Tuesday, June 30, 2020

திருக்குறள் - தீவினை அச்சம்

திருக்குறள் - தீவினை அச்சம் 

பெரிய பெரிய கட்டிடம் கட்டும் இடங்களில் பார்த்தால் தெரியும், அங்கே பலர் சாளரம் கட்டி, அந்த கம்புகளின் மேல் நின்று வேலை செய்வார்கள். ஒரே ஒரு கம்பி அல்லது கம்பு தான் இருக்கும். அதன் மேல் நின்று கொண்டு வேலை செய்வார்கள். நம்மால் முடியுமா? முடியாது. பார்க்கவே பயமாக இருக்கும். விழுந்து விடுவோமோ என்று அச்சமாக இருக்கும். 

முதன் முதலாக கார் ஓட்டக் கற்றுக் கொள்ளும் போது, பயமாக இருக்கும். சுற்றிலும் வண்டிகள், நாம் யார் மேல் மோதி விடுவோமோ என்று அச்சம். யார் நம் மீது மோதி விடுவார்களோ என்று அச்சம். ஆனால், பழக்கம் ஆகி விட்டால், கார்ஓட்டிக் கொண்டே cd மாத்துவோம், கை பேசியில் பேசுவோம், தண்ணீர் குடிப்போம். என்ன ஆயிற்று? பழக்கம். 

பழக்கம் இல்லாவிட்டால் பயமாக இருக்கும். பழக்கமாகி விட்டால் பயம் போய் விடும். 

திருவள்ளுவர் செயலால் ஏற்படும் குற்றங்களை பற்றிச் சொல்ல வந்த அதிகாரத்துக்கு "தீ வினை அச்சம்" என்று பெயரிட்டார். 

"தீ வினை தவிர்த்தல்" அல்லது "தீ வினை ஒழித்தல்" என்று பெயர் இட்டு இருக்கலாமே? 

தீ வினை செய்ய அச்சப் படு என்கிறார். 

முதலில் மனதில் அச்சம் வர வேண்டும். பயம் இல்லாவிட்டால் துணிந்து செய்து விடுவோம். 

"ஐயோ, நான் மாட்டேன்பா...ரொம்ப ஆபத்தானது " என்று விலகி ஓட வேண்டும். 

எப்போது அச்சம் போகும்? ஒரு காரியத்தை மீண்டும் மீண்டும் செய்து பழகி விட்டால், அதில் உள்ள அச்சம் போய் விடும். 

முதலில் வண்டி ஒட்டவே பயந்தவன், இப்போது 100 அல்லது 120 கிலோ மீட்டர் வேகத்தில்  ஓட்டுகிறான். 

அது போல, களவு எடுக்க பயந்தவன், பழகிய பின், கோடிக்கணக்கில் களவு செய்யத் தலைப்படுவான். 

சின்ன தவறுகளை போனால் போகிறது என்று விட்டவர்கள், பெரிய தவறு  செய்யும் போது பிடித்து  சிறையில் போட்டு விடுகிறார்கள். 

மீண்டும் மீண்டும் செய்யும் போது, எப்போதோ ஒரு தரம் மாட்டிக் கொள்கிறான். 

எனவே, தீ வினை செய்வதில் அச்சம் வேண்டும். 

இரண்டாவது, 

அச்சம் என்பது மனதில் எழுவது. அதற்கு மனப் பயிற்சி வேண்டும். எதற்கு பயப்படுவது,  எவ்வளவு பயப்படுவது என்று மனதை பழக்க வேண்டும். இல்லை என்றால், ' பயமாகத்தான் இருக்கிறது...இருந்தாலும் செஞ்சு பார்ப்போமே" என்று மனம் விரும்பும். எனவே, தீயவை செய்யலாம் இருக்க வேண்டும் என்றால், தீயனவற்றை கண்டு அஞ்ச வேண்டும். 

மூன்றாவது, 

சிலர் ஒரு பயமும் இல்லாமல் தீயனவற்றை செய்கிறார்களே என்றால்,  முற் பிறவியில்  தீமை செய்து பழகி இருப்பார்கள் என்று சொல்கிறார் பரிமேல் அழகர். 

