Saturday, May 9, 2020

அபிராமி அந்தாதி - மத்தில் சுழலும் என் ஆவி

அபிராமி அந்தாதி - மத்தில் சுழலும் என் ஆவி 


எது இன்பம், எது துன்பம் என்று அறியாமல் உயிர்கள் தடுமாறுகின்றன.

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இன்பம் எது துன்பம் எது என்று கூடவா தெரியாமல் இருப்பார்கள், அதெல்லாம் தெரியும் எங்களுக்கு என்று சிலர் கூறலாம். சிந்திப்போம்.

இனிப்பு சாப்பிடுவது இன்பமா, துன்பமா?

சந்தேகம் என்ன? இன்பம் தான்.லட்டு, பூந்தி, பாதுஷா, ஜாங்கிரி, ஐஸ் கிரீம் இதெல்லாம் சாப்பிடுவது இன்பம்தான்.

அப்படியா? யோசித்துப் பாருங்கள்.

அவை எவ்வளவு துன்பம் தருகிறது என்று தெரியும்.

அதே போல் உடற் பயிற்சி செய்வது இன்பமா, துன்பமா?

புகை பிடிப்பது, மது அருந்துவது, திருமணம் செய்து கொள்வது, பிள்ளைகளை பெற்றுக் கொள்வது....?

துன்பத்தை, இன்பம் என்று நினைத்துக் கொண்டு உயிர்கள் அவற்றின் பின்னால் போகின்றன.

உள்ளத்துக்குள்ளேயே பெரிய துன்பம், இந்தப் பிறவியில் மீண்டும் மீண்டும் பிறந்து, வளர்ந்து, இறந்து, மீண்டும் அதே போல்...எவ்வளவு பெரிய துன்பம்.   அது தெரியாமல்,  காதல், கல்யாணம், பிள்ளைகள், வீடு, வாசல் என்று உயிர்கள்  அறியாமையில் கிடந்து உழல்கின்ற.

நாம், துன்பத்தில் இருக்கிறோம் என்று கூட தெரியாமல், அதுவே இன்பம்  என்று   நினைத்துக் கொண்டு இருக்கின்றன.

பெரிய பெரிய ஞானிகள் எல்லாம், இந்த பிறவி  என்பது துன்பம் நிறைந்தது, அதில் இருந்து  விடுதலை பெற வேண்டும் என்றே நினைத்தார்கள்.

"அம்மா, அபிராமி, என்னால் முடியவில்லை. இந்த பிறப்பு, இறப்பு என்று பிறவிச் சுழலில் கிடந்து  தளர்கின்றேன்.  தயிர் மத்தில் அகப்பட்ட தயிர் போல, வெளியே போவதும், உள்ளே வருவதுமாக கிடந்து அலைகின்றேன் . என்னை இந்தத் துன்பத்தில்  இருந்து  காப்பாற்று"

என்று வேண்டுகிறார்.

பாடல்


ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே


பொருள்


ததியுறு = தயிரை கடையும்

மத்தின்  = மத்தில் கிடந்து

சுழலும் என் ஆவி = சுழல்கின்றது என் ஆவி

தளர்விலதோர் = தளர்வில்லாத ஒரு

கதியுறு வண்ணம் = வழியை

கருது  = கருதுவாய். நினைப்பாய் .

கண்டாய் = நீ கண்டாய்

கமலாலயனும் = தாமரை மலரில் இருக்கும் அயனும் (ப்ரம்மா)

மதியுறு = திங்களை

வேணி  = சடை (சடையில் சூடிக் கொண்ட )

மகிழ்நனும் =  மகிழ்ந்து இருக்கும் சிவனும்

மாலும் = திருமாலும்

வணங்கி = உன்னை வணங்கி

என்றும் = எப்போதும்


துதியுறு = துதிக்கும்

சேவடியாய் = சிறந்த திருவடிகளை கொண்ட

சிந்துரானன  = சிவந்த மேனியைக் கொண்ட

சுந்தரியே = அழகானவளே

திரும்ப திரும்ப பிறவி எடுப்பது நமக்கு ஒன்றும் தெரிவது இல்லை. போன பிறவியில் என்னவாக இருந்தோம்? தெரியாது. எனவே, அதில் வரும் களைப்பு தெரிவதில்லை.

நம்மை விட பல படி மேலே போனவர்கள் அவற்றை உணர்கிறார்கள்.

என் வீடு வாசலில் இருந்து  பார்த்தால், ஒரு பத்தடி தூரம் தெரியும். மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு  இருபது அடி தூரம் தெரியும். எனக்குத் தெரியவில்லை என்பதற்காக, அந்த இருபதடிக்கு மேல் உலகமே கிடையாது என்று சொல்ல முடியுமா?

வீட்டு மாடி மேல் ஏறி நின்று பார்த்தால், சில பல கிலோ மீட்டர் தூரம் தெரியும்.

பெரிய கோபுரத்தின் மேல் நின்று பார்த்தால், இன்னும் கொஞ்சம் தூரம் தெரியும்.

மலை மேல் நின்று பார்த்தால், வெகு  தூரம் தெரியும்.

ஆகாய விமானத்தில் இருந்து பார்த்தால் மிகப் பெரிய பரப்பை பார்க்க முடியும் அல்லவா.

அது போல, நமக்கு கொஞ்சம் ஞாபகம் இருக்கிறது.

