Tuesday, June 16, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எனக்கினிக் கதியென் சொல்லாய்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எனக்கினிக் கதியென் சொல்லாய்


இறைவன் மேல் பக்தி கொண்டவர்களை, "வாழக்கையில் உங்கள் நோக்கம் என்ன" என்று கேட்டால் என்ன சொல்லுவார்கள்?

"இறைவனை அடைவது"

"பரம பதம் அடைவது"

"சுவர்க்கம் போவது"

என்று இப்படி ஏதாவது ஒன்றைச் சொல்வார்கள்.

சரி. எப்படி போவது? அதற்கு என்ன வழி?

பூஜை செய்தால் போய் விடலாமா? தான தர்மம் செய்தால் போய் விடலாமா? நிறைய பாசுரங்கள் பாராயணம் பண்ணினால் போய்விடலாமா? ஆச்சாரமாக இருந்தால் போதுமா? மூணு வேளை குளிப்பது, நாளும் கிழமை என்றால் விரதம் இருப்பது, வெளியில் எங்கும் உண்ணாமல் இருப்பது, கடல் கடந்து போகாமல் இருப்பது என்று இருத்தால் போதுமா?

இதெல்லாம் வழி இல்லை என்கிறார் தொண்டரடிப் பொடி ஆழ்வார். பின் என்ன தான் வழி?

பாசுரத்தைப் பார்ப்போம்


பாடல்

மனத்திலோர் தூய்மை யில்லை வாயிலோர் இன்சொ லில்லை
சினத்தினால் செற்றம் நோக்கித்  தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலை யானே பொன்னிசூழ் திருவ ரங்கா
எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னையா ளுடைய கோவே”


பொருள்

மனத்திலோர் தூய்மை யில்லை  = மனதில் ஒரு தூய்மை இல்லை

வாயிலோர் இன்சொ லில்லை = வாயில் ஒரு இன் சொல் இல்லை

சினத்தினால் = கோபத்தால்

செற்றம்  நோக்கித்  = பகைவர்களை பார்த்து

தீவிளி விளிவன் = தீ போல விழிப்பேன். அதாவது கோபத்தையும் வெறுப்பையும் காட்டுவேன்

வாளா = வேலை வெட்டி இல்லாமல்

புனத்துழாய் மாலை யானே = துளசி மாலை அணிந்தவனே

பொன்னிசூழ் = பொன்னி நதி சூழ்ந்த

திருவ ரங்கா = திருவரங்கத்தில் இருப்பவனே

எனக்கினிக்  = எனக்கு இனி

கதியென்  = கதி (வழி) என்ன

சொல்லாய் = சொல்லுவாய்

என்னையா ளுடைய = என்னை ஆட்சி செய்யும்

கோவே = தலைவனே

பாசுரத்தின் அர்த்தம் புரிகிறது. இதில் இறைவனை அடைய வழி எங்கே சொல்லி இருக்கிறது?

இருக்கிது. மறைமுகமாக இருக்கிறது.

மனதில் தூய்மையும், வாயில் இன் சொல்லும், கண்ணில் கருணையும் இல்லாத எனக்கு  என்ன வழி என்று கேட்கிறார் ஆழ்வார்.

அப்படி என்றால், தூய்மையான மனமும், இனிமையான சொல்லும், கருணை கொண்ட  விழிகளும் இருந்தால் வழி திறந்து விட்டது என்று தானே அர்த்தம்.

இறைவனை அடைய  தடையாய் இருப்பது என்ன?

தூய்மை இல்லாத மனம், இனிமை இல்லாத சொல், கருணை இல்லாத கண்கள்.

இந்த அறிவு, செல்வம், பூஜை, புனஸ்காரம், ஆச்சாரம், அனுஷ்டானம் இதெல்லாம் இல்லாத எனக்கினி என் கதி என்று கேட்கவில்லை.

மனதை தூய்மை படுத்துவது கடினமான காரியம்.

மனம் தூய்மை ஆகாமல் கண்ணில் கருணை வராது.

இனிய சொல்? கொஞ்சம் கடினம்தான். இருந்தாலும், மற்றவற்றை விட எளிது.

முயன்று பார்ப்போமா?  எந்த கடினமான சொல்லையும் சொல்லுவதில்லை என்று  சங்கல்பம் செய்து கொள்வோம்.

யாரையும் வைவது இல்லை,  மட்டம் தட்டி பேசுவது இல்லை, கோபித்து  மனம் புண் படி பேசுவது இல்லை என்று முடிவு செய்து கொள்வோம்.

அடுத்தது, அன்பான சொல் பேசுவது, ஆறுதலான சொல் பேசுவது, மனதுக்கு சுகம்   தரும் சொற்களை பேசுவது என்று முடிவு செய்து கொள்வோம்.

எவ்வளவோ படிக்கிறோம். ஒன்றிரண்டை நடை முறை வாழ்க்கையில் செயல் படுத்திப் பார்த்தால் என்ன ?

செய்யலாம் தானே?

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_16.html


2 comments:

  1. "மனதுக்குள் மாசிலன் ஆதல்" என்பது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. மிக நன்று ஏனெனில் அடுத்த பாடலில் இதே போன்ற வரிகள் வரும்

      மாசற்றார் மனத்துளானை வணங்கி நாம் இருப்பதல்லால்
      பேசத்தான் ஆவதுண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய்

      Delete