Tuesday, October 13, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - பிறர் நிகர்க்க நேர்வரோ

 கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - பிறர் நிகர்க்க நேர்வரோ

 

இராவணனுக்கு வீடணன் எவ்வளவோ அறிவுரை கூறுகிறான். இரணியன் மற்றும் பிரகலாதன் கதையைக் கூறுகிறான்.

பதிலுக்கு இராவணன் கேட்கிறான், 


"என்னதான் இருந்தாலும், இரணியன், பிரகலாதனின் தந்தை. தன்னுடைய தந்தையை ஒருவன் வயிற்றைக் கிழித்து குடலை உருவி இரத்தத்தைக் குடிப்பதை கண்டு ஒரு மகனால் மகிழ முடியுமா? ஆனால் பிரகலாதன் மகிழ்ந்தான். தன் தந்தையை கொடூரமாக கொன்றவனை வணங்கினான் பிரகலாதன். அவனைப் போலவே நீயும் நம் பகைவன் பால் அன்பு செய்கிறாய்..." என்று இராவணன் வீடணனைப் பார்த்து கூறுகிறான். 


இராவணன் கூறுவதை மறுக்க முடியாது. அவன் வாதத்தில் ஞாயம் இல்லாமல் இல்லை. 

எல்லா நிகழ்வுக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. 

பாடல் 


ஆயவன் வளர்த்த தன் தாதை ஆகத்தை

மாயவன் பிளந்திட மகிழ்ந்த மைந்தனும்

ஏயும் நம் பகைவனுக்கு இனிய நண்பு செய்

நீயுமே நிகர்; பிறர் நிகர்க்க நேர்வரோ


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_13.html

(click the above link to continue reading)


ஆயவன் = அவன் (பிரகலாதன்) 

வளர்த்த தன் தாதை = தன்னை வளர்த்த தந்தையின் 

ஆகத்தை = உடலை 

மாயவன் = திருமால் 

பிளந்திட = பிளக்க 

மகிழ்ந்த மைந்தனும் = அதில் மகிழ்ந்த மைந்தனும் 

ஏயும் = நமக்கு ஏற்பட்ட 

நம் பகைவனுக்கு = நம்முடைய பகைவனான இராமனிடம் 

இனிய நண்பு செய் = இனிய நட்பு பாராட்டும் 

நீயுமே நிகர்;  = நீ தான் அந்த பிரகலாதனுக்கு நிகர் 

பிறர் நிகர்க்க நேர்வரோ = வேறு யார் சமமாவார்கள் ?

அதர்மத்தின் கருவில் தர்மம் பிறக்கிறது. 

இரணியன் வீட்டில் ஒரு பிரகலாதன்.

இராவணன் வீட்டில் ஒரு வீடணன். 

அதர்மம் தன்னை தானே அழித்துக் கொள்ளும். 

இராவணனை அழிக்க வேண்டும் என்று இராமன் அயோத்தியில் இருந்து கிளம்பவில்லை. அவன் பாட்டுக்கு காட்டில் சுத்திக் கொண்டு இருந்தான். 

சூர்பனகை போய் வம்பில் மாட்டி, இராவணனை பலி கொடுத்தாள். 

என்பில் அதனை வெயில் போல காயுமே 
அன்பில் அதனை அறம் 

என்பார் வள்ளுவர். 

சூரிய ஒளியில் புழுக்கள் மாண்டு போகும். புழுவை அழிக்க வேண்டும் என்று சூரியன் வருவது   இல்லை. சூரியனின் நோக்கம் அது அல்ல. புழு தானே வெளியில் சென்று  சூட்டில் மாண்டு போகும். (என்பில் = எலும்பு இல்லாதது - புழு) 

இராமன் என்ற சூரிய ஒளியில் இராவணன் என்ற புழு தானே சென்று மடிந்தது. 

அறம் தேடிப் போனால், அறம்.

கதை தேடிப் போனால், கதை.

கவிதை தேடிப் போனால், கவிதை.

அதுதான் காப்பியம். 

மேலும் படிப்போம். 



Monday, October 12, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - மரணம் என்று ஒரு பொருள் மாற்றும் வன்மையோய்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - மரணம் என்று ஒரு பொருள் மாற்றும் வன்மையோய்


சில பேருக்கு நல்லது சொன்னாலும், நாம் சொன்னதை அப்படியே தலை கீழாக மாற்றிப் பொருள் கொண்டு மேலும் தவறு செய்வார்கள். 


