Friday, May 29, 2020

வில்லி பாரதம் - இப்படியும் முடியும்

வில்லி பாரதம் - இப்படியும் முடியும் 


இன்பம் வரும்போது துள்ளிக் குதிக்கிறோம்.

துன்பம் வரும்போது துவண்டு போகிறோம்.

அதுதானே இயற்கை.

துன்பம், எவ்வளவு சின்னதாக இருந்தாலும், தாங்க முடியாததாக இருக்கிறது. சுண்டு விரலில் ஒரு சின்ன அடி பட்டுவிட்டால் கூட "வலி உயிரே போகிறது" என்கிறோம்.

வெயிலில் கொஞ்சம் நடந்து விட்டு வந்தால் "தலை வலி மண்டைய பிளக்கிறது" என்கிறோம்.  மண்டை என்ன பிளந்தா போய் விட்டது?

துன்பத்தை தாங்கும் குணம் இல்லை. துன்பமே வரக் கூடாது என்று நினைக்கிறோம். அப்படி தப்பித் தவறி வந்து விட்டால், உடனே போய் விட வேண்டும் என்று துடிக்கிறோம்.

கொஞ்சம் உடம்பு சரி இல்லை என்றாலும், மருந்தை வாங்கி ஊத்தி, மாத்திரையை போட்டு, இரண்டு ஊசி போட்டு, உடனே குணமாகி விட வேண்டும் என்று நினைக்கிறோம்.

வாழக்கை என்றால் துன்பம் வரும். வந்த துன்பம் உடனே போகாது. அதுதான் இயற்கை.  "வந்து விட்டாயா, சரி...உன்னோடு கொஞ்ச நாள் வாழ்கிறேன்" என்று   வாழ வேண்டுமே அல்லாமல், "ஐயோ வந்து விட்டதே, எப்ப போகுமோ" என்று ஒவ்வொரு நாளும்    துடித்துக் கொண்டு இருக்கக் கூடாது.

நம் இலக்கியங்கள் இதை பல இடங்களில் நமக்குக் காட்டுகின்றன.

இராமன் 14 வருடம் காட்டுக்குப் போனான். போகும் போது அழுது கொண்டேவா போனான்? போகிற வழியெல்லாம் தந்தையையும், கைகேயியையும் திட்டிக் கொண்டுவா போனான்? கூனியை கூட அவன் வசை பாடவில்லை.

வில்லிப் புத்தூரார் ஒரு காட்சியை காட்டுகிறார்..

நாடு, நகரம், செல்வம் அனைத்தும் இழந்து, மனைவியை சபையில் வைத்து அவமானம் செய்த செயல் முடிந்து, பதின்மூன்று வருடம் காட்டுக்குப் போ, அப்புறம் ஒரு வருடம் தலை மறைவு வாழ்க்கை என்று ஆன பின், தம்பிகளையும், மனைவியையும் கூட்டிக் கொண்டு தெருவில் நடந்து (பல்லக்கு இல்லை, இரதம் இல்லை) போகிறான்.

ஊரே கூடி வேடிக்கை பார்க்கிறது.

அவன் மன நிலை எப்படி இருக்கும்? ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். அவன் மனதில் என்னவெல்லாம் ஓடி இருக்கும் ?

அவன் மன நிலைக்கு ஒரு உதாரணம் சொல்கிறார் வில்லி புத்தூரார், வியக்க வைக்கும் உதாரணம். இப்படி கூட சிந்திக்க முடியுமா என்று ஆச்சரியப் படவைக்கும் உதாரணம்.

"...நாட்டின் எல்லை கடந்து, கால்கள் சிவக்க, காட்டுக்குள் நுழையும் போது, இந்த உலக வாழ்க்கையை விட்டு ஸ்வர்கம் போகும் போது மெய் ஞானிகள் எவ்வாறு மகிழ்வார்களோ, அப்படி மகிழ்ந்தான்"

என்கிறார்.

என்ன ஒரு உதாரணம்.

உதாரணம் ஒரு புறம் இருக்கட்டும்.

இத்தனையும் இழந்து, அவமானப்பட்டு, காட்டுக்குள் போது மகிழ்ச்சியாக சென்றான் என்கிறார் வில்லியார்.

முடியுமா?

வாங்கி வந்த கத்தரிக்காயில் ஒரு காய் நன்றாக இல்லை என்றால், "சே, அந்தக் கடைக்காரன் நம்மை ஏமாற்றி விட்டான் / நான் ஒரு சரியான லூசு, பாத்து வாங்கி இருக்க வேண்டாமா" என்று மனம் நோகிறது.

