Sunday, June 7, 2020

கம்ப இராமாயணம் - யாரை நம்பி நான் பொறந்தேன்

கம்ப இராமாயணம் - யாரை நம்பி நான் பொறந்தேன் 


எப்பவாவது நமக்கு ஒரு சிக்கல் வந்தால், துன்பம் வந்தால், உதவி நாடி நமக்கு நெருக்கமானவர்களிடம் சென்று உதவி கேட்போம்.

சில சமயம் ஏதோ சில பல காரணங்களால் நாம் நாடிச் சென்ற ஒருவருமே நமக்கு உதவி செய்ய இயலாமல் கை விரித்து இருப்பார்கள்.

அந்த சமயம் நமக்கு, ஒரு பக்கம் அவர்கள் மேல் கோபம் வரும். அவர்களுக்கு எவ்வளவு உதவி செய்தோம்...நமக்கு ஒரு உதவி வேண்டும் என்று கேட்டால் கையை விரித்து விட்டார்களே என்று. இன்னொரு பக்கம், ஒரு வைராக்கியம் வரும்.  யார் உதவி செய்யாவிட்டால் என்ன, இந்த பிரச்சனையை நானே சமாளிக்கிறேனா இல்லையா பார் என்று.

இராவணனும் அந்த நிலையில் நிற்கிறான்.

இந்திரசித்து எவ்வளவோ சொல்லிப் பார்த்தான்...இராவணன் கேட்பதாய் இல்லை. பின் சொல்வான்

"இந்திரசித்து, இதற்கு முன்னால் போருக்கு சென்று இறந்தவர்கள், அல்லது பின்னால் இன்னும் உயிரோடு இருப்பவர்கள் அல்லது நீ இந்த பகையை முடிப்பாய் என்று நான் இந்த பகையை தேடிக் கொள்ளவில்லை. என் மேல் உள்ள நம்பிக்கையில் நான் இந்த பகையை தேடிக் கொண்டேன்...நீங்கள் யார் இல்லாவிட்டாலு பரவாயில்லை...நானே இந்த பகையை முடிக்கிறேன்"

என்று.

பாடல்


முன்னையோர், இறந்தார் எல்லாம், இப் பகை முடிப்பர்
                                        என்றும்,
பின்னையோர், நின்றோர் எல்லாம், வென்றனர் பெயர்வர் 
                                        என்றும்,
உன்னை, “நீ அவரை வென்று தருதி“ என்று உணர்ந்தும்,
                                       அன்றால்;
என்னையே நோக்கி, யான் இந் நெடும் பகை தேடிக் 
                                    கொண்டேன்.


பொருள்


‘முன்னையோர்,  = இதற்கு முன்னால் போருக்கு போனவர்கள்

இறந்தார் = போரில் இறந்தவர்கள்

எல்லாம் = அவர்கள் எல்லாம்

இப் பகை முடிப்பர் என்றும் = இந்தப் பகையை வெல்வார்கள் என்றும்

பின்னையோர் = பின்னும் இருப்பவர்கள்

 நின்றோர் எல்லாம் = உயிரோடு நின்றவர்கள் எல்லாம்

வென்றனர் பெயர்வர்  என்றும், = வெற்றி பெற்றுத் தருவார்கள் என்றும்

உன்னை, = உன்னை

“நீ அவரை வென்று தருதி“ என்று உணர்ந்தும், = நீ அவர்களை வெல்வாய் என்றும்

அன்றால்; = அல்ல

என்னையே நோக்கி,  = என்னை மட்டுமே நம்பி

யான் = நான்

இந் = இந்த

நெடும் பகை  = பெரிய பகையை

தேடிக்  கொண்டேன். = தேடிக் கொண்டேன்


இராவணனின் வீரமும் தன்னம்பிக்கையும் கொப்பளிக்கிறது.

உங்களை எல்லாம் நம்பியா நான் சீதையை தூக்கி வந்தேன். தள்ளுங்க, இதை நானே பார்த்துக் கொள்கிறேன்

என்றான்.

வீரத்தில், கம்பீரத்தில் ஒரு துளி கூட குறைவு இல்லாதவன் இராவணன்.

என்ன ஒரே ஒரு குறை,  சீதையை தூக்கி வந்து விட்டான். இல்லை என்றால், அவனில் ஒரு  குறை காண முடியுமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_7.html



1 comment: