Wednesday, November 3, 2021

கம்ப இராமாயணம் - மூவகை மக்கள்

கம்ப இராமாயணம் - மூவகை மக்கள் 


நம்மிடடையே முன்பு ஒரு வழக்கம் இருந்து. அதாவது, எந்த நல்ல காரியம் நடந்தாலும், நடக்க இருந்தாலும், அதற்கு சம்பந்தப் பட்டவர்களுக்கு பெரியவர்கள் அறிவுரை, அறவுரை வழங்குவார்கள். திருமணம், முடி சூட்டுதல் போன்ற நிகழ்வுகளில் பெரியவர்கள் நல்லவற்றை எடுத்துச் சொல்லும் வழக்கம் இருந்தது. 


சொல்வது ஒரு புறம் இருக்கட்டும். கேட்கணுமே? இப்போதெல்லாம் யார் கேட்கிறார்கள்? சொல்லும் பெரியவர்களும் இல்லை, கேட்கும் ஆட்களும் இல்லை. 


சுக்ரீவனுக்கு முடி சூட்டியாகி விட்டது. 


அவனுக்கு இராமன் சில நல் உரைகளை வழங்குகின்றான். 


வசிட்டரிடமும், கௌசிகனிடமும் படித்த இராமன் சொல்கின்றான் என்றால் அது எவ்வளவு உயர்வாக இருக்கும். சுக்ரீவனுக்கு சொல்வது போல கம்பர் நமக்கும் சொல்கிறார். 


அரசாங்கத்தில் பணம் வந்து குவியும். இன்றெல்லாம் இத்தனை இலடசம் கோடி என்று சொல்கிறார்கள். அவ்வளவு பணம் வரும் போது அதன் அருமை தெரியாது. இந்தா உனக்கு கொஞ்சம் இலவசம், இந்தா உனக்கு கொஞ்சம் இலவசம், என்று மனம் போன வழியில் செலவழிக்கத் தோன்றும். அதுதான் ஆற்று வெள்ளம் போல வந்து கொண்டே இருக்கிறதே என்ற அலட்சியம் வரும். அப்படி இருக்காதே. பொதுப் பணத்தை மிக மிக கவனமாக கையாள வேண்டும். 


இரண்டாவது, இந்த உலகில் மூன்று விதமான மக்கள் இருக்கிறார்கள். நட்பு, பகை இதுதானே நமக்குத் தெரியும். மூன்றாவது ஒன்று இருக்கிறது. நட்பும் இல்லாமல், பகையும் இல்லாமல். அதற்கு நொதுமல் என்று பெயர். தெருவில் ஒருவர் போகிறார். அவருடன் எனக்கு நட்பும் இல்லை, பகையும் இல்லை. எல்லாம் துறந்த முனிவர்களுக்கே இந்த மூன்று பேரும் உண்டு என்றால் அரசனுக்கு சொல்லவா வேண்டும்? எனவே, மக்களை சரியாக இனம் பிரித்து நடந்து கொள்.இல்லை என்றால் பெரும் துன்பம் வரும்.


பாடல் 



 தேவரும் வெஃகற்கு ஒத்த செயிர்

      அறு செல்வம்அஃது உன்

காவலுக்கு உரியதுஎன்றால், அன்னது

      கருதிக் காண்டி;

ஏவரும் இனிய நண்பர்,

      அயலவர், விரவார், என்று இம்

மூவகை இயலோர் ஆவர்,

      முனைவர்க்கும் உலக முன்னே.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_3.html


(Pl click the above link to continue reading)



தேவரும் = தேவர்களும் 


வெஃகற்கு ஒத்த = விருப்பப்படும் 


செயிர் அறு செல்வம்  = குறம் அற்ற செல்வம் 


அஃது உன் = அது உன் 


காவலுக்கு உரியது என்றால் = காவலில் உள்ளது என்றால் 


அன்னது = அதை 


கருதிக் காண்டி; = கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள் 


ஏவரும்  = எல்லோருக்கும் 


இனிய நண்பர் =  நட்பு 


அயலவர் = நட்பு அல்லாதவர் 


விரவார் = நொதுமல் உடையார் 


என்று = என்று 


இம் மூவகை இயலோர் ஆவர் = இந்த மூன்று வகையான மக்கள் 


முனைவர்க்கும் = முனிவர்களுக்கும் 


உலக முன்னே = இந்த உலகத்தில் உண்டு 



மக்கள் வரிப் பணத்தை கண்ணும் கருத்துமாக காவல் செய்.  இந்த ஒரு வரியை எல்லா அரசியல் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் கடை பிடித்தால் நாடு எப்படி இருக்கும்? ஒரு வரி. 


மக்களை தெரிந்து எடுத்து உறவு கொள். 


நல்ல அறிவுரைத்தானே?


நமக்கும் பொருந்தும் தானே?



Tuesday, November 2, 2021

திருப்பள்ளி எழுச்சி - இந்த உலகம் மிக இனிமையானது

 திருப்பள்ளி எழுச்சி - இந்த உலகம் மிக  இனிமையானது 


இந்த உலகம் மிக இனிமையானது என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா? 


