Monday, June 29, 2020

திருக்குறள் - மனக்கவலை

திருக்குறள் - மனக்கவலை 


இறைவன் இருக்கிறானா இல்லையா என்பது பெரிய சர்ச்சை. அவன் இருக்கிறான் என்றும் நிரூபணம் செய்ய முடியாது. இல்லை என்றும் நிரூபணம் செய்ய முடியாது. வாத பிரதி வாதங்கள் இரண்டு பக்கமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

சரி, இருக்கிறான் என்றே வைத்துக் கொள்வோம். எதற்காக அவனை வணங்க வேண்டும்? வணங்கினால்தான் நல்லது செய்வார் என்றால் அவனுக்கும் சாதாரண மனிதர்களுக்கும் என்ன வேறுபாடு? இறைவன் எல்லாம் வல்லவன் என்றால், நாம் வணங்கி அவனுக்கு ஆகப் போவது என்ன அல்லது நாம் வணங்காமல் விட்டால் அவனுக்கு என்ன குறைந்து விடப் போகிறது? ஒன்றும் இல்லை.. பின் எதற்கு வேலை மெனக்கெட்டு வணங்க வேண்டும்.

இந்த உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஆண்டவன் படைப்பு என்றால், அவர்களுக்கு நல்லது செய்வது அவன் கடமை அல்லவா. என் பிள்ளை என்னை வாங்கினால்தான் அவனுக்கு நல்லது செய்வேன் என்று எந்த தகப்பனாவது சொல்வானா?

பின் எதற்கு வணங்க வேண்டும்.

வள்ளுவர் சொல்கிறார்....

"நீ வணங்கி அவனுக்கு ஆகப் போவது ஒன்றும் இல்லை. நீ வாங்காவிட்டால் அவனுக்கு ஒரு நட்டமும் இல்லை. ஆனால், அவன் இருக்கிறான் என்று நம்பி அவனை  வணங்கினால், உன் மனக்கவலைகள் தீரும்.  மனக் கவலைகள் தீர வேண்டும் என்றால்   அவனை வணங்கு. வேண்டாம் என்றால் உன் இட்டம்" என்கிறார்.

பாடல்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

பொருள்

தனக்குவமை  = தனக்கு உவமை (சமம்)

இல்லாதான்  = இல்லாதவன்

தாள்சேர்ந்தார்க்கு = திருவடிகளை சேர்ந்தவருக்கு

அல்லால் = மற்றவர்களுக்கு

மனக்கவலை = மனதில் உள்ள கவலைகளை

மாற்றல் அரிது = மாற்றுவது அரிது.

நமக்கு ஒரு கவலை வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.    நம்மால் அதை தீர்க்க முடியவில்லை.

மற்றவர்கள் உதவியை நாடுகிறோம். அவர்களாலும் முடியவில்லை.

இப்போது என்ன செய்வது?

கடவுள் நம்பிக்கை இருந்தால், "ஆண்டவா என்னை இந்த சங்கடத்தில் இருந்து காப்பாற்று"  என்று வேண்டலாம்.  காப்பாற்றுகிறானோ இல்லையோ, அப்படி   வேண்டுவதன் மூலம் மனதுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கிறது. கவலை கொஞ்சம்  குறைகிறது.

ஒரு வேளை  காப்பாற்றாவிட்டால் கூட, அந்த கவலையின் விளைவுகளை மனம் ஏற்றுக் கொள்ள பக்குவப் பட்டு விடுகிறது.

"எல்லாம் அவன் செயல்" என்று அவன் மேல் பாரத்தைப் போட்டு விடுவதால், கவலை கொஞ்சம்  மாறுகிறது.

அப்படி ஒரு நம்பிக்கை இல்லை என்றால், மற்றவர்கள் மேல் கோபம், தன் மேல் ஒரு  தன்னிரக்கம், என்னால் ஒன்றும் முடியவில்லை என்று ஒரு சுய பச்சாதாபம், எல்லாவற்றின் மேலும் ஒரு வெறுப்பு, கோபம், என்று கவலை பன்மடங்காகி விடும்.

பெற்றவர்கள், நண்பர்கள், அரசாங்கம், இந்த மக்கள், இந்த கல்வி முறை, இந்த நாடு, என்று எல்லோர் மேலும் கோபம், வெறுப்பு, என்று வந்து மனம் மேலும்  அழுத்தப்பட்டு விடும்.

"ஐயா, நீ பார்த்து ஏதாவது செய்" என்று அவனிடம் விட்டு விட்டால், மனக் கவலை குறையும்.

அதற்காகவேனும், அவன் தாள் வணங்கு.  அதைத் தவிர வேறு வழி இல்லை என்கிறார்   வள்ளுவர்.

தாளை வணங்காவிட்டால் , மனக் கவலையோடு அலைந்து கொண்டு இருப்பாய் என்கிறார்.

மனக் கவலையை மாற்ற வேண்டுமா ? வேண்டாமா?


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_29.html

2 comments:

  1. தன்மேல் நம்பிக்கை வைப்பதுதான் மனக்கவலை தீர வழி. இறைவனை நம்புவதனால் ஒன்றும் கிடைக்கப்போவது இல்லை.

    ReplyDelete