னால். முதலில் அதை புரிந்து கொள்ள முயல்வோம். நடப்பதா இல்லையா என்று பின்னால் தீர்மானித்துக் கொள்ளலாம்.

அதை புரிந்து கொள்ள பொறுமையும்,  நிதானமும் தேவை.  உங்கள் கேள்விகளை கொஞ்சம்  தள்ளி வையுங்கள். முழு திருக்குறளையும் படித்த பின்னால்  உங்கள் கேள்விகள் தானே மறைந்து போகும். மறையாவிட்டால்,  சரியாக படிக்கவில்லை என்று அர்த்தம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_29.html

Tuesday, April 28, 2020

வில்லி பாரதம் - குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

வில்லி பாரதம் - குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை 


சில சமயம் உறவினர்கள் இடையே மனக் கசப்பு வரலாம். ஏதோ ஒரு கோபத்தில் வார்த்தைகள் தடம் மாறிப் போகலாம். நாம் ஒன்று சொல்ல, மற்றவர் வேறு ஒன்றை நினைத்துக் கொண்டு பிரச்சனை வரலாம்.

உறவுகளுக்குள் இந்த மாதிரி பிரச்சனை வருவது இயல்புதான். அப்படி வந்து விட்டால் அப்புறம் என்ன செய்வது?

திருப்பியும் அவர்கள் முகத்தில் எப்படி விழிப்பது? எப்படி நடந்து விட்ட தவற்றை தள்ளி வைத்து விட்டு உறவை மேலே கொண்டு செல்வது?

மற்ற உறவை விடுங்கள். கணவன் மனைவி உறவில், பெற்றோர் பிள்ளைகள் உறவில், உடன் பிறப்புகள் இடையில் நிரந்தர விரிசல் விழுந்து விடுவது இல்லையா.

தவறுகளை மறந்து, மன்னித்து ஒற்றுமையாக வாழ்வது எப்படி?

ஒரு தயக்கம், பழைய நினைவுகள், வராமல் இருக்குமா ?

பாரதம் வழி காட்டுகிறது?

பாண்டவர்களுக்கு, கௌரவர்கள் செய்யாத கொடுமை இல்லை. பாஞ்சாலியை சபைக்கு முடியை பிடித்து இழுத்து வந்து, அவள் ஆடையை களைய முயன்றார்கள்.

சகிக்க முடியுமா? மறக்க முடியுமா ? மன்னிக்க முடியுமா?

இதை எல்லாம் நினைத்து தருமனை தவிர எல்லோரும் கொதித்துக் கொண்டு இருந்தார்கள். யுத்தம் வேண்டும், பழி வாங்க வேண்டும் என்ற எண்ணமே எல்லோர் மனதிலும் நிறைந்து நின்றது.

ஆனால், தர்மர் மட்டும் வேறுபட்டு சொல்கிறார்.

"பீமா, குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. ஒரே குலத்தில் பிறந்தவர்கள் ஒன்றாக வாழ்வதைப் போல உறுதி வேறொன்றில்லை. மாறாக, ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் , இருவருக்கும் பழி வந்து சேரும் அல்லவா"

என்றான்.

நாம் நினத்துக் கொண்டு இருக்கிறோம், சண்டை என்று வந்து விட்டால், ஒருவர் பக்கம் நியாயம் இருக்கும். மற்றது அநியாயம் என்று. தர்மன் மிகப் பெரிய உண்மையை எடுத்துச் சொல்கிறான். பகை என்று வந்து விட்டால், பழி இரண்டு பக்கமும் வரும் என்கிறான். சிந்திக்க வேண்டிய விஷயம்.

பாடல்


பரிவுடன் மற்று இவை கூறும் பவன குமாரனை மலர்க்கை
                  பணித்து, நோக்கி,
'குருகுலத்தோர் போர்ஏறே! குற்றமது பார்க்குங்கால்
                  சுற்றம் இல்லை;
ஒரு குலத்தில் பிறந்தார்கள் உடன் வாழும் வாழ்வினைப்போல்
                  உறுதி உண்டோ?
இருவருக்கும் வசை அன்றோ, இரு நிலம் காரணமாக
                  எதிர்ப்பது?ன்றான்.