என்ன இனிமை? எப்பப் பாரு ஏதாவது ஒரு சங்கடம், சிக்கல், துக்கம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை போன்ற செயல்கள். சுற்றுப் புற சூழ்நிலை மாசு. அரசாங்கங்கள் செய்யும் அராஜாகங்கள். 


வேலை செய்யும் இடத்தில் சிக்கல், போட்டி, பொறாமை, சூது. 


வீட்டில் உறவுகளில் சிக்கல்.


இப்படி எங்கு பார்த்தாலும் பிரச்சனைகள் நிறைந்து கிடக்கிறது. இடையிடையே சில சந்தோஷங்கள் வந்தாலும், பெரும்பாலும்  துன்பமே மண்டிக் கிடக்கிறது. 


எது எப்படி இருந்தாலும், முதுமை வந்து விட்டால் பலப்பல துன்பங்கள். 


இருந்தும், மணிவாசகர் சொல்கிறார்....


மேலுலகத்தில் உள்ள தேவர்கள் எல்லாம் "ஐயோ, நாம் பூமியில் போய் பிறக்கவில்லையே" என்று வருந்துகிரார்களாம். இப்படி அனாவசியாம இந்த மேலுலகத்தில் நேரத்தை வீணே கழித்துக் கொண்டு இருக்கிறோமே என்று வருந்துகிரார்களாம். 


திருமாலுக்கும், பிரமனுக்கும், சிவனுக்கும் இங்கு வருவதில் அவ்வளவு விருப்பமாம். அவர்களே அங்கு போகும் போது, நாமும் அங்கு போனால் என்ன மறைய தேவர்களும் விரும்புவார்களாம். 


பாடல் 


புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்

போக்குகின் றோம்அவ மேயிந்தப் பூமி

சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்

திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்

அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்

படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்

அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்

ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_2.html


(pl click the above link to continue reading)



புவனியிற் = இந்த பூ உலகில் 


போய்ப்பிற வாமையின் = போய் பிறக்காமல் 


நாள்நாம் = நாட்களை நாம் 

போக்குகின் றோம் = போக்கிக் கொண்டு இருக்கிறோம் 


அவ மே = அனாவசியமாக 


யிந்தப் பூமி = இந்த பூமி 


சிவனுய்யக் = சிவன் நம்மை காக்க 


கொள்கின்ற வாறென்று = ஏதுவான இடம் என்று 


 நோக்கித் = நோக்கி 


திருப்பெருந் துறையுறை வாய் = திருப்பெரும்துறை என்ற தலத்தில் உறைபவனே 


திரு மாலாம் = திருமால் 


அவன்விருப் பெய்தவும்  = அவருக்கும் விருப்பம் இங்கே வர 


மலரவன் = தாமரை மலரில் வீற்று இருக்கும் பிரமன் 


ஆசைப் படவும்  = இங்கு வர ஆசைப் படவும்


நின்  = உன் 


அலர்ந்த = மலர்ந்த 


மெய்க் கருணையும் = உயர்ந்த கருணையும் 


 நீயும் = நீயும் 


அவனியிற் புகுந் = இந்த உலகில் புகுந்து 


தெமை ஆட்கொள்ள வல்லாய் = எங்களை ஆட்கொள்ள வல்லவன் 


ஆரமு தே = அருமையான அமுதமே 


பள்ளி எழுந்தரு ளாயே. = பள்ளி எழுந்து அருளாயே 


மூவரும் இங்கு வந்து நம்மை ஆட்கொள்ள மிக விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். 


அவர்களுக்கே பிடித்து இருக்கிறது என்றால், இது ஒரு நல்ல இடமாகத்தானே இருக்கும்?


நமக்கு அருமை தெரியவில்லை. 


இரசிப்போம். அவ்வளவு இனிமையானது இந்த பூமி. 




Monday, November 1, 2021

திருக்குறள் - நாடாச் சிறப்பு

 திருக்குறள் - நாடாச் சிறப்பு 


"அவனுக்கு படிப்பில் அவ்வளவா ஆர்வம் இல்லை. ஆனால் விளையாட்டில் நல்ல ஆர்வம் இருக்கு" என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம் அல்லவா?


அது ஒரு புறம் இருக்கட்டும். 


ஒருவர் மேல் அன்பு செலுத்துகிறோம். அப்புறம் என்ன ஆகும்? அந்த அன்பு எப்படி மேலும் வளரும்? அந்த அன்பு என்ன செய்யும்? அன்பு எங்கு போய் முடியும்? அன்புக்கு வளர்ச்சி உண்டா அல்லது அது எப்போதும் ஒரே மாதிரி இருக்குமா?


இது போன்ற ஆராய்சிகளை எடுத்து வைத்துக் கொண்டு, வள்ளுவர் பதில் தருகிறார். 


நாம் சிந்திதாவது இருப்போமா? அன்பு செய்கிறோம்....அவ்வளவுதான் தெரியும். அதுக்கு மேல என்ன என்று சிந்தித்து இருக்க மாட்டோம். மிஞ்சி மிஞ்சி போனால் பதிலுக்கு அன்பை எதிர்பார்ப்போம். அவ்வளவுதான். 


