Saturday, May 23, 2020

திருக்குறள் - பெரியார், சிறியார்

திருக்குறள் - பெரியார், சிறியார் 


தமிழ் இலக்கியம் மிகப் பழமை வாய்ந்தது. எவ்வளவு பழமை என்பதில் சில குழப்பங்கள் இருக்கின்றன.

பழைய இலக்கியங்களை படிப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.  சிலவற்றை நாம் இங்கே பார்ப்போம்.

இடைச் செருகல்கள்.  கம்ப இராமாயணத்தை கம்பர் எழுதினார். கம்பரிடம் தமிழ் புலமை இருந்தது. அவர் பாடல்கள் ஒவ்வொன்றும் மிக இனிமையானவை, ஆழமானவை, பொருள் செறிந்தவை.

அவருக்கு பின்னால் வந்தவர்கள், அவரைப் போலவே எழுதி, கம்ப இராமாயணத்துக்குள் சேர்த்து விட்ட அவலங்கள் நடந்து இருக்கின்றன.  இதில் எந்தப் பாடல் யார் எழுதியது என்று தெரியாமல் நாம் தவிக்கிறோம். மேலோட்டாமாகப் படித்தால் புரியாது. மொழி இயல் அறிஞர்கள் இனம் கண்டு சொல்வார்கள். இப்படிப் பட்ட சொற் பிரயோகம் கம்பர் காலத்தில் இல்லை, அல்லது இப்படி ஒரு தொடரை அவர் வேறு எங்கும் எழுதியது இல்லை. எனவே, இந்த ஒரு குறிப்பிட்ட பாடல் கம்பர் எழுதி இருக்க முடியாது என்று நிரூபணம் செய்வார்கள். இது ஒரு சிக்கல்.

இது நிகழ காரணம் தனி மனித மன வக்கிரங்கள்.

தனியே எழுதினால் புகழ் கிடைக்காது என்று தெரிந்து, பெரிய இலக்கியத்துக்குள் தன் பாடலை சேர்த்து விடும் வக்கிரம்.

இரண்டாவது, பின்னால் வந்தவர்கள் தங்கள் ஜாதி , மதம் இவற்றை உயர்த்திப் பிடிக்க, பல உயர்ந்த நூல்களுள் சில வார்த்தைகளை மாற்றிப் போட்டு, தங்களுக்கு தாங்கள் சார்ந்த குழுவுக்கும் நன்மை தேடிக் கொள்ளும் வக்கிரம்.

என்ன செய்வது. மனித மனம்  அப்படி சிக்கலான ஒன்றாக இருக்கிறது.


இன்னொன்று,  பழந்தமிழ் இலக்கியங்கள் ஓலைச் சுவடியில் எழுதப்பட்டன. ஓலையில்,  ஆணி கொண்டு எழுதப்பட்டன.  கரையான் அரித்து, ஓலை சிதிலம் அடைந்து என்ன எழுதி இருப்பார் என்று தெரியாமல், பின்னால் வந்தவர்கள்  ஓலையில் இருந்து காகிதத்துக்கு மாற்றிய போது , ஓரிரண்டு எழுத்தோ அல்லது வார்த்தையோ சரியாகத் தெரியாவிட்டால், இதுவாகத்தான் இருக்கும் என்று  அவர்களே யோசித்து ஒரு எழுத்தையோ, வார்த்தையோ  போட்டு விடுவார்கள்.  அர்த்தமே தலைகீழாக மாறிப் போய் விடும்.

வள்ளுவர் இப்படி சொல்லி இருப்பாரா, கம்பர் இப்படி சொல்லி இருப்பாரா என்று நாம்  மண்டையை போட்டு உடைத்துக் கொள்வோம்.

தமிழ் அறிஞர்கள் அந்த மாதிரி சமயத்தில், மாற்றப்பட்ட எழுத்து என்னவாக இருக்கும்  என்று யோசித்து இன்னது என்று சொல்வார்கள்.

ஏற்பதா, அல்லது விடுவதா என்று நாம் தயங்கிக் கொண்டு இருப்போம்.

இங்கே ஒரு குறளைப் பார்ப்போம்.


பாடல்

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்

பொருள்

செயற்கரிய = செய்வதற்கு அரிய (கடினமான)  செயல்களை

செய்வார்  = செய்வார்கள்

பெரியர் = பெரியவர்கள்

சிறியர் = சிறியவர்கள்

செயற்கரிய = செய்வதற்கு அறிய செயல்களை

செய்கலா தார் = செய்ய மாட்டார்கள்


உரை எழுதிய அனைவருமே, பரிமேல் அழகர் உட்பட, இந்த அர்த்தத்தில் தான் உரை  எழுதி இருக்கிறார்கள்.

