Thursday, January 11, 2024

திருக்குறள் - துறவறம் - தொடக்கம்

 திருக்குறள் - துறவறம் - தொடக்கம் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_11.html


துறவறம் என்றால் என்ன, அதன் பயன் என்ன, அது எப்படி வரும் என்பதை எல்லாம் பரிமேலழகர் மிகத் தெளிவாக, மிகச் சுருக்கமாக விளக்குகிறார். 


"இனி, முறையானே துறவறம் கூறிய தொடங்கினார். துறவறமாவது, மேற்கூறிய இல்லறத்தின் வழுவாது ஒழுகி, அறவுடையராய்ப்  பிறப்பினை அஞ்சி, வீடுபேற்றின் பொருட்டுத் துறந்தார்க்கு உரிய அறம். அதுதான் வினைமாசு தீர்ந்து, அந்தக்கரணங்கள் தூயவாதற்பொருட்டு, அவராற் காக்கப்படும் விரதங்களும், அவற்றான் அவை தூயவாயவழி உதிப்பதாய ஞானமும் என இருவகைப்படும்."


ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னும் மிக நீண்ட பொருள் உண்டு. 


விரித்து சிந்திப்போம். 


முதலில் துறவறம் என்றால் என்ன என்று சொல்கிறார். 


"மேற்கூறிய இல்லறத்தின் வழுவாது ஒழுகி"

துறவறம் என்பது இல்லறத்தின் நீட்சி. இல்லறத்தை ஒரு தவறு இல்லாமல் நடத்த வேண்டும் என்பது முதல் நிபந்தனை. பல பேர் இல்லறத்தில் சிக்கல் அதிகமானால் அதை சமாளிக்க முடியாமல் சந்நியாசியாகப் போகிறேன் என்று கிளம்பி விடுகிறார்கள். அது அல்ல துறவு. இல்லறத்தை முழுமையாக, சிறப்பாக, ஒரு குற்றமும் இன்றி நடத்த வேண்டும். 


" அறவுடையராய்ப்"


அறத்தின் வழி நிற்க வேண்டும். ஊரை ஏமாற்ற காவி அணியக் கூடாது. அது துறவறம் அல்ல. அறத்தின் வழி நிற்பதுதான் துறவறம். 


"  பிறப்பினை அஞ்சி"

மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு அஞ்சி, அதில் இருந்து விடுபட எடுக்கும் நடவடிக்கைதான் துறவறம். இந்தப் பிறப்பு என்பது நல்லாத்தானே இருக்கிறது என்று நினைபாவர்களுக்கு துறவு வாய்க்காது. 


"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்" என்று மணிவாசகர் கூறியது போல 


"எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனது இடர் பிறவி " என்பார் அருணகிரி. 


மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்

வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா

இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னை

கருப்பையிலே வாராமற் கா’


என்னை மீண்டும் மீண்டும் பெற்று, தாய்மார்களும் உடல் சலித்து விட்டார்கள். நான் மீண்டும் மீண்டும் பிறப்பது எனக்கு மட்டும் துன்பம் அல்ல. என்னை ஈன்றெடுக்கும் அன்னைமார்களுகும் துன்பம்தான். ஓடி, ஆடி, விளையாடி, பொருள் சேர்க்க உழைத்து, என் கால் வலிக்கிறது. ஒவ்வொரு முறை நான் பிறக்கும் போதும் பிரமன் எனக்கு தலை எழுத்தை எழுத வேண்டும். எழுதி எழுதி பிரமனும் கை சலித்து விட்டான். இன்னும் ஒரு கருப்பையில் வாராமல் என்னை காத்தருள் என்று இருப்பையூர் வாழும் சிவனை உருகி வேண்டுகிறார் பட்டினத்தார். 


"வீடுபேற்றின் பொருட்டுத்"


பிறப்பினை அஞ்சி என்ன செய்ய? மீண்டும் பிறக்காமல் இருக்க வீடு பேறு அடைய வேண்டும். அதற்கு துறவு அவசியம். 


"துறந்தார்க்கு உரிய அறம்."


அப்படிப்பட்ட துறவை மேற் கொள்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகளை இந்த துறவற இயலில் கூற இருக்கிறார். 



"அதுதான்"


அந்தத் துறவரமானது



"வினைமாசு தீர்ந்து"


வினையினால் வரும் குற்றங்கள் தீர்ந்து. அதாவது வினையினால் வரும் பாவ புண்ணியங்கள் தொடராமல். புண்ணியமும் பிறவிக்கு வழி வகுக்கும். 


"அறம் பாவம் எனும் அருங்கயிற்றால் கட்டி"


என்பார் மணிவாசகர். 


அறமும், பாவமும் நம்மை பிறவியில் கட்டும் கயிறுகள். இரண்டும் தீர வேண்டும். 