வள்ளுவர் அன்பின் பரிணாமத்தை மிக பெரிதாக விவரிக்கிறார். 


என்ன என்று பார்ப்போம். 


பாடல் 


அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பென்னும் நாடாச் சிறப்பு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post.html


(please click the above link to continue reading)



அன்புஈனும் ஆர்வம் உடைமை  = அன்பு ஆர்வம் உடைமையைத் தரும் 

 

அதுஈனும் = அந்த ஆர்வம் உடைமை 


நண்பென்னும் = நண்பு என்று சொல்லப்படும் 


நாடாச் சிறப்பு = தேடாத சிறப்பைத் தரும் 


அன்பு ஆர்வத்தைத் தரும். ஆர்வம் நண்பைத் தரும் என்கிறார். இதில் என்ன இருக்கிறது ?


அன்பு என்பது நமக்கு தொடர்பு உடையவர் மேல் நாம் கொள்ளும் பரிவு, பாசம், நேசம். 


ஆர்வம் என்பது அந்தத் தொடர்பு உடையவர்களுடன் தொடர்பு உடையவர்கள் மேல் செலுத்தும் பரிவு, பாசம், நேசம் எல்லாம்.


அது என்ன தொடர்பு உடையவர்களுடன் தொடர்பு உடையவர்கள்? 


நமக்கு நம் பிள்ளைகள் மேல் அன்பு இருக்கும். பிள்ளைகள் வளர்கிறார்கள். அக்கம் பக்கம் இருக்கும் இருக்கும் மற்ற பிள்ளைகளோடு விளையாடுகிறார்கள். இவர்கள் அவர்கள் வீட்டுக்குப் போகிறார்கள். அவர்கள் நம் வீட்டுக்கு வருகிறார்கள். 


சில வருடங்கள் கழித்து, அந்த நட்பு வட்டாரத்தில் உள்ள ஒரு பெண் பிள்ளையை, நம் பையன் மணந்து கொள்கிறான். இப்போது அந்த பெண் மேல் தனி பாசம் வருகிறது அல்லவா? நேற்று இல்லாத பாசம் இன்று. காரணம், மகனின் மனைவி என்பதால். 


அதே போல் மருமகனுக்கும். 


யாரோ ஒரு பெண். அவள் மேல் அன்பு வருகிறது அல்லவா?


அந்தப் பெண்ணின் தாயார், தந்தை மேல் நமக்கு ஒரு ஈடுபாடு வருகிறது. அவர்களுக்கு ஒன்று என்றால் முன்னே போய் நிற்கிறோம். அந்தப் பெண்ணின் உடன் பிறப்பு மேலும் நமக்கு அக்கறை வருகிறது. ஒரு நாள் அந்தப் பெண், "என் கல்லூரியில் என்னோடு படித்தவர்கள்" என்று சில நண்பர்களை அழைத்து வருகிறாள். நாம் அவர்கள் மேலும் ஆர்வம் கொள்கிறோம் அல்லவா?


ஒருவர் மேல் வைத்த அன்பு, அந்த ஒருவர் தொடர்புள்ள மற்றவர் மேலும் படர்கிறது அல்லவா? அது தான் அன்பின் பரிணாம வளர்ச்சி. அதைத்தான் வள்ளுவர் "ஆர்வம்" என்கிறார். 


இப்படி அது விரிந்து கொண்டே போகும். அந்தப் பெண்ணுக்கு ஒருகுழந்தை பிறக்கும். பேரப் பிள்ளை மேல் அன்பு. 


இப்படி விரித்துக் கொண்டே போனால், எல்லோர் மேலும் அன்பு வரும். 


அப்படி எல்லோர் மேலும் அன்பு பிறந்தால், எல்லோரும் நம் மேல் பதிலுக்கு அன்பு செலுத்துவார்கள் தானே ? நாம் போய் கேட்கவில்லை. நாம் விரும்பவில்லை. தானே வரும். "நாடாமல் வரும்". நாம் எல்லோரிடமும் அன்பாக இருந்தால் அவர்கள் தானே நம் மீது அன்பாக இருப்பார்கள். நாம் கேட்காமலேயே அந்த சிறந்த நண்பு கிடைக்கும். 


இப்படி ஒவ்வொருவரும் இருந்துவிட்டால்? இந்த உலகமே ஒரு அன்பு கூடமாகி விடும் அல்லவா? யாருமே யாருக்கும் எதிரியாக இருக்க மாட்டார்கள் அல்லவா?


எப்படி ஒரு உயர்ந்த சிந்தனை கொண்ட ஒரு பாரம்பரியத்தில் வந்த நாம், எப்படி ஆகி விட்டோம். 


உடன் பிறப்புகளுக்குள் அன்பு இல்லை. 


மாமியார் மருமகள் சண்டை என்பது இல்லாவிட்டால்தான் அதிசயம்.


மீட்டு எடுக்க வேண்டாமா?


கணவன் மேல் அன்பு என்றால், அவன் சார்ந்த அனைவர் மேலும் அன்பு இருக்க வேண்டும். 


அதே போல் மனைவி மேல் அன்பு என்றால் அவள் சார்ந்த அனைவர் மேலும் அன்பு இருக்க வேண்டும். 


