Friday, May 1, 2020

நள வெண்பா - நெஞ்சும் போயிற்று

நள வெண்பா - நெஞ்சும் போயிற்று 


பிள்ளை உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும். தாய் வெளியே யாரிடமோ பேசிக் கொண்டிருப்பாள், அல்லது தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருப்பாள். அந்த சமயத்தில் பிள்ளைக்கு ஏதோ உபாதையில் குழந்தை லேசாக நெளியும், அல்லது இருமும் அல்லது தும்மும்...உடனே தாய் ஓடிப் போய் பார்ப்பாள். அது எப்படித்தான் தெரியுமோ? அவள் எங்கே இருந்தாலும், அவள் மனம் பிள்ளையின் பக்கத்திலேயே இருக்கும்.

கணவன் வெளியூர் போயிருப்பான். போன இடத்தில் ஏதோ கொஞ்சம் உடல் நிலை சரி இல்லாமல் போயிருக்கும். இங்கு, மனைவிக்கு மனசு என்னமோ செய்யும். அவருக்கு என்னமோ என்று கிடந்து தவிப்பாள். அங்கே அவருக்கு ஒன்று என்றால், இங்கே இவளுக்கு எப்படித் தெரியும். உடல் இங்கே இருக்கிறது. மனம் அவன் கூடவே போகிறது.

இது காதலில் மட்டும் அல்ல, கணவன் மேல், பிள்ளையின் மேல் எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். அன்பு கூடி நிற்கும் போது, அன்பு கொண்டவர் கூடவே மனம் போய் விடும்.

இதை, புகழேந்தி, நளவெண்பாவில் காட்டுகிறார்.

தமயந்தியை காண நளன் வந்தான். அவளோடு பேசி சந்தோஷமாக இருந்த பின், பிரிந்து சென்றான். அவன் கூடவே, தமயந்தியின் மனமும் சென்று விட்டது. தன் மனம் அவன் பால் சென்ற பின், பாவம் அவள் தான் என்ன செய்வாள்?

பாடல்

தூதுவந்த காதலனைச் சொல்லிச் செலவிடுத்த
மாதுவந்து பின்போன வன்னெஞ்சால் - யாதும்
அயிர்த்தாள் உயிர்த்தாள் அணிவதனம் எல்லாம்
வியர்த்தாள் உரைமறந்தாள் வீழ்ந்து.

பொருள்

தூதுவந்த காதலனைச்  = தேவர்களுக்காக தன்னிடம் தூது வந்த காதலனை (நளனை )

சொல்லிச் = பேசி

செலவிடுத்த = செல்லும் படி விட்ட

மாது = மாது, தமயந்தி

வந்து பின்போன = தன்னிடம் வந்து பின் போன

வன்னெஞ்சால் = வன்மையான நெஞ்சால். இத்தனை நாள் தன்னோடு இருந்து விட்டு, அவனைக் கண்டவுடன், அவன் கூடவே போனதால், அதை வன்நெஞ்சு என்கிறாள்.

யாதும் = அனைத்தும்

அயிர்த்தாள் = =பதறினாள்

உயிர்த்தாள் = உயிர் பிரிந்து போன மாதிரி தவித்தாள்

அணிவதனம் = ஆபரணம் அணிந்த முகம்

எல்லாம் = எல்லாம்

வியர்த்தாள் = வியர்த்தாள்

உரைமறந்தாள் = பேச மறந்தாள்

வீழ்ந்து = கால்கள் தள்ளாடி தரையில் வீழ்ந்தாள்


காதலன் போன பின், அவன் கூடவே அவள் மனமும் போய் விட்டது.

என்ன செய்ய? உடல் ஒரு பக்கமும், மனம் வேறு பக்கமும் அல்லாடுவதே அன்பு கொண்ட உள்ளங்களின்  வாடிக்கையாகிப் போனது.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post.html

2 comments:

  1. இதையெல்லாம் கொஞ்சம் அதிகம்தான், ஆனாலும் இனிமை!

    ReplyDelete
  2. செம்ம.👌

    ReplyDelete