Thursday, July 13, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - துன்பம் வேண்டாம் என்றால்

 திருக்குறள் - தீவினையச்சம் - துன்பம் வேண்டாம் என்றால் 


துன்பம் யாருக்கு வேண்டும்?


ஒருவரும் துன்பம் வேண்டும் என்று விரும்புவதில்லை. இருந்தும் துன்பம் வருகிறதே. ஏன்?


துன்பம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? 


நாம் என்ன செய்கிறோமோ அது நமக்கு வரும். அதில் ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா? 


நல்லது செய்தால் நல்லது வரும், தீமை செய்தால் துன்பம் வரும். 


எனவே, துன்பம் வேண்டாம் என்றால் மற்றவருக்கு துன்பம் செய்யாமல் இருக்க வேண்டும். 


இதைவிட எளிதாக இதை எப்படிச் சொல்ல முடியும்?


பாடல் 


தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால

தன்னை அடல்வேண்டா தான்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_13.html


(please click the above link to continue reading)


தீப்பால = தீயன 


தான் = ஒருவன் 


பிறர்கண் = பிறருக்கு 


செய்யற்க = செய்யாமல் இருக்க வேண்டும் 


நோய்ப்பால = துன்பம் 


தன்னை = ஒருவனை 


அடல் = நெருங்கி வர 


வேண்டா தான் = வேண்டாதவன், விரும்பாதவன் 


நமக்கு துன்பம் வருகிறது என்றால் நாம் எவ்வளவு பயப்படுவோம்? 


அதே அளவு நாம் பிறருக்கு துன்பம்/தீமை செய்யவும் பயப்பட வேண்டும். 


மற்றவரை திட்டும் போதும்,  மனதளவில் தீமை நினைக்கும் போதும், தீயவற்றை செயலாக்கும் போதும், நாம் பயப்படுவதில்லை. மாறாக சந்தோஷம் கொள்கிறோம். ஆனால், அது நமக்கே திரும்பி வரும் என்று நாம் நினைப்பதில்லை. 


வள்ளுவர் அதை நினைவு படுத்துகிறார். 


அடுத்த முறை யாரையாவது whatsapp இல் புண்படுத்தும் போதோ, மனம் புண் படும்படி பேசும்போதோ நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் - இது திரும்பி வரும் என்று. 



Sunday, July 9, 2023

கம்ப இராமாயணம் - அங்கதன் புலம்பல் - சிந்தையால், செயலால்

 கம்ப இராமாயணம் - அங்கதன் புலம்பல் - சிந்தையால், செயலால் 


இறந்து கிடக்கும் வாலி மேல், அங்கதன் விழுந்து புலம்புகிறான். 


என்னடா இது நாளும் கிழமையுமா சாவு, புலம்பல் என்று வாசிக்க வேண்டி இருக்கிறதே என்று நினைக்கத் தோன்றலாம். 


இறப்பு என்பது வாழ்வின் ஒரு பகுதி. அதைக் கண்டு வெறுத்து ஓடவோ, முகம் சுளிக்கவோ தேவையில்லை. மரணத்தை பற்றி பேசக் கூட கூடாது என்றால் வாழ்க்கை இரசிக்காது. 


அப்பாவோ, அம்மாவோ, வாழ்க்கைத் துணையோ ஒரு நாள் போய் விடப் போகிறார்கள் என்று நினைத்து அவர்களைப் பாருங்கள், அன்பு பெருகும். அவர்கள் இல்லாத வாழ்வு வெறுமையானது என்றால் இருக்கும் வாழ்வு நிறைவானதாக இருக்க வேண்டும் அல்லவா?  இருக்கிறதா?  பெரும்பாலும் இருப்பது இல்லை. காரணம், நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம், 'பிரிவே வராது' என்று. 


மரணம் வரும், பிரிவு வரும் என்று நினைத்தால் இருப்பவற்றின் மேல் பற்றும் பாசமும் பெருகும். 


நாமும் ஒரு நாள் போய் விடுவோம் என்ற எண்ணம் இருந்தால் இத்தனை சண்டை, சச்சரவு, பொறாமை, கோபம், தாபம் எல்லாம் வருமா?  இருக்கின்ற கொஞ்ச நாளை இனிமையாக கழிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் அல்லவா?  