மகன் ஆகும், மருமகள் ஆகாது என்பது எல்லாம் குறுகிய சிந்தனை. 


இல்லறம் என்பது அன்பின் விரிவு. ஒவ்வொரு நாளும் அன்பு விரிய வேண்டும். நேற்றை விட இன்று. இன்றை விட நாளை என்று அன்பு மேலும் மேலும் விரிய வேண்டும். 


குறள் படிப்பது அதை வாழ்க்கை நெறியாக்க. 


முயன்று பார்ப்போமே. 


இன்றே மனைவியின்/கணவனின் சுற்றத்தாரை கூப்பிட்டு நலம் விசார்திதால் என்ன தீபாவளி நல் வாழ்த்துச் சொன்னால் என்ன? 


இன்றிலிருந்து ஆரம்பிப்போம். 


அன்பு பெருகட்டும். 



Sunday, October 31, 2021

நான்மணிக்கடிகை - கெட்டறிப கேளிரான் ஆய பயன்

நான்மணிக்கடிகை - கெட்டறிப கேளிரான் ஆய பயன்


யார் உறவு, யார் உறவு அல்லாதார் என்று நமக்கு ஒரு துன்பம் வரும் போதுதான் தெரியும். 


நன்றாக இருக்கும் காலத்தில் எல்லோரும் நட்பாக உறவாக இருப்பார்கள். துன்பம் வந்தால், எங்கே நம்மிடம் ஏதாவது கேட்டு விடுவானோ என்று எண்ணி மெதுவாக நகன்று விடுவார்கள். 


அதிலும் ஒரு நன்மை இருக்கிறது. உண்மையான உறவும் நட்பும் அப்போதுதான் தெரியும். 


உலகில் ஒவ்வொன்றையும் அறிந்து கொள்ள ஒரு வழி இருக்கிறது. 


நவமணிகளின் தரம் அறிய அவற்றை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். ஒரு குதிரை எப்படி இருக்கிறது என்று அறிய அதன் மேல் சேணம் அமைத்து, ஓட்டிப் பார்த்து அறியலாம். பொன் எவ்வளவு உயர்ந்தது என்று அறிய அதை உருக்கிப் பார்க்க வேண்டும். உறவினர்களின் தரம் நாம் துன்பத்தில் இருக்கும் போது தெரியும். 


பாடல் 


மண்ணி யறிப மணிநலம் பண்ணமைத்து

எறிய பின்னறிப மாநலம் மாசறச்

சுட்டறிப பொன்னின் நலங்காண்பார் கெட்டறிப

கேளிரான் ஆய பயன்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_31.html


(Please click the above link to continue reading)



மண்ணி யறிப மணிநலம்  = கழுவி சுத்தம் செய்து அறிக நவமணிகளின் தரத்தை 


பண்ணமைத்து = சேணம் கடிவாளம் இவற்றை அமைத்து 

எறிய = ஏறி அமர்ந்த 


பின்னறிப = பின்னால் அறிக 


மாநலம் = குதிரையின் தரம் 


மாசறச் = குற்றமற்ற 


சுட்டறிப = உருக்கி அறிக 


பொன்னின் நலங்காண்பார் = தங்கத்தின் தன்மை அறிய வேண்டுபவர் 


கெட்டறிப = கெட்ட பின், அதாவது துன்பம் வந்த காலத்து அறிக 


கேளிரான் ஆய பயன் = உறவினர்களால் உண்டாகும் பயன். 



நல்ல நாளில் நமக்கும் உறவின் அருமை தெரியாது. 


உடம்புக்கு முடியவில்லை என்று படுத்துக் கொண்டால் கணவன் அல்லது மனைவியின் அருமை அப்போது தான் தெரியும். மத்த நாளில் அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். உடம்புக்கு முடியவில்லை என்றால் தான் ஒருவரின் அருமை மற்றவருக்குத் தெரியும். 


அது  இரண்டு விதத்திலும் தெரியும். 


உருக்கமாக கவனித்துக் கொண்டால் அருமை தெரியும். 


கண்டு கொள்ளாமல் இருந்தால்,அது அவ்வளவுதான் என்று தெரியும். 


எப்படி என்றாலும் உறவின் தரம் துன்பத்தில் தெரியும். 


இதையே வள்ளுவரும்,


"கேட்டிலும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்" என்றார். 


கெடுதலிலும் ஒரு நன்மை இருக்கிறது. அது உறவினர்களை அளக்கும் ஒரு அளவு கோல் என்றார். 