ஞானிகளுக்கு பல பிறவிகள் ஞாபகம் இருக்கிறது....

"புல்லாய் புழுவாய்..." என்று ஆரம்பித்து....

"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் "

என்பார் மணிவாசககர்.  பிறந்து  இறந்து , பிறந்து இறந்து இளைத்துப் போனேன் என்பார்.

"தளர்ந்தேன் என்னைத்  தாங்கிக் கொள்ளேன்" என்று கெஞ்சுவார் நீத்தல் விண்ணப்பத்தில்.

"புனரபி ஜனனம், புனரபி மரணம்..." என்பது ஆதி சங்கரர் வாக்கு.

ப்ரம்மா, திருமால் இருவரும் அபிராமியை தொழுதார்கள். சரி.

சிவன் ஏன் தொழ வேண்டும்?  சிவனின் மனைவி தானே அபிராமி? மனைவியை போய் யாராவது  தொழுவார்களா?

பெண்ணின் பெருமை அப்படி.

அவள் மனைவியாக இருப்பாள், சில நேரம் தோழியாக, சில நேரம் தாயாக இருந்து பார்த்துக் கொள்வாள், சில நேரம் சகோதரியாக இருப்பாள், சில நேரம் மகளாக கூட மாறி அடம் பிடிப்பாள், மந்திரியாக யோசனை சொல்வாள்.

பட்டர் ஒரு படி மேலே போகிறார்.

இத்தனையாகவும் இருக்கும் அவள், ஏன் தொழும் தெய்வமாகவும் இருக்க முடியாது?

அவளின் அன்பை, கருணையை, வாஞ்சையை, தியாகத்தை எண்ணி, சிவனே அவளே தொழுதார் என்கிறார் பட்டர்.

சிவன் அவளை தொழுதது அவளிடம் இருந்து ஏதோ வரம் வேண்டி அல்ல. அது ஒரு நன்றிக் கடன்.

அபிராமி.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_9.html

Friday, May 8, 2020

திருவாசகம் - வா என்ற வான் கருணை

திருவாசகம் - வா என்ற வான் கருணை 


மணிவாசகர் உயர் குடியில் பிறந்தவர். நன்கு படித்தவர்.பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்தவர்.  தமிழில் புலமை பெற்றவர். ஊன் உருக,உயிர்  உருக பாடல்கள் பாடி இருக்கிறார்.

மாறாக,

கண்ணப்பன் வேடுவர் குலத்தில் பிறந்தவர். படிப்பறிவே இல்லாதவர்.  வேட்டை ஆடுவதும், உயிர் கொலை புரிவதும் தான் அவர் தொழில்.

மணிவாசகர் சொல்கிறார், "அந்த கண்ணப்பன் மாதிரி என்னால் அன்பு செய்ய முடியாமல் இருந்தும், என்னையும் நீ ஆண்டு கொண்டாயே, உன் கருணையை என்ன என்று சொல்வேன்" என்று உருகுகிறார்.

பாடல்

கண்ணப்பன் ஒப்பதோர்
    அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில்
    என்னையும் ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
    வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே
    சென்றூதாய் கோத்தும்பீ 


பொருள்


கண்ணப்பன் = கண்ணப்பன்

ஒப்பதோர் = போல் ஒப்பு நோக்கக் கூடிய

அன்பின்மை  = அன்பு இன்மை. என்னிடம் அன்பு இல்லாமை

கண்டபின் = (இறைவா நீ) கண்டு கொண்ட பின்னும்

என்னப்பன் = என்னுடைய தந்தையான

என்னொப்பில் = என்னுடைய ஒப்பில்லாத ஒருவன்

என்னையும் = என்னையும்

ஆட் கொண்டருளி = ஆட்கொண்டு அருளி

வண்ணப் பணித்  = பணித்த வண்ணம்.

தென்னை = என்னை

வாவென்ற  = வா என்ற

வான் கருணைச் = வான் போல பரந்த கருணை

சுண்ணப்பொன் நீற்றற்கே = சுண்ணம் + பொன் + நீற்றற்கே. சுண்ணாம்பு போல வெண்மையான திரு நீற்றை அணிந்த பொன் போன்ற மேனி உடைய அவருக்கே

சென்றூதாய் கோத்தும்பீ  = சென்று ஊதுவாய் அரச தும்பியே


கடவுள் எங்கோ இருக்கிறார். எப்படியோ இருக்கிறார். நமக்கு ஒன்றும் தெரியாது.

அவருக்கு இது பிடிக்கும், இது பிடிக்காது என்று நாமே நினைத்துக் கொண்டு ஏதேதோ செய்கிறோம்.

அவருக்கு கொழுக்கட்டை பிடிக்கும்,  சுண்டல் பிடிக்கும்,  துளசி பிடிக்கும்,  வடை பிடிக்கும்,  பொங்கல் பிடிக்கும், தேங்காய், பழம் எல்லாம் பிடிக்கும் என்று  நாமே ஏதேதோ கற்பனை செய்து கொண்டு செய்கிறோம்.

நாம் வைக்கும் பொங்கலை வைத்துக் கொண்டு அவர் என்ன செய்யப் போகிறார்?

நாம், நமக்கு பிடித்ததை, அவருக்கும் பிடிக்கும் என்று நினைத்து படைக்கிறோம்.