"அந்தக்கரணங்கள் தூயவாதற்பொருட்டு"


அந்தக்கரணங்கள் என்றால் என்ன? 


கரணம் என்றால் செய்கை, செயல் என்று பொருள். தோப்புகரணம், குட்டிக் கரணம் என்று சொல்கிறோம் அல்லவா? அந்தக் கரணம் என்றால் உள்ளே நடக்கும் செயல்பாடுகள். 


கண் என்பது புற உறுப்பு. கண் காண்பது இல்லை. கண் காண்பதற்கு உதவி செய்கிறது. கண் சரியாகத் தெரியவில்லை என்றால் கண்ணாடி போட்டுக் கொள்கிறோம். அதன் பின் சரியாகத் தெரிகிறது. அப்படி என்றால் கண்ணாடி பார்கிறது என்று அர்த்தமா? இல்லை. கண்ணாடி நாம் காண உதவி செய்கிறது. அது போல கண் உதவி செய்கிறது. 


இப்படி அனைத்து புலங்களில் இருந்தும் வரும் செய்திகளை பகுத்து, பிரித்து, ஆராய்ந்து நமக்கு சொல்லும் கருவிகளுக்கு அந்தக்கரணங்கள் என்று பெயர். 


நான்கு வித அந்தக் கரணங்கள் இருக்கின்றன. 


மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்பன.


கண், காது, மூக்கு, தோல், நாக்கு இவற்றில் இருந்து வரும் செய்திகளை அலசி ஆராய்ந்து நமக்கு இது இன்னது என்று சொல்லுபவை இந்த நான்கும். இந்த நான்கிற்கும் உள்ள தொடர்பினை நமது வேதாந்தங்களும்,தர்க்க இயலும் பலவாறு ஆராய்ந்து சொல்கின்றன. 


இந்த நான்கு அந்தக்கரணங்களும் தூய்மையாக வேண்டும். நாம் அணியும் மூக்குக் கண்ணாடி எண்ணெய் பிசுக்கு ஏறி, அழுக்கு படித்து இருந்தால் நம்மால் சரிவர பார்க்க முடியாது அல்லவா? அது போல இந்த அந்தக்கரணங்கள் தூயவையாக இல்லாவிட்டால் உண்மை சரியாக நமக்கு புலப்படாது. எனவே, அவற்றை தூய்மையாக வேண்டும். 


"அவராற் காக்கப்படும்"


அப்படி தூய்மையாக்க வேண்டுபவர்கள் செய்யும் செயல்கள், கடமைகள் விரதங்கள் எனப்படும். விரதங்கள் மூலம் அந்தக்கரணங்களை தூய்மை படுத்த முடியும். 


உடனே, விரதம் என்றால் பட்டினி கிடப்பது, உண்ணாமல் இருப்பது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. விரதம் என்றால் என்ன என்பதை பின்னர் விளக்குகிறார். 



"விரதங்களும்"  


அவர்களால் கடைபிடிக்கப்படும் விரதங்களும் 


" அவற்றான் அவை தூயவாயவழி உதிப்பதாய ஞானமும்"


விரதம் இருந்தால் என்ன கிடைக்கும் என்றால், "ஞானம்".


விரதம் இல்லாமல் ஞானம் வராது. ஞானம் என்பது படித்து வருவது அல்ல. விரதங்களின் மூலம் வருவது.



" என இருவகைப்படும்."


துறவறம் என்பது விரதம், ஞானம் என்ற இரண்டு வகைப்படும்.


 - இல்லறத்தின் வழுவாது ஒழுகி, 

- அறவுடையராய்ப்  

- பிறப்பினை அஞ்சி, 

- வீடுபேற்றின் பொருட்டுத் 

- துறந்தார்க்கு உரிய அறம். 

-  வினைமாசு தீர்ந்து, \

- அந்தக்கரணங்கள் தூயவாதற்பொருட்டு, 

- அவராற் காக்கப்படும் விரதங்களும், 

- அவற்றான் அவை தூயவாயவழி உதிப்பதாய ஞானமும் 

- என இருவகைப்படும்."


இதைவிட தெளிவாக யாரால் கூற முடியும்.


அடுத்து விரதம் பற்றி கூற இருக்கிறார். 


அதை அடுத்த பதிவில் சிந்திக்க இருக்கிறோம். 



2 comments:

  1. எப்பப்பா...என்னே ஒரு விளக்கம்... அருமையான பதிவு... மிக்க நன்றி...

    ReplyDelete
  2. ஐயா , வணக்கம் . பரிமேலழகர் - வள்ளுவர் சிந்தனைய்யைக் காட்ட - நீங்கள் அழகரை காட்டினீர்கள் . மகிழ்ச்சி .

    ReplyDelete