Saturday, January 20, 2024

திருக்குறள் - அருளுடைமை - செல்வத்துள் செல்வம்

 திருக்குறள் - அருளுடைமை - செல்வத்துள் செல்வம் 


https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_20.html


திருக்குறள் என்ற நூலை மூன்று பெரும் பிரிவுகளாக வள்ளுவர் பிரிக்கிறார். 


அறம்

பொருள் 

இன்பம் 


என்று. இந்த மூன்றுக்கும் பால் என்று பெயர். அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப் பால். 


அறத்துப் பாலை மூன்று  பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறார்.  அந்தப் பிரிவுகளுக்கு இயல் என்று பெயர். 


பாயிர இயல், இல்லறவியல், துறவறவியல் என அப்பிரிவுகள் அழைக்கப்படும். 


நாம் பாயிரம், இல்லறம் பற்றி சிந்தித்து விட்டோம். 


இனி துறவுக்குள் நுழைகிறோம்.


துறவறம் என்பதை இரண்டாகப் பிரிக்கிறார்கள். விரதம், ஞானம் என்று. 


இதில், விரதத்தில் பலவிதமான விரதங்கள் உண்டு என்றாலும் அதில் சிறப்பான சிலவற்றை சொல்ல ஆரம்பிக்கிறார். 


அதில் முதலாவது அருளுடைமை. 


அருளுடைமை என்றால் என்ன?


நமக்கு தொடர்பு உள்ளவர்கள் மேல் நாம் காட்டும் கருணை, பரிவு அன்பு எனப்படும். என் மனைவி/கணவன், பிள்ளைகள், உடன் பிறந்தோர் இதில் அடங்குவர்.


தொடர்பு இல்லாதவர்கள் மேல் காட்டும் கருணை அருள் எனப்படும். என் பையனுக்கு ஒரு மிட்டாய் வாங்கித் தருகிறேன். அதை ருசித்து அவன் மகிழ்கிறான். அதைப் பார்த்து நான் மகிழ்கிறேன். அப்போது அந்தக் கடை வாசலில் ஒரு ஏழைப் பையன் ஏக்கத்தோடு என் மகன் மிட்டாய் சாப்பிடுவதை பார்க்கிறான். அந்த ஏழைப் பையன் மேல் பரிதாபம் கொண்டு அவனுக்கும் ஒரு மிட்டாய் வாங்கித்தந்தால் அது அருள். 


என் மகன் மேல் நான் செலுத்துவது அன்பு. 

அந்த ஏழைப் பையன் மேல் நான் செலுத்துவது அருள். 


அதில் முதல் குறள்

பாடல் 


அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள


பொருள் 


அருட்செல்வம் = அருளாகிய செல்வம் 


செல்வத்துள் செல்வம் = செல்வத்துள் எல்லாம் பெரிய செல்வம் 


பொருட்செல்வம் = பொருளாகிய செல்வம் 


பூரியார் கண்ணும் உள = இழிந்தவர் இடத்திலும் இருக்கும் 


மேலோட்டமாய் பார்த்தால் மிக எளிமையான, பெரிய ஆழ்ந்த அர்த்தம் இல்லாத குறள் போலத் தெரியும். 


வாருங்கள்,உள்ளே செல்வோம். 


பொருள் செல்வம் புரிகிறது. வீடு, மனை, நகை, கார், வங்கிக் கணக்குகள் என்று நாம் புரிந்து கொள்கிறோம். 


அது என்ன அருள் செல்வம்?  அருள் செய்யலாம். அது எப்படி செல்வமாக முடியும்?


செல்வம் என்றால் என்ன? ஏதோ ஒருவிதத்தில் நமக்கு இன்பம் தருவதைத்தானே நாம் செல்வம் என்போம். நம்மிடம் ஒரு கார் இருக்கிறது. எப்ப அதை எடுத்தாலும் ஏதாவது ஒரு கோளாறு. ஓடுவது கிடையாது, ரொம்ப சத்தம் வரும், பிரேக் பிடிக்காது என்று இருந்தால், அதை செல்வம் என்போமா? "இந்தச் சனியனை கட்டிக்கொண்டு ..." என்று சலிப்போம் அல்லவா?  செல்வம் என்றால் சுகம் தர வேண்டும். 


பொருள் செல்வத்தால் சுகம் வரும். ஆனால், சிக்கலும் வரும். பயம் வரும். சில சமயம் அது நம்மை விட்டுப் போய் விடலாம். 


ஆனால், அனைத்து உயிர்களையும் போற்றி, அவைகளுக்கு நன்மை தருவதால் வரும் இன்பம் இருக்கிறதே, சுகம் இருக்கிறதே, அது தான் அருளலால் வரும் செல்வம். அது இம்மைக்கு மட்டும் அல்ல, மறுமைக்கு நன்மை தருவது. வீடு பேற்றையும் தரும். எனவே, அருளை செல்வம் என்றார். 