தீயவர்களோடு சேராதே என்று சொன்னால், அப்படி நாம் பெறாவிட்டால் அந்த தீயவர்களை யார் திருந்துவார்கள்? நாம் தானே திருத்த வேண்டும். எனவே நான் அவர்களோடு சேருவேன் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்.


இரணியன் வரலாற்றை வீடணன் மிக விரிவாகச் சொன்னான். அப்பேற்பட்ட இரணியனை திருமால் அழித்தார். அந்த திருமாலின் அவதாரம்தான் இராமன். எனவே, அவனோடு நீ பகை கொள்ளாதே என்று வீடணன் அறிவுரை கூறினான்.


அதற்கு இராவணன் "...அதான் நீயே சொல்றியே...அவ்வளவு வீரமும் பெருமையும் உள்ள நம் இன முன்னோன் ஒருவனை கொன்றவன் அந்தத் திருமால். அவனோடு நாம் கூட்டு வைக்க முடியுமா? என்ன பேசுகிறாய்" என்று வீடணன் கூறிய அற உரையை அப்படியே மாற்றினான் இராவணன். 


அது மட்டும் அல்ல, உயர்ந்த விஷயங்களை கீழானவர்களுக்கு சொன்னால், அதை அவர்கள் பற்றிக் கொண்டு மேலேற மாட்டார்கள். மாறாக, அந்த உயர்ந்த விஷயங்களையும், அதைச் சொன்னவர்களையும் கீழே இழுக்கப் பார்ப்பார்கள்.  நம்மால் உயர முடியாவிட்டால் என்ன, ஏதாவது குதர்க்கம் பேசி, உயர்ந்த விஷயங்களை நம் உயரத்துக்கு கீழே இறக்கி விடுவோம் என்று முயற்சி செய்வார்கள். சிறு மதி.


இங்கே இராவணனும், அதையே செய்கிறான். அவன் வீடணனைப் பார்த்துக் கூறுகிறான்  "நீ மரணத்தைக் கண்டு பயந்து விட்டாய். அதனால் தான், இராமனுக்கு ஏதுவாகப் பேசுகிறாய்" என்று பழிக்கிறான். 


பாடல் 


 "இரணியன் என்பவன் எம்மனோரினும்

முரணியன்; அவன்தனை முருக்கி முற்றினான்,

அரணியன்" என்று, அவற்கு அன்பு பூண்டனை -

மரணம் என்று ஒரு பொருள் மாற்றும் வன்மையோய் !


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_12.html

Click the above link to continue reading


 "இரணியன் என்பவன் = இரணியன் என்பவன் 

எம்மனோரினும் = நமது முன்னோன் 

முரணியன்; = வலிமை உடையவன் 

அவன்தனை = அவனை 

முருக்கி = கொன்று 

முற்றினான் அரணியன்" = தீர்த்தவன் நமக்கு பாதுகாப்பான அரண் போன்றவன்  

என்று, =என்று 

அவற்கு அன்பு பூண்டனை - அவன் (இராமன்)  மேல் அன்பு கொண்டாய் 

மரணம் என்று ஒரு பொருள் = மரணம் என்ற ஒன்றை 

மாற்றும் வன்மையோய் ! = மாற்றும் வல்லமை படைத்தவனே. அதாவது, கிண்டல் செய்கிறான். நீ மரணத்தை வென்று விடுவாயா என்ற தொனியில். 


கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே என்று சொல்லுவார்கள். அது போல  இராவணனின் மதி கெடுகிறது. 


அடுத்து என்ன ஆயிற்று?



Friday, October 9, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - கோட்டிய சிந்தையான்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - கோட்டிய சிந்தையான் 

இலக்கியம் படிக்க பொறுமை வேண்டும். அவசரம் அவசரமாக வாசித்து விட்டுப் போவதற்கு அல்ல இலக்கியங்கள். 

நேரம் ஒதுக்கி, நிதானமாக, ஆழ்ந்து, இரசித்துப் படிக்க வேண்டும். 

மொபைல் screen இல் மேலும் கீழும் இரண்டு இழுப்பு இழுத்து விட்டு, "ஹா இதுதானா " என்று சொல்லி விட்டுப் போக அல்ல இலக்கியங்கள். 


