Saturday, May 7, 2022

திருவாசகம் - யாத்திரைப் பத்து - பொய்யில் கிடந்து புரளாதே

திருவாசகம் - யாத்திரைப் பத்து - பொய்யில் கிடந்து புரளாதே 


இறைவன் திருவடிகளை அடைய வேண்டும் விரும்பாத பக்தர்கள் யார் இருக்கிறார்கள். ஆசை இருக்கிறது. எப்படி என்ற வழி தான் தெரியவில்லை. அவர் செய்தார், இவர் செய்தார் என்று அதையே செய்து பார்கிறார்கள். யாருக்கோ எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டுக்கு மருந்து வாங்கி சாப்பிட்டால் என் நோய் குணமாகுமா? அவருக்கு ஆனதே என்றால் அவர் உடல் நிலை வேறு, என் உடல் வேறு. .உடலே அப்படி இருக்கும் போது, ஆன்மாவின் பக்குவம் வேறு வேறாகத்தானே இருக்கும். எல்லோருக்கும் ஒரே வழி எப்படி சரியாக் இருக்க முடியும். 


மணிவாசகர் கூறுகிறார் 


"இறைவன் திருவடியை அடைய வேண்டுமா? நான் போகிற பாதையில் வாருங்கள் என்று சொல்லவில்லை. முதலில் உங்கள் சிந்தனைகளை முதலில் திருத்துங்கள். அதை சரி பண்ணுங்கள். அப்புறம், அவன் திருவடியையே எப்போதும் நினையுங்கள். எப்பவாவது, நேரம் கிடைக்கும் போது அல்ல. எப்போதும். இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்கதான் தாள் வாழ்க. இந்த பொய்யான விடயங்களை விட்டு விடுங்கள்" என்கிறார். 


பாடல் 




 சேரக் கருதி, சிந்தனையைத் திருந்த வைத்து, சிந்திமின்;

போரில் பொலியும் வேல் கண்ணாள் பங்கன், புயங்கன், அருள் அமுதம்

ஆரப் பருகி, ஆராத ஆர்வம் கூர அழுந்துவீர்!

போரப் புரிமின் சிவன் கழற்கே, பொய்யில் கிடந்து புரளாதே.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_40.html


(Pl click the above link to continue reading)


சேரக் கருதி = [இறைவன் திருவடிகளை] சேரக் கருதி 


சிந்தனையைத் = சிந்தனையை 


திருந்த வைத்து = திருத்தமாக வைத்து 


சிந்திமின் = சிந்தியுங்கள். இது மிக முக்கியம். முன்னோர் சொன்ன வழியில் போங்கள் என்று சொல்லவில்லை. நீங்கள் சிந்தியுங்கள் என்கிறார். 


போரில் பொலியும் வேல் = போர்க் களத்தில் போராடி அதனால் கூரான வேல் போன்ற 



 கண்ணாள் = கண்களை உடைய உமா தேவியின் 


பங்கன் = பாதி இடமாகக் கொண்டவன் 


புயங்கன் = பாம்பை அணிந்தவன் 


அருள் அமுதம் = அவனுடைய அருளாகிய அமுதத்தை 


ஆரப் பருகி = நன்றாகப் பருகி 


ஆராத ஆர்வம் கூர = தீராத தாகம் கொண்டு ஆர்வத்துடன் 


அழுந்துவீர்! = அதிலேயே இலயித்து கிடப்பீர் 


போரப் புரிமின் = அடைய விரும்புங்கள் 


சிவன் கழற்கே = சிவன் திருவடிகளையே 


பொய்யில் கிடந்து புரளாதே. = பொய்யில் கிடந்து புரளாதே 


சிந்தி சிந்தி என்றால் எதைச் சிந்திப்பது?


உமை பங்கனை சிந்தியுங்கள் என்கிறார். 


ஏன் உமை பங்களை சிந்திக்க வேண்டும்?


நீங்கள் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும், ஒரு போதும் முழுமையான ஒருவராக இருக்க முடியாது. நீங்கள் ஆணாக இருந்தால், பெண் குணங்கள் உங்களுக்குள் அழுத்தி வைக்கப் பட்டு இருக்கிறது. மறைந்து கிடக்கிறது. 


பெண்ணுக்குள் ஆணின் தன்மை அழுத்தி மூடி மறைக்கப் பட்டு இருக்கிறது. 


மறைந்த அந்தத் தன்மை வெளியில் வரும் வரை நீங்கள் முழு மனிதராக முடியாது. 


அழுத்தி வைக்கப் பட்டு இருப்பது வெளியே வர போராடும். வெளியே வர விடாமல் ஏதோ ஒன்று அதை அமுக்கி வைத்துக் கொண்டே இருக்கும். இந்தப் போராட்டம் நடந்து கொண்டே இருக்கும். ஓயாத போர் இது. 


இரண்டும் ஒன்றாகக் கலந்தால் தான் சிந்தனையில் அமைதி பிறக்கும். தெளிவு வரும். இறை அனுபவம் சாத்தியப் படும். 


எனவே தான் உமை ஒரு பங்கனை சிந்தியுங்கள் என்றார். 