பொருள்

பரிவுடன் = பரிவுடன், அன்புடன்

மற்று இவை = இவற்றை

கூறும் = கூறிய

பவன குமாரனை  = வாயு குமாரனான பீமனைப் பார்த்து

மலர்க்கை = மலர் போன்ற கையால்

பணித்து = அமைதி படுத்தி விட்டு

நோக்கி = அவனை நோக்கி

'குருகுலத்தோர் போர்ஏறே! = குருகுலத்தில் தோன்றிய ஏறு போன்ற போர்க் குணம் கொண்டவனே

குற்றமது பார்க்குங்கால் = குற்றம் பார்த்தால்

சுற்றம் இல்லை; = சுற்றம் இல்லை

ஒரு குலத்தில் பிறந்தார்கள் = ஒரே குலத்ததில் பிறந்தவர்கள்

உடன் வாழும் வாழ்வினைப்போல் = ஒன்று பட்டு வாழும் வாழ்வைப் போல

உறுதி உண்டோ? = உறுதி உண்டோ ?

இருவருக்கும் வசை அன்றோ = இருவருக்கும் பழி வந்து சேரும் அல்லவா?

இரு நிலம் காரணமாக = இந்த நிலம் காரணமாக

எதிர்ப்பது?ன்றான். = எதிர்த்து நின்றால் என்றான்

தவறு எவ்வளவுதான் பெரிதாக இருந்தாலும், மன்னித்து, மறந்து, ஒன்றாக வாழ்வதே  சிறந்தது என்கிறான்.

சுற்றம் என்று இருந்தால், அவ்வப்போது தவறு ஏற்படுவது இயல்பு. அதையே நினைத்துக் கொண்டிருந்தால், சுற்றம் என்ற ஒன்றே இருக்காது. தனித்து இருக்க வேண்டியதுதான்.

இது போன்ற உயர்ந்த நூல்களை படிக்கும் போது, அவை கொஞ்சமாவது நம் மனதில் , நம் வாழ்வில் கடை பிடிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_95.html


திருமந்திரம் - சொல் கேட்டு காமம் வந்தது போல

திருமந்திரம் - சொல் கேட்டு காமம் வந்தது போல 


"ஏய் இங்க வாயேன்" என்று கணவன் ஆசையோடு  கூப்பிடுவான். அவன் கூப்பிட்ட குரலை கேட்டதுமே மனைவிக்குத் தெரியும். அவள் மனத்திலும் ஆசை பிறக்கும்.

அதே சொற்களை வேறே யாராவது சொல்லி இருந்தால், அந்த காதலும் காமமும் பிறக்காது.

அன்பு கொண்ட இருவரில் ஒருவர் ஒரு சொல் சொன்னால் போதும், மற்றவர் மனதில் அது பத்திக் கொள்ளும்.

அது போல, பக்தியால் உள்ளம் கனிந்தவர்கள் ஒரு சொல் சொன்னாலும் போதும், இறைவன் இசைந்து அவர்களுக்கு அருள் புரிவான் என்கிறார் திருமூலர்.

பாடல்


அதுக்கென்று இருவர் அமர்ந்த சொற் கேட்டும்
பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல்
சதுக்கென்று வேறே சமைந்தாரைக் காண
மதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே.


பொருள்


அதுக்கென்று = அதற்காகவென்றே

இருவர் = இருக்கும் இருவர்

அமர்ந்த = ஓரிடத்தில் இருந்து

சொற் கேட்டும் = அவர்கள் ஒரு சொன்ன ஒரு சொல்லை கேட்டதும்

பொதுக்கெனக் = பொசுக் என்று

காமம் புலப்படு மாபோல் = காமம் வெளிப்படுவது போல

சதுக்கென்று = சது என்றால் அமைதி. மனம் அமைதி பெற்றவர்கள்

வேறே சமைந்தாரைக்  = பக்குவப் பட்டவர்களை

காண = காண்பதற்கு

மதுக் = தேன் நிறைந்த

கொன்றைத் = கொன்றை மலர்களை கொண்டு செய்த

தாரான் = மாலையை அணிந்த சிவன்

வளந்தரும் அன்றே. = நல்லனவற்றை தருவான் அப்போதே

திருஞான சம்பந்தர் குழந்தையாக இருந்த போது, அழுதார். சிவகாமி பால் தந்தாள்.

எத்தனையோ பிள்ளைகள் அழுகின்றன. எல்லோருக்குமா அருள் கிடைக்கிறது.

மனம் பக்குவப் பட வேண்டும்.

மனம் பக்குவப்பட்டால், அமைதி அடைந்தால், இறைவனை தேட வேண்டாம். அவனே வருவான்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_79.html