அது ஒரு புறம் இருக்கட்டும். 



அங்கதன் சொல்கிறான் ,


"அப்பா, நீ யாருக்கும் ஒரு தீங்கும் செய்யாதவன் ஆயிற்றே. உனக்கு இப்படி ஒரு நிலையா?  உன்னைப் பார்த்தால் எமனும் நடுங்குவானே.  அந்த எமனுக்கு எப்படி தைரியம் வந்தது உன் உயிரைக் கொண்டு போக.  உன் உயிரையே பயம் இல்லாமல் கொண்டு போய் விட்டான் என்றால், இனி அவன் யாருக்குப் பயப்படுவான்?"


என்று. 


பாடல் 


'எந்தையே! எந்தையே! இவ் எழு

      திரை வளாகத்து, யார்க்கும்,

சிந்தையால், செய்கையால், ஓர்

      தீவினை செய்திலாதாய்!

நொந்தனை! அதுதான் நிற்க, நின்

      முகம் நோக்கிக் கூற்றம்

வந்ததே அன்றோ, அஞ்சாது? ஆர்

      அதன் வலியைத் தீர்ப்பார்?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_9.html


(pl click the above link to continue reading)



'எந்தையே! எந்தையே!  = என் தந்தையே, என் தந்தையே 


இவ்  = இந்த 

எழு திரை = திரை என்றால் அலை. ஏழு கடல் அல்லது கடல் சூழ்ந்த  


வளாகத்து = உலகில் 


யார்க்கும் = யாருக்கும் 


சிந்தையால் = மனத்தால் 


செய்கையால் = செயலால் 


ஓர் = ஒரு 


தீவினை = தீமை 


செய்திலாதாய்! = நீ செய்தது கிடையாது 


நொந்தனை!  = உனக்கு இப்படி ஒரு துன்பம் வந்து விட்டது 


அதுதான் நிற்க = அது ஒரு புறம் இருக்கட்டும் 


நின் = உன் 


முகம் நோக்கிக் = முகத்தைப் பார்த்து 


 கூற்றம் = எமன் 


வந்ததே அன்றோ, = வந்தானே 


அஞ்சாது? = அச்சமில்லாமல் 


ஆர் = யார் 

 

அதன் வலியைத் = எமனின் வலிமையை 


தீர்ப்பார்? = எதிர் கொள்ள முடியும் இனி 




Thursday, July 6, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - இலன் என்று

 திருக்குறள் - தீவினையச்சம் - இலன் என்று 


நாம் ஏன் சில தீமைகளைச் செய்கிறோம் என்றால் வறுமை ஒரு காரணம். பசி, மருத்துவ செலவுக்கு பணம் இல்லை, பிள்ளை படிப்புக்கு பணம் இல்லை, எனவே இலஞ்சம் வாங்கினேன், திருடினேன், கொள்ளியடித்தேன் என்று சிலர் கூறுவார்கள். 


அவர்கள் கூறுவது ஞாயம் போலத் தெரியும். 


வறுமையில் இருப்பவர்களை தீயவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். நீ இதைச் செய், உனக்கு இவ்வளவு பணம் தருகிறேன் என்று ஆசை காட்டுவார்கள். 


வள்ளுவர் சொல்கிறார் 


"என்னிடம் பணம் இல்லை, வறுமையில் வாடுகிறேன் என்று எண்ணி தீயவை செய்து விடாதே. அப்படிச் செய்தால், உன் வறுமையினால் உள்ள துன்பத்தோடு கூட மேலும் பல துன்பங்கள் வந்து சேரும்"  என்கிறார். 



பாடல் 


இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்

இலன்ஆகும் மற்றும் பெயர்த்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post_6.html


(please click the above link to continue reading)



இலன்என்று = இல்லை என்று. பொருள் இல்லை என்று 


தீயவை  = தீயனவற்றை (களவு, கொலை, கொள்ளை போன்றவை) 


செய்யற்க = செய்யக் கூடாது 


செய்யின் = செய்தால் 


இலன்ஆகும் = இல்லாமல் போகும் 


மற்றும் = மற்றும் 


பெயர்த்து = மேலும், மறுபடியும், பின்பும் 


முதலில் வறுமை இருந்தது. ஏதாவது தவறு செய்தால், தண்டனை வரும், பழி வரும், இருக்கிற பணமும் வக்கீல், நீதி மன்றம், வழக்கு, வாய்தா என்று போகும். சமுதாயத்தில் பழிச் சொல் வரும். கெட்டவன் என்ற முத்திரை விழும். நல்லவர்கள் அவனோடு சேர மாட்டார்கள். நல்ல வாய்புகள் பறிபோகும். தீயவர் சகவாசம் வரும். மேலும் பல தீமைகளைச் செய்யத் தூண்டும். 


