Wednesday, June 10, 2020

திருக்குறள் - தூதொடு வந்த கனவினுக்கு

திருக்குறள் - தூதொடு வந்த கனவினுக்கு


அறத்துப் பால், பொருட்பால் இரண்டிலும் மிக ஆழமாக, நுண்ணியமாக எழுதிய வள்ளுவர் காமத்துப்பாலிலும் அதே அளவு நுணுக்கத்தோடு எழுதி இருக்கிறார் என்பதை பார்க்கும் போது நமக்கு வியப்பாக இருக்கிறது.

ஆண் பெண் உறவு, நட்பு, காதல், கூடல், ஊடல், பிரிவு, தவிப்பு, அவர்களை பற்றி ஊர் பேசுவது, என்று அனைத்தையும் எழுதி இருக்கிறார்.

காமத்துப் பால் எழுதுவது என்பது கத்திமேல் நடக்கும் வேலை. கொஞ்சம் எல்லை தாண்டினாலும் விரசமாகிவிடும் ஆபத்து உண்டு. எல்லை தாண்டாமல், சுவை குன்றாமல் செய்ய வேண்டும்.

செய்திருக்கிறார்.

பாடல்

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து

பொருள்

காதலர் = காதலர்

தூதொடு  = தூதொடு

வந்த = வந்த

கனவினுக்கு = கனவினுக்கு

யாதுசெய் வேன் = என்ன செய்வேன்

கொல் = அசைச் சொல்

விருந்து = விருந்து


இதில் என்ன பெரிய நுணுக்கம், ஆழம் இருக்கிறது? எல்லாம் தான் கண் முன்னால் தெரிகிறதே.

சிந்திப்போம்.

தூதொடு வந்த கனவினுக்கு

தூதாக வந்த கனவினுக்கு என்று சொல்லி இருந்தால், அந்த கனவு தூதாக வந்து இருக்கிறது என்று பொருள் கொள்ளலாம். தூதோடு என்று சொன்னால்?
கனவோடு வேறு ஏதோ வந்திருக்கிறது என்று தானே அர்த்தம்.

அண்ணனோடு தம்பியும் வந்தான். அப்பாவோடு அம்மாவும் வந்தாள். ஓடு என்பது  துணையாக இன்னொன்றும் வந்திருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது.

அங்குதான் வள்ளுவர் நிற்கிறார்.

காதலர் அனுப்பிய தூதாக கனவு வந்தது. அந்த கனவில் காதலரும் வந்து விட்டார்.  தூது அனுப்பிய காதலரை அந்த கனவு கொண்டு வந்து விட்டது.

வந்தது இரண்டு. கனவு + கனவில் உள்ள காதலர்.

இப்ப முதல் அடியை படித்துப் பாருங்கள்.


"காதலர் தூதொடு வந்த கனவினுக்கு"

காதலர்தான் கனவை தூதாக அனுப்பினார். ஆனால், அந்த கனவோ காதலரையும் கூட்டிக் கொண்டு வந்து விட்டது.

விருந்து என்றால் விருந்தினரை குறிக்கும். விருந்து படைக்கும் சாப்பாட்டையும் குறிக்கும். விருந்து தடபுடலாக இருந்தது என்கிறோம் அல்லவா.

பொண்ணும் மாப்பிள்ளையும் வந்து இருந்தார்கள். நல்லா விருந்து சமைச்சு போட்டு  அனுப்பி வைத்தேன் என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம் அல்லவா?



"யாதுசெய் வேன்கொல் விருந்து"

என்ன விருந்து செய்வேன் ? என்று கேட்கிறாள்.

முதலாவது, அவனுக்கு என்ன பிடிக்கும் என்று தெரியாது. அதனால் என்ன விருந்து செய்வது  என்று தெரியவில்லை.

இரண்டாவது, விருந்து செய்யலாம் என்று எழுந்து பார்த்தால், அவனும் போய்விட்டான் , கனவும் போய் விட்டது. என்ன விருந்து செய்ய ? யாருக்குச் செய்ய  என்ற குழப்பம்.


மூன்றாவது, கனவு சும்மா வந்துட்டு போயிருக்கலாம். அவனையும் கூட்டிக் கொண்டு வந்ததில் அவளுக்கு ரொம்ப சந்தோஷம். அந்த சந்தோஷத்தில் , அந்த  கனவுக்கு என்ன கைம்மாறு செய்வது என்று தெரியாமல் திகைக்கிறாள். "ஐயோ, என் கனவே நீ எனக்கு எவ்வளவு உதவி செய்து இருக்கிறாய்...உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமே ...என்ன செய்றதுன்னே தெரியலையே...கையும் ஓடலை காலும் ஓடலை " என்று தவிக்கிறாள்.

நான்காவது, அவர்களுக்குள் திருமணம் ஆகவில்லை. அவ்வப்போது பார்த்துக் கொள்வார்கள். பேசுவார்கள். அன்பு முற்றி, காதல் மலர்ந்தது. திடீரென்று சொல்லாமல்  கொள்ளாமல், இராத்திரி நேரத்தில் வந்து நின்றால் , பாவம் அவள் என்ன செய்வாள். அந்தப் பக்கம் பெற்றோர் உறங்கிக் கொண்டு இருக்கிறார்கள். வந்த காதலனுக்கு ஏதாவது செய்து தர வேண்டும் என்று ஆசை. முதல் முறையாக வீட்டுக்கு வந்து இருக்கிறான். பெரிய விருந்தே செய்து  போட வேண்டும். எப்படி முடியும் ?

நான் என்ன செய்வேன் என்று கையை பிசைகிறாள்.

"என் செய்வேன் கொல் விருந்து"

எவ்வளவு சுகமான குறள்.

படிக்க படிக்க மனதில் ஒரு இனிமை, சுகம் வந்து ஒட்டிக் கொள்கிறதா இல்லையா?


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_10.html

No comments:

Post a Comment