சிந்திக்க சிந்திக்க உங்களுக்குள் மறைந்து கிடக்கும் உணர்வுகள் வெளி வரும். ஆண், ஆணாகவோ, அல்லது பெண், ஒரு பெண்ணாகவோ இருந்தது எல்லாம் பொய். வெளி வேடம். அது உண்மை அல்ல. அதிலேயே கிடந்து புரண்டு கொண்டு இருக்காதீர்கள். 


ஆணுக்குள் ஒளிந்து கிடக்கும் பெண் வெளியே வருகிறாளோ அன்று தான் அவன் முழு மனிதனாவான். 


பெண்ணுக்கும் அப்படியே. 


இறைவனை அடைவதில் முதல் படி அது. 


நீண்ட யாத்திரையின் முதல் அடி அது. 








திருக்குறள் - ஆமை போல்

 திருக்குறள் - ஆமை போல் 


யானையை அதன் பாகன் அடக்கினான் என்று கூறினால் அது அந்த யானையை நகர விடாமல் செய்தான் என்று அர்த்தம் அல்ல. அடக்கினான் என்றால் தன் வழிக்கு கொண்டு வந்தான் என்று அர்த்தம். மனதை அடக்குவது என்றால் அதை நிறுத்துவது அல்ல. அதன், அதன் போக்கில் போக விடாமல், நம் போக்கில் கொண்டு செல்வது என்று கொள்ள வேண்டும்.


இங்கே, அடக்கமுடைமையில் அதைத்தான் வள்ளுவர் சொல்கிறார். "ஐம்புலன்களும் தன் வயத்து ஆதல்" என்று உரைப் பாயிரத்தில் குறிப்பிடுகிறார் பரிமேலழகர். 


புலன்களை நம் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். 


இன்பத்தை அனுபவிக்காதே என்று யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே அதை ஒரு அளவோடு, ஒரு குறிப்பிட்ட காலத்தில் , ஒரு வரைமுறைக்கு உட்பட்டு அனுபவி என்று நம் இல்லக்கியங்கள் பேசி வந்து இருக்கின்றன. 


அடுத்த குறளில் சொல்கிறார் "ஆமை போல புலன்களை அடக்கி இருந்தால் அது மிகுந்த பயனைத் தரும்" என்கிறார். 


தெரிந்தே தான் முழு குறளுக்கும் விளக்கம் சொல்லாமல் விடுகிறேன். அதை பின்னால் விரிவாகக் காண்போம். 


பாடல் 



ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்பு உடைத்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_7.html


(pl click the above link to continue reading)


ஒருமையுள் = ஒருமையுள் (இதை இப்படியே வைத்துக் கொள்வோம். பின்னால் விரிவாக காண்போம்) 


ஆமைபோல் = ஆமையைப் போல 


ஐந்தடக்கல் ஆற்றின் = ஐந்து + அடக்கல் + ஆற்றின். ஆறு என்றால் வழி, நெறி. ஐந்து புலன்களை அடக்கி அவற்றை நல் வழியில் செலுத்தினால் 


எழுமையும் = எழுமையும் 


ஏமாப்பு உடைத்து = பாதுகாப்பு உடையது 


ஆமை தனக்கு துன்பம் வரும் என்று தெரிந்தால் தனது ஐந்து புலன்களையும் தன் ஓட்டுக்குள் இழுத்துக் கொள்ளும். வெளியில் விட்டால் தானே ஆபத்து? உள்ளே இழுத்துக் கொண்டால்?


ஆங்கிலத்தில் trigger அல்லது cue என்று சொல்லுவார்கள். நாம் எவ்வாறு தவறு செய்கிறோம் என்றால் சில தூண்டுதல்களால். 


உதாரணமாக, நொறுக்குத் தீனி தின்பது இல்லை என்று ஒரு முடிவு எடுத்து இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். வீட்டில் ஒரு டப்பாவில் முறுக்கு, இன்னொன்றில் சீடை, இன்னொன்றில் அதிரசம், தட்டை, இலட்டு என்று போட்டு வைத்து அதையும் நம் கண் முன் வைத்தால் எப்படி இருக்கும்? சாப்பிட வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு கூட இரண்டை எடுத்து வாயில் போட்டால் என்ன என்று தோன்றும். 


இராவணன் சும்மா தான் இருந்தான். சூர்பனகை போய் தூண்டி விடுகிறாள் "நீ இதையெல்லாம் பெற்று என்ன பயன், சீதையைப் பெறாவிட்டால்" என்று. அவனுக்குள் காமம் தலை தூக்குகிறது. அழிந்தான். 


தவறு செய்யத் தூண்டும் சூழ் நிலைகளை தவிர்த்து விட வேண்டும். அந்தச் சூழ்நிலையில் இருந்தால் தவறு நிகழ்வது தவிர்க்க முடியாதது. 


புலன்களை உள்ளே இழுத்து விட வேண்டும். வெளியே அலைய விட்டால், அது பாட்டுக்கு போய் கொண்டே இருக்கும். 


சரி, அது புரிகிறது. 


அது என்ன ஒருமை, எழுமை? 


பரிமேலழகர் ஒருமை, எழுமை என்பது பிறப்புகளைக் குறிக்கும் என்கிறார். ஒரு பிறப்பில் புலன்களை அடக்கி வாழ்ந்தால் அது பின் வரும் ஏழு பிறப்பிலும் நன்மை தரும் என்கிறார். 


