Tuesday, June 2, 2020

கம்ப இராமாயணம் - தொடுத்தனென்; தடுத்து விட்டான்

கம்ப இராமாயணம் - தொடுத்தனென்; தடுத்து விட்டான்


நிகும்பலை என்று ஒரு யாகம் செய்து, சக்தி வாய்ந்த ஆயுதங்களை பெற்று விட்டால் இந்திரசித்தை யாராலும் வெல்ல முடியாது.

அந்த யாகத்தை அவன் தொடங்கியவுடன், அதைப் பற்றி வீடணன், இலக்குவனிடம் சொல்லி விடுகிறான். இலக்குவன் அந்த யாகம் நடக்கும் இடத்துக்கு வந்து, அந்த யாகத்தை அழித்து விடுகிறான். அங்கு நடந்தப் போரில், இந்திரசித்து அடிபட்டு இராவணனனை காண வருகிறான்.

வந்தவன் சொல்கிறான்

"நாம் செய்த மாயம் எல்லாவற்றையும் உன் தம்பி வீடணன் காட்டிக் கொடுத்து விட்டான். அதனால் இலக்குவன் வந்து என்னோடு போர் புரிந்தான். யாராலும் வெல்ல முடியாத மூன்று படைகளை அவன் மேல் செலுத்தினேன். அவற்றை அவன் தடுத்து விட்டான்"

பாடல்

‘சூழ் வினை மாயம் எல்லாம் உம்பியே துடைக்க, சுற்றி,
வேள்வியைச் சிதைய நூறி, வெகுளியால் எழுந்து வீங்கி,
ஆள்வினை ஆற்றல்தன்னால் அமர்த் தொழில்  தொடங்கி
                                       யார்க்கும்
தாழ்வு இலாப் படைகள் மூன்றும் தொடுத்தனென்; தடுத்து
                                       விட்டான்.


பொருள்


‘சூழ் வினை  = சூழ்கின்ற வினை

மாயம் = மாயம்

எல்லாம் = அனைத்தையும்

உம்பியே  = உன் தம்பியாகிய  வீடணனே

துடைக்க = சொல்லிக் கொடுக்க

சுற்றி = சுற்றி சூழ்ந்து


வேள்வியைச் சிதைய நூறி = வேள்வியை முற்றுகையிட்டு  சிதைத்து ,

வெகுளியால் = கோபத்தால்

எழுந்து வீங்கி = வெகுண்டு எழுந்து, ஆரவாரம் இட்டு

ஆள்வினை ஆற்றல்தன்னால்  = என்னுடைய முயற்சியால் ஆற்றலால்

அமர்த் தொழில்  தொடங்கி = போரைத் தொடங்கி

யார்க்கும் = யாராலும்

தாழ்வு இலாப் = வெல்ல முடியாத

படைகள் மூன்றும் தொடுத்தனென் = மூன்று படைகளை தொடுத்தேன்

தடுத்து விட்டான். = (இலக்குவன்) தடுத்து விட்டான்

அதர்ம வழியில் போகிறவனுக்கு, அழிவு வெளியில் இருந்து வர வேண்டியது இல்லை.  அவனிடம் இருந்தே அவன் அழிவு பிறகும்.

இராவணனை அழிக்கவா இராமன் கானகம் வந்தான் ?

அவன் வீட்டில் என்னவோ குடும்பப் பிரச்சனை. மாற்றான் தாய் வரம் வேண்டி, அவனை காட்டுக்கு அனுப்பினாள். இராவணன் யார் என்றே தெரியாது.

இராவணன் செய்த அதர்மங்கள்...சூர்ப்பனகை, வீடணன் என்று கூட இருந்தே  அழித்தது.

அறம் அல்லாத வழியில் போகிறவன் எல்லோரும் என்ன நினைக்கிறான் ? என்ன  மிஞ்சி மிஞ்சி போனால் சில வருடம் சிறை தண்டனை, அதுவும் காசு இருந்தால்  நல்ல வக்கீலைப் பிடித்து, சட்டத்தில் உள்ள ஓட்டைகளில் புகுந்து  வெளியே   வந்து விடலாம் என்று நினைக்கிறான்.

அவன் செய்த தவறு அவனை மட்டும் பாதித்தால் அவன் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

அவன் மனைவியை, பிள்ளைகளை, பேரன் பேத்திகளை, உடன் பிறப்புகளை  வாட்டும்.

கும்ப கர்ணன் மாண்டான், இந்திர சித்து மாண்டான், மண்டோதரி இறந்தாள்...அரக்கர் குலம் அனைத்தையும் வேரறுத்தது.

சினம் எனும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் எனும் ஏமப் புணையை சுடும்

என்பார் வள்ளுவர்.

சினம் மட்டும் அல்ல, காமமும் அப்படித்தான்.

அறம் அல்லாத செயல் அனைத்துமே குலத்தையே வேரறுக்கும்.

ஒருவன் செய்த தவறுக்கு அவனுக்கு அடி விழுந்தால் வலி அவ்வளவாக இருக்காது.

அவன் பிள்ளை, அவன் கண் முன்னாடியே,  அடி படும் போது தெரியும் வலி.

இந்திர சித்ததன் இறந்த பின், இராவணன் புலம்புவான். கல்லும் கரையும் அந்த புலம்பலைக் கேட்டால்.

இராவணனை அடித்து இருந்தால், அந்த வலி தெரியாது.

அவன் கண் முன், அவன் பிள்ளை, தலை இல்லாமல் கிடந்தான்.

அதுதான் விதி. அதுதான் அறம்.

மேலும் சிந்திப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post.html


No comments:

Post a Comment