கண்ணப்பன் அவருக்குப் பிடித்த மாமிசம், கறி போன்றவற்றை  இறைவனுக்கும் பிடிக்கும் என்று  படைத்தார்.

தவறு என்ன?  யாருக்குத் தெரியும் ஆண்டவனுக்கு என்ன பிடிக்கும் என்று? ஒருவேளை  கடவுள் non -வெஜிடேரியனாக இருந்தால்?

நாம் முகம் சுளிக்கிறோம்.

என்னது, சாமிக்கு போய் மாமிசம் படைப்பார்களா என்று?

கண்ணப்பனுக்கு முன்னால் , அந்தக் கோவிலில் தினம் பூஜை செய்யும் சிவ கோசரியார்   என்ற குருக்கள் ஆகம முறைப்படி பூஜை செய்து வந்தார்.

நீரால் அபிஷேகம் செய்வது, தூப தீபம் காட்டுவது, பொங்கல், பழம் போன்றவற்றை நைவேத்தியம் செய்வது என்று.

சிவன், அவருக்கு முக்தி கொடுக்கவில்லை. கண்ணப்பனுக்கு கொடுத்தார்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

கண்ணப்பன் செய்த பூஜையை கடவுள் ஏற்றுக் கொண்டார். காரணம், அவனிடம் இருந்த அன்பு.

அது போல, நான் செய்யும் பூஜையிலும் ஆயிரம் தவறு இருக்கலாம். அவற்றை மன்னித்து ஏற்று க்கொள்ள வேண்டும் என்றால், கண்ணப்பன் அளவு நானும்  அன்பு செய்ய வேண்டும். என் மனதில் அவ்வளவு அன்பு இல்லையே.  இருந்தும் என்னையும் ஒரு பக்தனாக ஏற்றுக் கொண்டு "வா" என்று அழைத்த   உன் கருணையை என்ன சொல்லுவேன் என்று உருகுகிறார்  மணிவாசகர்.

குலம் , பிறப்பு, படிப்பு, தொழில், அதிகாரம், செல்வாக்கு...எதுவும் இறைவனுக்கு பொருட்டு அல்ல.  அன்பு ஒன்றையே அவன் காண்கிறான்.

அன்பே சிவம்.

மத்தது எப்படி இருந்தாலும் பரவாயில்லை...அன்பு மட்டும் இருந்தால் போதும்.

அன்புதானே எல்லாம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_8.html

Thursday, May 7, 2020

இராமானுஜர் நூற்றந்தாதி - யார் அரண் ?

இராமானுஜர் நூற்றந்தாதி - யார் அரண் ?



முன்ன பின்ன தெரியாத ஒரு ஊருக்குப் போகிறோம். போய் இறங்கியாச்சு. போய் சேர வேண்டிய இடம் தெரியும் ஆனால் வழி தெரியாது. வெளி நாடு என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தாச்சு. இந்தப் பக்கம் போவது என்று தெரியவில்லை. முன்ன பின்ன இந்த ஊருக்கு வந்ததும் இல்லை.

என்ன செய்யணும்?

தெரிஞ்ச யார் கிட்டயாவது கேக்கணும். யார் கிட்ட என்றால், நம்மைப் போல முதன் முதலாய் அந்த ஊருக்கு வந்த இன்னொரு பயணியிடம் அல்ல. வழி தெரிந்த ஆளிடம் கேட்கணும்.

சரி, கேட்டாச்சு. அவரும் சரியான வழி சொல்லி விட்டார்.

போக வேண்டியதுதான் பாக்கி.

அங்க தான் சிக்கல் இருக்கு.

"அவரு சொல்ற வழி நல்லாத்தான் இருக்கு. ஆனா, அது எனக்கு சரிப் பட்டு வருமான்னு தெரியல. அந்த வழி எல்லாம், நடை முறைக்கு சரியா வராது..." என்று சொல்லி விட்டு, கால் போன போக்கில் நாம் போய் கொண்டிருந்தால் அது எவ்வளவு புத்திசாலித்தனம்?

அது போல,  முன்ன பின்ன தெரியாத இந்த பூவுலகில் வந்து பிறந்து விட்டோம்.  முக்தி, வீடு பேறு என்று சொல்லும் இடத்துக்குப் போக வேண்டும்.

போக வழி சொல்லி இருக்கிறார்கள்.  பெரியவர்கள், ஆச்சாரியர்கள்,குருமார்கள், ஞானிகள், துறவிகள்...எல்லோரும்.

வழி எல்லாம் கேக்க வேண்டியது. அப்புறம், "...அது வந்து, வழி நல்லாத்தான் சொல்றாரு....ஆனா பாருங்க...நமக்கு அது சரிப்பட்டு வருமான்னு தெரியல "...என்று சொல்லி விட்டு  நாம் அன்றாட வேலைகளை பார்க்கப் போய் விடுகிறோம்.

புத்திசாலித்தனம்?

"சரணம் என்று அடைத்த தருமனுக்காக முன்பு கௌரவர்களை அழித்த மாயனை, நம்மை எல்லாம் வணங்க வைத்த இராமானுஜன் இல்லை என்றால் நமக்கெல்லாம் வேறு துணை ஏது "

என்று பாடுகிறார் திருவரங்கத்து அமுதனார்.