நம் தமிழ் பாரம்பரியத்தில் எதையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வதில்லை. மற்றவர் சொல்லுவது ஏற்புடையது இல்லை என்றால் அதை வெளிப்படையாக நிராகரித்து விடுவது என்பது நம் வழக்கம். 


வந்திருப்பது இறை என்று அறிந்தும், "நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று சொல்லும் தைரியம், ஆளுமை இருந்தது நம் மக்களுக்கு.  நீ யாரா இருந்தா என்ன, தப்புனா தப்புத்தான் என்று அடித்துச் சொன்னார்கள். 


அந்தத் தெளிவும், தைரியமும் ஏனோ குறைந்து விட்டது. எதைச் சொன்னாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மன நிலை வந்து விட்டது. கேட்டால் 'நம்பிக்கை' என்பார்கள். 


அது ஒரு புறம் இருக்கட்டும் 


இந்த ஒரு பிறப்பு, எழு பிறப்பு என்பதை பல உரை ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 


இரண்டு காரணம் சொல்கிறார்கள் 


முதலாவது காரணம், 'அடக்கம் அமரருள் உய்க்கும்' என்று முதல் குறளில் சொன்னாரே. பின் அடக்கமாக இருந்தால ஏழு பிறப்பு எப்படி வரும் என்று ஒரு கேள்வி எழுப்புகிறார்கள் 


இரண்டாவது, அடக்கமாக இருந்தாலும் ஏழு பிறவி வரும் என்றால், பின் எதற்கு அடக்கமாக இருக்க வேண்டும். எப்படியும் பிறவி வரப் போகிறது. இருந்து அனுபவித்துவிட்டுப் போவோமே என்று சிலர் கூறுகிறார்கள். 


இதற்கு இரண்டு விதமான விளக்கம் இருக்கிறது. 


ஒன்று, இந்த ஒருமை, எழுமை என்பதெல்லாம் எண்கள் அல்ல. அது ஒன்று பல என்ற தொகுதியை குறிப்பது என்கிறார்கள். "ஊருக்குள்ள நாலு பேர் நாலுவிதமா பேசுவார்கள்", "நாலு பேர்கிட்ட நல்ல பேர் வாங்க வேண்டாமா" என்றால் எண்ணி நாலே பேர் என்று அர்த்தம் அல்ல. இங்கே நான்கு என்ற சொல் எண்ணைக் குறிக்கவில்லை. பல பேர் என்ற தொகுதியைக் குறிக்கிறது என்று நமக்குத் தெரியும். 


அது போல, ஒரு முறை நாம் அடக்கமாக இருந்தால் அது பல விதங்களில் பயன் தரும் என்று கொள்ள வேண்டும் என்று உரை செய்கிறார்கள். 


வேறு சிலரோ, பரிமேலழகர் பிழையாக உரை செய்வாரா என்று அவர் செய்த உரைக்கு விளக்கம் செய்கிறார்கள். .


இந்தப் பிறவியில் அடக்கமாக இருந்தால், அதனால் மேற்கொண்டு பிறவி வராது என்பது உண்மைதான் என்றாலும், முன் செய்த வினை இருக்கிறதே? அதன் காரணமாக மேலும் பிறவிகள் வந்தாலும், இப்போது புலன் அடக்கத்தோடு இருந்தால், இனி வரும் ஏழு பிறவிக்கும் அது உதவும் என்று கூறுவதாக கொள்ள வேண்டும் என்கிறார்கள். 


ஏற்றுக் கொல்வதும், கொள்ளாததும் உங்கள் விருப்பம். 


பொதுவான கருத்து, "புலனடக்கம் நல்லது". அது ஒரு பிறவியா, பல பிறவியா என்பதெல்லாம் ஆராய்ச்சியாளர்களிடம் விட்டு விடலாம். 


புலன்களை நம் வயப் படுத்த முயல்வோம். அவ்வளவுதான் நாம் செய்ய வேண்டியது. 


இந்தக் குறளின் மூலம் மெய்யடக்கம் கூறப் பட்டது என்கிறார் பரிமேலழகர். 


அப்படி என்றால் இனி வரும் குறள்களில் வேறு ஏதோ அடக்கம் பற்றி கூறப் போகிறார் என்று அர்த்தம். 


என்னவாக இருக்கும்?




Friday, May 6, 2022

சேத்திரத் திருவெண்பா - திருச்சிராப்பள்ளி

சேத்திரத் திருவெண்பா - திருச்சிராப்பள்ளி 


நல்லன அல்லாதன செய்வதற்கு நிறைய நேரம் இருக்கிறது. நல்லது செய்ய நேரமே இருப்பது இல்லை. 


"தினம் உடற் பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்...எங்க நேரம் இருக்கு. ஏதாவது ஒரு வேலை வந்துருதுனு" சொல்லக் கேட்டு இருக்கிறோம். 


"எனக்கு காப்பி குடிக்கவே நேரம் இல்லை, இந்த whatsapp பாக்க நேரம் இல்லை, புகை பிடிக்க நேரமே இல்லை" என்று யாராவது சொல்லக் கேட்டு இருக்கிறோமா? அதுக்கு மட்டும் எப்படியோ நேரம் கிடைத்து விடுகிறது. 