Tuesday, October 26, 2021

வில்லி பாரதம் - என்னை யார் நினைப்பார் ? - பாகம் 2

 

 வில்லி பாரதம் - என்னை யார் நினைப்பார் ? - பாகம் 2 


((இதன் முதல் பாகத்தை கீழே காணலாம்))



பாடல் 

தப்போதாமற்றம்பியர்க்குந் தருமக்கொடிக்குமிதமாக

அப்போதுணரும்படியுணர்ந்தா னசோதைமகனையறத்தின்மகன்

எப்போதியாவரெவ்விடத்தி லெம்மைநினைப்பாரெனநின்ற

ஒப்போதரியானுதிட்டிரன்ற னுளப்போதிடைவந்துதித்தானே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/2.html


(Pl click the above link to continue reading)


தப்போதாமற்றம்பியர்க்குந் = தப்பு ஓதாமல் தம்பியற்கும் = தவறாகச் சொல்லி யார் மனதையும் நோகச் செய்யாத தர்மன், தன் தம்பிகளுக்கும் 


தருமக்கொடிக்கும் = தர்மத்தின் கொடி போன்றவளான பாஞ்சாலிக்கும் 



இதமாக  = மனதிற்கு இதமாக, நன்மை உண்டாகும் படி 


அப்போதுணரும்படி = அப்போது உணரும் படி 


யுணர்ந்தான =  உணர்ந்தான் 


சோதைமகனை = யசோதையின் மகனான கண்ணனை 


யறத்தின்மகன் = தர்ம தேவதையின் மகனான தர்மன் 


எப்போதியாவரெவ்விடத்தி லெம்மை = எப்போது, யார், எவ்விடத்தில் எம்மை 


நினைப்பாரெனநின்ற = நினைப்பார்கள் என்று நின்ற 


ஒப்போதரியான்  = ஒப்பு + ஓது + அறியான் = தனக்கு ஒப்பு உவமை சொல்லுதற்கு அரியவனான கிருஷ்ணன் 


உதிட்டிரன்ற னுளப்போதிடைவந்துதித்தானே. = உதிட்டிரன் உள்ளத்தில் வந்து அப்போது உதித்தான் 


இறைவன் காத்துக் கொண்டு இருக்கிறான். எப்போது, யார், எந்த இடத்தில் தன்னை அழைப்பார்கள் , போய் உதவி செய்யலாம் என்று. 


கேட்டுத் தான் கொடுக்கணுமா ? அவனுக்கே தெரியாதா? கேட்காமலேயே கொடுத்தால் என்ன?


கொடுக்கலாம் தான். எவ்வளவோ கேட்காமலேயே கொடுத்தும் இருக்கிறான். இந்த அறிவு, இந்த உடல், இந்த மனம், இந்த நாடு, இந்த மொழி என்று எவ்வளவோ நல்ல விடயங்கள் நமக்கு கேட்காமலேயே கொடுத்து இருக்கிறான்.  இந்த ஊரில், இந்த பெற்றோருக்கு, இந்த காலத்தில், இந்த வடிவில், இப்படி இருக்க வேண்டும் என்று நாம் கேட்டோமா? 


இந்த காற்று, மழை, மரம், நிழல், உணவு, ஆரோக்கியம், கணவன்/மனைவி, பிள்ளைகள், உடன் பிறப்பு, நட்பு, சுற்றம் என்று ஆயிரம் ஆயிரம் நல்ல விடயங்கள் நமக்கு கேட்காமலேயே கொடுத்து இருக்கிறான். 


சில சமயம் கேட்டு கொடுப்பதில் சுகம் இருக்கிறது. 


பிள்ளை ஐஸ் கிரீம் வேண்டும் என்று ஆசையாக கேட்கிறான்/ள். ஓடிப் போய் வாங்கி தருகிறோம். அந்தக் குழந்தை சுவைத்து மகிழ்வதை பார்த்து பெற்றோர் மகிழ்வார்கள் அல்லவா? கேட்காமலேயே தினம் ஒரு ஐஸ் கிரீம் வாங்கித் தந்தால், "வேண்டாம் போ " என்று தூக்கி எறிந்து விடும். 


மனைவிக்கு ஆயிரம் பரிசுகள் வாங்கித் தரலாம். ஆனால், அவள் ஆசைப்பட்டு கேட்ட ஒன்றை வாங்கித் தருவதில் உள்ள சுகமே தனி.


இராமனுக்குத் தெரியாதா பொன் மான் என்று ஒன்று இல்லை என்று. வசிட்டரிடமும், விஸ்வாமித்திரரிடமும் பயின்றவனுக்கு இது கூடத் தெரியாதா. 


மனைவி கேட்டு விட்டாள். தன் பொருட்டு எவ்வளவோ துன்பம் அனுபவிக்கிறாள். அவள் ஆசைப் பட்டு கேட்டு விட்டாள். அவளிடம் போய் தர்க்கம் பண்ணிக் கொண்டு இருப்பதில் என்ன சுகம். அவள் கேட்டதை பிடித்துத் தர வேண்டும் என்று கிளம்பி விட்டான். 


அது போல, இறைவனும் காத்துக் கொண்டே இருக்கிறானாம். நினைத்தவுடன் தர்மன் மனதில் வந்து விட்டான்.


கூப்பிடவுடன் யானைக்காக வந்தான், பாஞ்சாலிக்காக வந்தான். 


நமக்கும் வருவான் என்ற நம்பிக்கையை இந்த இலக்கியங்கள் விதைக்கின்றன.


நான் நினைத்தால் வருவானா? எத்தனையோ தரம் நினைத்து இருக்கிறேன். வரவே இல்லை என்றால். 


தர்மன் பிறர் மனம் நோகும்படி தவறாகவே பேச மாட்டானாம். 