பாடல்


சரணம் அடைந்த தருமனுக்காப்,பண்டு நூற்றுவரை
மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்கவைத்த
கரண வையுமக் கன்றென்றி ராமா னுசனுயிர்கட்கு
அரணங் கமைத்தில னேல்,அர ணார்மற்றிவ் வாருயிர்க்கே?

பொருள்


சரணம் அடைந்த தருமனுக்காப் = தன்னைச் சரணம் அடைந்த தருமனுக்காக

பண்டு  = முன்பு

நூற்றுவரை = நூற்றுக்கணக்கான கௌரவர்களை

மரணம் அடைவித்த = கொன்ற

மாயவன் தன்னை  = திருமாலை

வணங்கவைத்த = வணங்க வைத்த

கரணம்  இவை  = கரணங்கள் (புலன்கள்) இவை

யுமக் கன்று = உமக்கு அன்று

என்று = என்று

இராமா னுசன் = இராமானுஜன்

னுயிர்கட்கு = உயிர்களுக்கு

அரணங் கமைத்தில னேல் = அரண் வேலி ) அமைதிராவிட்டால்

அர ணார் = அரண் (வேலி ,காவல்) யார்

மற்றிவ் வாருயிர்க்கே? = மற்ற இந்த ஆருயிர்க்கே

நமக்கு புலன்கள் எதற்காக இருக்கின்றன?

ஆண்டு, அனுபவிக்கத்தானே ? எல்லாவற்றையும், ஒன்று விடாமல் அனுபவிக்கத்தானே இந்த புலன்கள் இருக்கின்றன?

இல்லை.

எல்லாவற்றையும் அளவுக்கு அதிகமாக அனுபவிக்க இறங்கினால் என்ன ஆகும்?

எதிலும் ஒரு அளவு வேண்டும். வரை முறை வேண்டும்.

இன்பங்களின் பின்னால் போகும் புலன்களை, தடுத்து,  அரண் அமைத்து, இறைவன் பால்  வழி நடத்திய, இராமானுசன் இல்லை என்றால், இந்த உயிர்களை யார் காப்பாற்றி இருப்பார்கள்?

ஐந்து புலன்களும், உலகில் கிடந்து துன்பப் படுகின்றன.

அவனை சரண் அடைந்து விட்டால்,  நூற்றுக்கணக்கான கௌரவர்களை அழித்தது போல, நம் புலன்களுக்கு எதிரான அனைத்தையும் அவன் அழித்து விடுவான். புலன்கள் தறி கெட்டு ஓடாது.

அதற்கு, முதலில் அவனிடம் சரண் அடைய வேண்டும்.

அவன் யார், எப்படி சரண் அடைவது என்று நமக்குத் தெரியாது. அதைச் சொல்லித் தரத்தான்  இராமானுஜர் போன்ற மகான்கள்  அவதரித்தார்கள். அவர்கள் மட்டும் இல்லை என்றால்,  நாம் சரண் அடையப் போவதும் இல்லை, எதிரிகள் அழியப் போவதும் இல்லை.

குருவை நம்பி ஏற்றுக் கொள்ள வேண்டும். பின் ,அவர் சொல்வதை அப்படியே கேட்க வேண்டும்.

உடம்பு சரி இல்லை என்று மருத்துவரிடம் போகிறோம். அவர் மருந்து எழுதித் தருகிறார்.  வாங்கி சாப்பிட வேண்டியதுதானே?

"...அவரு சொல்லுவாரு ...நம்மால முடியுமா...." என்று நமக்குத் தெரிந்த மாத்திரைகளை  வாங்கி தின்று கொண்டு இருந்தால், நோய் குணமாகுமா?

சாதாரண ஜலதோஷம் காய்ச்சலுக்கே இந்த கதி என்றால், மிகப் பெரிய நோயான பிறவிப் பிணிக்கு  என்ன சொல்ல?

வழி தான் சொல்ல முடியும். அதில் பயணிப்பதும், அல்லது வேறு திசையில் போவதும்  அவரவர் விருப்பம், விதி.


https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_14.html

திருக்குறள் - பெண்ணை விட பெரியது எது?

திருக்குறள் - பெண்ணை விட பெரியது எது?


வாழ்க்கை துணை நலம் பற்றி கூறிக் கொண்டு வந்த வள்ளுவர் அடுத்த குறளில்

"பெண்ணை விட பெரியது எது? அதுவும் கற்பென்ற உறுதி உண்டானால்" என்கிறார்.

பாடல்

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்


பொருள்


பெண்ணின் = பெண்ணை விட

பெருந்தக்க = பெருமையானது

யாவுள  = எது இருக்கிறது ?

கற்பென்னும் = கற்பு என்ற

திண்மை = உறுதி

யுண் டாகப் பெறின் = உண்டாகப் பெற்றால்

ஆஹா, வள்ளுவர் சரியான ஆணாதிக்கவாதியாக இருப்பார் போல் இருக்கிறதே.  அது என்ன பெண்ணுக்கு மட்டும் கற்பு, கத்திரிக்காய் என்று.  ஆணுக்கு ஒன்றும் இல்லையா?  அவன் மட்டும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமா?  இப்படி கற்பு, கருப்பு என்று சொல்லியே பெண்களை அடிமை படுத்தி வைத்து இருக்கிறார்கள் என்று  சில அறிஞர்கள் கூறக் கூடும்.