அதில் அழகு உண்டு, உண்மை உண்டு, மனித மனத்தின் பிரதி பலிப்பு உண்டு, அறம் உண்டு, மொழியின் சிறப்பு உண்டு, வாழ்க்கைப் பாடம் உண்டு...

முதல் வாசிப்பில் சில சமயம் இவை பிடி படமால் போகலாம். படிக்க படிக்கப் புதுப் புது அர்த்தங்கள் வரும். 


வீடணன் அடைக்கலம் அடைந்தால் என்ன, அடையாவிட்டால் நமக்கு என்ன. அது தெரிந்து என்ன ஆகப் போகிறது நமக்கு...என்று நினைக்கக் கூடாது. 


அறிவு வளர ஆயிரம் வழிக்கள் இருக்கிறது.  மனம் வளர இலக்கியமும், மதமும் மட்டும் தான் இருக்கின்றன.  அதிலும் மதம் இப்போது பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டு இருக்கிறது.  எனவே, நமக்கு கிடைத்தது எல்லாம், இலக்கியம் மட்டும் தான். 


மன வளர்ச்சி பெற, கற்பனை விரிய, எண்ணங்கள் பக்குவப் பட...இலக்கியத்தை  ஆழ்ந்து படிக்க வேண்டும். அனுபவித்து படிக்க வேண்டும். 


அப்படி படிக்க நேரம் இல்லை என்றால், நேரம் கிடைக்கும் போது படிப்பது நலம்.  


கதைக்கு வருவோம்....


இராவணனுக்கு எவ்வளவோ அறிவுரைகள் கூறுகிறான் வீடணன். பிரகலாதன் கதை பூராவும் சொல்கிறான். (பிரகலாதன் மற்றும் நரசிம்ம அவதாரம் பற்றி தனியே blog எழுதி இருக்கிறேன்.).

அதை எல்லாம் கேட்ட இராவணன் கோபம் கொள்கிறான். 

வரலாற்றில் இருந்து பாடம் படிக்க மறுக்கிறான் இராவணன். எனக்கு அது நிகழாது என்ற இறுமாப்பு. 

குப் பென்று தீ பிடித்தால் எப்படி இருக்குமோ அப்படி கோபம் கொள்கிறான். உருகிய அரக்கு போல அவன் கண்கள் சிவக்கின்றன. சிந்தை எல்லாம் சீதை மட்டுமே. ஒன்றும் அறிவில்  ஏற மறுக்கிறது. 


பாடல் 


கேட்டனன் இருந்தும், அக் கேள்வி தேர்கலாக்

கோட்டிய சிந்தையான், உறுதி கொண்டிலன், -

மூட்டிய தீ என முடுகிப் பொங்கினான் -

ஊட்டு அரக்கு ஊட்டிய அனைய ஒண் கணான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_9.html


click the above link to continue reading

கேட்டனன் = வீடணன் கூறிய அறிவுரைகளை கேட்டான் இராவவனன் 

இருந்தும் = இருந்தாலும் 

அக் கேள்வி தேர்கலாக் = கேட்டதின் பொருள் ஒன்றும் புரியவில்லை. 

கோட்டிய சிந்தையான் = கோட்டம் என்றால் வளைவு. சிந்தனை நேராக இல்லை அவனுக்கு 


உறுதி கொண்டிலன் = வீடணன் கூறியவை எல்லாம் தனக்கு நல்லது என்று உறுதியாக  அவன் நினைக்கவில்லை 


மூட்டிய தீ என = மூட்டப்பட்ட தீ போல 

முடுகிப் பொங்கினான் = சுழன்று எழுந்தான் 


ஊட்டு அரக்கு  = உருகிய அரக்கு  

ஊட்டிய அனைய  ஒண் கணான். = கண்ணில் விட்டது போல சிவந்த கண்களை உடையவன் 


என்னென்ன பாடங்கள்...


முதலாவது, நல்லவர்கள் சொன்ன அறிவுரைகளை மனம் ஏற்காமல் இருப்பது. 

இரண்டாவது, நடந்தவற்றில் இருந்து பாடம் படிக்காமல் இருப்பது 

மூன்றாவது, சிந்தை நேர்மையாக இல்லாமல் இருப்பது 

நான்காவது, கோபம் கொள்வது 


அழிவுக்கு வேறு என்ன வேண்டும்? 