"பெயர்த்து" என்ற சொல்லுக்கு மேலும், பின்பும், மறுபடியும் என்று பொருள் சொல்கிறார்கள். அதன் விரிவு என்ன என்றால், இந்தப் பிறவியில் மட்டும் அல்ல, பின் வரும் பிறவிகளிலும் இந்தப் பாவம் தொடரும் என்பது. 


ஒரு பிறவியில் கொஞ்சம் பொருள் வேண்டி, பல பிறவிகளில் துன்பம் அனுபவிப்பது சரியான செயலா?  


முந்தைய குறளில் "மறந்தும் பிறன் கேடு சூழற்க" என்றார். 


எங்கே, "வறுமையின் காரணமாக தீங்கு செய்யாதே" என்கிறார். 


வறுமையைக் காரணம் காட்டி தீங்கு செய்யாதே என்கிறார் வள்ளுவர். 







Wednesday, July 5, 2023

கம்ப இராமாயணம் - அங்கதன் புலம்பல் - கனலும், நீரும், குருதியும்

 கம்ப இராமாயணம்  - அங்கதன் புலம்பல் -  கனலும், நீரும், குருதியும் 


ஆண்களால் உணர்சிகளை எளிதில் வெளிக் காட்ட முடிவதில்லை. ஆரம்பம் முதலே ஒரு மாதிரியாக முரட்டுத் தனமாக வளர்ந்து விடுகிறார்கள். வேட்டையாடி, போர் செய்து, அந்தக் குணம் படிந்து போய் விட்டது போலும். 


அதிலும், குறிப்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள உறவு ரொம்பவும் சிக்கலானது என்றே தோன்றுகிறது. தந்தைக்கும் மகளுக்கும் உள்ள உறவு மிக மிக மென்மையானது. இனிமையானது. அதே தந்தை மகன் என்று வரும்போது ஒரு கடுமை காட்டுவதும், உள்ளுக்குள் உருகுவதும் ஒரு வித்தியாசமான அனுபவம்தான். 


உங்கள் தனி வாழ்வில் உங்கள் அனுபவம் வேறு மாதிரி இருக்கலாம். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


வாலி இறந்து கிடக்கிறான். 


வாலியின் மகன் அங்கதன் வந்து வாலியின் மேல் விழுந்து புலம்புகிறான். 


ஒரு புறம் தந்தை இறந்த துக்கம். இரு புறம் தந்தையை மற்றவர்கள் கொன்று விட்டார்களே என்ற கோபம். இன்னொரு புறம் தந்தையின் வீரத்தின் மேல் உள்ள பெருமிதம். இன்னொரு புறம் போய் விட்டானே என்ற வெறுமை/ஏமாற்றம். 


அத்தனை உணர்வுகளையும் தெள்ளத் தெளிவாக படம் பிடிக்கிறான் கம்பன். 



பாடல் 


கண்ட கண்  கனலும் நீரும்

      குருதியும் கால, மாலை,

குண்டலம் அலம்புகின்ற குவவுத்

      தோள் குரிசில், திங்கள்

மண்டலம் உலகில் வந்து கிடந்தது;

      அம் மதியின் மீதா

விண்தலம் தன்னின் நின்று ஓர்

      மீன் விழுந்தென்ன, வீழ்ந்தான்.


