Friday, June 5, 2020

கந்தர் அநுபூதி - பேசா அநுபூதி

கந்தர் அநுபூதி - பேசா அநுபூதி 


நாம் ஒன்று நினைத்து சொல்கிறோம். எழுதுகிறோம்.

ஆனால் கேட்பவர்கள், படிப்பவர்கள் அவர்களுக்கு தோன்றிய விதத்தில் அதை எடுத்துக் கொள்கிறார்கள்.  நாம் சொன்னது ஒன்றாகவும், அவர்கள் அதில் இருந்து அறிந்து கொண்டது வேறாகவும் இருக்கும்.

இது ஏதோ, எப்போதோ நிகழ்வது அல்ல. எப்பவுமே அப்படித்தான் நிகழ்கிறது.

ஒன்று சரியாக கேட்பதில்லை. அப்படியே கேட்டாலும், சரியாக புரிந்து கொள்வதில்லை. மாறாக தவறாக புரிந்து கொள்கிறார்கள். அல்லது, ஏதாவது வாதம் பண்ணுகிறார்கள், தங்கள் மேதா விலாசத்தைக் காட்ட. அப்படியே சரியாக  புரிந்து கொண்டாலும், அதன் படி நடப்பதும் இல்லை.

ஏன் இத்தனை முயற்சி? நாம் சொல்லி ஒன்றும் நடக்கப் போவது இல்லை என்ற உணர்வு வரும் போது, மெளனமாக இருந்து விடுவதே நல்லது என்று தோன்றும் - ஞானியர்களுக்கு.

அதைத்தான் அநுபூதி என்கிறார்கள்.

அந்த பேசா நிலை எப்போதும் நிகழும்?

ஆசைகள் விட்டு விட்டால், மௌனம் வரும் என்கிறார் அருணகிரிநாதர்.

ஆசைகள் எப்படி வருகின்றன?

ஆசைகள் சங்கிலித் தொடர் போல், ஒன்றைப் பற்றிக் கொண்டு இன்னொன்று வரும்  என்கிறார்.

பெண்ணாசை - அதில் இருந்து திருமணம் - அதில் இருந்து பிள்ளைகள் - இந்த அவர்களின்  தேவைகள் ஆசைகள் - அவற்றை பூர்த்தி செய்ய ஆசை - எனவே மேலும் பணம் சம்பாதிக்க ஆசை ...இப்படி ஒன்றில் இருந்து மற்றொன்று.

வீடு வாங்க ஆசை - பின் அதில் நல்ல பீரோ, கட்டில்,  மின் விளக்கு, குளிர் சாதனை பெட்டி,  தொலைக் காட்சி, கார் என்று ஒன்றில் இருந்து ஒன்றாக ஆசைகள்  முளைத்து எழுகின்றன.

இந்த சங்கிலித் தொடரை வெட்ட வேண்டும். அப்போது தான் அது வளர்வது நிற்கும்.

ஏதோ ஒரு ஆசை வரும் போது, "போதும், அது வேண்டாம்" என்று நிறுத்தினால், அந்த ஒரு ஆசை மட்டும் அல்ல, அதைத் தொடர்ந்து வரும் அத்தனை  ஆசைகளும்  அற்றுப் போய் விடும்.

ஆசை குறையும் போது, மனம் அடங்கும். அலை பாயாது.

சலனம் இல்லாத மனதில் மௌனம் பிறக்கும். அலை அடித்தால் அல்லவா சத்தம் வரும்.

பாடல்

தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே.


பொருள்

தூசா மணியும் = தூய்மையான மணியும்

துகிலும் = நல்ல உடைகளும்

புனைவாள் = புனைபவள். வள்ளியோ, தெய்வ யானையோ

நேசா = அவள் மேல் நேசம் கொண்ட

முருகா =முருகா

நினது = உன்னுடைய

அன்பு = அன்பு

அருளால் = அருளால்

ஆசா  = ஆசை என்ற

நிகளம் = சங்கிலி

துகளாயின பின் = தூள் தூளான பின்

பேசா  = பேசாமல் இருக்கும், மெளனமாக இருக்கும்

அநுபூதி பிறந்ததுவே. = அநுபூதி நிலை தோன்றியது

சிறு வயதில் என் தாத்தா, பாட்டி ஆகியோர் இந்தப் பாடலை மனப்பாடமாக  ஒப்பிப்பதை  கேட்டு இருக்கிறேன்.

அதற்கு என்ன அர்த்தம் என்று தேடும் ஆவல் இருந்தது இல்லை.

இப்போது தோன்றுகிறது.


என் அனுபவத்தில் இன்னொன்றும் தோன்றுகிறது. சரியா தவறா என்று தெரியவில்லை.

ஆசை சங்கிலி அறுந்து போனால் மௌனம் பிறக்கும் என்கிறார் அருணகிரி.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், மௌனம் பிறந்தால் ஆசை அடங்கும் என்று.

மௌன விரதம் இருந்தால் ஆசை அடங்கும் என்று தோன்றுகிறது.

பேசுவதால், மற்றவர்களிடம் மட்டும் அல்ல, நமக்கு நாமே பேசிக் கொள்வதால், நாம் ஆசைக்கு தீனி போடுகிறோம்.

"அந்த கார் இருந்தால்   எப்படி இருக்கும், அது எவ்வளவு விலை இருக்கும், அதை விட   மற்ற கார் நல்லதா, வாங்கினால் நம்ம வீட்டில் நிறுத்தி வைக்க முடியுமா "

என்றெல்லாம் நாம் நமக்குள்ளேயே பேசிக் கொண்டிருக்கிறோம்.

பேச்சை நிறுத்தினால், ஆசை அறும்.

எப்படி உண்ணா விரதம் இருந்தால் உடல் சலனம் அடங்குகிறதோ, அது போல  பேசா விரதம் இருந்தால் மனச் சலனம் அடங்கும் என்று நினைக்கிறேன்.

பேசா அனுபூதி

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_5.html


2 comments:

  1. உங்களுக்கு தோற்றியது மிகவும் சரிதான். நல்ல விளக்கம். பேசா அனுபூதியே மிகவுயர்ந்த அனுபூதி.

    ReplyDelete
  2. நாம் பேசும் ஒவ்வொன்றும், நாம் படிக்கும் ஒவ்வொன்றும், நாம் கேட்கும் ஒவ்வொவ்வொன்றும், நாம் பார்க்கும் ஒவ்வொன்றும் நம் மனதில் சஞ்சலங்களை விளைவிக்கின்றன. அந்த அலைகளில் எத்தனை அலைகள் நாமாகத் தெரிந்தெடுத்தவை? அதை யோசிக்காமல் ஏதோ போய்க்கொண்டே இருக்கிறோம்.

    ReplyDelete