Tuesday, April 28, 2020

வில்லி பாரதம் - குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

வில்லி பாரதம் - குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை 


சில சமயம் உறவினர்கள் இடையே மனக் கசப்பு வரலாம். ஏதோ ஒரு கோபத்தில் வார்த்தைகள் தடம் மாறிப் போகலாம். நாம் ஒன்று சொல்ல, மற்றவர் வேறு ஒன்றை நினைத்துக் கொண்டு பிரச்சனை வரலாம்.

உறவுகளுக்குள் இந்த மாதிரி பிரச்சனை வருவது இயல்புதான். அப்படி வந்து விட்டால் அப்புறம் என்ன செய்வது?

திருப்பியும் அவர்கள் முகத்தில் எப்படி விழிப்பது? எப்படி நடந்து விட்ட தவற்றை தள்ளி வைத்து விட்டு உறவை மேலே கொண்டு செல்வது?

மற்ற உறவை விடுங்கள். கணவன் மனைவி உறவில், பெற்றோர் பிள்ளைகள் உறவில், உடன் பிறப்புகள் இடையில் நிரந்தர விரிசல் விழுந்து விடுவது இல்லையா.

தவறுகளை மறந்து, மன்னித்து ஒற்றுமையாக வாழ்வது எப்படி?

ஒரு தயக்கம், பழைய நினைவுகள், வராமல் இருக்குமா ?

பாரதம் வழி காட்டுகிறது?

பாண்டவர்களுக்கு, கௌரவர்கள் செய்யாத கொடுமை இல்லை. பாஞ்சாலியை சபைக்கு முடியை பிடித்து இழுத்து வந்து, அவள் ஆடையை களைய முயன்றார்கள்.

சகிக்க முடியுமா? மறக்க முடியுமா ? மன்னிக்க முடியுமா?

இதை எல்லாம் நினைத்து தருமனை தவிர எல்லோரும் கொதித்துக் கொண்டு இருந்தார்கள். யுத்தம் வேண்டும், பழி வாங்க வேண்டும் என்ற எண்ணமே எல்லோர் மனதிலும் நிறைந்து நின்றது.

ஆனால், தர்மர் மட்டும் வேறுபட்டு சொல்கிறார்.

"பீமா, குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. ஒரே குலத்தில் பிறந்தவர்கள் ஒன்றாக வாழ்வதைப் போல உறுதி வேறொன்றில்லை. மாறாக, ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் , இருவருக்கும் பழி வந்து சேரும் அல்லவா"

என்றான்.

நாம் நினத்துக் கொண்டு இருக்கிறோம், சண்டை என்று வந்து விட்டால், ஒருவர் பக்கம் நியாயம் இருக்கும். மற்றது அநியாயம் என்று. தர்மன் மிகப் பெரிய உண்மையை எடுத்துச் சொல்கிறான். பகை என்று வந்து விட்டால், பழி இரண்டு பக்கமும் வரும் என்கிறான். சிந்திக்க வேண்டிய விஷயம்.

பாடல்


பரிவுடன் மற்று இவை கூறும் பவன குமாரனை மலர்க்கை
                  பணித்து, நோக்கி,
'குருகுலத்தோர் போர்ஏறே! குற்றமது பார்க்குங்கால்
                  சுற்றம் இல்லை;
ஒரு குலத்தில் பிறந்தார்கள் உடன் வாழும் வாழ்வினைப்போல்
                  உறுதி உண்டோ?
இருவருக்கும் வசை அன்றோ, இரு நிலம் காரணமாக
                  எதிர்ப்பது?ன்றான்.

பொருள்

பரிவுடன் = பரிவுடன், அன்புடன்

மற்று இவை = இவற்றை

கூறும் = கூறிய

பவன குமாரனை  = வாயு குமாரனான பீமனைப் பார்த்து

மலர்க்கை = மலர் போன்ற கையால்

பணித்து = அமைதி படுத்தி விட்டு

நோக்கி = அவனை நோக்கி

'குருகுலத்தோர் போர்ஏறே! = குருகுலத்தில் தோன்றிய ஏறு போன்ற போர்க் குணம் கொண்டவனே

குற்றமது பார்க்குங்கால் = குற்றம் பார்த்தால்

சுற்றம் இல்லை; = சுற்றம் இல்லை

ஒரு குலத்தில் பிறந்தார்கள் = ஒரே குலத்ததில் பிறந்தவர்கள்

உடன் வாழும் வாழ்வினைப்போல் = ஒன்று பட்டு வாழும் வாழ்வைப் போல

உறுதி உண்டோ? = உறுதி உண்டோ ?

இருவருக்கும் வசை அன்றோ = இருவருக்கும் பழி வந்து சேரும் அல்லவா?

இரு நிலம் காரணமாக = இந்த நிலம் காரணமாக

எதிர்ப்பது?ன்றான். = எதிர்த்து நின்றால் என்றான்

தவறு எவ்வளவுதான் பெரிதாக இருந்தாலும், மன்னித்து, மறந்து, ஒன்றாக வாழ்வதே  சிறந்தது என்கிறான்.

சுற்றம் என்று இருந்தால், அவ்வப்போது தவறு ஏற்படுவது இயல்பு. அதையே நினைத்துக் கொண்டிருந்தால், சுற்றம் என்ற ஒன்றே இருக்காது. தனித்து இருக்க வேண்டியதுதான்.

இது போன்ற உயர்ந்த நூல்களை படிக்கும் போது, அவை கொஞ்சமாவது நம் மனதில் , நம் வாழ்வில் கடை பிடிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_95.html


1 comment:

  1. பதிவின் உயர்ந்த கருத்தை முழுமையாக கடைப் பிடிக்க முடியாமல் போனாலும் ஓரளவாவது மனதில் பதியும்.அழகாக விளக்கினீர்கள்.

    ReplyDelete