பொருள் 


(please click the above link to continue reading)


கண்ட கண் = வாலியைக் கண்ட அங்கதன் கண்கள் 


கனலும் = நெருப்பையும் (கோபத்தால்) 


நீரும் = கண்ணீரும் (துக்கத்தால்) 

 

குருதியும் = இரத்தமும் (எதிரிகளை பழி வாங்க வேண்டும் என்ற ஆங்காரமும்) 


கால = வழிய 


மாலை = கழுத்தில் அணிந்த மலர் மாலை 


குண்டலம் = காதில் அணிந்த குண்டலம் 


அலம்புகின்ற = அசைந்து, தழுவி, புரளிகின்ற 


குவவுத் = பெரிய 


தோள்  = தோள்களை உடைய 


குரிசில் = ஆண்மகன் 


திங்கள் மண்டலம் = ஒளி பொருந்திய நிலவு 


உலகில் வந்து கிடந்தது = தரையில் விழுந்து கிடக்க 


அம் மதியின் மீதா = அந்த நிலவின் மீது 


விண்தலம்  தன்னின் நின்று = விண்ணில் இருந்து 


   ஓர் = ஒரு 


மீன் = விண்மீன், நட்சதிரம் 


விழுந்தென்ன = விழுந்தது போல 


வீழ்ந்தான் = விழுந்தான் 


ஆற்றல் மிக்க தகப்பன். அன்பு கொண்ட மகன். அகால மரணம். 


உணர்வுகளின் உச்சம். கம்பனின் கவிதை அந்த உணர்வுக் கொந்தளிப்பை கொஞ்சம் கூட குறைக்காமல் நம் மனதில் பதியும்படி செய்கிறது. 


மற்ற கவிதைகளையும் பார்ப்போம். 



Sunday, July 2, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - மறந்தும் பிறன் கேடு சூழற்க

 திருக்குறள் - தீவினையச்சம் - மறந்தும் பிறன் கேடு சூழற்க 


ஏன் மற்றவர்களுக்கு நாம் தீமை செய்கிறோம்? மற்றவர்களுக்கு தீங்கு செய்ய வேண்டும் என்று நமக்கு ஒன்றும் பெரிய ஆசை இல்லை. இருந்தும் செய்கிறோம். 


காரணம் என்ன?


அதை எப்படி தவிர்ப்பது என்று வள்ளுவர் ஆராய்ந்து நமக்குச் சொல்கிறார். 


முதல் காரணம் - மறதி. 


தெரியாம சொல்லிட்டேன். நானா அப்படிச் செய்தேன், அப்படி சொன்னேன் என்று நாமே பலமுறை நினைத்து இருப்போம். என்ன செய்கிறோம், என்ன சொல்கிறோம் என்ற ஞாபகமே இருக்காது. யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்ற  நினைவு இருக்காது. 


அது ஒரு வித மறதி. 


இன்னொன்று, இப்படி பேசினால், செய்தால் நமக்கு தீமை வரும் என்ற நினைவு, இல்லாமல் பேசி விடுவது, செய்து விடுவது. 


"அவன் நாசாமா போகனும்" நு மனதுக்குள் நினைப்போம். அப்படி நினைப்பது கூட நமக்கு தீமை செய்யும் என்று அறியாமல் செய்து விடுவது. 


சரி, ஞாபக மறதியா ஒரு தீங்கு செய்து விட்டால் என்ன ஆகும்? தெரியாமல் செய்வது ஒரு குற்றமா? என்று கேட்டால், சட்டம் ஒரு வேளை மன்னித்து விடலாம். அறம் ஒரு போதும் மன்னிக்காது. 


நீ ஒருவனுக்கு தீங்கு நினைத்தால், அறக் கடவுள் உனக்கு தீங்கு நினைப்பார் என்கிறார் வள்ளுவர். 


பாடல்


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/07/blog-post.html


(pl click the above link to continue reading)




மறந்தும் = மறந்து போய் கூட 


பிறன்கேடு = பிறருக்கு கேட்டினை 


சூழற்க = நினைக்காதே 


சூழின் = நீ நினைத்தால் 


அறம்சூழும் = அறக்கடவுள் நினைக்கும் 


சூழ்ந்தவன் = அப்படி மற்றவருக்கு கேட்டினை நினைத்தவனின் 


கேடு = கேட்டினை 


இந்த அறக் கடவுள் நம்மை மாதிரித்தானா?  நல்லது செய்தால் நல்லது செய்வார், தீமை செய்தால் பதிலுக்கு தீமை செய்வார். அவரும் நம்மைப் போலத்தானா?  என்று ஒரு கேள்வி வரும். 


