Saturday, June 13, 2020

திருக்குறள் - வற்றல் மரம்

திருக்குறள் - வற்றல் மரம் 


ஒரு மரம் என்றால் எப்படி இருக்க வேண்டும்? நன்றாக வளர்ந்து, கிளை பிடித்து பெரிதாக இருக்க வேண்டும். அதன் கிளைகளில் பறவைகள் கூடு கட்டி வாழ வேண்டும். அதன் நிழலில் வெயிலின் கொடுமை தாங்காத உயிர்கள் வந்து இளைப்பாற வேண்டும். அந்த மரம் கனி தர வேண்டும். பூக்க வேண்டும். பூக்களைத் தேடி வண்டுகள் வர வேண்டும். அது பசியாற்ற வேண்டும். இப்படி பல விதங்களிலும் பயனோடு இருப்பதுதான் ஒரு நல்ல மரம்.

அதை விடுத்து, இலை, தளிர், பூ எதுவும் இல்லாமல், மொட்டையாக நின்றால் எப்படி இருக்கும்? அதை வெட்டி விறகுக்கு வேண்டுமானால் பயன் படுத்தலாம்.

வள்ளுவர் சொல்கிறார், மனதில் அன்பு இல்லாதவன் வாழ்க்கை பாலை நிலத்தில் மரம் துளிர் விட்டது போல என்கிறார். எப்படி பாலையில் மரம் துளிர் விடாதோ அது போல அவன் வாழ்வும் துளிர்க்காது என்பது கருத்து.

பாடல்


அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்வற்றல் மரந்தளிர்த் தற்று


பொருள்

அன்பு = அன்பானது

அகத்து இல்லா  = உள்ளே இல்லாத ஒரு

உயிர்வாழ்க்கை  = உயிர் வாழ்க்கை என்பது

வன் = வல்லிய

 பாற்கண் = பாலையின் கண் அல்லது பாறையின் கண்

வற்றல் = காய்ந்து வற்றிப் போன

மரந் = மரம்

தளிர்த் தற்று = தளிர்தது போல

மரம் நன்றாக செழிக்க வேண்டுமென்றால் நிலம் நன்றாக இருக்க வேண்டும், நீர் வேண்டும், சூரிய ஒளி வேண்டும்.

அது போல ஒரு வாழ்வு செழித்து வளர வேண்டும் என்றால் அன்பு மனதில் இருக்க வேண்டும்.

அன்புதான் இல்லறம் என்ற மரம் வளர ஊற்ற வேண்டிய நீர். அன்பு செலுத்த செலுத்த  அந்த இல்லறமான மரம் நன்கு வளர்ந்து பயன் தரும், பலன் தரும்.

வீட்டிலே எதற்கு எடுத்தாலும் கோபம். எரிச்சல். மனத்தாங்கல் என்று இருந்தால், அன்பு எங்கே இருக்கும். அன்பு இல்லாத இல்லறம்செழிக்காது.

இல்லறத்தில் உள்ள ஒவ்வொருவரும் மற்றவர் மேல் அன்பு செலுத்த வேண்டும்.

கணவன், மனைவி , பிள்ளைகள் இவர்கள் ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்திக் கொண்டே இருத்தால் தான், அந்த இல்லற மரம் வளரும்.

இந்த வருடம் வேண்டாம், அடுத்த வருடம் இதற்கும் சேர்த்து நீர் வார்க்கிறேன் என்று சொன்னால், அதற்குள் மரம் பட்டுப் போய் விடும். தள்ளிப் போடவே கூடாது. அனுதினம் நீர் வார்க்க வேண்டும். இல்லை என்றால் வற்றல் மரமாகி விடும். மரம் பட்டுப் போனால் பின் எவ்வளவு நீர் வார்த்தாலும் அது துளிர் விடாது.

வேலை, தொழில், டிவி சீரியல், பக்கத்து வீட்டு அரட்டை, social மீடியா என்று நேரத்தை செலவழித்து விட்டு, ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்தாமல் இருந்தால், நாளடைவில் இல்லறமான மரம் பட்டுப் போகும். அப்புறம் அம்மா என்றாலும் வராது, ஐயா என்றாலும் வராது.

அந்த மரம் பட்டுப் போகாமல் பாது காக்க வேண்டியது இல்லறத்தில் உள்ள அனைவரின் பொறுப்பு.

என்ன வேலை இருந்தாலும், எவ்வளவு படிக்க வேண்டி இருந்தாலும், எவ்வளவு சோர்வாக இருந்தாலும்,  குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நேரம் ஒதுக்குங்கள். அவர்களோடு  கொஞ்ச நேரம் பேசுங்கள். கொஞ்சிப் பேசுங்கள்.

என்ன படிச்ச, அலுவலகத்தில் எப்படி இருந்தது, நீ சாப்பிட்டாயா என்று அக்கறையோடு  விசாரியுங்கள்.

தள்ளிப் போடாதீர்கள். பட்டுப் போனால் பின் வராது.

வற்றல் மரம் தளிர்க்காது.

அதை  ஏன் வாட விட வேண்டும்?


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_13.html



No comments:

Post a Comment