Saturday, May 2, 2020

முத்தொள்ளாயிரம் - வெறுங்கூடு காவல்கொண் டாள்

முத்தொள்ளாயிரம் - வெறுங்கூடு காவல்கொண் டாள்


அவளுக்கு அவன் மேல் காதல். அவளின் தாய்க்கு அது பிடிக்கவில்லை. அவளை வெளியே போகக் கூடாது, போனாலும் துணைக்கு ஆளை அனுப்புகிறாள்.

ஆனால், அவள் மனதுக்குள் சிரித்துக் கொள்கிறாள்...."இந்த அம்மா எதை பாதுகாக்கிறாள்? என் மனம் அவன் பின்னால் எப்போதோ சென்று விட்டது. இங்கே இருப்பது வெறும் உடம்பு மட்டும் தான். இதை காவல் செய்து என்ன செய்யப் போகிறாள்" என்று.

பாடல்


கோட்டெங்கு சூழ்கூடற் கோமானைக் கூடவென
வேட்டங்குச் சென்றெவன் நெஞ்சறியாள் - கூட்டே
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை
வெறுங்கூடு காவல்கொண் டாள். 


பொருள்

கோட்டெங்கு = கொளுத்த (பெரிய) தெங்கு (தேங்காய்)

சூழ் = நிறைந்த (தென்னை மரம் சூழ்ந்த)

கூடற் = கூடல் மாநகரின்

கோமானைக் = அரசனை

கூடவென = கூட வேண்டும் என்று

வேட்டங்குச் = வேட்கையுடன் அங்கு

சென்றெவன் = சென்ற என்

நெஞ்சறியாள் = நெஞ்சத்தை அறிய மாட்டாள் (என் அன்னை)

கூட்டே = கூட்டை விட்டு

குறும்பூழ் = சிறிய பறவை

பறப்பித்த = பறந்து போன பின் , வெறும் கூட்டை பாதுகாக்கும்

வேட்டுவன்போல்  = வேடனைப் போல

அன்னை = என் அன்னை

வெறுங்கூடு =  வெறும் கூட்டை

காவல்கொண் டாள்.  = காவல் காத்துக் கொண்டு இருக்கிறாள்


காதலிப்பதும், பெற்றோர் அதை எதிர்ப்பதும், அந்தக் காலம் தொட்டு இருந்து இருக்கிறது.

இதே பாடலின் கருத்தை பிரதிபலிக்கும் வண்ணம் ஒரு புதுக் கவிதை ...

வேலிக்கு மேலே செல்லும் கிளைகளை வெட்டும் தோட்டக்காரனே  
வேலிக்கு கீழே செல்லும் என் வேர்களை என்ன செய்வாய் ?

செடி பூக்கிறது. கிளை நீண்டு பக்கத்து வீட்டுக்கு செல்கிறது. நமக்குத் தெரிவது கிளை மட்டும் தான். உயிர் தாகம் கொண்டு, நீர் தேடி வேலிக்கு கீழே செல்லும் வேர் கண்ணுக்குத் தெரிவதில்லை.  தெரிந்தால் கூட என்ன செய்ய முடியும்? வேரை வெட்டவா முடியும்?

காலங்கள் மாறிக் கொண்டு இருக்கிறது.  காதலுக்கு பெரிதாக எந்தப் பெற்றோரும்  எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை என்றே நினைக்கிறேன்.

எது எப்படியோ,  இலக்கியம் என்பது காலக் கண்ணாடி. அன்று நடந்ததை அது இன்றும்  நமக்கு சொல்லிக் கொண்டு இருக்கிறது.

காதலன் பின்னே மனதை போக விட்டு விட்டு, தனிமையில் மெலியும் அந்தப்  பெண்ணின் மெல்லிய  சோகம், நம் மனதையும் ஏதோ செய்யத்தான் செய்கிறது.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_2.html




2 comments:

  1. புன்முறுவல் பூக்கவைக்கும் பாடல்!

    ReplyDelete
  2. இல.கோபாலகிருஷ்ணன்.December 10, 2022 at 2:00 AM

    பாடல்களுக்கான உங்களின் விளக்கங்கள் மிக எளிமை மற்றும் அருமை.

    ReplyDelete