காமம் ஒரு புறம். கோபம் மறு புறம். மூளை வேலை செய்யுமா? 


சரி, அது போகட்டும், அதுக்கும் வீடணன் அடைக்கலத்துக்கும் என்ன சம்பந்தம்? 


இருக்கே...அது என்னன்னா ....


Thursday, October 8, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - ஒரு முன்னுரை

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - ஒரு முன்னுரை 


வாழ்கிற காலம் எல்லாம் வாழ்ந்து விட்டு, நன்றாக அனுபவித்து விட்டு, போர் என்று வந்த போது, இராவணனை விட்டு விட்டு இராமன் பால் வீடணன் போனது சரியா?  தவறோ சரியோ, இறுதி வரை கூட இருந்திருக்க வேண்டாமா?


என்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு என்று வள்ளுவம் பேசுகிறதே. 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_8.html

Pl click the above link to continue reading


ஊருக்கு ஒரு ஞாயம், இராமன் அடியார்களுக்கு ஒரு ஞாயமா? என்ற கேள்வி பிறக்காமல் இல்லை. 

கும்பகர்ணனும், இந்திரஜித்தும் இராவணனுடன் போரிட்டு உயிர் விட்டார்கள். வீடணன் மட்டும் இராவணனை விட்டு விட்டு இராமன் பக்கம் போய் விட்ட்டான்.


போனது மட்டும் இல்லை, இராவணனைப் பற்றிய இரகசியங்களை எல்லாம் இராமானுக்குச் சொல்லித் தந்தான். இது எந்த ஞாயத்தில் சேர்ந்தது? 


இது துரோகம் இல்லையா? உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த வேலை இல்லையா?


இப்படி ஒரு நிகழ்வு ஏன் நிகழ்ந்தது? இதன் மூலம் காப்பியம் நமக்குச் சொல்ல வரும்  செய்திதான் என்ன?


வாருங்கள், ஆராய்வோம்.



Monday, October 5, 2020

திருக்குறள் - நாடு

 திருக்குறள் - நாடு 

தமிழ் படித்து என்ன பலன்? அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை நலம் தெரியும், அவர்கள் வாழ்ந்த முறை தெரியும். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது? 

நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான அறிவியல், பொருளாதாரம், கணிதம், போன்றவற்றைப் படித்தால் ஏதாவது வேலை கிடைக்கும். நாலு காசு பார்க்கலாம். இல்லையா?


அது ஒரு புறம் இருக்கட்டும். அதற்கு பின்னால் வருவோம். 

ஒரு நாடு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் சில குறிப்புகள் தருகிறார். அவை என்னென்ன  என்று பார்ப்போம்.

பாடல் 

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_5.html

(click the above link to continue reading)


தள்ளா விளையுளும் = குறைவில்லாத விளைச்சலை செய்யும் உழவர்களும் 

தக்காரும் = அற வழியில் நிற்கும் சான்றோர்களும் 

தாழ்விலாச் செல்வரும் = குறைவில்லாத செல்வர்களும் 

சேர்வது நாடு = சேர்ந்து இருப்பது நாடு 


போதுமா ? இந்த மூன்று பேர் மட்டும் இருந்தால் போதுமா? அது ஒரு சிறந்த நாடாகி விடுமா? 


பொருளாதாரத்தின் அடிப்படை சித்தாந்தம் என்ன என்றால் எதை உற்பத்தி செய்வது, எவ்வளவு உற்பத்தி செய்வது, யார் உற்பத்தி செய்வது, யாருக்காக உற்பத்தி செய்வது, உற்பத்தி செய்ததை என்ன விலைக்கு விற்பது? 

இது ஒரு மிக மிக அடிப்படையான  கேள்வி. 

இந்தக் கேள்விகளுக்கு விடை காண பொருளாதாரத்தில் பல கோட்பாடுகள் உண்டு.


முதலாளித்துவம் (capitalism ) என்ற கோட்பாட்டில் எல்லாமே சந்தை நிர்ணயிக்கும். எது, எவ்வளவு, யார், என்ன விலை என்பதெல்லாம் சந்தை  முடிவு செய்யும். 


கம்யூனிசம், சோசியலிசம் போன்ற கோட்பாடுகளில் அரசாங்கம் முடிவு செய்யும். 