இறைவன் மனதில் வர வேண்டும் என்றால் அது தூய்மையாக இருக்க வேண்டாமா. 


நான் மனதை குப்பையாக வைத்து இருப்பேன், இறைவன் வர வேண்டும் என்றால் நடக்குமா?






------------------------------ பாகம் 1 -------------------------------------------------------------------------


வில்லி பாரதம் - என்னை யார் நினைப்பார் ? - பாகம் 1





பாண்டவர்கள் காட்டில் இருக்கிறார்கள். துரியோதனன் சூதில் வென்று பாண்டவர்களை கானகம் அனுப்பி விட்டான். 


நிம்மதியாக இருக்க வேண்டியது தானே? இல்லை. அவனால் முடியாது. எப்போது பொறாமை மனதில் புகுந்து விட்டதோ, நிம்மதி போய் விடும். 


பாண்டவர்களை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று நினைக்கிறான். 


அப்போது அங்கு துர்வாச முனிவர் வருகிறார். அவரை நன்கு உபசரிக்கிறான். அவரும் அதில் மகிழ்ந்து, "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்...தருகிறேன்" என்றார். 


என்ன கேட்டு இருக்க வேண்டும்? 


ஞானம் கேட்டிருக்கலாம். செல்வம் கேட்டு இருக்கலாம். புகழ் கேட்டு இருக்கலாம். வீடு பேறு கேட்டு இருக்கலாம். அதை எல்லாம் விட்டு விட்டான். பாண்டவர்கள் நாசமாகப் போக வேண்டும் என்று நினைத்து "முனிவரே என் மாளிகை வந்து என்னை சிறப்பித்தது போல, பாண்டவர்களிடமும் சென்று நீங்கள் அவர்களுக்கு ஆசி வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான். 


அவன் எண்ணம் என்ன என்றால், துர்வாச முனிவர் சீடர்களுடன்  அங்கு போவார். பாண்டவர்களால் முனிவருக்கும் அவருடைய சீடர்களுக்கும் உணவு வழங்க முடியாது. துர்வாச முனிவருக்கு கோபம் வரும். அவர் பாண்டவர்களை சபிப்பார். பாண்டவர்கள் நாசமாகப் போவார்கள். அது தான் அவன் எண்ணம். 


துர்வாச முனிவரும் அவ்வாறே சென்றார். 


அவரை வரவேற்று உபசரித்து, குளித்து விட்டு வாருங்கள் உணவு அருந்தலாம் என்று தர்மன் அவரை அனுப்பி விட்டான். 


அவர்களிடம் அட்சய பாத்திரம் இருந்தது. ஆனால், அதில் ஒரு நாளைக்கு ஒரு முறை உணவு வரும். கழுவி கவிழ்த்து வைத்து விட்டால் பின் மறு நாள் தான் அதில் உணவு வரும். 


துர்வாசர் வந்த அன்று, பாண்டவர்கள் உணவு உண்டு, பாத்திரத்தை கழுவி வைத்து விட்டார்கள். 


இப்போது என்ன செய்வது?


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_71.html


(Pl click the above link to continue reading)




முனிவர் வருவார். பசிக்கு உணவு இல்லை என்றால் அவருக்கு கோபம் வரும்.  சாபம் தருவார். என்ன செய்வது என்று தவித்துக் கொண்டு இருந்தார்கள். 


இந்தக் கதை எல்லோருக்கும் தெரிந்தது தான். 


தர்மன் கண்ணனை நினைக்கிறான். கண்ணன் வருகிறான். 


இங்கே வில்லிப் புத்தூர் ஆழ்வார் ஒரு அருமையான கவிதை வைக்கிறார். 


பாடல் 


தப்போதாமற்றம்பியர்க்குந் தருமக்கொடிக்குமிதமாக

அப்போதுணரும்படியுணர்ந்தா னசோதைமகனையறத்தின்மகன்

எப்போதியாவரெவ்விடத்தி லெம்மைநினைப்பாரெனநின்ற

ஒப்போதரியானுதிட்டிரன்ற னுளப்போதிடைவந்துதித்தானே.



ப்ளாக் சற்றே நீண்டு விட்டதால், பொருள் விளக்கத்தை அடுத்த பாகத்தில் பார்ப்போமா?



Sunday, October 24, 2021

திருக்குறள் - பிறவியின் நோக்கம்

 திருக்குறள் - பிறவியின் நோக்கம் 


இந்த பிறவி எதற்கு எடுத்ததின் நோக்கம் என்ன? 


தினம் மூன்று வேளை உண்பது, உடுப்பது, படிப்பது, வேலை செய்வது, பணம் சம்பாதிப்பது ...இது போன்ற நோக்கங்களா?


உயிர், உடல் என்று இரண்டு இருக்கிறது என்று ஏற்றுக் கொள்வோம். உயிர் என்று ஒன்று இல்லை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். 


ஒருவர் மேல் அன்பு செய்ய வேண்டும் என்றால், ஒரு உடல் வேண்டும். வெறும் உயிர் அன்பு செய்யுமா? 