என்ன என்று ஆராய்வோம்.

அது ஏன் "பெண்" என்று கூறியிருக்கிறார் ? பேசாமல் மனையாள் , இல்லாள், மனைவி  என்று கூறி இருக்கலாமே?  பொதுவாக பெண் என்று எதற்கு கூற வேண்டும்.  காரணம் இல்லாமல் ஒரு வார்த்தையை வள்ளுவர் போடுவாரா?

பெண் என்றால் பெருமையானவள் தான்.  அவள் மனைவியாக இருக்க வேண்டும் என்று  அவசியம் இல்லை. பெண் பிறவி என்பதே பெருமையான பிறவி தான் . என்கிறார். எனவே, ஆணுக்கு அடிமையாக இருக்க வேண்டும், கல்லானாலும் கணவன்,  புல் ஆனாலும் புருஷன் என்று இருந்தால் தான்  பெண் பெருமையானவள்   என்று வள்ளுவர் சொல்ல வரவில்லை.

அது எப்படி, "கற்பென்னும் திண்மை" என்று சொல்லி இருக்கிறாரே.  அது கணவன் மேல் கொண்ட  உறுதியான அன்பைத்தானே குறிக்கும் என்று மேலும் சில   அறிஞர் பெருமக்கள் கூறலாம்.

கற்பென்னும் பண்பு, குணம் என்று சொல்லாமல் கற்பென்னும் திண்மை என்று ஏன் சொல்லி இருக்கிறார்.

கற்பு என்ற சொல் கல் + பு என்று உருவானது.

நடிப்பு, படைப்பு, படிப்பு என்பது போல.

சரி...கற்பு என்றால், கல்வி, படிப்பு என்றே வைத்துக் கொள்வோம். அதில் திண்மை எங்கிருந்து வந்தது?  கூர்மை இருக்கலாம், விரிவு இருக்கலாம், ஆழம் இருக்கலாம்...கல்விக்கும் திண்மைக்கும் என்ன சம்பந்தம் ?

எவ்வளவோ படிக்கிறோம். நல்லது எது கெட்டது எது என்று தெரிகிறது. இருந்தும்  அதன் படி நடக்கிறோமா? காரணம், உறுதி இன்மை. படித்தால், அறிந்தால் மட்டும் போதாது.  அதன் படி நடக்கும் உறுதி வேண்டும்.

வீட்டை எப்படி நடத்த வேண்டும், உறவு, நட்பு இவற்றை எப்படி அரவனைத்துச் செல்ல வேண்டும்   என்பதை அறிந்த பெண், அதன் படி நடக்க வேண்டும்.

ஆணுக்கு எவ்வளவோ கடமைகளை சொன்ன வள்ளுவர் பெண்ணுக்கும் சிலவற்றைச் சொல்கிறார்.

பெண் கொஞ்சம் மனம் தளர்ந்து அப்படி இப்படி நடந்து கொண்டால்  என்ன ஆகும் என்பதை வாசகர்களின் எண்ணத்துக்கே விட்டு விடுகிறேன்.

"யாவுள" என்று கேட்கிறார்? அதன் அர்த்தம் என்ன?

பெருமையான விடயங்கள் என்று எவற்றை நாம் சொல்லுவோம்?

அறம் , பொருள், இன்பம், வீடு ....இவைத்தானே பெருமையான விடயங்கள்?

இவற்றை எல்லாம் விட பெண் பெருமை வாய்ந்தவள் என்பதால் பெண்ணின் பெருந்தக்க யாவுள என்று  கேட்கிறார்.

இல்லை என்றால் எப்படி சொல்லி இருப்பார்?

பெண்ணின் பெருந்தக்க அறம் உள

பெண்ணின் பெருந்தக்க பொருள் உள

பெண்ணின் பெருந்தக்க வீடு பேறு உள

என்று சொல்லி இருப்பார்.

பெண்ணை விட உயர்ந்தது ஒன்றும் இல்லை என்பதால் "யாவுள" என்று கேட்கிறார்?  "அவளை விட உயர்ந்தது எது என்று எனக்குத் தெரியவில்லை. எது என்று நீங்கள் சொல்லுங்கள் " என்று நம்மைப் பார்த்து கேட்கிறார் வள்ளுவர்.

அவருக்கே தெரியவில்லை என்றால், நமக்கும் தெரியாதுதான்.

எல்லா பெண்களும் உயர்ந்தவர்களா என்று கேட்டால் இல்லை.

பெண்களிலும் மோசமானவர்கள் உண்டு.

கற்பு என்ற திண்மை இருந்து விட்டால், அவளை விட உயர்ந்தது ஒன்றும் இல்லை என்கிறார்.

"உண்டாகப் பெறின்" என்றால் என்ன?

கற்பு என்பது பாடமாக சொல்லித் தர முடியாது.  மக்களுக்கு தாயோ, பேத்திக்கு பாட்டியோ சொல்லித் தர முடியாது.

அது அவள் கூடவே உண்டாவது.

அது அவளின் உள்ளுணர்வு.

இது சரி. இது தான் என் குடும்பத்துக்கு நல்லது என்று ஒரு பெண் உணர்ந்து அதன் படி  உறுதியாக நின்றால் , அவளை விட உயர்ந்தது இந்த உலகில் ஒன்றும் இல்லை  என்பது கருத்து.