இந்தியா போன்ற நாடுகளில் இரண்டும் கலந்து முடிவு செய்யப் படுகிறது. 


யார் முடிவு செய்தாலும், பொருளாதாரத்தில் உள்ள ஒரு சூத்திரம் என்ன என்றால்,  ஒருவரே எல்லாவற்றையும் செய்ய முடியாது. ஒருவருக்கு, அல்லது ஒரு நாட்டுக்கு  எது நன்றாக வருமோ அதைச் செய்ய வேண்டும். மற்றதை பிறரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். 


உதாரணமாக, நானே உழுது, பயிர் செய்து,  துணி நெய்து, மருத்துவம் பார்த்து, என் வீட்டை நானே கட்டி, எனக்கு நானே மருத்துவம் பார்த்து கொள்வது என்பது நடக்காது. எனக்கு என்ன நன்றாக வருமோ அதை நான் செய்வேன். அதில் கிடைக்கும்  வருமானத்தைக் கொண்டு மற்றவற்றை வாங்கிக் கொள்வேன். 


நாடும் அப்படித்தான். ஒரு நாடு உணவு உற்பத்திச் செய்யும், இன்னொரு நாடு ஆயுதம் செய்யும், இன்னொரு நாடு மென் பொருள் செய்யும். இவற்றை வர்த்தக பரிமாற்றத்தின் மூலம்  பரிமாற்றிக் கொள்ளலாம். (Trade ).


Consumer Surplus, Theory Comparative Advantage, Division of  labour என்று பல சித்தாந்தங்கள் உண்டு. 


உனக்கு உழவு செய்ய முடியாதா, விடு. உனக்கு ஆகாய விமானம் செய்ய வருமா? செய். அதை விற்று, அந்தக் காசில் உணவை இறக்குமதி செய்து கொள்ளலாம். 

இப்படித்தான் நாடுகள்  செயல் படுகின்றன. 


ஆனால், வள்ளுவர் சொல்கிறார், அது சரி அல்ல. 


ஒரு நாட்டுக்குத் தேவையான அனைத்து உணவுப் பொருள்களையும் அந்த நாடே  உற்பத்தி செய்ய வேண்டும் என்று.  இறக்குமதி செய்வதெல்லாம் சரி அல்ல என்கிறார். 


ஏன்?


சாதாரண நாட்களில் இறக்குமதி செய்து கொள்ளலாம். ஒரு நெருக்கடி வந்து விட்டால், போர் வந்து விட்டால், கோரனா போன்ற பேரிடர் வந்து விட்டால், உணவு உற்பத்தி செய்யும் நாடுகள்  ஏற்றுமதியை நிறுத்தி விடும். 

உணவு இல்லாமல் என்ன செய்வது? ஆகாய விமானத்தைச்  சாப்பிட முடியுமா?

உணவுக்கு மாற்று எதுவும் கிடையாது. உணவு இல்லை என்றால் கொஞ்சம் தங்கம் தின்ன முடியுமா? நிறைய அமெரிக்கன் டாலர் இருக்கிறது என்று அதை சாப்பிட முடியுமா? மக்கள் பட்டினியால் இறந்து போவார்கள். அல்லது பெரிய கலவரம்  வெடிக்கும். 


எனவே குறைவில்லா உணவு உற்பத்தி உள்நாட்டிலேயே நடக்க வேண்டும். உணவுக்காக இன்னொரு நாட்டை   எதிர் பார்த்து இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், அது ஒரு நல்ல நாடு அல்ல. 


இன்னும் அந்த இரண்டு வார்த்தைக்கு அர்த்தம் முடியவில்லை....தொடரும் 




Saturday, October 3, 2020

பெரிய புராணம் - இளையான் குடி மாற நாயனார் புராணம்

 பெரிய புராணம் - இளையான் குடி மாற நாயனார் புராணம்


இறைவனை  அடைய என்ன வழி?  என்ன வழி என்று எத்தனையோ பேர் தேடி த் தேடி அலைகிறார்கள். 


பூஜை, ஆச்சாரம், அனுஷ்டானம், பாராயணம், ஷேத்ராடனம் என்று என்னென்ன முடியுமோ செய்கிறார்கள். படிப்பு ஒரு பக்கம், பெரியவர்கள் பேசுவதை கேட்பது ஒரு பக்கம். மிகப் பெரிய முயற்சிகள் செய்து கொண்டே இருக்கிறார்கள். 

