Tuesday, April 28, 2020

திருமந்திரம் - சொல் கேட்டு காமம் வந்தது போல

திருமந்திரம் - சொல் கேட்டு காமம் வந்தது போல 


"ஏய் இங்க வாயேன்" என்று கணவன் ஆசையோடு  கூப்பிடுவான். அவன் கூப்பிட்ட குரலை கேட்டதுமே மனைவிக்குத் தெரியும். அவள் மனத்திலும் ஆசை பிறக்கும்.

அதே சொற்களை வேறே யாராவது சொல்லி இருந்தால், அந்த காதலும் காமமும் பிறக்காது.

அன்பு கொண்ட இருவரில் ஒருவர் ஒரு சொல் சொன்னால் போதும், மற்றவர் மனதில் அது பத்திக் கொள்ளும்.

அது போல, பக்தியால் உள்ளம் கனிந்தவர்கள் ஒரு சொல் சொன்னாலும் போதும், இறைவன் இசைந்து அவர்களுக்கு அருள் புரிவான் என்கிறார் திருமூலர்.

பாடல்


அதுக்கென்று இருவர் அமர்ந்த சொற் கேட்டும்
பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல்
சதுக்கென்று வேறே சமைந்தாரைக் காண
மதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே.


பொருள்


அதுக்கென்று = அதற்காகவென்றே

இருவர் = இருக்கும் இருவர்

அமர்ந்த = ஓரிடத்தில் இருந்து

சொற் கேட்டும் = அவர்கள் ஒரு சொன்ன ஒரு சொல்லை கேட்டதும்

பொதுக்கெனக் = பொசுக் என்று

காமம் புலப்படு மாபோல் = காமம் வெளிப்படுவது போல

சதுக்கென்று = சது என்றால் அமைதி. மனம் அமைதி பெற்றவர்கள்

வேறே சமைந்தாரைக்  = பக்குவப் பட்டவர்களை

காண = காண்பதற்கு

மதுக் = தேன் நிறைந்த

கொன்றைத் = கொன்றை மலர்களை கொண்டு செய்த

தாரான் = மாலையை அணிந்த சிவன்

வளந்தரும் அன்றே. = நல்லனவற்றை தருவான் அப்போதே

திருஞான சம்பந்தர் குழந்தையாக இருந்த போது, அழுதார். சிவகாமி பால் தந்தாள்.

எத்தனையோ பிள்ளைகள் அழுகின்றன. எல்லோருக்குமா அருள் கிடைக்கிறது.

மனம் பக்குவப் பட வேண்டும்.

மனம் பக்குவப்பட்டால், அமைதி அடைந்தால், இறைவனை தேட வேண்டாம். அவனே வருவான்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_79.html

3 comments:

  1. " மனம் பக்குவப்பட்டால், அமைதி அடைந்தால், இறைவனை தேட வேண்டாம். அவனே வருவான்." சரியான வார்த்தை. சிக்கலே மனதை பக்குவப் படுத்துவதில்தான்!

    ReplyDelete
  2. மனம் கனிந்து இறைவனை அழைப்பவருக்கு என்ன ஒரு உவமை! சரியான குறும்புக்காரப் பாட்டு!

    ReplyDelete
  3. இதில் காமம் என்பது இறைவன் மீது செலுத்தும் பக்தி அந்த காமத்தைப்போல புரிந்து வரும் மனைவியின் சக்தியே சிவசக்தி என்றால் மிகையாகாது.

    ReplyDelete