ஆணாதிக்கம்,  பெண்ணடிமை, சம உரிமை,  என்று கொடி பிடிப்பதன் முன்னம், சிறிதேனும் படிப்பது நலம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_7.html

Tuesday, May 5, 2020

வில்லி பாரதம் - சிக்கல்களும் சமாதானங்களும்

வில்லி பாரதம் - சிக்கல்களும் சமாதானங்களும் 


உறவுகளில் சிக்கல் வருவது இயல்பு.  அது எந்த உறவாக இருந்தாலும் அதில் அவ்வப்போது ஏதோ ஒரு இடைவெளி வருவது இயல்பு.

கோபம், வேறுபாடு, மனக் கசப்பு, நம்மை  புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம், ஏன் எப்போதும் நானே விட்டு கொடுக்க வேண்டும்? இந்த தடவை என்ன ஆனாலும் சரி, நான் விட்டு கொடுக்கப் போவதில்லை.  விட்டு கொடுத்து, விட்டு கொடுத்து எல்லாரும் என்னை ஒரு ஏமாளி என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்....என்று ஒரு கோபத்தின், வெறுப்பின் உச்சம் தொடும் நேரங்களும் நம் வாழ்வில்  வந்திருக்கும்.

பொதுவாகவே, சண்டை, மனக் கசப்பு, எண்ண வேறுபாடு என்று வந்து விட்டால், நமக்கு இது தான் வேண்டும் என்று இரு சாராரும் அடம் பிடிப்பது வழக்கம். தாங்கள் பிடித்த ஒன்றை விட்டு இறங்கி வர இரண்டு பக்கத்திலும் ஒத்துக் கொள்வதில்லை.

கொடுப்பதனால் முழுவதும் கொடு, இல்லை என்றால் ஒன்றும் வேண்டாம்...என்ற அடம் சரியானதா?

எல்லாம் நடந்த பின்னால், கண்ணனை தூது அனுப்புகிறான் தர்மன்.

என்ன கேட்டு இருக்க வேண்டும் ? தாங்கள் சூதில் வைத்து இழந்த நாட்டை திருப்பி கேட்டு இருக்க வேண்டும். அதுதானே முறை? எங்கள் நாட்டைக் கொடு, இல்லை என்றால் யுத்தம் என்று அறிவித்திருக்க வேண்டும்.

தர்மன் அப்படிச் செய்யவில்லை.

"நாடு கேள். நாடு தராவிட்டால், ஐந்து ஊரு கேள். ஊரும் தராவிட்டால், ஐந்து வீடாவது  கேள்.   வீடும் தராவிட்டால், யுத்தம் கேள்"

என்று சொல்லி அனுப்புகிறான்.

தர்மனின் நோக்கம் யுத்தம் அல்ல. யார் பெரியவன், யார் சிறியவன் என்ற போட்டி இல்லை. எல்லோரும் அன்போடு, சண்டை இல்லாமல் சமாதானமாகப் போக வேண்டும் என்பது. 


பாடல்

முந்தூர் வெம்பணிக் கொடியோன்மூதூரி னடந்துழவர்
                                    முன்றிறோறு,
நந்தூரும் புனனாட்டின் றிறம்வேண்டு நாடொன்றுநல்கானாகில்,
ஐந்தூர்வேண்டவையிலெனி லைந்திலம்வேண்டவை மறுத்தாலடு
                                  போர் வேண்டு,
சிந்தூரத் திலகநுதற் சிந்துரத்தின் மருப்பொசித்த
                                  செங்கண்மாலே.

பொருள்


முந்தூர் = முந்தி ஊர்ந்து. வேகமாக செல்லும்

வெம்பணிக் கொடியோன்  = கொடிய பாம்பின் கொடியைக் கொண்ட துரியோதனன்

மூதூரி னடந்து  = பழமையான ஊரில்

உழவர் = உழவர்கள்

முன்றிறோறு, = முன்றில் தோறும். முன்றில்  = இல்லத்தின் முன்

நந்தூரும் = சங்குகள் ஊறும்

புனனாட்டின் = புனல் + நாட்டில் = நீர் வளம் நிரம்பிய நாட்டில்

திறம்வேண்டு = பங்கை வேண்டு

 நாடொன்றுநல்கானாகில் = நாடு ஒன்று நல்கானாகில் (நாடு தராவிட்டால்)

ஐந்தூர் வேண்டு = எங்கள் ஐந்து பேருக்கும் ஐந்து ஊர் வேண்டு

அவையிலெனி ல் = அதுவும் இல்லை என்றால்

ஐந்திலம்வேண்டு = ஐந்து இல்லம் வேண்டு

அவை மறுத்தால்  = அதையும் மறுத்தால்

அடு  போர் வேண்டு = மோதும் போரை வேண்டு

சிந்தூரத் திலக நுதற்  = சிவந்த திலகம் முடிந்த நெற்றியை உடைய

 சிந்துரத்தின் மருப்பொசித்த = யானையின் தந்தத்தை ஒடித்த

செங்கண்மாலே. = சிவந்த கண்களை உடைய திருமாலே

இது தான் வேண்டும் , இல்லை என்றால் வேறு எதுவும் வேண்டாம் என்று அடம் பிடிக்கக் கூடாது.  அப்படி இருந்தால் எங்கும் எப்போதும் சண்டை சச்சரவோடு தான்  வாழ வேண்டி வரும்.