எவ்வளவுதான் அன்பு உள்ள அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என்றாலும், இறந்து பல வருடம் கழித்து, ஒரு நாள் இரவு தனியாக ஆவியாக வந்தால் நமக்கு அன்பு வருமா, பயம் வருமா?  


உயிர், ஒரு உடலை தேர்ந்து எடுப்பது அல்லது ஒரு பிறவி எடுப்பது எதற்கு என்றால் அன்பு செய்யத் தான். 


பாடல் 



அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_24.html


(pl click the above link to continue reading)



அன்போடு = அன்புடன் 


 இயைந்த  = இணைந்த, சேர்ந்த 


வழக்கென்ப = முறை, காரணம் என்று சொல்லுவார்கள் 


ஆருயிர்க்கு = அருமையான உயிர்க்கு 


என்போடு  = உடலோடு 


இயைந்த = சேர்ந்த 


தொடர்பு. = தொடர்ச்சி 



இந்த உயிர் உடலோடு சேர்ந்து இருக்க காரணம் என்ன என்றால் அன்பு செய்யும் நோக்கம் தான். 


இது மேலோட்டமான கருத்து மட்டும் அல்ல, சற்று தவறான கருத்தும் கூட. 


முதலில் புரிந்து கொள்ள இங்கிருந்து ஆரம்பிப்போம். பின் பரிமேலழகர் எப்படி விளக்கம் தருகிறார் என்று பார்ப்போம். 


"ஆருயிர்க்கு" ... உயிரா அன்பு செய்கிறது? உடல் தான் அன்பு செய்கிறது. உயிர், உடலின் மூலம் அன்பு செய்கிறது. பரிமேலழகர் செய்யும் நுட்பம் மிக மிக வியக்க வைக்கும் ஒன்று. 


ஆருயிர் என்றால் அருமையான உயிர் என்று அவர் பொருள் கொள்ளவில்லை.    " பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு " என்று உரை செய்கிறார். 


உயிர் என்பது ஆகு பெயர் என்று கொள்கிறார். 


அதாவது,  உயிர் எல்லா ஜீவராசிகளிடமும் இருக்கும். பாக்டீரியா, ஈ, எறும்பு, கொசு, என்று அனைத்து பிறவியிலும் உயிர் இருக்கும். தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது. அவை எல்லாம் அன்பு செய்து கொண்டு இருக்கின்றனவா? உயிர் தேவை கருதி சில நாள் செய்யலாம். அன்பின் நீட்சி இருக்காது. மகன், பேரன், என்று தலைமுறை தாண்டி நீளாது. 


எனவே இங்கு உயிர் என்பது மக்கள் உயிர் என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார். 


அதெல்லாம் முடியாது. உயிர் என்று ஒன்று கிடையாது. இருக்கிறது என்றால் எங்கே இருக்கிறது? என்ன வடிவில் இருக்கிறது, என்ன நிறம், எடை? காட்டு.அதை பரிசோதிக்காமல் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சிலர் சொல்லலாம். 


"தொடர்பு" என்றால் என்ன என்று விளக்கம் செய்கிறார்.  " உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை".


அதாவது, உயிர் தொண்டர்ந்து கொண்டே இருக்கும். இந்த உடலை விட்டு இன்னொரு உடலில் போய் சேரும். அந்த தொடர்ச்சியின் காரணம் முற்பிறவிகளில் விடுபட்ட அன்பை தொடர்வதற்காக என்கிறார். 


நிறைய படிப்பு அறிவு இல்லாதவர்கள் கூட, காதலிக்கும் போது "ஏதோ உனக்கும் எனக்கும் முன் ஜன்ம தொடர்பு இருந்திருக்கும் போல இருக்கு..இல்லேனா எப்படி பாத்தவுடன் உன்னை எனக்கு புடிச்சு போச்சு" என்று பேசுகிறார்கள் இல்லையா?


"அடுத்த பிறவியிலும் நீயே என் கணவனாக/மனைவியாக" வர வேண்டும் என்று ஒவ்வொரு தம்பதிகளும் எப்போதாவது நினைத்து இருப்பார்கள். இந்தப் பிறவித் தொடர் என்பது அன்பு பற்றி வருகிறது. நம்மை அறியாமலேயே இது நமக்கு உள்ளுணர்வில் புரிகிறது அல்லவா? 


அடுத்த பிறவியிலும் நீயே எனக்கு எதிரியாக வர வேண்டும் என்று யாராவது விரும்புவார்களா?


சரி, குறளுக்கு வருவோம். 


தீபாவளிக்கு துணி எடுக்க கடைக்குப் போகிறோம். அலசி ஆராய்ந்து துணி எடுத்துவிட்டுத் தான் வருகிறோம் அல்லவா?


உடம்பு சரி இல்லை என்றால் மருத்துவரைப் பார்க்கப் போகிறோம். பார்த்து, மருந்து வாங்கிக் கொண்டுதானே வருகிறோம். 


போன நோக்கம் நிறைவேற வேண்டும் அல்லவா?


இந்தப் பிறவியின் நோக்கம், அன்பு செய்வதுதான். 