நல்ல விடயங்களை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம். காரணம், நமக்கு அளவற்ற வாழ்நாள் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம். 


மரணம் என்ற சொல்லை எடுத்தாலே "சே...என்ன அபசகுனம் பிடித்த மாதிரி அதை எல்லாம் பேசிக் கொண்டு...நாளும் கிழமையுமா அமங்கலமா பேசிக்கிட்டு..." என்று அதை பேசுவதைக் கூட தவிர்த்து விடுகிறோம். 


வாழ்கை என்று எழுத்து மரணம் என்ற கரும் பலகையில் எழுதப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பார் ஓஷோ. மரணம் என்ற ஒன்று இருப்பதால் தான் எல்லாமே அழகாக இருக்கிறது. மரணம் இருப்பதால் தான் வாழ்வின் மேல் பற்று வருகிறது. உறவுகள் மேல் பிடிப்பு வருகிறது. 


ஐயடிகள் காடவர்கோன் நாயனார் சொல்கிறார் 


"நாட்கள் எல்லாம் ஓடி விட்டன. மரணம் வந்து விட்டது. உடல் கட்டு தளர்ந்து விட்டது. உடம்பில் இருந்து துர் நாற்றம் வீசத் தொடங்கி விட்டது. இனி வைத்து இருக்கக் கூடாது. எடுத்தற வேண்டியதுதான் என்று உறவினர்கள் எல்லாம் சொல்லுவார்கள். அப்படி ஒரு நாள் வரும். அந்த நாள் வருவதற்கு முன்னே திருச்சிராப்பளியில் உள்ள அவன் பாதமே சேர்"


என்கிறார். 


பாடல் 



கழிந்தது நென்னற்றுக் கட்டுவிட்டு நாறி

ஒழிந்த துடல்இரா வண்ணம் அழிந்தது

இராமலையா கொண்டுபோ என்னாமுன் நெஞ்சே

சிராமலையான் பாதமே சேர் .


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_6.html



(Pl click the above link to continue reading)



கழிந்தது = முடிந்தது 


நென்னற்றுக் = நென்னல் என்றால் நேற்று. அதாவது முன் காலம். 


கட்டுவிட்டு = உறுதியான உடல் கட்டு குலைந்து 


நாறி = நாற்றம் எடுத்து 


ஒழிந்த துடல் = உயிர் ஒழிந்த பின் உடல் 


இரா வண்ணம் அழிந்தது = இருக்க முடியாமல் அழிந்தது 


இராமலையா = இராமல் + ஐயா. வைத்து இரமால் ஐயா 


கொண்டுபோ  = கொண்டு போய் விடுங்கள் (சுடுகாட்டுக்கு) 


என்னாமுன்  = என்று மற்றவர்கள் சொல்லுவதற்கு முன்னமேயே 


நெஞ்சே  = என் மனமே 


சிராமலையான் = திருச்சிராப்பள்ளி மலையில் இருப்பவன் 


பாதமே சேர் . = திருவடிகளை சென்று அடை 


இந்த உடம்புக்கு சரீரம் என்று பெயர். சரியும் என்பதால். 


ரொம்ப நாள் ஒன்றும் இல்லை என்கிறார். 


இது புரியும். ஆனால் உணர்வது கடினம். 


Wednesday, May 4, 2022

3000 ப்ளாகுகள்

 3000 ப்ளாகுகள் 


உங்களின் தொடர் வாசிப்பு மூலமும், உங்களின் கருத்து பரிமாற்றம் மூலமும், குருவருளின் பலனாலும் நேற்றோடு  3000 ப்ளாகுகள் எழுதி முடித்துவிட்டேன். 


அனைவருக்கும் நன்றி. 


ஏதோ விளையாட்டாக ஆரம்பித்தது இவ்வளவு தூரம் வந்து விட்டது. 


தமிழ் அறிவு சற்றும் இன்றி, ஆன்மீக உணர்வு கொஞ்சமும் இல்லாமல் ...நான் எழுதியவற்றையும் 'சிறு கை அளாவிய கூழ்' போல் இரசித்து வந்தமைக்கு மீண்டும் ஒரு நன்றி. 


இன்னும் தொடரும் என்ற நம்பிக்கையுடன். 

திருக்குறள் - எல்லார்க்கும் நன்றாம் பணிதல்

 திருக்குறள் - எல்லார்க்கும் நன்றாம் பணிதல்


அடக்கம் உடைமை நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஆணவம் கூடாது என்பதும் தெரியும். இருந்தும் பணிவு வருவது இல்லை. அப்பப்ப மண்டைக் கணம் வந்து விடுகிறது. 'என்னைப் போல்' யார் என்ற கர்வம் தலை தூக்குகிறது. அதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து அதை எப்படி சரி செய்யலாம் என்று வள்ளுவரும் பர்மேலழகரும் நமக்குச் சொல்கிறார்கள். 