அவர்கள் ஒரு பக்கம். 


இதெல்லாம் பத்தி ஒண்ணும் கவலைப் படாமல், தான் வேலையை ஒழுங்கா செய்து கொண்டு இருந்தவர்களைத் தேடி இறைவன் வந்து கூட்டிக் கொண்டு போன கதைகள் நிறைய இருக்கின்றது.


கடவுள், சுவர்க்கம், ஞானம், யோகம் என்று இதைப் பற்றியெல்லாம் அவர்கள் அலட்டிக் கொள்ளவே இல்லை. அவர்களைத் தேடி இறைவன் வந்தான். 


பெரிய புராணத்தில் இளையான் குடி மாற நாயனார் என்று ஒருவர் இருந்தார். அவர் ஒண்ணுமே செய்யல. அடியவர்களுக்கு உணவு அளிப்பார். அவ்வளவுதான். வேற ஒரு ஒன்றும் செய்யவில்லை. 


சிவ பெருமான் நேரில் வந்து, கூட்டிக் கொண்டு போனார். 


எவ்வளவு எளிய வழி? எதுக்கு கிடந்து கஷ்டப்படனும் ?


அவருடைய வரலாற்றை 27 பாடல்களில் சேக்கிழார்  வடிக்கிறார். 


அந்த தர்ம வேலைக்கு நடுவில், அவருக்கும் அவர் மனைவிக்கும் இருந்த அந்த அற்புதமான  உறவையும் கோடி காட்டி விட்டுப் போகிறார் சேக்கிழார். 


அவருடைய வரலாற்றை சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_3.html

திருக்குறள் - இன்சொல் - முகனமர்ந்து இன்சொல்

 திருக்குறள் - இன்சொல் - முகனமர்ந்து இன்சொல் 


நம்மிடம் ஒரு உதவி வேண்டி ஒருவர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு கொஞ்சம் பொருள் உதவி செய்வது பெரியதா அல்லது அவருடன் சிரித்த முகத்தோடு இனிமையாக பேசி அனுப்புவது பெரியதா?


பொருள் கொடுப்பதுதான் கடினம் என்று நாம் நினைப்போம். ஆனால், வள்ளுவர் அப்படி நினைக்கவில்லை. இன்முகத்தோடு இனிய சொல் பேசுவதுதான் பெரிய விஷயம் என்று கூறுகிறார். 


பாடல் 

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனஅமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்


பொருள் 

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post.html


அகன் = அகம், உள்ளம், மனம் 

அமர்ந்து = விரும்பி 

ஈதலின் = கொடுத்தலை விட 

நன்றே = நல்லது 

முகன = முகம் 

அமர்ந்து = மலர்ந்து 

இன்சொலன் = இனிய சொல்லை சொல்பவன் 

ஆகப் = ஆகும்படி 

பெறின் = இருக்கப் பெற்றால் 


அது சரி, வள்ளுவர் சொல்லிவிட்டால் அது சரியாகி விடுமா?  நாலு காசு கொடுக்குறது எப்படி, சும்மா சிரிச்சு பேசி அனுப்பி விடுவது எப்படி ? சும்மா, ஏதோ இன் சொல்  அப்படினு ஒரு அதிகாரம் வைத்து விட்டார். எனவே, இன்சொல் சிறந்து என்று  சொலிக்கிறார். இதை எல்லாம் எப்படி நம்புவது? நாட்டாமை  தீர்ப்பை மாத்திச் சொல்லு என்று சொல்லத் தோன்றுகிறது அல்லவா?


வள்ளுவர் அப்படியெல்லாம் சும்மா சொல்பவர் அல்ல. 


சிந்திப்போம். 


முதலாவது, இன்சொல் என்றால் ஏதோ பல்கலைக் காட்டி சிரிக்க சிரிக்க பேசுவது அல்ல.  இன்சொல் என்றால் என்ன என்று முந்தைய குறளில் பார்த்தோம்.  இன்சொல் என்றால் ஈரம் அளவி ( ,அன்புடன், கருணையுடன்), படிறு இன்றி  (குற்றம் இல்லாமல்), செம்பொருள் (அறத்துடன் கூடிய உயர்ந்த சொற்கள்). இதைச் சொல்ல முடியுமா நம்மால்?  


