Sunday, May 31, 2020

கம்ப இராமாயணம் - தகப்பன் பாசம்

கம்ப இராமாயணம் - தகப்பன் பாசம் 


பிள்ளைப் பாசம் என்று கேள்விப் பட்டு இருக்கிறோம். அது என்ன தகப்பன் பாசம்.

பிள்ளை, தந்தை மேல் வைத்த பாசம்.

பிள்ளைகளுக்கு அம்மா மேல் அன்பிருற்கும். அது இயற்கை. அப்பா எங்கேயுமே கொஞ்சம் கண்டிப்பானவர்தான். பிள்ளைகளுக்கு அப்பா மேல் மரியாதை இருக்கும். கொஞ்சம் பயமும் இருக்கும். பாசம்?

பாசம் இருக்கும், அது அவ்வளவாக வெளிப்படுவது இல்லை.

பாசத்தை வெளியே காட்டுவது என்பது என்னவோ பலவீனம் என்று ஆண்கள் நினைப்பதாலோ என்னவோ, அப்பா பிள்ளை பாசம் அவ்வளவாக பேசப்படுவது இல்லை. அப்பா மகள் பாசம் உலகறிந்தது. அப்பா மகன் பாசம் நீறு பூத்த நெருப்பாகவே இருக்கிறது.

இந்திரசித்து.

இராவணனின் மகன்.

தன்னுடைய தந்தை, அம்மாவை விட்டு விட்டு இன்னொரு பெண்ணை கள்ளத் தனமாக கொண்டு வந்து வைத்து இருக்கிறார் என்று தெரியும். அந்தப் பெண் மேல் அப்பாவுக்கு காதல் என்றும் தெரியும்.

இருந்தும், அப்பா மேல் உள்ள வாஞ்சை போகவில்லை. இராவணன் மேல் இந்திரசித்துக்கு அவ்வளவு  காதல்.

போரில் அடிபட்டு , உடல் எல்லாம் புண்ணாகி, இரத்தம் வழிய, உடல் நடுங்க வந்து   நிற்கிறான் இந்திரசித்து.

சாதாரணாமாக  எந்த தநதைக்கும் உடல் பதறுமா இல்லையா? தன் பிள்ளை  இரத்தம் சொட்ட சொட்ட  வந்து நிற்கிறான் என்றால் அதை காணும் தகப்பனின் மனம்  எப்படி இருக்கும்?

இராவணன் பதறவில்லை.  சீதை மேல் உள்ள மோகம்.

இந்திரசித்தனிடம் கேட்கிறான்

" நீ தொடங்கிய வேள்வி முற்றுப் பெறவில்லை என்பதை உன் தோள்களில் உள்ள அம்புகளே சொல்கின்றன. அழிவு இல்லாத உடம்பு தளர்ந்து நடுங்கிக் கொண்டு நிற்கிறாய். கருடனைக் கண்ட பாம்பு போல நடுங்குகிறாய். நடந்தைச் சொல் "

என்று.


பாடல்

தொடங்கிய வேள்வி முற்றுப் பெற்றிலாத் தொழில்,
                                  நின் தோள்மேல்
அடங்கிய அம்பே என்னை அறிவித்தது; அழிவு இல் 
                                         யாக்கை
நடுங்கினை போலச் சாலத் தளர்ந்தனை; கலுழன் நண்ணப்
படம் குறை அரவம் ஒத்தாய், உற்றது பகர்தி’ என்றான்.


பொருள்


தொடங்கிய வேள்வி = நீ தொடங்கிய வேள்வி

முற்றுப் பெற்றிலாத் தொழில்  = நல்லபடியாக நிறைநேரவில்லை என்பதை

நின் தோள்மேல் = உன்னுடைய தோள்களில்

அடங்கிய அம்பே = குத்தி இருக்கும் அம்புகளே

என்னை அறிவித்தது; = என்னிடம் சொல்கின்றன

அழிவு இல்  = அழிவு அற்ற

யாக்கை = உடம்பு

நடுங்கினை போலச்  = நடுக்கம் கொண்டு இருக்கிறாய்

சாலத் தளர்ந்தனை; = ரொம்பவும் தளர்ந்து போய் இருக்கிறாய்

கலுழன் நண்ணப் = கருடன் அருகில் வர

படம் குறை அரவம் ஒத்தாய், = தன்னுடைய படத்தை குறைத்துக் கொள்ளும் பாம்பினை போல இருக்கிறாய்

உற்றது பகர்தி’ என்றான். = நடந்தது என்ன என்று சொல் என்றான்


இதை வீரம் என்று சொல்வதா ?  சீதை மேல் கொண்ட காதல் என்று சொல்வதா?

பெற்ற பிள்ளையின் இரத்தம் கண்டும் துடிக்கவில்லை. அப்படி ஒரு காதலா?

இன்னும் சிந்திக்க இருக்க இருக்கிறோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_31.html


1 comment:

  1. கொஞ்சம் விசித்திரமாக இருக்கிறதே !இப்படியும் கண்மூடித்தனமாக காதல் இருக்குமா?

    ReplyDelete