அதைச் செய்யாமல் வேறு ஏதேதோ செய்து கொண்டிருக்கிறோம்.  சண்டை போடுகிறோம், கோபம் கொள்கிறோம், பொறாமை, எரிச்சல், சுயநலம் என்று இருக்கிறோம். அதற்காக அல்ல நாம் வந்தது. 


அன்பு செய்ய வந்திருக்கிறோம். வந்த வேலையை பார்ப்போம். 


எல்லோரும் அன்பு செய்வதுதான் வாழ்வின் நோக்கம் என்று இருந்து விட்டால்,இந்த உலகம் எப்படி இருக்கும். 


பரிமேலழகர் உரை எழுதுகிறார் 


"என்ப" என்றால் "என்று சொல்லுவர் அறிந்தோர்." என்கிறார். 


முட்டாள்கள் எப்படியோ சொல்லிவிட்டுப் போகட்டும். உயிர் என்று ஒன்று இருக்கிறது. அது உடலில் இருக்கிறது. அது உடலில் இருக்கக் காரணம் அன்பு செய்ய என்று அறிந்தோர் சொல்வர் என்கிறார். 


அப்படி இல்லை என்று சொன்னால், நாம் யார் என்று வள்ளுவர் கூறுகிறார் என்று தெரிகிறது அல்லவா?




Wednesday, October 20, 2021

வில்லி பாரதம் - என்னை யார் நினைப்பார் ?

 வில்லி பாரதம் - என்னை யார் நினைப்பார் ?


பாண்டவர்கள் காட்டில் இருக்கிறார்கள். துரியோதனன் சூதில் வென்று பாண்டவர்களை கானகம் அனுப்பி விட்டான். 


நிம்மதியாக இருக்க வேண்டியது தானே? இல்லை. அவனால் முடியாது. எப்போது பொறாமை மனதில் புகுந்து விட்டதோ, நிம்மதி போய் விடும். 


பாண்டவர்களை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று நினைக்கிறான். 


அப்போது அங்கு துர்வாச முனிவர் வருகிறார். அவரை நன்கு உபசரிக்கிறான். அவரும் அதில் மகிழ்ந்து, "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்...தருகிறேன்" என்றார். 


என்ன கேட்டு இருக்க வேண்டும்? 


ஞானம் கேட்டிருக்கலாம். செல்வம் கேட்டு இருக்கலாம். புகழ் கேட்டு இருக்கலாம். வீடு பேறு கேட்டு இருக்கலாம். அதை எல்லாம் விட்டு விட்டான். பாண்டவர்கள் நாசமாகப் போக வேண்டும் என்று நினைத்து "முனிவரே என் மாளிகை வந்து என்னை சிறப்பித்தது போல, பாண்டவர்களிடமும் சென்று நீங்கள் அவர்களுக்கு ஆசி வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான். 


அவன் எண்ணம் என்ன என்றால், துர்வாச முனிவர் சீடர்களுடன்  அங்கு போவார். பாண்டவர்களால் முனிவருக்கும் அவருடைய சீடர்களுக்கும் உணவு வழங்க முடியாது. துர்வாச முனிவருக்கு கோபம் வரும். அவர் பாண்டவர்களை சபிப்பார். பாண்டவர்கள் நாசமாகப் போவார்கள். அது தான் அவன் எண்ணம். 


துர்வாச முனிவரும் அவ்வாறே சென்றார். 


அவரை வரவேற்று உபசரித்து, குளித்து விட்டு வாருங்கள் உணவு அருந்தலாம் என்று தர்மன் அவரை அனுப்பி விட்டான். 


அவர்களிடம் அட்சய பாத்திரம் இருந்தது. ஆனால், அதில் ஒரு நாளைக்கு ஒரு முறை உணவு வரும். கழுவி கவிழ்த்து வைத்து விட்டால் பின் மறு நாள் தான் அதில் உணவு வரும். 


துர்வாசர் வந்த அன்று, பாண்டவர்கள் உணவு உண்டு, பாத்திரத்தை கழுவி வைத்து விட்டார்கள். 


இப்போது என்ன செய்வது?


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_71.html


(Pl click the above link to continue reading)




முனிவர் வருவார். பசிக்கு உணவு இல்லை என்றால் அவருக்கு கோபம் வரும்.  சாபம் தருவார். என்ன செய்வது என்று தவித்துக் கொண்டு இருந்தார்கள். 


இந்தக் கதை எல்லோருக்கும் தெரிந்தது தான். 


தர்மன் கண்ணனை நினைக்கிறான். கண்ணன் வருகிறான். 


இங்கே வில்லிப் புத்தூர் ஆழ்வார் ஒரு அருமையான கவிதை வைக்கிறார். 


பாடல் 


தப்போதாமற்றம்பியர்க்குந் தருமக்கொடிக்குமிதமாக

அப்போதுணரும்படியுணர்ந்தா னசோதைமகனையறத்தின்மகன்

எப்போதியாவரெவ்விடத்தி லெம்மைநினைப்பாரெனநின்ற

ஒப்போதரியானுதிட்டிரன்ற னுளப்போதிடைவந்துதித்தானே.



ப்ளாக் சற்றே நீண்டு விட்டதால், பொருள் விளக்கத்தை அடுத்த பாகத்தில் பார்ப்போமா?