Thursday, June 11, 2020

திரு மந்திரம் - ஆய்ந்தறி வாரில்லை

திரு மந்திரம் - ஆய்ந்தறி வாரில்லை


நமக்கு முடி திருத்த வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? முடி திருத்தும் இடத்துக்குப் போக வேண்டும்.

நீச்சல் அடிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? நீச்சல் குளமோ, அல்லது வேறு ஏதாவது நீர் நிலைக்கோ போக வேண்டும் அல்லவா?

வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு, நீச்சல் கற்றுக் கொள்ள முடியுமா?  வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு சைக்கிள் ஓட்டப் பழக முடியுமா?

அற்ப காரியங்களான முடி திருத்துவது, நீந்துவது, சைக்கிள் ஓட்டுவது போன்றவற்றிற்கே அந்தந்த இடத்துக்குப் போக வேண்டி இருக்கிறது.

நாம் வீட்டில் இருந்து கொண்டே இறைவனை அறிய வேண்டும், முக்தி , வீடு பேறு, பர லோகம், உண்மை, மறு பிறப்பு, ஆத்மா என்று எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறோம்.

முடியுமா?

அததற்கு அங்கங்கே போனால் தானே முடியும்.

கொங்கு நாட்டில் வாணிபம் செய்வார்கள். அவர்கள் எப்படி செய்கிறார்கள், எப்படி பேரம் பேசுகிறார்கள், எப்படி கொள் முதல் செய்கிறார்கள் என்று அறிய வேண்டும் என்றால் அங்கே போனால்தான் முடியும். இங்கு இருந்து கொண்டே அதை அறிய முடியாது.

வெளிச்சம் என்றால் எப்படி இருக்கும் என்று இருளில் அமர்ந்து கொண்டு யோசித்தால், எவ்வளவு யோசித்தாலும் அது பிடிபடாது. ஆனால், நிலவு வந்துவிட்டால், அப்புறம் வெளிச்சம் என்றால் என்ன என்று யோசிக்க என்ன இருக்கிறது. அது தான் தெரிகிறதே. யோசனை என்ன வேண்டி இருக்கிறது. உண்மை அறியும் வரைதான் வாதம், பிரதிவாதம் எல்லாம். உண்மை தெரிந்து விட்டால்  பேச்சு நின்று விடும்.

ஞானிகள் இருக்கும் போய் விட்டால், ஞானம் தானே வந்து விடும். நிலவு இருக்கும் இடத்தில் இருள் இல்லாமல் போவது போல, ஞானிகள் இருக்கும் இடத்தில் அறியாமை இருக்காது.


பாடல்



கொங்குபுக் காரொடு வாணிபஞ் செய்ததுஅங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வாரில்லைதிங்கள்புக் கால்இரு ளாவ தறிந்திலர்தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமன்றே




பொருள்


கொங்கு = கொங்கு தேசம்

புக் காரொடு = அங்கு உள்ளவர்களோடு

வாணிபஞ் செய்தது = எப்படி வாணிபம் செய்வது என்று

அங்குபுக் காலன்றி  = அங்கு சென்று புகுந்தால் அன்றி

ஆய்ந்தறி வாரில்லை = இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே ஆராய்ந்து அறிய முடியாது

திங்கள்புக் கால் = நிலவு புகுந்து விட்டால்

இரு ளாவ தறிந்திலர் = இருள் என்றால் என்ன என்று தெரியாது

தங்குபுக் கார்சிலர் = தன்னுளே சென்ற சிலர்

தாபதர் தாமன்றே. = தாபதர் என்றால் முனிவர்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_11.html

1 comment:

  1. "தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமன்றே' இந்த சிறிய வரியில் எவ்வளவு பெரிய கருத்தை சொல்லி இருக்கிறார்.அருமை.

    ReplyDelete