பாடல் 


எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_4.html



(please click the above link to continue reading)



எல்லார்க்கும் = அனைவருக்கும் 


நன்றாம் = நல்லதாம் 


பணிதல் = அடக்கமுடைமை 


அவருள்ளும் = அந்த அனைவருக்குள்ளும் 


செல்வர்க்கே = செல்வம் உடையவர்களுக்கே 


செல்வம் தகைத்து = மேலும் ஒரு செல்வம் சேர்ந்தது போல் 


இதில் எங்கே அராய்ச்சி, அதன் முடிவு எல்லாம் இருக்கிறது என்று நாம் வியப்போம். பரிமேலழகர் செய்யும் உரை நுட்பம் இருக்கிறதே....மேலே வாசியுங்கள் உங்களுக்கே புரியும். 


இரண்டு  தொகுதியாக மக்களைப் பிரிக்கிறார். 


ஒன்று "எல்லார்க்கும்" இன்னொன்று "செல்வர்".


செல்வர் என்பது எல்லார்க்கும் என்பதில் அடங்கும்.  சரிதானே?


அப்படி என்றால் இந்த "எல்லார்க்கும்" என்றதில் செல்வர்கள் இல்லாதவர்கள் என்று ஒரு பகுதி இருக்கும் அல்லவா? அது யார் என்று பரிமேலழகர் யோசிக்கிறார். 


"நன்றாம் பணிதல்" என்று சொன்னதனால் அவர்களிடம் ஏதோ பெருமைப் படத்தக்க ஒன்று இருக்க வேண்டும். ஒன்றும் இல்லாத பிச்சைக்காரன் பணிவதில் என்ன பெருமை இருக்க முடியும். எனவே, ஏதோ ஒரு சிறப்பு உள்ளவர்கள் என்று புரிகிறது. 


அது என்ன சிறப்பு என்று யோசிக்கிறார். 


செல்வம் ஒரு சிறப்பு என்று வெளிப்படையாகவே வள்ளுவர் சொல்லி விட்டார். எனவே வேறு என்னென்ன சிறப்புகள் இருக்க முடியும் என்று சிந்திக்கிறார். 


சிந்தித்து ஒரு முடிவுக்கு வருகிறார். மற்ற சிறப்புகள் "கல்வி" மற்றும் "குலம்" என்று முடிவு செய்கிறார். 


உலகில் உள்ள அனைவருக்கும் பெருமை மூன்று காரணங்களால் வரும் - கல்வி, குலம், செல்வம் என்று பிரித்துக் கொள்கிறார். நீங்கள் எப்படி யோசித்துப் பார்த்தாலும் பெருமை இந்த மூன்றுக்குள் அடங்கிவிடும். 


சரி, அதில் ஏன் செல்வரை மட்டும் தனித்துக் கூறுகிறார்? படித்தவனிடம் ஆணவம், திமிர் இருக்காதா? அவன் பணிந்தால் அது இன்னொரு டிகிரி மாதிரி என்று ஏன் சொல்லவில்லை?


ஒருவன் நிறைய கற்றால், அந்த கல்வி அறிவே அவனுக்கு அடக்கத்தைத் தரும். ஒவ்வொரு புது விடயம் படிக்கும் போதும், 'அட, இது தெரியாமல் இத்தனை நாள் இருந்து விட்டேனே' என்று நினைப்பான். அது மட்டும் அல்ல, இது போல் இன்னும் எவ்வளவு இருக்கிறதோ எனக்குத் தெரியாதது. நமக்குத் தெரிந்தது ஒன்றும் பெரிது அல்ல. தெரியாதது கடல் போல் இருக்கிறது என்று அந்தக் கல்வி அறிவே அவனுக்கு அடக்கத்தைத் தரும். 


குலம். நல்ல குலத்தில் பிறந்த ஒருவனுக்கு அவன் குலமே அடக்கத்தைப் போதிக்கும். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் ஆணவம் கூடாது என்று சிறு வயது முதலே சொல்லித் தருவார்கள். அவர்கள் பெருமை எங்கோ நிற்கும். சிறுவயதில் அவர்களின் பெருமையை பார்த்து வளர்ந்த ஒருவனுக்கு தானும் அப்படி வர வேண்டும் என்று தோன்றுமே அல்லாமல் நான் எல்லாம் படித்துவிட்டேன், எல்லாம் அறிந்து விட்டேன் என்ற ஆணவம் வராது. 


கல்வியும், குலமும் ஒருவனுக்கு அடக்கத்தை அவைகளே தரும் என்பதால் அந்தப் பெருமை உள்ளவன் அடக்கமாய் இருப்பதில் ஒரு பெரிய பெருமை இல்லை என்கிறார். 


ஆனால், இந்த செல்வம் இருக்கிறதே...அது ஒரு விதத்திலும் அடக்கத்தைத் தராது. மாறாக மேலும் மேலும் ஆணவத்தைக் கூட்டும். எப்படி?


செல்வம் உள்ள ஒருவனை அவனை சுற்றி உள்ளவர்கள் எப்போதும் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள்.அவனிடம் இருந்து ஆதாயம் பெற அவன் செய்த தவறுகளைக் கூட பெரிய சாதனைப் போல காட்டுவார்கள். ஆதாயம் பெற சிலர் என்றால், அவன் செல்வத்தின் தன்மை கண்டு பயந்து போய் சிலர் அவனுக்கு பணிந்து போய் அவன் கர்வத்தை மேலும் வளர்ப்பார்கள். 