நாம் மற்றவருக்கு தீமை நினைத்தால், அறக் கடவுள் நமக்கு தீமை நினைப்பார் என்றால் நினைத்து விட்டுப் போகட்டும். என்ன இப்ப? என்று நினைக்கலாம். 


பரிமேலழகர் உரை இல்லமால் இதற்கு எல்லா பதில் சொல்ல முடியாது. 


பரிமேலழகர் சொல்கிறார்:


"நீ மற்றவனுக்கு தீமை நினைக்கிறாய். அந்த தீமையை உன்னால் செயல் படுத்த முடியுமோ இல்லையோ தெரியாது. பெரிய அரசியல் தலைவர் செய்வது சரி அல்ல. அவரால்எனக்கு பெரிய பாதிப்பு. அவருக்கு ஏதாவது செய்யணும் என்று நினைத்தால் முடியுமா? முடியாது. ஆனால், நீ எப்போது மற்றவருக்கு தீமை செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ, அப்போதே அறக் கடவுள் உனக்கு தீமை செய்ய வேண்டும் என்று நினைப்பார். உன்னால் நீ நினைத்ததை செய்ய முடியாமல் போகலாம். ஆனால், அறக் கடவுள் நினைத்தால் அவர் நினைத்ததை செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர். எனவே, அவர் உனக்கு கட்டாயம் தீங்கு செய்து விடுவார். அது எப்படி என்றால், இவனிடம் நல்ல குணம் இல்லை. இவனை விட்டுப் போய் விடுவதே நல்லது என்று நினைத்து உன்னை விட்டு அவர் போய் விடுவார். அறக் கடவுள் உன்னை விட்டு போய் விட்டால் உனக்கு துன்பங்கள் தானே வரும்" 


என்பது கருத்து. 


எப்படி யோசித்து இருக்கிறார்கள். 


"சூழ்கின்ற பொழுதேதானும் உடன் சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது, அவன் கெடத் தான் நீங்க நினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம்."


என்பது பரிமேலழகர் உரை. 


எனவே, பிறருக்கு தீமையை மறந்தும் கூட நினைக்கக் கூடாது. 


இப்போதெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு தீமை வரும் என்று சொல்லவே வேண்டாம். 



Friday, June 23, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - அறிவினுள் எல்லாம் தலை

 திருக்குறள் - தீவினையச்சம் - அறிவினுள் எல்லாம் தலை 


நமக்கு தீமை செய்பவர்களுக்கு, பதிலுக்கு தீமை செய்யாமல் விட்டு விடுவது அறிவினுள் எல்லாம் தலை சிறந்தது என்கிறார் வள்ளுவர். 


அவருக்கு என்ன எளிதா சொல்லிவிட்டுப் போய் விடுவார். இதெல்லாம் முடிகிற காரியமா? நமக்கு தீமை செய்பவர்களுக்கு பதிலுக்கு பதில் கொடுக்காவிட்டால் அவர்கள் மீண்டும் மீண்டும் நமக்கு தீமை செய்து கொண்டே இருக்க மாட்டார்களா?  இது என்ன அறிவுரை ? என்று நாம் நினைப்போம். பரிமேலழகர் இல்லாவிட்டால் 


பாடல் 


அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/06/blog-post_23.html


(pl click the above link to continue reading)


அறிவினுள் = நன்மை தருகின்ற அறிவினுள் 


எல்லாம் = அனைத்திலும் 


தலை = உயர்ந்தது, சிறந்தது 


என்ப = என்று சொல்லுவார்கள் 


தீய செறுவார்க்கும்  = (நமக்கு) தீமை செய்தவர்களுக்கும் 


செய்யா விடல் = (பதிலுக்கு) தீமை செய்யாமல் விட்டு விடுதல் 


சரி, அப்படி என்னதான் பரிமேலழகர் சொல்லி இருப்பார்?


தீமை செய்தால் தீமை விளையும், நன்மை செய்தால் நன்மை விளையும் என்பதில் சந்தேகம் இல்லையே?  


ஒருவன் நமக்கு தீமை செய்கிறான். பதிலுக்கு நாம் அவனுக்கு தீமை செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ? அவன் முதலில் செய்தான், நாம் இரண்டாவது செய்தோம் என்பதைத் தவிர வேறு என்ன வித்தியாசம்? இருவர் செய்ததும் தீமைதான். ஒருவர் முதலில் செய்தார், மற்றவர் இரண்டாவது செய்தார்.  எனவே இருவருக்கும் செய்த தீமைக்கும் பலன் கிடைக்கும்தானே. 


