Wednesday, June 17, 2020

திருக்குறள் - ஆற்றில் பாய்பவரைப் போல

திருக்குறள் - ஆற்றில் பாய்பவரைப் போல 


ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது. தெளிந்த நீர். சில் என்று இருக்கும். குதித்து குளிக்கலாம் ஆனால் வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விட்டால்?

அடித்துக் கொண்டு போகும் என்று தெரிந்தே நீரில் குதிக்கிறார்கள். ஏன் ?


சிலர் ஆற்றில் குதித்து கும்மாளம் போடுவதை பார்க்கிறோம்.

யார் அவர்கள்?

ஒன்று , நன்றாக நீச்சல் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

அல்லது

நீரில் விழுந்தால் காப்பாற்ற யாரவது அருகில் இருக்க வேண்டும். அந்த தைரியத்தில் நீரில் பாய்ந்து நீந்துவார்கள்.

அவன் வெளியூர் சென்றுவிட்டு பல நாட்கள் கழித்து வருகிறான். அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவனை பார்க்க வேண்டும், கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் என்று தவிக்கிறாள்.

இன்னொரு புறம், இப்படி தவிக்க விட்டு சென்ற அவன் மேல் கோபம். வரட்டும், இன்னிக்கு நல்லா சண்டை பிடிக்கணும் என்று நினைக்கிறாள்.

மனதுக்குள் ஓடிக் கொண்டு இருக்கிறது. எப்படி சண்டை போட வேண்டும் என்று. ஆனாலும், சீவி, சிங்காரித்து, பூ வாங்கி தலையில் வைத்து, நல்ல உடையாக  உடுத்திக் கொண்டு...அவளுக்கே அவளை நினைத்து சிரிப்பு வருகிறது.

இவ்வளவும் பண்ணிக்கிட்டு சண்டை போட போறேனாக்கும் ...போட்ட மாதிரிதான் என்று நினைத்து தனக்குத் தானே சிரித்துக் கொள்கிறாள்.

இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும் ஆற்றில் பாய்பவர்களைப் போல, என் காமமும் காதலும் என்னை இழுத்துக் கொண்டு போகும் என்று அறிந்தே  ஊடல் செய்ய நினைக்கிறேனே என்று அவள் மனம் சந்தோஷத்தில் தள்ளாடுகிறது.

ஏன் ஊடல் செய்ய நினைக்கிறாள்?

என்ன ஊடல் செய்தாலும், எப்படியும் கொஞ்ச நேரத்தில் தானே சமாதானம் ஆகிவிடுவோம் என்ற  நம்பிக்கை ஒரு புறம்.

இல்லை என்றால் என்ன, எவ்வளவு சண்டை போட்டாலும், என்னை கெஞ்சி, கொஞ்சி  அவன் சமாதானப் படுத்தி விடுவான் என்ற நம்பிக்கை.



பாடல்

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து

பொருள்

உய்த்தல் = அடித்துக் கொண்டு போதல்

அறிந்து = அறிந்தும்

புனல் = ஆற்றில்

பாய் பவரேபோல் = குதிப்பவர்களைப் போல

பொய்த்தல் = தான் செய்யப் போகும் ஊடல் பலன் இன்றி போகப் போகிறது என்று

அறிந்தென் புலந்து = அறிந்த பின் , எதற்காக ஊடல் செய்ய வேண்டும்? (புலத்து = ஊடி)

ஊடலின், கூடலின் நுணுக்கத்தை இதை விட அழகாக சொல்ல முடியுமா?

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_17.html

1 comment:

  1. இனிமையான புன்முறுவலை வரவழைக்கும் குறள் .

    ReplyDelete