எனவே, செல்வம் இருப்பவன் அடங்குவது என்பது எளிதான காரியம் அல்ல. ஒருவேளை அவன் அடங்கினால் அது அவனுக்கு "அடக்கம்" என்ற இன்னொரு செல்வம் சேர்ந்த மாதிரி என்கிறார். 


அப்படி எல்லாம் ஒன்றும் சொல்லவில்லையே. எங்கே சொல்லி இருக்கிறது என்று கேட்கிறீர்களா?


"செல்வர்'கே' செல்வம் தகைத்து' என்பதில் உள்ள ஏகாரம் அதைச் சொல்கிறது. 


'செல்வர்க்கு செல்வம் தகைத்து' என்று சொல்லி இருக்கலாம். 


செல்வர்கே என்று சொன்னதன் மூலம் செல்வர்கள் அடங்குவது என்பது எளிதான காரியம் அல்ல. அப்படி அவர்கள் அடங்கினால் அது அவர்களுக்கு இன்னொரு செல்வம் போல என்று கூறுகிறார். 


படித்தவன் ஏன் அடங்குவது இல்லை? அவன் சரியாக படிக்காததால். ஆழ்ந்து படித்தால் அறிவின் ஆழம், நீளம், அகலம் தெரியும். பணிவு தானே வரும். கம்பர் சொல்வார் "நாய் நக்கிய பாற்கடல் போல" என்பார். அறிவு கடல் போல் கிடக்கிறது. நான் ஒரு நாய் போல் அதை நக்கிக் குடிக்கிறேன். ஒரு நாய் எவ்வளவு குடித்து விட முடியும். அந்தப் பணிவு அறிவின் அளவு தெரிந்ததால் வரும் பணிவு. 


இப்படிப் பட்ட குறள்களை படிக்கும் போது நம்மை அறியாமலேயே நமக்குள் ஒரு அடக்கம் வருகிறது அல்லவா? அடேயப்பா என்ன ஒரு நுணுக்கம், என்ன ஒரு செறிவு, ஆழம் என்ற மலைப்பு வருகிறது அல்லவா? அது கல்வி தரும் பணிவு. 


எவ்வளவு தூரம் சிந்தித்து இருக்கிறார்கள் பாருங்கள். 


Tuesday, May 3, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - காண வாராயே

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - காண வாராயே 


வெளியில் விளையாடி விட்டு பையன் தளர்ந்து வருகிறான். 


அம்மாவுக்குத் தெரியும். பையன் பசியோடு வந்திருப்பான் என்று. 


"கொஞ்சம் இரு, சூடா உனக்கு சாப்பிட கொண்டு வருகிறேன்" என்று சமையல் அறைக்குள் செல்கிறாள். 


பையன் , சோபாவின் மேலே காலை நீட்டி படுத்துக் கொள்கிறான். கையில் செல் போன். எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறான். 


கொஞ்ச நேரம் ஆச்சு. சாப்பாடு ஒண்ணும் வர்ற வழியா தெரியல...எழுந்து உட்கார்ந்து கொள்கிறான், பசி, சாப்பாடு வரப் போகிறது என்ற ஆர்வம் ..."என்னம்மா ஆச்சு...எவ்வளவு நேரம்...". 


"இதோ முடிஞ்சிருச்சு...இரண்டே நிமிடம்" என்று அம்மா குரல் கொடுக்கிறாள். 


நேரம் போனது. இன்னும் சாப்பாடு வந்த பாடில்லை. பையனுக்கு பொறுமை போய் விட்டது...எழுந்து நேரே சமையல் அறைக்கே போய் விடுகிறான். "என்னதான் செய்ற...இவ்வளவு நேரமா" என்று. அவன் அவசரம் அவனுக்கு. 


இதுக்கும் நாலாயிர திவ்ய பிரபந்ததுக்கும் என்ன சம்பந்தம்?


இருக்கு. சொல்கிறேன். 


பாடல் 




புளிங்குடிக்கிடந்து வாகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்நின்று

தெளிந்தவென்சிந்தையகங்கழியாதே என்னையாள்வாயெனக்கருளி

நளிர்ந்தசீருலக மூன்றுடன்வியப்ப நாங்கள் கூத்தாடிநின்றார்ப்ப

புளிங்குநீர்முகிலின்பவளம் போற்கனிவாய்சிவப்ப ரிகாணவாராயே.


படிக்க சற்று கடினமாய் இருக்கும். சீர் பிரித்தால் எளிதாக விளங்கும். 