அது மட்டும் அல்ல. 


ஒருவன் நமக்கு ஒரு தீங்கு செய்கிறான். அது நமக்கு நிகழும் முதல் தீமை. நாம் பதிலுக்கு அவனுக்கு ஏதோ ஒரு தீமை செய்கிறோம். அப்படி நாம் தீமை செய்தால், அந்த தீமைக்கு நமக்கு பின்னாளில் வேறு ஒரு தீமை வரும். அது நமக்கு இரண்டாவது நிகழும் தீமை. அது புத்திசாலித்தனமா?


சின்ன உதாரணம். 


ஒருவன் நம்மை ஏதோ தவறான சொல் சொல்லி திட்டிவிடுகிறான். நாம் பேசாமல் போய் இருந்தால் அதோடு போய் இருக்கும். அதெப்படி சும்மா விடுவது என்று பதிலுக்கு நாம் அவனை திட்டினால், அவன் நம்மை மேலும் பல வார்த்தைகள் சொல்லித் திட்டலாம். முதலில் ஒரு தரம் திட்டு வாங்கினோம், பின் இரண்டாவது முறை திட்டு வாங்குகிறோம். அது புத்திசாலித்தனமா? 


எனவே, வள்ளுவர் செய்கிறார், நாம் பதிலுக்கு தீமை செய்தால் நமக்கு மீண்டும் தீமை வரும் என்று "அறிந்து" பதிலுக்கு தீமை செய்யாமல் விடுதல் அறிவினுள் எல்லாம் உயர்ந்த அறிவு என்றார். 


இது எளிதில் புரியாது. அடியும் வாங்கிக் கொண்டு, சும்மா இருப்பது நல்லது என்று அறிந்து கொள்ளும் அறிவு எளிதில் வராது. அடித்தால் திருப்பி அடிக்கத் தான் தோன்றும். அதை விடுத்து, தீங்கு செய்தார்க்கும் தீமை செய்யாமல் விடுதல் ஏதோ அவனுக்கு செய்த நன்மை அல்ல, அது நமக்கு நாமே செய்து கொள்ளும் நன்மை என்ற அறிவு இருக்கிறதே,  அது எல்லாவற்றிலும் உயர்ந்த அறிவு என்கிறார். 


"தலை என்ப" என்றால் தலை சிறந்தது என்று சொல்லுவார்கள் என்று அர்த்தம். யார் சொல்லுவார்கள்?  அறிவுள்ள சான்றோர்கள் சொல்லுவார்கள். அறிவில்லாதவர்கள் என்ன சொல்லுவார்கள்? பழிக்குப் பழி, இரத்தத்துக்கு இரத்தம் என்று கொந்தளிப்பார்கள். அறிவுடையார் சொல்லக் கேட்டு நடப்பது சிறந்த அறிவு. 


"அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல்"


 என்பதில் ஒரு சின்ன இலக்கண நுணுக்கம் இருக்கிறது. 


அறிவினுள் எல்லாம் தலை சிறந்தது இன்னொரு அறிவாகத்தானே இருக்க முடியும்?  குத்து சண்டை வீரர்களில் தலை சிறந்தவர் என்றால் முகமது அலி, டைசன் என்று ஒரு குத்து சண்டை வீரரைத்தானே சொல்ல முடியும். அது போல அறிவில் எல்லாம் சிறந்தது என்றால் அது ஒருவிதமான அறிவாகத்தானே இருக்க முடியும்? ஆனால், குறளில் அப்படி ஒரு அறிவு பற்றி சொல்லவில்லையே என்றால் "செய்யா விடல்" என்பதில் செய்யாமல் இருப்பது சிறந்த அறிவு அல்ல, செய்யாமல் இருக்க வேண்டும் என்று அறிகிறோம் அல்லவா, அந்த அறிவு மற்றவை எல்லாவற்றையும் விட சிறந்தது என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார் பரிமேலழகர். 


எவ்வளவு நுணுக்கமாக எழுதி இருக்கிறார் வள்ளுவர், அதை எப்படி படித்து, அறிந்து சொல்லி இருக்கிறார் பரிமேலழகர்.


யார் மேலாவது கோபம் வந்தால், அவர்களுக்கு எப்படியாவது ஒரு தீமை செய்யவேண்டும் என்று தோன்றினால், இந்தக் குறளை ஒரு முறை நினைத்துக் கொள்ள வேண்டும். 




Sunday, June 11, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - தீயும், தீயவையும்

 திருக்குறள் - தீவினையச்சம் - தீயும், தீயவையும் 


தீவினைகளை செய்து பழகியவர்கள் பயம் இல்லாமல் அவற்றைச் செய்வார்கள் என்றும், அந்தப் பழக்கம் இல்லாதவர்கள் தீயவை செய்ய பயம் கொள்வார்கள் என்றும் முந்தைய குறளில் கூறினார். 


தீயவை செய்தால் என்ன?  தீயவை செய்பவர்கள் எல்லோரும் சுகமாகத்தான் இருக்கிறார்கள். இந்த பாவம், புண்ணியம் என்று சொல்லிக் கொண்டு இருப்பதில் ஒரு பலனும் இல்லை என்று சிலர் நினைக்கலாம். 


தீயவை செய்தால் என்ன நிகழ்ந்து விடும்?  ஒரு கை பார்த்து விடலாம் என்று கூட சிலர் நினைக்கலாம்.


வள்ளுவர் சொல்கிறார், "தீயவை செய்தால் தீமையே வந்து சேரும் என்பதால், தீயவற்றை தீயை விட மோசமானது என்று எண்ண வேண்டும்" என்கிறார். 


பாடல் 


தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/06/blog-post_11.html



(pl click the above link to continue reading)


தீயவை  - தீய வினைகள் 


தீய பயத்தலால் = தீமை தருவதால் 


தீயவை = அந்தச் தீச் செயல்கள் 


தீயினும் = தீயைவிட 


அஞ்சப் படும் = அச்சம் கொள்ள வைக்கும். 


அது என்ன தீயை விட? 


தீ, சுட்ட போது வலிக்கும். போன வருடம் தீபாவளியின் போது வெடி வெடித்த போது கையை சுட்டுக் கொண்டாலும், அது இந்த வருடம் வலிக்காது.  அது ஒரு சில நாள் இருக்கும், அப்புறம் போய் விடும்.  ஆனால், தீமை ஒரு காலத்தில் செய்தால் அது எப்போது வேண்டுமானாலும் வந்து சுடும். எப்போது சுடும் என்று தெரியாது. எப்ப வருமோ, எப்ப வருமோ என்ற வலி ஒருபுறம், பின் எதிர் பாராத நேரத்தில் வந்து தாக்கும் போது வலி பல மடங்காக இருக்கும். 


தீயால் சில சமயம் நன்மைகளும் உண்டு. உணவு சமைக்கலாம், குளிர் காயலாம். ஆனால், தீய செயல்களால் ஒரு காலத்திலும் ஒரு நன்மையையும் கிடையாது என்பதால் தீயினும் அஞ்சப்படும் என்றார். 


நாம் யார்க்கும் ஒரு தீங்கும் செய்து இருக்க மாட்டோம். ஒருத்தரைப் தவறாக பேசி இருக்க மாட்டோம். சட்ட திட்டங்களுக்கு பயந்து நடப்போம். இருந்தும் பெரிய துன்பங்கள் சில சமயம் நம்மை தாக்கியிருக்கும். ஏன்?  என்றோ, எந்தப் பிறவியிலோ செய்த தீமை இந்தப் பிறவியில் வந்து தாக்குகிறது.   தீ ஒரு பிறவியில் சுட்டால், அந்தப் பிறவியோடு போய் விடும். ஆனால், தீய வினைகள் மறு பிறவியில் கூட வந்து தாக்கும். 


தீமை செய்பவர்கள் நினைக்கலாம், தப்பிவிட்டோம் என்று. ஆனால், அறம் விடாது.  எங்கு எப்படி திருப்பித் தர வேண்டுமோ, அப்படித்  தரும்.


எனவே, தீயவை செய்ய அச்சம் கொள்ள வேண்டும். ரொம்ப பயப்பட வேண்டும்.