சில வருடங்களுக்கு முன்,  ஒரு பெண் கொடூரமான முறையில் கற்பழிக்கப்ட்டது பற்றி அறிந்தோம். அப்படி ஒரு கொடுமையை செய்ய முடியுமா? நினைத்தாலே நமக்கு மனம் நடுங்குகிறது அல்லவா? அதை ஒருவன் செய்திருக்கிறான். அவன் அது போல் முன்பே செய்திருக்க மாட்டான். பின் எப்படி செய்தான் என்றால், அது முற்பிறவி வாசனை. 

ஒருவன் குற்றங்களை எளிதாகச் செய்கிறான் என்றால் அவன் முற்பிறவியில் பழகி விட்டான் என்று பொருள். 



நான்காவது,

இப்போது தீமை செய்து பழகி விட்டால், அது இப்பிறப்பில் மட்டும் அல்ல, பின் வரும்  பிறவியிலும் தொடரும். சிலர் கேட்கிறார்கள், "அவன் எவ்வளவு அயோக்கியத்தனம் செய்கிறான். நல்லாத்தான் இருக்கிறான். இந்த சாத்திரம், சம்பிரதாயம், அறம் எல்லாம் பொய் தான் போலிருக்கிறது" என்று. 

அல்ல. அவன் செய்யட்டும். செய்து பழகட்டும். அந்த பழக்கம் தொடரும். 

இந்தப் பிறவியில் இல்லாவிட்டால் அடுத்தப் பிறவியில் அதற்கான தண்டனை வரும். நீ செய்து பழகாதே என்கிறார் வள்ளுவர். 

ஐந்தாவது, 

தீ வினை செய்வதில் உள்ள அச்சம் போய் விட்டால், பின் தீ வினை செய்வதற்கு காரணங்கள் கண்டு பிடித்து  அதை ஞாயப் படுத்தத் தொடங்கி விடுவோம். அச்சம் ஒன்று தான், நம்மை அதில் இருந்து காக்கும். 


ஆறாவது, 

கொதிக்கிற எண்ணையில் கையை விடாதே என்று ஏதும் சட்டம் இருக்கிறதா?  சட்டம் இல்லாவிட்டாலும், நாம் அதைச் செய்வது இல்லை. சட்டம் போட்டு தடுத்தாலும்  தீய செயல்களை செய்கிறவன், சட்டமே இல்லாத போதும்   அந்தக் காரியத்தை செய்வது இல்லை. ஏன்? பயம். கொதிக்கிற எண்ணெய் சுடும். தோல் வெந்து விடும். வலிக்கும் என்ற பயம்.  ஒரு சமுதாயத்தில், தீ வினை செய்ய எல்லோரும் அச்சப் பட்டால், ஒரு சட்டம்,  காவல் தூரம், நீதித் துறை என்று ஒன்றும் வேண்டாம். ஒருவனும் செய்ய மாட்டான். 

ஏழாவது, 

சட்டம், நீதி மன்றம், சிறைச்சாலை எல்லாம் என்ன செய்யும்? கையில் காசு இருக்கிறது.  பாத்துருவோம் ஒரு கை என்று பயம் விட்டுப் போய் விட்டால், என்ன சட்டம் போட்டும்  பயன் இல்லை. சாட்சியை விலைக்கு வாங்குவது, அல்லது மிரட்டுவது,  அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுப்பது என்று எல்லாம் செய்து  வெளியில் வந்து விட முடியும். பயம் போய் விடும். சட்டம் போட்டு திருத்த முடியாது.  எனவே தான் சொன்னார் "தீ வினை செய்வதில் அச்சம் வேண்டும்" என்று.  நல்ல பாம்பை கையால் பிடிப்போமா? பிடிக்கக் கூடாது என்று சட்டம்இல்லை . இருந்தும் நாம் செய்வது இல்லை. காரணம், "அச்சம்"

வெறும் தலைப்புக்கு இவ்வளவு உரை. 

இனி அதிகாரத்துக்குள் போக வேண்டும். 

மலைப்பாக இருக்கிறது அல்லவா?



2 comments:

  1. "கார் ஓட்டிக் கொண்டே ... கை பேசியில் பேசுவோம்" - அது மட்டும் வேண்டாம் அய்யா!

    ReplyDelete
  2. கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு

    ReplyDelete