சரி, அதை செல்வம் என்று ஏற்றுக் கொண்டாலும், மற்ற எல்லா செல்வத்தையும் விட, இதுதான் உயர்ந்த செல்வம் என்று எப்படி கூற முடியும்?


நம்மிடம் ஒரு விலை உயர்ந்த கார் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை நினைத்து நாம் பெருமைப் படுகிறோம். தெருவில் நம் வண்டியைப் பார்த்து மற்றவர்கள் வியப்பதை கண்டு உள்ளுக்குள் மகிழ்கிறோம். வீடு, கார், நகை எல்லாம் அப்படித்தான்.


ஆனால், அதே போல் கார் நிறைய பேரிடம் இருந்தால் என்ன ஆகும். நாம் சாதாரண ஆளாகி விடுவோம். அதில் ஒரு பெருமையும் இல்லை. பணமும் பொருளும் யார் வேண்டுமானாலும் சேர்த்து விடலாம். திருடன், அயோக்கியன் இடம் கூட பெரும் செல்வம் இருக்க வாய்ப்பு உண்டு. 


இந்த அருளாகிய செல்வம் இருக்கிறதே, அது எல்லோரிடமும் இருக்காது. 


அருள் செல்வம் பெற முதலில் அறிவு வேண்டும். மன மாசுகள் நீங்க வேண்டும், அன்பு நிறைய வேண்டும், அருள் பெருக வேண்டும்.  எளிதான காரியம் அல்ல. ஒருவனிடம் அருள் செல்வம் இருக்கிறது என்றால், அது மற்றவர்களால் எளிதாக அடைய முடியாத செல்வம். எனவே அது உயர்ந்த செல்வம். 


அது மட்டும் அல்ல, எவ்வளவு பொருள் சேர்த்தாலும், நாம் இறந்த பின் அதில் ஒரு குன்றுமணியைக் கூட கொண்டு செல்ல முடியாது. எல்லாவற்றையும் விட்டு விட்டுத்தான் செல்ல முடியும். 


ஆனால், அருள் செல்வம் இருக்கிறதே, அது மறுமைக்கும் பயன் தரும். 


எனவே அது உயர்ந்த செல்வம். 


மேலும் சிந்திப்போம். 




Friday, January 19, 2024

விவேக சிந்தாமணி - அறிந்தோம் அம்மம்மா!

விவேக சிந்தாமணி - அறிந்தோம் அம்மம்மா!

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_19.html


தெருவில் பிச்சைக் காரர்களை பார்த்து இருக்கிறோம். பசி. வறுமை. அழுக்குத் துணி. குளித்து எத்தனை நாளோ. இருக்க இடம் இல்லை. குளிர், வெயில் கொடுமைகள். போதாக்குறைக்கு தெருவில் சென்றால் நாய்கள் எல்லாம் அவர்களை பார்த்துக் குரைக்கும், கடிக்க வரும். எல்லார் முகத்தையும் பரிதாபமாக பார்த்து பிச்சை கேட்க வேண்டும். சிலர் போடுவார்கள், சிலர் முகம் சுளிப்பார்கள். ஒன்றும் செய்ய முடியாது. 


ஏன் சிலர் இப்படி இருக்கிறார்கள்? யாரும் பிச்சைக்கார்களாய் பிறப்பது இல்லை. பின் ஏன் இப்படி வருந்துகிறார்கள். 


விவேக சிந்தாமணி சொல்கிறது. 


ஒரு காலத்தில், முன் பிறவிகளில், அன்பான மனைவி பால் சோறை (அன்னத்தை) பொன் கிண்ணத்தில் கொண்டு வந்து அன்போடு ஊட்டிய போது, அதை சுவைத்து உண்டு கொண்டு, பசி என்று வந்தவர்களுக்கு ஒன்று ஈயாமல் விரட்டி அடித்தவர்கள் இருக்கிறார்களே, அவர்கள்தான் இந்தப் பிறவியில்  பிச்சைக்கார்களாய்  பிறந்து துன்பப் படுகிறர்கள் 


என்கிறது. 


பாடல் 



 மண்ணார் சட்டி கரத்து ஏந்தி

     மறநாய் கௌவும் காலினராய்

அண்ணாந்து ஏங்கி இருப்பாரை

     அறிந்தோம் அறிந்தோம் அம்மம்மா!

பண்ணார் மொழியார் பால் அடிசில்

     பைம்பொன் கலத்தில் பரிந்து ஊட்ட

உண்ணா நின்ற போது ஒருவர்க்கு

     உதவா மாந்தர் இவர்தாமே!


