Wednesday, May 13, 2020

திருக்குறள் - பெண் பார்க்கும் படலம்

திருக்குறள் - பெண் பார்க்கும் படலம் 


பையனுக்கு கல்யாண வயது வந்து விட்டது. ஒரு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும்.

அந்த பையனுக்கு ஆயிரம் கனவு இருக்கும் அல்லவா ...பெண் அழகா இருக்கணும், அந்த நடிகை மாதிரி மூக்கு, இந்த நடிகை மாதிரி கண் , அப்புறம் உயரம், நிறம், எடை, கூந்தல் என்று கற்பனை விரிந்து கொண்டே போகும்.

அதோடு கூட, நல்ல படித்த பெண்ணாக இருக்க வேண்டும்.

வீட்டில் பெற்றோர் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கும்....நம்ம ஜாதியில் இருந்தால் பரவாயில்லை. அப்புறம் கொஞ்சம் சொத்து பத்து இருந்தால் பின்னாடி உதவும். நல்ல குடும்பமா இருக்கணும். அண்ணன் தம்பி எல்லாம் நல்லா படிச்சு நல்ல வேலையில இருக்கணும் என்று கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கும்.

வீட்டில் பெரியவர்கள் இருந்தால், ஜாதக பொருத்தம் பார்ப்பார்கள். கட்டுப் பெட்டியான குடும்பமாக இருந்தால் பெற்றோரும் பார்ப்பார்கள்.

சரி, இப்படி அழகு, படிப்பு, குடும்பம், சொத்து, சீதனம், ஜாதகம் எல்லாம் பார்த்து செய்த திருமணம் சரியாக இருக்குமா?

அதுக்காக, இது எல்லாம் பாக்காம கண்ணை மூடிக் கொண்டு பெண் எடுக்க முடியுமா?

வள்ளுவர் சொல்கிறார், இதெல்லாம் தேவை இல்லாதது.

அழகு எவ்வளவு நாள் இருக்கும்? சொத்து நம் கையில் இருக்கும் என்று ஏதாவது உத்திரவாதம் உண்டா?  படித்த பெண்கள் எப்படி இருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியும்.

இதெல்லாம் கொஞ்ச நாள்.

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.

அப்புறம் சலித்து விடும். அந்த ஆர்வம், அந்தத் தேடல், அந்த பரபரப்பு  சீக்கிரம்  அடங்கி விடும்.

அப்புறம் என்ன செய்வது?

70 அல்லது 80 வருடம் அந்த பெண்ணோட வாழ வேண்டுமே?

அவள் படித்தது எல்லாம் காலாவதியாகி இருக்கும். அழகு நாளுக்கு நாள் தேய்ந்து போய் கொண்டே இருக்கும்.

மொத்தம் மூன்று முக்கிய அம்சங்கள் ஒரு வாழ்க்கைத் துணைவிக்குத் தேவை என்கிறார்.

அது ....

பாடல்

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை


பொருள்


மனைத்தக்க = மனைக்கு தக்க. அதாவது இல்லறத்துக்கு ஏற்ப

மாண்புடையள் ஆகித் = மாண்பு உடையவள் ஆகி

தற் கொண்டான் = தன் கணவனின்

வளத்தக்காள் = வளமைக்கு  தக்கபடி வாழ்பவள்

வாழ்க்கைத் துணை  = நல்ல வாழ்க்கைத் துணை

அது என்ன மனைக்கு தக்க மாண்பு, வளமைக்கு தக்க வாழ்வு?

இதெல்லாம் புரியாமல் தான் கல்யாணம் பண்ணிக் கொண்டு  அல்லாடுகிறோம்.

ஒரு மனைவியாக தான் என்ன செய்ய வேண்டும் அவளுக்கும் தெரியவில்லை.

அவளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று அவனுக்கும் தெரியவில்லை.

கல்யாணம் ஆனபின் தனிக் குடித்தனம் போய் , எல்லாம் தானே சாதித்து விடலாம்  என்று அந்த பெண் நினைக்கிறாள்.

என்னமோ செஞ்சிட்டுப் போகட்டும். என்னை நிம்மதியா விட்டால் சரி என்று அவன்  நினைக்கிறான்.

இதுவா குடும்பம் ?

ஒரு மனைவி செய்ய வேண்டியது என்ன?

வள்ளுவர் சொன்னதை, பரிமேல் அழகர் சொன்னதை சொல்லி விடலாம்.

ஆனால், இந்த பெண் விடுதலை அறிஞர்களை நினைத்தால் சற்று பயமாக இருக்கிறது.

வள்ளுவர் சொன்னால் நாங்க கேட்கணுமா என்று கொடி பிடித்துக் கொண்டு ஊர்வலம்  கிளம்பி விட்டால் என்ன செய்வது ? ஊர் இருக்கும் நிலையில் இது வேறா   என்று தயக்கமாக இருக்கிறது...

என்ன சொல்றீங்க?



https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_13.html

1 comment:

  1. பரிமேல்அழகர் சொல்லியதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

    ReplyDelete