Wednesday, April 8, 2020

ஐங்குறுநூறு - நீங்கினளோ என் பூங்கணோளே

ஐங்குறுநூறு - நீங்கினளோ என் பூங்கணோளே


பிள்ளைகளை விட்டு பிரிவது என்பது மிக மிக கடினமான காரியம்.

பிள்ளைகள் வீட்டை விட்டு வெளிய போகத்தன் துடித்துக் கொண்டு இருப்பார்கள். பெற்றவர்களுக்குத் தான் தெரியும் அந்த வலி.

ஏதோ ஒரு காரணத்துக்காக பிள்ளகைள் வீட்டை விட்டு சென்று விடுகிறார்கள்...மேல் படிப்புக்கோ, வேலை நிமித்தமோ, திருமணம் ஆன பின்னோ...வீட்டை விட்டுப் போய் விடுகிறார்கள்.

அவர்கள் போன பின், அவர்கள் இருந்த அறை , அவர்கள் உபயோகப் படுத்திய பொருட்கள், எல்லாம் அவர்களை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.

"அந்த பய ஓட்டிக் கொண்டிருந்த சைக்கிள்...."

"அவ ஆசை ஆசையா வாங்கின படம்..."

வீட்டில் ஒவ்வொன்றும் பிள்ளைகளை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். அதெல்லாம் அந்த குழந்தைகளுக்குத் தெரியாது. வீட்டில் பெற்றோர் படும் பாடு, அவர்களின் ஞாபகம் படுத்தும் பாடு...

இந்த உணர்ச்சிகளை சங்கப்பாடலான ஐங்குறுநூறு என்ற தொகுப்பில், ஓதலாந்தையார் என்ற கவிஞர் படம் பிடித்து காட்டுகிறார்.

மகள், திருமணம் ஆகி, கணவனோடு சென்று விட்டாள் .  இங்கே வீட்டில் அம்மா கிடந்து மருகுகிறார்கள்.

"இது என் மகள் வைத்து விளையாடிய பொம்மை. இது என் மகள் கொஞ்சிய கிளி. இப்படி எதைப் பார்த்தாலும் அவள் ஞாபகமே வருகிறது. எப்படித்தான் என்னை விட்டு விட்டுப் போனாளோ "

பாடல்

இது என் பாவை பாவை, இது என்
அலமரு நோக்கின் நலம்வரு சுடர் நுதல்
பைங்கிளி எடுத்த பைங்கிளி, என்றிவை
காண் தொறும் காண் தொறும் கலங்க,
நீங்கினளோ என் பூங்கணோளே.


பொருள்

இது என் பாவை = இது பொம்மை போன்ற என் மகள் விளையாடிய

பாவை = பொம்மை

இது என் = எது என்

அலமரு நோக்கின் = அலை பாயும் கண்களை உடைய

நலம்வரு சுடர் நுதல் = நல்ல சுடர் விடும் நெற்றியைக் கொண்ட

பைங்கிளி எடுத்த = கிளி போன்ற என் மகள் எடுத்து விளையாடிய

பைங்கிளி = பச்சைக் கிளி

என்றிவை = என்று இவை

காண் தொறும்  காண் தொறும்  = பார்க்க பார்க்க

கலங்க = என் மனம் கலக்கம் அடைய

நீங்கினளோ = என்னை விட்டுப் போய் விட்டாளே

என் பூங்கணோளே. = என்னுடைய பூ போன்ற அழகிய கண்களை உடைய என் மகள்

மகள் வைத்து புழங்கிய ஒவ்வொன்றைப் பார்த்தும் மருகுகிறது அந்தத் தாய் மனம்.

எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய பாடல்.

உலகம் எவ்வளவோ மாறி விட்டது.

ஆனாலும், அந்த அடிப்படை மனித உணர்ச்சிகள் இன்றும் அப்படியே இருக்கிறது.   ஆச்சரியம்.

எவ்வளவு எளிய பாடல்.

எவ்வளவு அழுத்தமான, ஆழமான  உணர்ச்சிகள்.

சங்க இலக்கியத்தை படிக்கும் போது, நம் முன்னவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று தெரியும்.

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை, பிள்ளைகள் பெற்றோரின் பாசத்தை  புரிந்து கொள்வதே இல்லையோ?


https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_8.html

1 comment:

  1. பாவை பாவை, பைங்கிளி பைங்கிளி ... ஆஹா!

    காண் தொறும் காண் தொறும் - இதை எல்லாம் பார்க்காமல் விட்டால் என்ன? ஆனால் பெற்றவர் மனது மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும்! பாவி மனசு!

    மனித உணர்ச்சிகளை இப்படியும் அழகாக வடிக்க முடியுமா? ஒவ்வொரு முறையும் ஐங்குறுநூறு பாடல்களை இந்த BLOG இல் படிக்கும்போதும் மனம் நெகிழ்ந்திருக்கிறேன்.

    மிக்க நன்றி.

    ReplyDelete