பொருள் 


மண்ணார் = மண்ணால் செய்த 


சட்டி = சட்டியை 


கரத்து ஏந்தி = கையில் ஏந்தி 


மறநாய் = கொடூரமான நாய்கள் 


கௌவும் = கவ்வும் 


காலினராய் = கால்களை உடையவர்களாய் 


அண்ணாந்து = தெருவில் அமர்ந்து போவோர் வருவோர் முகங்களை அண்ணாந்து பார்த்து 


 ஏங்கி இருப்பாரை = யார் நமக்கு பிச்சை போடுவார்கள் என்று ஏங்கி இருப்பவர்களை பற்றி 


அறிந்தோம் அறிந்தோம் அம்மம்மா! = அவர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியும், தெரியும் 


பண்ணார் = இசை போன்ற இனிய 


மொழியார் = குரலை உடைய மனைவி 


பால் அடிசில் = பால் சோறை 


பைம்பொன் = சிறந்த தங்கப்  


கலத்தில் = பாத்திரத்தில் வைத்து  


பரிந்து ஊட்ட = பாசத்தோடு ஊட்டும் போது 


உண்ணா நின்ற போது = அவற்றை உண்டு கொண்டு இருந்த போது 


ஒருவர்க்கு = பசி என்று வந்த ஏழைக்கு 


உதவா மாந்தர் இவர்தாமே! = உதவாத மனிதர்கள்தான் இந்தப் பிச்சைக்காரர்கள் 


விவேக சிந்தாமணி சொல்லும் கருத்து ஒருபுறம் இருக்கட்டும். 


இனி வரும் நாட்களில் பிச்சைக்கார்களே இருக்க மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. 


எந்த ஊரில் மனைவிகள் இனிமையாக பேசிக் கொண்டு, தங்கப் பாத்திரத்தில், பால் சோறை அன்போடு கணவனுக்கு ஊட்டுகிறார்கள். அது அந்தக் காலம். :)


நகைச்சுவையை தவிர்த்து, இன்றைய சூழ்நிலையோடு ஓட்டிப் பார்த்தால், இவ்வளவு செல்வம் இருந்தும், மற்றவர்களுக்கு ஒரு உதவி செய்யாமல் இருப்பவர்கள் மறு பிறவியில் துன்பப்படுவார்கள் என்று பயம் காட்டுகிறது விவேக சிந்தாமணி. 



Thursday, January 18, 2024

தேவாரம் - சொல்லுகேன் கேள்

 தேவாரம் -  சொல்லுகேன் கேள்  

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_18.html

நமக்கு என்னவெல்லாம் தேவை ?  


நிறைய செல்வம், நல்ல உடல் ஆரோக்கியம், கல்வி, புகழ், பெருமை, சுற்றம், நட்பு..என்று பட்டியல் போடலாம். 


நாவுக்கரசர் சொல்கிறார், இதெல்லாம் பெரிய விடயம் அல்ல. அடைய வேண்டிய பெரிய விடயங்கள் என்னென்ன தெரியுமா?


நாம் செய்த பாவங்கள் நம்மை பற்றி நிற்கின்றன. அவை நம்மை விட்டு விலக வேண்டும். இல்லை என்றால் பாவத்தின் பலனாக துன்பம் வரும், பிறவி வரும்.


வீடு பேறு அடைய வேண்டும். திரும்பி திரும்பி பிறந்து இறந்து பிறந்து இறந்து ...இந்த சுழலில் இருந்து விடுபட வேண்டும். 


பழைய வினைகள் விட்டால் மட்டும் போதாது. புது வினைகள் எதுவும் வராமலும் இருக்க வேண்டும்.


இவை எல்லாம் முக்கியமா இல்லையா?


முக்கியம் என்றால், இவற்றை எப்படி அடைவது? அதையும் அவரே சொல்கிறார். 


"சிவனே..நீ தான் எனக்குத் துணை, உன்னைத் தவிர வேறு ஒரு தெய்வத்தை நான் நினைக்க மாட்டேன், புனிதமானவனே, ஆரூரா" 


 என்று போற்றுங்கள். மேற்சொன்ன எல்லாம் கிடைக்கும் என்கிறார். 


பாடல் 


பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டில்,

         பரகதிக்குச் செல்வதுஒரு பரிசு வேண்டில்,

சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில்,

         சொல்லுகேன் கேள்,நெஞ்சே, துஞ்சா வண்ணம்,

உற்றவரும் உறுதுணையும் நீயே என்றும்,

         உன்னைஅல்லால் ஒருதெய்வம் உள்கேன் என்றும்,

புற்றுஅரவக் கச்சுஆர்த்த புனிதா என்றும்,

         பொழில்ஆரூ ராஎன்றே போற்றா நில்லே.


பொருள் 


பற்றிநின்ற பாவங்கள் = நம்மை விடாமல் பற்றிக் கொண்டு நிற்கும் பாவங்கள் 


பாற்ற வேண்டில் = பாற்றுதல் என்றால் விலகுதல். அந்தப் பாவங்கள் விலக வேண்டுமானால். 


பரகதிக்குச் = பரம் என்றால் மேலான, உயர்ந்த. பரம்பரை. பரசிவம். பரமாத்மா. கதி என்றால் வழி. பரகதி, உயர்ந்த வழி. 