சீர் பிரித்த பின் 


புளிங்குடிக் கிடந்து வாகுணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று


தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னையாள்வாய் எனக்கு அருளி 


நளிர்ந்த சீருலகம்  மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்ப 


பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப அரி காண வாராயே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_3.html


(pl click the above link to continue reading)


புளிங்குடிக் கிடந்து = திருப் புளிக் குடியில் பள்ளி கொண்டு 


வாகுணமங்கை இருந்து  = வாகுர மங்கை என்ற தலத்தில் வீற்று இருந்து 


 வைகுந்தத்துள் நின்று = வைகுந்தத்துள் நின்று 


தெளிந்த என் சிந்தை  = என் சிந்தையை தெளிவித்து 


அகம் கழியாதே = என்னை விட்டு நீங்காமல் 


என்னையாள்வாய் = என்னை ஆள்பவனே 


எனக்கு அருளி  = எனக்கு அருளிச் செய்து 


நளிர்ந்த சீருலகம்  =   குளிர்ந்த இந்த சீரிய உலகம் 


மூன்றுடன் வியப்ப = மூன்று உலகோடு வியப்ப 


நாங்கள் = நாங்கள் 


கூத்தாடி = கூத்து ஆடி 


நின்று ஆர்ப்ப  = நின்று ஆர்பரிக்க 


பளிங்கு = பளிங்கு போன்ற 


நீர் முகிலின் = நீரைக் கொண்ட மேகத்தின் 


பவளம் போல் = பவளம் போன்ற 


கனிவாய் சிவப்ப = அதரங்கள் சிவந்து இருக்க 


அரி காண வாராயே. = என்னைக் காண வா 


இதற்கு வைணவ பெரியவர்கள் எழுதிய உரை மெய் சிலிர்க்க வைக்கும். அவர்கள் சொன்னதை நான் எளிமைப் படுத்திச் சொல்கிறேன். 


நமக்கு இறைவன் அருள் வேண்டும். 


அதற்காக முயற்சி செய்கிறோம். ஆனால், நமக்கு அதுவே முழு நேர வேலை இல்லை. அதற்கு நடுவில் பல வேலைகள் இருக்கிறது. 


இறைவனுக்கு நமக்கு அருள் செய்ய வேண்டும்.


இறைவனுக்கு வேறு வேலை என்ன? அப்படியே இருந்தாலும், அவனுக்கு அதெல்லாம் ஒரு பெரிய விடயம் இல்லை. நமக்கு அருள் செய்வது ஒன்றுதான் அவனுக்கு ஒரே வேலை. 


எப்படா இவனுக்கு அருள் செய்வோம் என்று இறைவன் தவித்துக் கொண்டு இருப்பானாம்.


முதலில் சயனித்துக் கொண்டு இருந்தானாம். ஒண்ணும் நடக்கிற மாதிரி தெரியவில்லை. இந்த பக்தனோ நம்மிடம் வரவே மாட்டேன் என்கிறான்.  பொறுமை இழந்து, பெருமாள் எழுந்து உட்கார்ந்து விட்டார். பக்தன் வருகிறானா, எங்கே வருகிறான் என்று பார்பதற்கு. 


பக்தன் வருவதாகக் காணோம். பெருமாளுக்கு இன்னும் பொறுமை போய் விட்டது. எழுந்து நின்று கொண்டாராம். ஒருவேளை அவன் வந்தால் நாம் ஓடிப் போய் அவனுக்கு அருள் செய்யலாம் என்று. 


புளிங்குடிக் கிடந்து

 வாகுணமங்கை இருந்து

 வைகுந்தத்துள் நின்று


கிடந்து, இருந்து, நின்று பகவான் தவிக்கிறான். எப்படியாவது அடியவனுக்கு அருள் செய்து விடமாட்டோமா என்று. 


பக்தனுக்கு ஒரு கவலையும் இல்லை. 


அவன் பாட்டுக்கு netflix, whatsapp என்று பார்த்துக் கொண்டிருக்கிறான். 


பத்தா குறைக்கு அவன் இறைவனிடம் சொல்கிறான் 


"இங்க பாரு...நீ பெரிய ஆள். இந்த உலகமே உன்னைப் பார்த்து வியக்கிறது. இப்ப உனக்கு என்ன பிரச்சனை? எனக்கு அருள் செய்யணும். அது தானே? நான் வரணுமுன்னு ஏன் நீ எதிர்பாக்குற...நீயே வந்து அருள் செய்துட்டுப் போயேன். மழை யார் கேட்டுமா பெய்கிறது. அது பாட்டுக்கு பெய்கிறது. உன்னைப் பார்த்தாலும் அந்த நீர் கொண்ட கரு முகில் போலத் தான் இருக்கிறது. நீ பாட்டுக்கு அருள் செய்யேன்" 


" காண வாராயே"


"நான் உன் கிட்ட வரல. ..எனக்கு அறிவு இல்லை. நீ என் கிட்ட வரலாம்ல...என்னைப் பார்க்க நீ வரலாம்ல...அதுக்கு என்ன தடை ?"


என்கிறான். .


இதெல்லாம் ஒரு அன்யோன்யம். கடவுளிடம் ஒரு அன்பு, நேசம், பாசம், உரிமை. 


இறைவனை அனுபவித்தல் என்பார்கள் வைணவர்கள். அது ஒரு அனுபவம். 


சொன்னால் புரியாது. அனுபவிக்க வேண்டும்.


கற்கண்டு எப்படி இருக்கும் என்று எத்தனை ஆயிரம் பக்கம் எழுதி விளக்கினாலும் புரியாது. ஒரு துண்டு கற்கண்டை வாயில் போட்டால் புரிந்து விடும். அதுதான் அனுபவம். .


"நீ சொல்லு. எனக்கு பிடித்து இருந்தால் நான் வாயில் போடுகிறேன்" என்றால் நடக்காது. சொல்லிப் புரியாது. அனுபவம் ஒன்றேதான் வழி. 