இது இல்லை என்றால், அது என்று கொஞ்சம் வளைந்து கொடுத்து போக வேண்டும்.

சரி தவறு என்பதல்ல வாழ்க்கை.  அனுசரித்து போவது.

தர்மன் எவ்வளவு வளைந்து கொடுக்கிறான். அரசில் பாதி கேள் என்று ஆரம்பித்து  கடைசியில் ஐந்து வீடாவது கொடு என்று கேட்கிறான்.

துரியோதனன் முட்டாள்.  ஐந்து வீட்டைக் கொடுத்து இருக்கலாம். அதற்கு பதிலாக தன்னையும், 99 தம்பியாரையும், மாமன், மைத்துனன், பீஷ்மர், துரோணர்,  கர்ணன் என்று அனைவரையும் பலி கொடுத்தான்.

தர்மன் எவ்வளவு இறங்கி வந்தான். கொஞ்சம் பெருந்தன்மையாக ஐந்து ஊரை கொடுத்து இருக்கலாம். எவ்வளவு அழிவு. கடைசியில் முழு இராஜ்யமும் போனது.


பாரதம் சொல்லும் பாடம் - உலோப குணம் அழிவைத் தரும்

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_5.html

Monday, May 4, 2020

கம்ப இராமாயணம் - பெண்ணுக்கொரு வாசம்

கம்ப இராமாயணம் - பெண்ணுக்கொரு வாசம் 


இந்த கொரானா வைரஸ் வந்தாலும் வந்தது, வீட்டுக்குளேயே அடை பட்டு கிடப்பது, மூச்சு முட்டுவது போல இருக்கிறது அல்லவா.

இது மட்டும் அல்ல, வாழ்வில் பல சமயங்களில் துன்பம் வரலாம். வேலை போய் விடலாம். கையில் உள்ள செல்வம் கரைந்து போய் விடலாம். எதிர் காலம் பற்றிய பயம் தொற்றிக் கொள்ளலாம். என்ன செய்வது என்று தவித்துப் போவோம்.

கவலையே வேண்டாம். தேவைகளை குறைத்துக் கொண்டால், எல்லாம் சரியாகப் போய் விடும்.

"ஆமா...சொல்றது ரொம்ப எளிது. மின்சார விசிறி இல்லாம, செல் போன் இல்லாம, குளிர் சாதன பெட்டி இல்லாமல், கார் இல்லாமல் எப்படி இருப்பது...பழகிப் போச்சே ...விட முடியுமா "

என்று கேட்கலாம்.

விடை கம்பர் தருகிறார்.

இராமன் எத்தனை செல்வச் செழிப்பில் வாழ்ந்து இருப்பான்? அவன் வாழ்ந்த செல்வ நிலை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. எல்லாவற்றையும் விட்டு விட்டு காட்டுக்குப் போனான்.

ஒரு நிமிடம் நினைத்துப் பார்ப்போம்.

நாமாக இருந்தால் என்ன செய்வோம்? அழுது புலம்புவோம். எல்லாரையும்  திட்டி தீர்ப்போம்.  எப்படா இது முடியும் என்று வெறுத்துப் போய் இருப்போம்.

ஆனால், இராமன் என்ன செய்தான் தெரியுமா?

சீதையோடு மிக மகிழ்ச்சியாக, இயற்கையை இரசித்துக் கொண்டு செல்கிறான். காட்டில், சீதைக்கு ஒவ்வொன்றாக காட்டி காட்டி, இதைப், அதைப் பார்  என்று சின்ன பிள்ளை மாதிரி சந்தோஷப் படுகிறான்.

அது மட்டும் அல்ல, இடை இடையிடையே சீதையின் அழகை வர்ணிக்க வேறு செய்கிறான்.

சீதைக்கு பெருமையாகவும் இருக்கும், சந்தோஷமாகவும் இருக்கும், கொஞ்சம் வெட்கமும் வந்திருக்கும். 

"காந்தள் மலரில் இருக்கும் அந்த கிளியைப் பார். மாந்தளிர் போல மணம் வீசும் மேனியைக் கொண்ட சீதையே, அது உன் கையில் அமர்ந்து இருப்பதைப் போல இருக்கிறது"

என்கிறான்.

சீதையின் கை வருணனை. அவள் மேனியின் வாசம். என்று இராமன் மிக மகிழ்வுடனேயே காணப் படுகிறான். ஐயோ, இராஜ்யம் போய் விட்டதே என்று இடிந்து போய் விடவில்லை. எது கிடைக்கிறதோ, அதில் சந்தோஷமாக இருக்க பழக வேண்டும்.

பாடல்

‘சேந்து ஒளி விரி செவ் வாய்ப்
     பைங் கிளி, செறி கோலக்
காந்தளின் மலர் ஏறிக்
     கோதுவ, - கவின் ஆரும்
மாந் தளிர் நறு மேனி
     மங்கை! - நின் மணி முன்கை
ஏந்தின எனல் ஆகும்
     இயல்பின; இவை காணாய்!