செல்வதுஒரு பரிசு வேண்டில் = உயர்ந்த வழியில் செல்லும் வாய்ப்பு வேண்டும் என்றால் 


சுற்றிநின்ற சூழ்வினைகள் = நம்மைச் சுற்றி நிற்கும் வினைகள், எப்போது நம்மை பற்றலாம் என்று காத்துக் கிடக்கும் வினைகள் 

 


வீழ்க்க வேண்டில் = நம்மைப் பற்றாமல் இருக்க வேண்டும் என்றால் 


சொல்லுகேன் கேள் நெஞ்சே = என் மனமே, நான் சொல்வதைக் கேள் 


துஞ்சா வண்ணம் = துஞ்சுதல் என்றால் உறங்குதல். இங்கே மறக்காமல், ஒருபோதும் விடாமால் என்று பொருள் கொள்ளலாம். 


உற்றவரும் = நமக்கு வேண்டியவர்களும், துணையானவர்களும் 


உறுதுணையும் = சிறந்த துணையும் 


நீயே என்றும் = நீதான் என்றும் 


உன்னைஅல்லால் = உன்னைத் தவிர 


ஒருதெய்வம் = மற்றொரு தெய்வம் 


உள்கேன் = உள்ளத்தால் நினைக்க மாட்டேன் 


என்றும் = என்றும் 


புற்று = புற்றில் வாழும் 


அரவக் = பாம்பை 


கச்சு ஆர்த்த = இடுப்பில் அணிந்து இருக்கும் 


புனிதா என்றும் = புனிதமானவனே என்றும் 


பொழில் = சோலைகள் சூழ்ந்த 


ஆரூரா = திருவாரூர் என்ற திருத்தலத்தில் உறைபவனே 


என்றே = என்று 


போற்றா நில்லே = போற்றி நிற்பாயாக 


நாவுக்கு அரசர் என்று இறைவனால் பட்டம் வழங்கப்பட்டவர் அப்பரடிகள்.  ஊனை உருக்கும், உயிரை உருக்கும் பாடல்கள் அவர் பாடிய தேவாரம். 


நிறைய இருக்கிறது. 


நேரம் இருப்பின், மூலத்தை தேடிப் படியுங்கள் 



Sunday, January 14, 2024

திருக்குறள் - துறவறம் - விரதம்

 திருக்குறள் - துறவறம் - விரதம் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_14.html



துறவறத்தை பரிமேலழகர் இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொள்கிறார். 


விரதம், ஞானம் என்று. 


ஞானம் என்பது பற்றி முந்திய பதிவில் சிந்தித்தோம். இனி விரதம் பற்றி கூறத் தொடங்குகிறார். 


விரதம் என்றால் என்ன என்று நம்மிடம் கேட்டால் என்ன சொல்லுவோம்?


விரதம் என்றால் பட்டினி கிடப்பது. சாப்பிடாமல் இருப்பது என்றுதான் நாம் சொல்லுவோம். சாப்பட்டுக்கே வழி இல்லாமல் பலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் விரதம் இருக்கிறார்கள் என்று அர்த்தமா? 


பரிமேலழகர் காட்டும் விரதம் வேற லெவல்.



"அவற்றுள், விரங்களாவன, இன்னஅறம் செய்வல் எனவும், இன்ன பாவம் ஒழிவல் எனவும், தம் ஆற்றலுக்கு ஏற்ப வரைந்து கொள்வன. அவைதாம் வரம்பில ஆகலின், பெருகும் என்று அஞ்சி, அவைதம்முளே பலவற்றையும் அகப்படுத்து நிற்கும் சிறப்புடையன சிலவற்றை ஈண்டுக் கூறுவான் தொடங்கி, முதற்கண் 'அருளுடைமை' கூறுகின்றார்"


 "இன்னஅறம் செய்வல் எனவும், இன்ன பாவம் ஒழிவல் எனவும்,"


ஒருவன் உலகில் உள்ள எல்லா அறத்தையும் செய்ய முடியாது. எனவே, எதை எதை செய்யப் போகிறான் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். அதை அப்படியே கடைபிடிக்க வேண்டும். அதே போல் எதை எதை விடுவது என்றும் முடிவு செய்து கொள்ள வேண்டும். அதை அப்படியே நடைமுறைப் படுத்த வேண்டும். 


உதாரணமாக, காலையில் குளித்துவிட்டு தான் சமையல் தொடங்குவேன் என்று வைத்துக் கொண்டால், அதுவும் ஒரு விரதம். தினமும் ஒரு மணி நேரம் நல்ல விடயங்களைப் படிப்பேன் என்று செய்து வந்தால், அதுவும் ஒரு விரதம். எல்லோரிடமும் அன்பாகப் பேசுவேன் என்று வைத்துக் கொண்டால், அது ஒரு விரதம். 