அரிய செயல் என்றால் என்ன  என்று கேள்வியை எழுப்பி, பரிமேல் அழகர் யோகம்  செய்வது அரிய செயல் என்று கூறுகிறார்.

பெரியவர்கள் யோகம் செய்வார்கள். சிறியவர்கள் யோகம் செய்ய மாட்டார்கள்   என்று அவர் விளக்கிக் கொண்டு போகிறார்.


அதுதான் அர்த்தம் என்றால் இரண்டாவது முறை ஏன் செயற்கரிய என்ற சொல்லப் போட வேண்டும்?

மேலும், ஒரு காலத்தில் அரிய செயல் பின்னாளில் எளிதாக மாறிவிடும். எதைக் கொண்டு அரிய செயலை அளப்பது?

யானையோடு போராடுவது கடினமான செயல் தான். அதற்காக  எல்லோரும் யானையோடு  போராட முடியுமா?

பெரிய மலையில் ஏறுவது அரிய செயல் தான். அதற்காக மலை ஏறுபவர்கள் எல்லோரும்  பெரியவர்கள் என்று கொள்ள முடியுமா?

தெரு பெருக்குவது, குப்பை அள்ளுவது என்பது போன்றவை பெரிய செயல் இல்லைதான். அதற்காக அந்தத் தொழிலை செய்பவர்களை சிறியர் என்று சொல்ல முடியுமா?

பின் என்ன அர்த்தம்?

உரை எழுதிய தமிழ் அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால்,

கு என்ற எழுத்து எப்படியோ மாறி க என்று ஆகிவிட்டது. ஓலை பழுதாக இருந்து இருக்கலாம், ஓலையில் ஆணி கீறிய விதம் சற்று மாறி இருக்கலாம்.

க வை கு வாக மாற்றிப் போட்டு குறளை பார்ப்போம்.


செயற் 'கு' (க) ரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற் 'கு' (க) ரிய செய்கலா தார்

அதாவது

செயற்கு அரிய என்பதை

செயற்கு உரிய  என்று மாற்றினால் அர்த்தம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

என்ன செய்ய வேண்டுமோ, அதை பெரியவர்கள் செய்வார்கள்.

செய்ய வேண்டியதை சிறியவர்கள் செய்ய மாட்டார்கள்.

இன்னிக்கு ஒரு மணி நேரம் உடற் பயிற்சி செய்ய வேண்டும், இன்னிக்கு இந்த பாடத்தை  முடிக்க வேண்டும், இன்னிக்கு அந்த பணத்தை இதில் முதலீடு செய்ய வேண்டும்  என்று எதெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறதோ, அதை  செய்வார்கள்.

ஆனால், சிறியரோ , நாளைக்கு செய்யலாம், இன்னும் நாள் இருக்கே, அதுக்கு இப்ப என்ன அவசரம்  என்று செய்ய வேண்டியதை செய்யாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே போவார்கள்.

உரிமை என்றால் உரிமையானது, கடமை. நான் தான் அதை செய்ய வேண்டும் .

யோசித்துப் பாருங்கள். நாம் செய்ய வேண்டிய வேலை அனைத்தையும் நாம் செய்து முடித்து  இருந்தால் நாம் பெரியவர்களாக ஆகி இருப்போமா மாட்டோமா?

இன்னொரு விதமாகவும் இதை சிந்திக்கலாம்.

அதாவது, பெரியவர்கள் செயற்கு அரிய செயலை செய்வார்கள்.

சிறியர், செயற்கு உரிய செயலைக் கூட செய்ய மாட்டார்கள்.

அப்படியும் சிந்தித்துப் பார்க்கலாம்.

ஒரு எழுத்து, குறளின் அர்த்தத்தை எப்படி மாற்றி போடுகிறது பார்த்தீர்களா?

இதில் எது சரி என்று நமக்குத் தெரியாது. (= எனக்குத் தெரியாது). உங்கள் மனதுக்கு எது சரி என்று படுகிறதோ, எது உங்கள் வாழ்க்கைக்கு நலம் சேர்க்குமோ, அதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_23.html

2 comments:

  1. அருமை விளக்கம் நன்றி

    ReplyDelete
  2. "உடுக்கை இழந்தவன்" என்பது "உடுக்கை இழிந்தவன்" என்று இருக்க வேண்டும் என்று கி.ஆ.பெ. அவர்கள் சொன்னதாக நீ சொல்லியது நினைவுக்கு வருகிறது.

    குறளை மாற்றி யோசித்தாலும் நன்றாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete