Monday, June 22, 2020

கந்தர் அலங்காரம் - பயந்த தனி வழி 


இந்தப் பாடலை முன்பே ஒரு தரம் சிந்தித்தோம்.

இன்னும் ஒரு முறை சிந்தித்தால் என்ன.

அந்த சோறு, சாம்பார், இட்லி, தோசை, பொங்கல், வடை, பூரி, சப்பாத்தி என்று எத்தனை தரம் சாப்பிடுகிறோம். கேட்ட சினிமா பாட்டையே எத்தனை தரம் கேட்கிறோம். பார்த்த நகைச்சுவை காட்சிகளை எத்தனை தரம் பார்க்கிறோம். சலித்தா போகிறது?

நல்ல விஷயங்களை ஒன்றுக்கு இரண்டு தரம் படித்தால் என்ன ஆகி விடும்.

இல்லை, முன்னமே ஒரு தரம் படித்து விட்டேன், மீண்டும் ஒரு முறை படிக்க முடியாது என்று நினைத்தால், விட்டு விடலாம்.  இதை மூடி வைத்து விட்டு இது வரை செய்யாத ஒன்றை செய்ய முற்படலாம்.

மேலும், ஒவ்வொரு பாடல் பற்றி எழுதும் போதும் ஏதோ ஒரு சிந்தனை மேலோங்கி நிற்கும். அப்போது, பாடலில் உள்ள மற்ற விடயங்கள் சரியாக எடுத்துச் சொல்லாமல் விடுபட்டுப் போய் இருக்கலாம். அதை மீண்டும் கொண்டு வரவே இந்த முயற்சி.

அது ஒரு முன்ன பின்ன தெரியாத ஒரு ஊர். நேரமோ இரவு நேரம். சாலையில் ஒரு ஆள் அரவம் இல்லை. போகும் இடம் உங்களுக்கு சரியாகத் தெரியாது. விலாசம் தொலைந்து போய் விட்டது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

தனியே நடந்து போகிறீர்கள். பயமாக இருக்குமா இல்லையா?

அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது. எதுக்காக முன்ன பின்ன தெரியாத ஊருக்குப் போகப் போகிறோம்? வேற வேலை இல்லையா?  என்று நீங்கள் நினைக்கலாம்.

அப்படி ஒரு  நேரம் எல்லோருக்கும் கட்டாயம் வரும். யாரும் இல்லாத தனி வழியில், போகும் இடம் தெரியாமல் போக வேண்டி வரும் என்கிறார் அருணகிரிநாதர்.

இறப்புக்குப் பின், இந்த ஆத்மா தனியாகத்தான் போக வேண்டும்.

எவ்வளவுதான் அன்பு செலுத்தும் நட்பும் உறவும் இருந்தாலும், யாரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு போக முடியாது.   யார் வருவார்கள் கூட?

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை.

கொட்டி முழக்கி அழுதிடுவார், மயானம் குறுகி எட்டி அடி வைப்பாரோ இறைவா கச்சி ஏகம்பனே  என்று ஓலமிடுவார் பட்டினத்தடிகள்.

மனைவி, மகன், மகள் , அம்மா, அப்பா, அண்ணன் , தம்பி, தங்கை, பேரன் , பேத்தி ஒருத்தரும் கூட வர மாட்டார்கள்.

தனியாகத்தான் போக வேண்டும். அது மட்டும் அல்ல, போகும் இடமும் தெரியாது.  அந்த வழியில் வேலும் மயிலும் துணை என்கிறார்.


பாடல்


விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.

பொருள்

விழிக்குத் துணை  = விழிக்குத் துணை

திரு மென்மலர்ப் பாதங்கள் = உயர்ந்த மென்மையான மலர் போன்ற பாதங்கள்

மெய்ம்மை குன்றா = உண்மை குறையாத

மொழிக்குத் துணை = மொழிக்குத் துணை

முரு காவெனு நாமங்கள் = முருகா, முருகா, முருகா என்ற நாமங்கள்

 முன்புசெய்த = முற்பிறவியில் செய்த

பழிக்குத் துணை  = பழிகளுக்கு துணை

யவன் பன்னிரு தோளும் = அவன் பன்னிரு தோள்களும்

பயந்த தனி வழிக்குத் துணை = பயந்த தனி வழிக்குத் துணை

வடி வேலுஞ் = வடிவான வேலும்

செங் கோடன் மயூரமுமே. = செங்கோடன் மயிலும்

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_22.html

No comments:

Post a Comment