என்ன வந்தாலும், விரதத்தைக் கை விடக் கூடாது.எவ்வளவு துன்பம் வந்தபோதும், உண்மை பேசுவேன் என்ற விரதத்தை அரிச்சந்திரன் கைவிடவில்லை. அரிச்சந்திரன் பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை. அவனை ஏன் இன்றும் கொண்டாடுகிறோம்?  ஒரு விரதத்தை முழுமையாகக் கடைபிடித்தான். அவ்வளவுதான். 


அதே போல், சிலவற்றை செய்யமாட்டேன் என்று இருப்பதும் ஒரு விரதம்தான். மாமிசம் உண்பது இல்லை, புகை பிடிப்பது இல்லை, மது அருந்துவது இல்லை என்று பிடிவாதமாக இருப்பதும் விரதம் தான். 


சரி, இதை எந்த அளவுக்குச் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். 


"தம் ஆற்றலுக்கு ஏற்ப வரைந்து கொள்வன"


நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு. உதாரணாமாக மது அருந்துவதில்லை என்ற விரதம், சில இருமல் மருந்தை உட்கொள்ளும் போது கைவிடப்படும். பல இருமல் மருந்துகளில் கொஞ்சம் மது இருக்கும். தவிர்க்க முடியாது. நாம் உண்ணும் தயிரில் கோடிகணக்கான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. தயிர் விட்டு உண்ணும்போது நாம் அத்தனை உயிர்களையும் உண்ணுகிறோம். விரதம் பழுதுபடும். தவிர்க்க முடியாது. எனவே, "ஆற்றலுக்கு ஏற்றவாறு" என்று கூறினார். 


சரி இப்படி எத்தனை விரதங்கள் இருக்கின்றன? எதையெல்லாம் நாம் கடைபிடிக்க வேண்டும்? என்று கேட்டால்....



"அவைதாம் வரம்பில"


அந்த விரதங்கள் கணக்கில் அடங்காது. அவ்வளவு விரதங்கள் இருக்கின்றன. 



"ஆகலின்,"


எனவே. 



"பெருகும் என்று அஞ்சி"


அவை அனைத்தையும் சொல்லத் தொடங்கினால் மிகப் பெரியதாகி விடும் என்று பயந்து 



", அவைதம்முளே"  - அந்தப் பல விரதங்களில் 


"பலவற்றையும் அகப்படுத்து நிற்கும் சிறப்புடையன சிலவற்றை" பல விரதங்களை உள்ளடக்கிய ஒரு சில சிறப்பான விரதங்களை 


"ஈண்டுக் கூறுவான் தொடங்கி", - இன்று கூறத் தொடங்கி 


"முதற்கண் " - முதலி 


'அருளுடைமை' கூறுகின்றார் = அருளுடைமை என்ற விரதம் பற்றிக் கூறுகிறார். 


துறவுக்கு அருள்தான் முதல் படி. 


பொண்டாட்டியை பிடிக்கவில்லை, கடன்காரன் தொல்லை தாங்க முடியவில்லை, வாழ்க்கைச் சுமை பெரிதாக இருக்கிறது, பயமாக இருக்கிறது என்பதெல்லாம் துறவுக்கு அடிப்படை அல்ல. அருள்தான் அடிப்படை என்பதால் அதை முதலில் கூறத் தொடங்கினார். 


என்னதான் சொல்கிறார் என்று பார்ப்போமா ?



Saturday, January 13, 2024

அறநெறிச்சாரம் - ஓதுமின், ஓதி அடங்குமின்

 அறநெறிச்சாரம் - ஓதுமின், ஓதி அடங்குமின் 



வேண்டாத விடயங்களை படிப்பது என்றால் நிறைய பேருக்கு மிகுந்த ஆர்வம் இருக்கும். நல்ல விடயங்களை படிப்பது என்றால் "அது ஒண்ணும் புரியாது, அதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது" என்று தள்ளி விடுவார்கள். 


இது ஏதோ இன்று நேற்று நடப்பது அல்ல. காலம் காலாமாய் நடக்கும் சங்கதி. 


"தேவை இல்லாதவற்றைப் பற்றி கூறினால், ஆர்வமுடன் கேட்பார்கள்.  தேவையான, பயனுள்ள விடயங்களை கேட்க மாட்டார்கள். அது ஏதோ மெலிந்த உடம்பின் மேல் குளிர் காற்று வீசினார்ப் போல நடுங்குவார்கள், துன்பப் படுவார்கள். நல்ல விடயங்களை கேளுங்கள். படியுங்கள். அதன்படி நடங்கள். படித்து, அடக்கமுடன் நடந்து கொள்ளுங்கள்"


என்கிறது அறநெறிச்சாரம் 


பாடல் 


வேட்டவாய்க் கேட்பர் விரைந்தோடி ஞாலத்தார்

கேட்டைக் கிழத்தியைப் பாடுங்கால்-கோட்டில்லா

ஓதுமின் ஓதி அடங்குமின் என்னுஞ்சொல்

கூதற்குக் கூதி ரனைத்து.