அனைத்தையும் இழந்து காடு செல்வதானால், எப்படி இருக்கும்.

பற்று இல்லை. இந்த நாடு என்னோடது என்று நினைத்ததால் தானே, அதை இழக்கும் போது துன்பம் வரும்.

பாடல்

நாட்டிடை யெல்லை பொற்றா ணறுமலர்சிவக்க வேகிக்
காட்டிடை புகுந்த போதுங்கலக்கமற் றுவகை கூர்ந்தான்
கூட்டிடை யின்ப துன்பக்கொழும்பயன் றுய்த்தி மாறி
வீட்டிடை புகுதும் போதுமெய்ம்மகிழ் விபுதர் போல்வான்.


பொருள்


நாட்டிடை யெல்லை  = நாட்டின் எல்லை

பொற்றா ணறுமலர்சிவக்க = பொன் + தாள் + நறுமலர் + சிவக்க. பொன் போன்ற, மென்மையான, மலர் போன்ற பாதங்கள் சிவக்க. முன்ன பின்ன நடந்தது இல்லை. பல்லக்கு, இரதம் அப்படி வாழ்ந்து பழகியவன். நடந்தால் கால் சிவக்கிறது.


வேகிக் = ஏகி, சென்று

காட்டிடை = காட்டின் உள்ளே

புகுந்த = செல்லும்

போதுங் = போதும்  , செல்லுகின்ற போதும்

கலக்கமற் று வகை  கூர்ந்தான் = கலக்கம் அற்று , உவகை கூர்ந்தான்
மனதில் கொஞ்சம் கூட கலக்கம் இல்லை. சந்தோஷம் இருந்தது.

கூட்டிடை  = இந்த உடம்பில்

யின்ப துன்பக் = இன்பம் துன்பம்

கொழும்பயன்  = பெரிய பயனை

றுய்த்தி = அனுபவித்து (உய்தி)

மாறி = அதை விட்டு மாறி

வீட்டிடை = வானுலகம்

புகுதும் போது = செல்லும் போது

மெய்ம்மகிழ் = உள்ளம் மகிழும்

விபுதர் = மெய் ஞானிகள்

போல்வான். = போல இருந்தான்.


இதெல்லாம் நடக்கிற காரியமா ? ஏதோ கதையில் வருகிறது. சரிதான் படிச்சிட்டு போறத விட்டுட்டு, அதை எல்லாம் உண்மை என்று எடுத்துக் கொண்டு வாழ்வில்  கடை பிடிக்க முடியுமா?

முடியுமா, முடியாதா என்பதல்ல கேள்வி.

துன்பத்தையும், இன்பத்தையும் நாம் எப்படி பார்க்கிறோம் என்பதுதான்.

இவ்வளவு பெரிய துன்பத்தைக் கூட, சந்தோஷாமாக ஒருத்தன் பார்த்தான்.

அவ்வளவுதான்.

நமக்கு ஒரு துன்பம் வரும் போது என்ன செய்ய வேண்டும் நாம் முடிவு செய்து கொள்ளலாம்.

தையா தக்கா என்று குதிக்கலாம்.

ஊரில் உள்ள எல்லோரையும் ஏசலாம்.

சரி வந்து விட்டது, விதியே என்று மனம் வாடி நிற்கலாம்.

வந்தா என்ன, வந்து விட்டு போகட்டும். போராடி வெற்றி பெறலாம் என்று  துணிவோடு  களம் இறங்கலாம்.

இந்த துன்பத்திலும் என்ன செய்யலாம், என்ன பாடம் படிக்கலாம், எப்படி நம்மை முன்னேற்றிக் கொள்ளலாம் என்றும் சிந்திக்கலாம்.

வந்த துன்பத்துக்கு ஒரே ஒரு வழியில் தான் நாம் சிந்திக்க செயல்பட வேண்டும் என்று இல்லை.

நமக்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன.

இப்படியும் இருக்க முடியும் என்று இலக்கியங்கள் கோடு போட்டு காட்டுகின்றன.

எதை எடுப்பது என்பது நம் கையில்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_29.html

1 comment:

  1. ஆங்கிலத்தில் equanimity என்ற சொல் நினைவுக்கு வருகிறது. நல்ல பாடல். நன்றி.

    ReplyDelete