Sunday, April 12, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - இரவெல்லாம் விழித்து இருப்பாயா?

நாலாயிர திவ்ய பிரபந்தம் - இரவெல்லாம் விழித்து இருப்பாயா?


அன்றில் பறவை என்று ஒரு பறவை இருந்தது. இப்போது இல்லை. தமிழ் இலக்கியத்தில் இந்தப் பறவை பற்றிய குறிப்புகள் உள்ளது.  அன்னப் பறவை போல இந்தப் பறவையும் இன்று இல்லை.

அன்றில் பறவையின் சிறப்பு என்ன என்றால், அது எப்போதும் துணையுடனேயே இருக்கும்.

அன்றி + இல் = துணை இல்லையேல், தானும் இல்லை.

அந்தப் பறவை இரவில் தூங்கும் போது, துணை பறவையின் அலகை, தன் அலகால் கவ்விக் கொண்டே தூங்குமாம்.

துணையைப் பிரிந்தால், "குர்ரீ குர்ரீ" என்று பெரிய குரல் எடுத்து துணையை அழைக்கும். துணை வராவிட்டால், உயிரை விட்டுவிடும்.

அது துணையை அழைக்கும் குரல் ஏக்கத்தின் குரலாக ஒலிக்கும். கேட்போர் மனதை உருக்கும்.

அவள் வீடோ ஒரு சிறு குடிசை. கடற்கரை ஓரம் உள்ள ஒரு சின்ன குடிசை. நேரமோ இரவு நேரம்.  குளிர்ந்த கடல் காற்று நிற்காமல் அடித்துக் கொண்டு இருக்கிறது. தூரத்தில், அலை அடிக்கும் சத்தம்.

வீட்டின் மறு பக்கத்தில் எல்லோரும் படுத்து உறங்குகிறார்கள். அவளுக்கு தூக்கம் வரவில்லை. முழங்காலை கட்டிக் கொண்டு, அதில் தலை சாய்த்து அவனை நினைத்து உருகுகிறாள்.

அந்த நிசப்த இரவில், அவள் வீட்டின் கொல்லையில் உள்ள தோட்டத்தில், ஒரு அன்றில் பறவை ஏக்கக் குரலில் தன் துணையை தேடி அழைக்கிறது.

"ஏய் அன்றில் பறவையே, இந்த நீண்ட யாமப் பொழுதில், நீயும் உன் துணையை பிரிந்து ஏங்குகிறாயா என்னைப் போல" என்று அந்த அன்றில் பறவையிடம் கேட்கிறாள்.


பாடல்

கோட்பட்டசிந்தையாய்க் கூர்வாய அன்றிலே,
சேட்பட்ட யாமங்கள் சேரா திரங்குதியால்,
ஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான்,
தாட்பட்ட தண்டுழாய்த் தாமம்கா முற்றாயே.


பொருள்

கோட்பட்ட = சிறைப்பட்ட

சிந்தையாய்க்  = மனதால்

கூர்வாய = கூர்மையான அலகைக் கொண்ட

அன்றிலே = அன்றில் பறவையே

சேட்பட்ட = நீண்ட

யாமங்கள் = யாமப் பொழுதுகள்

சேரா திரங்குதியால், = சேராது + இரங்குதியால். உன் துணையோடு சேராமல்  இரக்கம் கொள்கிறாயா ?

ஆட்பட்ட = அடிமைப் பட்ட

எம்மேபோல் = என்னைப் போல

நீயும் = நீயும்

அரவணையான் = அரவு + அணையான் = பாம்பை படுக்கையாக கொண்டவன்

தாட்பட்ட = திருவடிகளில் பட்ட

தண்டுழாய்த் = குளிர்ந்த துளசி

தாமம்  = மாலை மேல்

கா முற்றாயே. = ஆசைபட்டாயா ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_12.html

2 comments:

  1. அன்றில் பறவையை தேர்ந்து எடுத்தது அபாரம்..திருமால் திருவடிகளை பற்றிக்கொண்டு இல்லாமல் ஒரு க்ஷணமும் ஆழ்வாரால் இருக்க முடியாது போல.

    ReplyDelete
  2. அன்றில் பறவையைப் பற்றி இவ்வளவு விஷயமா?

    ஆழ்வார் இப்படிக்கு காதல் நிலையைப் பாவித்துப் பாடிய பாடல்கள் இருப்பதை இப்போதுதான் கண்டேன். நன்றி.

    ReplyDelete