பொருள் 


வேட்டவாய்க் = வேட்டு + அவாய் = வேட்கையுடன், ஆர்வத்துடன் 


கேட்பர் = கேட்பார்கள் 


விரைந்தோடி = விரைந்து ஒட்டி வந்து 


ஞாலத்தார் = ஞாலம் என்றால் உலகம். உலகில் உள்ளவர்கள் 


கேட்டைக் = கேடுதரும், பலன் இல்லாத 


கிழத்தியைப் = பெண்ணைப் பற்றி 


பாடுங்கால் = பாடும் பொழுது 


கோட்டில்லா = கோட்டம் என்றால் வளைவு. குற்றம். கோட்டில்லா என்றால் குற்றம் இல்லாத நூல்களைப்  


ஓதுமின் = மீண்டும் மீண்டும் படியுங்கள் 


அடங்குமின் = படித்த பின், புலன் அடக்கம் கொள்ள வேண்டும் 


என்னுஞ்சொல் = என்று கூறினால் 


கூதற்குக் = குளிர் காற்றில் 


கூதி ரனைத்து = நடுங்கிய உடல் மேல் 


அதாவது, நல்லதைப் படியுங்கள், அதன் படி நடவுங்கள் என்று சொன்னால், குளிர் காற்று அடித்தால் எப்படி உடல் வருத்தம் அடையுமோ, அது போல வருந்துவார்கள். 


ஏதோ ஒரு நடிகை பற்றிய கிசு கிசு என்றால் அதை ஆர்வமாகப் படிப்பார்கள். 


ஓதுதல் என்றால் திரும்ப திரும்பச் சொல்லுதல். ஓதுவார் என்றால் தினமும் கோவில்களில் பாடல்களைப் படிப்பவர். 


நல்ல புத்தகங்களை ஒரு முறை வாசித்துவிட்டு, படித்துவிட்டேன் என்று சொல்லக் கூடாது. மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். எனவே "ஓதுமின்" என்றார். 





Friday, January 12, 2024

பழமொழி - பக்கத்து வீட்டு சமையல்

 பழமொழி - பக்கத்து வீட்டு சமையல் 


பக்கத்து வீட்டில் நல்ல நெய் விட்டு ஏதோ பலகாரம் செய்கிறார்கள். மணம் நம் மூக்கைத் துளைக்கிறது. அல்லது பக்கத்து வீட்டில் கருவாடு போன்ற அசைவ உணவு சமைக்கிறார்கள். அதன் வாசம் நம் மூக்கை தாக்கும் அல்லவா? அங்கே போய் பார்க்க வேண்டாம், என்ன நடக்கிறது என்பதை பார்க்காமலேயே நாம் அறிந்து கொள்ள முடியும். 


அது போல ஒருவன் நல்லவனா, கெட்டவனா என்பதை அறிய அவன் கூடவே இருந்து, அவன் செய்யும் செயல்களை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவன் யாருடன் கூட்டாக இருக்கிறான் என்று பார்த்தாலே போதும். 


தெருவோர டீ கடையில், புகை பிடித்துக் கொண்டு, போகும் வரும் பெண்களை கிண்டல் அடித்துக் கொண்டு இருக்கும் கூட்டத்தில் இருப்பவனை பற்றி நாம் என்ன நினைப்போம்?


இன்னொருவன் பலருடன் சேர்ந்து ஒரு சமய சொற்பொழிவோ, ஆன்மீக சொற்பொழிவோ கேட்கிறான் என்றால், அவனைப் பற்றி நாம் என்ன நினைப்போம்? 


பாடல் 


முயலவோ வேண்டா முனிவரை யானும்

இயல்பினர் என்ப தினத்தால் அறிக

கயலியலும் கண்ணாய் கரியரோ வேண்டா

அயலறியா அட்டூணோ இல்.


பொருள் 


முயலவோ வேண்டா = பெரிய முயற்சி எல்லாம் வேண்டாம் 


முனிவரை யானும் = முனிவர் ஆயினும் 


இயல்பினர் என்ப = அவர்கள் என்ன இயல்பினர் என்பதை 


தினத்தால் அறிக = இனத்தால் அறிக = அவர்கள் கூடியிருக்கும் கூட்டத்தால் அறிந்து கொள்க 

 

கயலியலும் = மீனை போன்ற 


கண்ணாய் = கண்களை உடையவளே 


கரியரோ வேண்டா = கரி என்றால் சாட்சி. சாட்சி எதுவும் வேண்டாம், நிரூபணம் எதுவும் வேண்டாம் 


அயலறியா = பக்கத்து வீட்டுக்காரர் அறியாத 


அட்டூணோ இல் = அடுதல் என்றால் சமைத்தல். ஊன் என்றால் உணவு. பக்கத்து வீட்டுக்காரன் அறியாத சமைத்த உணவு இல்லை. நாம் என்ன சமைக்கிறோம் என்று பக்கத்து வீட்டுக்காரனுக்குத் தெரியும். 