பொருள்


‘சேந்து = சிவந்த

ஒளி விரி = விரிந்த ஒளி வீசும்

செவ் வாய்ப் = சிவந்த அலகைக் கொண்ட

பைங் கிளி = அந்தப் பச்சைக் கிளி

செறி கோலக் = சிறந்த அழகைக் கண்டால்

காந்தளின் மலர் ஏறிக் = காந்தள் மலரில் ஏறி

கோதுவ, = அந்த மலரைக்  கோதி

கவின் ஆரும் = அழகு உடைய

மாந் தளிர் = மா மரத்தின் தளிரின்

நறு மேனி = வாசம் கொண்ட மேனியை உடைய

மங்கை!  = பெண்ணே


நின் = உன்

மணி முன்கை = அழகிய முன் கையில்

ஏந்தின எனல் ஆகும் இயல்பின; = ஏந்தியது போல இருக்கிறது

 இவை காணாய்! = இவற்றைக் காண்பாய்


காந்தள் மலர் மென்மையானது. அதை பெண்களின் கைகளுக்கு உவமையாக கூறுவது மரபு.


இராஜ்யம் போனால் என்ன. வேலை போனால் என்ன. அன்புக்கு உரியவர்கள் பக்கத்தில் இருந்தால் வேறு ஒன்றும் வேண்டாம்.

போனதை நினைத்து புலம்பிக் கொண்டு இருக்கக் கூடாது. இருப்பதில் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்று பார்க்க வேண்டும்.

அழுது புலம்புவது என்றால்   இராமனுக்கும், சீதைக்கும் எவ்வளவு நேரம் இருந்தாலும் போதாது. அவர்கள் அதைச் செய்ய வில்லை.

இயற்கையை இரசித்துக் கொண்டு சந்தோஷமாக  இருந்தார்கள்.

யோசியுங்கள்.

எப்பப் பார்த்தாலும் புலம்பிக் கொண்டே இருப்பதா அல்லது என்ன நடந்தாலும் சரி, சந்தோஷமாக இருப்பேன் என்று வாழ்க்கையை நடத்துவதா என்று.

இரண்டும் உங்கள் கையில்.

கம்ப இராமாயணம் படிப்பதில் இப்படி சில வழி காட்டுதல்களும் கிடைக்கும்.



https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_4.html



Sunday, May 3, 2020

திருக்குறள் - மனைவியும் இல்லறமும்

திருக்குறள் - மனைவியும் இல்லறமும் 



தமிழில் மனைவிக்கு இல்லாள் என்று ஒரு பெயர் உண்டு. இல்லத்தை ஆள்பவள் என்ற அர்த்தத்தில்.

இல்லான் என்று ஒரு வார்த்தை கிடையாது. இல்லான் என்றால் ஒன்றும் இல்லாதவன் என்று பொருள் படும்.

இல்லறத்தில் கடமை எல்லாம் கணவன் மேல் இருந்தாலும், அதை நிறைவேற்றும் பொறுப்பை மனைவியிடம் தந்திருக்கிறது நம் கலாச்சாரம்.

"மனைவி மாண்பு உடையவளாக இருந்தால், ஒருவனுக்கு எல்லாம் இருக்கும். மனைவி சரி இல்லை என்றால், என்ன இருந்தும் ஒன்றும் இல்லாதது மாதிரிதான்" என்கிறார் வள்ளுவர்.

மனைவி சரி இல்லை என்றால், இல்லறம் என்பதே கேலி கூத்தாகி விடும்.

பாடல்

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

பொருள்

இல்லதென் = இல்லாதது என்ன ?

இல்லவள் = இல்லத்தில் இருப்பவள்

மாண்பானால் = மாண்பு உடையவள் ஆனால்

உள்ளதென் = உள்ளது என்ன?

இல்லவள் = இல்லத்தில் இருப்பவள்

மாணாக் கடை = மாண்பு இல்லாதவள் ஆனால்

இல்லாதது ஒன்றும் இல்லை.

உள்ளது ஒன்றும் இல்லை.

எல்லாம் மனைவியைப் பொறுத்தது.

கணவன் பெரிய பதவியில்  இருக்கலாம். மிகத் திறமையானவர் என்று பெயரும் புகழும்  பெற்று இருக்கலாம். நிறைய பொருளும் சம்பாதித்து இருக்கலாம்.  என்ன இருந்து என்ன பயன்? மனைவி சரி இல்லை என்றால், இவை அனைத்தும் இருந்தும்  ஒன்றும் இல்லாததற்கு சமம்.

கணவன் பெரிதாக ஒன்றும் படித்து இருக்க மாட்டான். பெரிய பதவியும் இல்லை. ஏதோ மிகச் சாதாரண வேலையாக இருக்கும். பணமும் பொருளும் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. ஆனால், அவனுக்கு ஒரு அன்பான , குடும்ப பொறுப்பு உள்ள மனைவி அமைந்து விட்டால், அவனிடம் இல்லாதது ஒன்றும் இல்லை.

நல்ல மனைவி இருப்பது, பொருள், புகழ், தைரியம், மரியாதை, செல்வாக்கு, ஆரோக்கியம் எல்லாம் இருப்பதற்கு சமம்.

அவள் ஒருத்தி எல்லாவற்றையும் ஈடு செய்வாள்.

ஆவதும் அவளால். அழிவதும் அவளால்.

பெண்ணுக்கு மிகப் பெரிய பொறுப்பை, மதிப்பை வள்ளுவர்  தந்திருக்கார்.



https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_3.html