பிரபந்தம் போன்ற நூல்கள் நம்மை அந்த அனுபவத்துக்கு அழைத்துச் செல்லும் முயற்சிகள். அதில் சொல்லுக்கு பொருள் தேடக் கூடாது. அனுபவங்களை, உணர்சிகளை பிடித்துக் கொள்ள வேண்டும். 


அந்த அனுபவம் வாய்க்க குருவருள் துணை செய்யட்டும். 












Sunday, May 1, 2022

சேத்திரத் திருவெண்பா - திருத்துருத்தி யான்பாதஞ் சேர்

சேத்திரத் திருவெண்பா - திருத்துருத்தி யான்பாதஞ் சேர்


ஒரு காட்சியை கற்பனை செய்து பாருங்கள். 


ஒரு வயதான ஆண். மெலிந்த உருவம். எழுந்து நடக்கக் கூட முடியாத வயோதிகப் பருவம். தளர்ந்து போய் இருக்கிறார். அவருடைய மனைவி அவரை தன் மடி மீது படுக்க வைத்து அவருடைய தலையை மென்மையாக கோதி விடுகிறாள். அவளுக்கும் வயதாகி விட்டது. 


அவருக்கு பசிக்கிறது. ஆனால், கடினமான உணவு எதையும் விழுங்க முடியாது. கஞ்சி போன்ற திரவ உணவுதான் உண்ண முடியும். மனைவியின் முகம் பார்த்து "கொஞ்சம் கஞ்சி கொண்டு வா" என்கிறார். 


அந்த அளவு பலகீனம். 


வயது எல்லோருக்கும் ஆகும்தானே? அப்படி வயதாகி தள்ளாடுவதற்கு முன் திருத் துருத்தி என்ற தலத்தில் கோவில் கொண்டுள்ள சிவன் திருவடிகளை சேரும் வழியைப் பார் என்கிறார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார்.



பாடல் 


வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக்

குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து - கஞ்சி

அருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே

திருத்துருத்தி யான்பாதஞ் சேர்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post.html


(Pl click the above link to continue reading)




வஞ்சியன = இருக்கிறதோ இல்லையோ என்று தெரியாத 


நுண்ணிடையார் = சிறிய இடையை உடைய பெண்கள் (மனைவி)


வாள்தடங்கண் = வாள் போன்ற நீண்ட கண்கள் 


நீர்சோரக் = நீர் வடிய 


குஞ்சி = தலை 


குறங்கின்மேற் = மடியின் மேல் (குறங்கு = தொடை) 


கொண்டிருந்து = கொண்டிருந்து 


கஞ்சி = கஞ்சி 


அருத்தொருத்தி கொண்டுவா = அக்கறையுள்ள ஒருத்தி (மனைவி) கொண்டுவா (மனைவியிடம் கஞ்சி கொண்டுவா )


என்னாமுன் = என்பதற்கு முன் 


நெஞ்சே = என் மனமே 


திருத்துருத்தி யான்பாதஞ் சேர் = திருத் துருத்தியான் பாதம் சேர் 


குஞ்சி என்றால் முடி. 


பரதனுக்கு முடி, உனக்கு கானகம் என்று கைகேயி சொன்ன பின், இராமன் கோசலையை காண வருகிறான். அவன் தூரத்தில் வரும் போதே அவன் முடி மஞ்சன நீராட்டால் நனையவில்லையே என்று கோசலை பதறுகிறாள். 


"குஞ்சி மஞ்சனப்  புனித நீரால் நனைந்திலன்" என்று கம்பன் பேசுவான். குஞ்சி, முடி. இங்கே தலை. 


‘புனைந்திலன் மௌலி; குஞ்சி

     மஞ்சனப் புனித நீரால்

நனைந்திலன்; என்கொல்?’ என்னும்

     ஐயத்தாள் நளின பாதம்.

வனைந்த பொன் கழற்கால் வீரன்

     வணங்கலும், குழைந்து வாழ்த்தி,

‘நினைந்தது என்? இடையூறு உண்டோ

     நெடு முடி புனைதற்கு?’ என்றாள்



சிவன் நடனம் ஆடிய போது, தன் இடது காலை தலை வரை உயர்த்தி ஆடினாராம். அந்த பாதத்துக்கு குஞ்சித பாதம் என்று பெயர். தலையில் பாதம் என்று அல்ல. தலைவரை சென்ற பாதம். 


அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தால், வாழ் நாள் இருந்தாலும், உடம்பில் வலு இருக்காது. 


இப்படி கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து பாடல் பாடி இருக்கிறார். மூல நூலை தேடிப் படியுங்கள். 


செல்வம் இன்னும் சேர்க்கவில்லையே, சேர்த்தது இன்னும் போதவில்லையே, இன்னும் எவ்வளவு சேர்க்க வேண்டி இருக்கிறது, அவன் இவ்வளவு சேர்த்து விட்டான், இவன் அவ்வளவு சேர்த்து விட்டான் என்ற கவலை எல்லாம் பறந்தோடி விடும். 


அத்தனை பாடல்களும் தேன் சொட்டும் இனிய பாடல்கள்.