நாம்  நினைத்துக் கொண்டிருப்போம் நம்மை பற்றி யாருக்கும் தெரியாது என்று. நாம் யாரோடு பழகுகிறோமோ, அதை வைத்து இந்த உலகம் நம்மை எடை போடும். 


யாரோடு பழகுகிறோம் என்பது முக்கியம். 


(மணக்க மணக்க சமைக்க வேண்டும் என்பதும் முக்கியம்...:))

Thursday, January 11, 2024

திருக்குறள் - துறவறம் - தொடக்கம்

 திருக்குறள் - துறவறம் - தொடக்கம் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_11.html


துறவறம் என்றால் என்ன, அதன் பயன் என்ன, அது எப்படி வரும் என்பதை எல்லாம் பரிமேலழகர் மிகத் தெளிவாக, மிகச் சுருக்கமாக விளக்குகிறார். 


"இனி, முறையானே துறவறம் கூறிய தொடங்கினார். துறவறமாவது, மேற்கூறிய இல்லறத்தின் வழுவாது ஒழுகி, அறவுடையராய்ப்  பிறப்பினை அஞ்சி, வீடுபேற்றின் பொருட்டுத் துறந்தார்க்கு உரிய அறம். அதுதான் வினைமாசு தீர்ந்து, அந்தக்கரணங்கள் தூயவாதற்பொருட்டு, அவராற் காக்கப்படும் விரதங்களும், அவற்றான் அவை தூயவாயவழி உதிப்பதாய ஞானமும் என இருவகைப்படும்."


ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னும் மிக நீண்ட பொருள் உண்டு. 


விரித்து சிந்திப்போம். 


முதலில் துறவறம் என்றால் என்ன என்று சொல்கிறார். 


"மேற்கூறிய இல்லறத்தின் வழுவாது ஒழுகி"

துறவறம் என்பது இல்லறத்தின் நீட்சி. இல்லறத்தை ஒரு தவறு இல்லாமல் நடத்த வேண்டும் என்பது முதல் நிபந்தனை. பல பேர் இல்லறத்தில் சிக்கல் அதிகமானால் அதை சமாளிக்க முடியாமல் சந்நியாசியாகப் போகிறேன் என்று கிளம்பி விடுகிறார்கள். அது அல்ல துறவு. இல்லறத்தை முழுமையாக, சிறப்பாக, ஒரு குற்றமும் இன்றி நடத்த வேண்டும். 


" அறவுடையராய்ப்"


அறத்தின் வழி நிற்க வேண்டும். ஊரை ஏமாற்ற காவி அணியக் கூடாது. அது துறவறம் அல்ல. அறத்தின் வழி நிற்பதுதான் துறவறம். 


"  பிறப்பினை அஞ்சி"

மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு அஞ்சி, அதில் இருந்து விடுபட எடுக்கும் நடவடிக்கைதான் துறவறம். இந்தப் பிறப்பு என்பது நல்லாத்தானே இருக்கிறது என்று நினைபாவர்களுக்கு துறவு வாய்க்காது. 


"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்" என்று மணிவாசகர் கூறியது போல 


"எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனது இடர் பிறவி " என்பார் அருணகிரி. 


மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்

வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா

இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னை

கருப்பையிலே வாராமற் கா’


என்னை மீண்டும் மீண்டும் பெற்று, தாய்மார்களும் உடல் சலித்து விட்டார்கள். நான் மீண்டும் மீண்டும் பிறப்பது எனக்கு மட்டும் துன்பம் அல்ல. என்னை ஈன்றெடுக்கும் அன்னைமார்களுகும் துன்பம்தான். ஓடி, ஆடி, விளையாடி, பொருள் சேர்க்க உழைத்து, என் கால் வலிக்கிறது. ஒவ்வொரு முறை நான் பிறக்கும் போதும் பிரமன் எனக்கு தலை எழுத்தை எழுத வேண்டும். எழுதி எழுதி பிரமனும் கை சலித்து விட்டான். இன்னும் ஒரு கருப்பையில் வாராமல் என்னை காத்தருள் என்று இருப்பையூர் வாழும் சிவனை உருகி வேண்டுகிறார் பட்டினத்தார். 


"வீடுபேற்றின் பொருட்டுத்"


பிறப்பினை அஞ்சி என்ன செய்ய? மீண்டும் பிறக்காமல் இருக்க வீடு பேறு அடைய வேண்டும். அதற்கு துறவு அவசியம். 


"துறந்தார்க்கு உரிய அறம்."


அப்படிப்பட்ட துறவை மேற் கொள்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகளை இந்த துறவற இயலில் கூற இருக்கிறார். 