அறம் வேண்டாம், குற்றம் கூட இருந்து விட்டுப் போகட்டும். அன்போடு பேச முடியுமா?  

நம்மிடம் உதவி என்று ஒருவன் வந்து நின்றால் மனதுக்குள் என்னவெல்லாம் ஓடுகிறது?

"எப்படி ஆடுனான் ...வேணும் நல்லா...இப்ப பாரு உதவின்னு வந்து நிக்கிறான்"

"சொன்னா கேட்டாத்தானே...எல்லாம் எனக்குத் தெரியும்னு அகம்பாவம் புடிச்சு அலையறது" 

"எனக்கு அப்பவே தெரியும்...இது ஒரு நாள் என் வாசல்ல வந்து நிக்கும்னு"

"இவனுக்கெல்லாம் பட்டாத்தான் தெரியும் " 


என்று மனதுக்குள் எவ்வளவோ ஓடும்.


இதில் அன்பு எங்கே இருக்கிறது. 


முன்பு என்ன நடந்து இருந்தாலும், அவற்றை மறந்து அன்போடு பேச வேண்டும். 

இரண்டாவது, சிலர் நல்ல விஷயத்தைக் கூட கடுமையாகச் சொல்லுவார்கள்.  

"நல்லா படிடா...படிச்சு பெரிய ஆளாகி, எல்லாருக்கும் நல்லா உதவி செய்..அது உன்னால முடியும் " என்று சொல்வதை விடுத்து 


"படிக்கலேனா மாடு மேய்க்கத்தான் போற...நீ பிச்சை எடுக்கத்தான் போற...தெருத் தெருவா  அலையப் போற" என்று சொல்லுவார்கள். 


அர்த்தம் ஒன்றுதான். இரண்டுக்குப் பின்னாலும் பிள்ளை மேல் உள்ள அன்பு இருக்கிறது. ஆனால், முகம் மலர்ந்து இனிமையாக சொல்லவில்லை. அன்பு இருந்தால் மட்டும் போதாது, அதை அழகாக வெளிப்படுத்தவும் தெரிய வேண்டும். 


மூன்றாவது, பல பேர் உதவி செய்யும் போது , உதவி பெறுபவனை ஏதோ ஒரு விதத்தில் அவமானப் படுத்திதான் உதவி செய்கிறார்கள். பெறுபவன் மனம் வருந்தும்படி  செய்கிறார்கள். அதை விட, அன்போடு, இனிமையாக பேசி அனுப்புவது நல்லது. 


நான்காவது,  பொருள் பெறுபவன் அதை வைத்து என்ன செய்யப்போகிறான் என்பது முக்கியம்.  சீட்டு விளையாடனும், தண்ணி அடிக்கணும், ஒரு ஆயிரம் ரூபாய் கொடுங்கள்  என்றால், அன்போடு கொடுத்து உதவலாமா அல்லது  அப்படி செய்வது தவறு என்று  அன்போடு, இதமாக சொல்லி மறுத்து அனுப்புவது நல்லதா?   இன்சொல்லில் அறம் இருக்கிறது. (அன்பு, குற்றம் அற்ற , அறச்சொல் தான் இன்சொல் எனப்படுவது). 


ஐந்தாவது, இன்சொல் சொல்வது மிகக் கடினம். அதனால் தான் வள்ளுவர் சொல்கிறார்  "பெறின்". செய்ய முடிஞ்சால் என்று அர்த்தம். ஒரு நாளைக்கு  பத்து மணி நேரம் படித்தால்  அந்த பரீட்சை பாஸ் பண்ணி விடலாம் என்றால், 10 மணி நேரம் படிப்பது என்பது  முடியாது என்று அர்த்தம். 


நாம் வார்த்தைகளின் மதிப்பு தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அதனால் தான்  அதை விரயம் பண்ணிக் கொண்டு இருக்கிறோம். மதிப்பு தெரிந்தால்  அதை அனாவசியமாக விரயம் பண்ணுவோமா? 


குழந்தை கையில் உள்ள பொற் கிண்ணம் போல என்று மணிவாசகர் கூறியது போல,  மதிப்பு தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். 


இனிய சொல் , பொருளை விட உயர்ந்தது. 

இன்சொல் பேசிப் பழகுவோம்.