"அதுதான்"


அந்தத் துறவரமானது



"வினைமாசு தீர்ந்து"


வினையினால் வரும் குற்றங்கள் தீர்ந்து. அதாவது வினையினால் வரும் பாவ புண்ணியங்கள் தொடராமல். புண்ணியமும் பிறவிக்கு வழி வகுக்கும். 


"அறம் பாவம் எனும் அருங்கயிற்றால் கட்டி"


என்பார் மணிவாசகர். 


அறமும், பாவமும் நம்மை பிறவியில் கட்டும் கயிறுகள். இரண்டும் தீர வேண்டும். 


"அந்தக்கரணங்கள் தூயவாதற்பொருட்டு"


அந்தக்கரணங்கள் என்றால் என்ன? 


கரணம் என்றால் செய்கை, செயல் என்று பொருள். தோப்புகரணம், குட்டிக் கரணம் என்று சொல்கிறோம் அல்லவா? அந்தக் கரணம் என்றால் உள்ளே நடக்கும் செயல்பாடுகள். 


கண் என்பது புற உறுப்பு. கண் காண்பது இல்லை. கண் காண்பதற்கு உதவி செய்கிறது. கண் சரியாகத் தெரியவில்லை என்றால் கண்ணாடி போட்டுக் கொள்கிறோம். அதன் பின் சரியாகத் தெரிகிறது. அப்படி என்றால் கண்ணாடி பார்கிறது என்று அர்த்தமா? இல்லை. கண்ணாடி நாம் காண உதவி செய்கிறது. அது போல கண் உதவி செய்கிறது. 


இப்படி அனைத்து புலங்களில் இருந்தும் வரும் செய்திகளை பகுத்து, பிரித்து, ஆராய்ந்து நமக்கு சொல்லும் கருவிகளுக்கு அந்தக்கரணங்கள் என்று பெயர். 


நான்கு வித அந்தக் கரணங்கள் இருக்கின்றன. 


மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்பன.


கண், காது, மூக்கு, தோல், நாக்கு இவற்றில் இருந்து வரும் செய்திகளை அலசி ஆராய்ந்து நமக்கு இது இன்னது என்று சொல்லுபவை இந்த நான்கும். இந்த நான்கிற்கும் உள்ள தொடர்பினை நமது வேதாந்தங்களும்,தர்க்க இயலும் பலவாறு ஆராய்ந்து சொல்கின்றன. 


இந்த நான்கு அந்தக்கரணங்களும் தூய்மையாக வேண்டும். நாம் அணியும் மூக்குக் கண்ணாடி எண்ணெய் பிசுக்கு ஏறி, அழுக்கு படித்து இருந்தால் நம்மால் சரிவர பார்க்க முடியாது அல்லவா? அது போல இந்த அந்தக்கரணங்கள் தூயவையாக இல்லாவிட்டால் உண்மை சரியாக நமக்கு புலப்படாது. எனவே, அவற்றை தூய்மையாக வேண்டும். 


"அவராற் காக்கப்படும்"


அப்படி தூய்மையாக்க வேண்டுபவர்கள் செய்யும் செயல்கள், கடமைகள் விரதங்கள் எனப்படும். விரதங்கள் மூலம் அந்தக்கரணங்களை தூய்மை படுத்த முடியும். 


உடனே, விரதம் என்றால் பட்டினி கிடப்பது, உண்ணாமல் இருப்பது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. விரதம் என்றால் என்ன என்பதை பின்னர் விளக்குகிறார். 



"விரதங்களும்"  


அவர்களால் கடைபிடிக்கப்படும் விரதங்களும் 


" அவற்றான் அவை தூயவாயவழி உதிப்பதாய ஞானமும்"


விரதம் இருந்தால் என்ன கிடைக்கும் என்றால், "ஞானம்".


விரதம் இல்லாமல் ஞானம் வராது. ஞானம் என்பது படித்து வருவது அல்ல. விரதங்களின் மூலம் வருவது.



" என இருவகைப்படும்."


துறவறம் என்பது விரதம், ஞானம் என்ற இரண்டு வகைப்படும்.


 - இல்லறத்தின் வழுவாது ஒழுகி, 

- அறவுடையராய்ப்  

- பிறப்பினை அஞ்சி, 

- வீடுபேற்றின் பொருட்டுத் 

- துறந்தார்க்கு உரிய அறம். 

-  வினைமாசு தீர்ந்து, \

- அந்தக்கரணங்கள் தூயவாதற்பொருட்டு, 

- அவராற் காக்கப்படும் விரதங்களும், 

- அவற்றான் அவை தூயவாயவழி உதிப்பதாய ஞானமும் 

- என இருவகைப்படும்."


இதைவிட தெளிவாக யாரால் கூற முடியும்.


அடுத்து விரதம் பற்றி கூற இருக்கிறார். 


அதை அடுத்த பதிவில் சிந்திக்க இருக்கிறோம்.