Tuesday, January 2, 2024

கம்ப இராமாயணம் - அதையெல்லாம் பார்த்தாயே, இதைப் பார்க்க மாட்டாயா?

கம்ப இராமாயணம் - அதையெல்லாம் பார்த்தாயே, இதைப் பார்க்க மாட்டாயா?

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post.html


தான் பட்ட அவமானத்தால் வருந்தி தன் அண்ணனான இராவணனை அழைத்துப் புலம்புகிறாள் சூர்பனகை. 


இராவணா, நீ எதையெல்லாம் பார்த்து இருக்கிறாய்....


முன்பு ஒரு நாள் ஐராவதம் என்ற யானையின் மேல் ஏறி உன்னோடு போர் புரிய வந்தான் இந்திரன். அவனை போர்க் கோலத்தில் கண்டாய். பின் அவன் உன்னோடு போர் புரிந்து, உயிருக்குப் பயந்து தப்பி ஓடினான். அப்போது அவனுடைய முதுகைக் கண்டாய். அவன புற முதுகு காண ஓடச் செய்தாய். அப்பேற்பட்ட வலிமை உள்ளவன் நீ. உன் தங்கை இந்த நிலையில் இருந்து கவலைப் படுகிறேன். இதைக் காண வரமாட்டாயா என்று ஓலமிடுகிறாள். 


பாடல்  


'ஆர்த்து, ஆணைக்கு-அரசு உந்தி, அமரர்

     கணத்தொடும் அடர்ந்த

போர்த் தானை இந்திரனைப் பொருது,

     அவனைப் போர் தொலைத்து,

வேர்த்தானை, உயிர் கொண்டு

     மீண்டானை, வெரிந் பண்டு

பார்த்தானே! யான் பட்ட

     பழி வந்து பாராயோ?


பொருள் 


'ஆர்த்து = ஆரவராமாக சப்தம் எழுப்பிக் கொண்டு வந்த 


ஆனைக்கு-அரசு = யானைகளுக்கு அரசனான ஐராவதம் 


உந்தி = அதன் மேல் ஏறி 


அமரர் = தேவ(ர்) 


கணத்தொடும் = படைகளோடு 


அடர்ந்த = போருக்கு வந்த 


போர்த் தானை = போர் தலைவனை 


இந்திரனைப் = இந்திரனை 


பொருது = சண்டையிட்டு 


அவனைப் = அந்த இந்திரனை 


போர் தொலைத்து = போரில் தோற்கடித்து 


வேர்த்தானை = உயிருக்கு பயந்து ஓடி உடல் எல்லாம் வேர்த்தானை  


உயிர் கொண்டு = உயிரை விடாமல் 


மீண்டானை = தாபியவனை 


வெரிந் = புற முதுகு 


பண்டு = பழைய நாளில், முன்பொரு நாள் 


பார்த்தானே!  = பார்த்த இராவணனே 


யான் பட்ட = நான் அடைந்த 


பழி வந்து பாராயோ? = பழியை பார்க்க வர மாட்டாயா ?


ஆனை என்ற சொல்லை எவ்வளவு அழகாக கையாள்கிறான் கம்பன். 


ஆனைக்கு அரசு - ஐராவதம் 

போர்த் தானை = போர்த் தலைவனை 

வேர்த்தானை = வேர்க்க விறுவிறுக்க ஓடியவனை 

மீண்டானை = உயிரை கையில் பற்றிக் கொண்டு மீண்டவனை 

பார்த்தானை = பார்த்தவனே 


கம்பனில் இரசிக்க ஆயிரம் இருக்கு. 


சூர்பனகையின் இந்த அவலம், பின்னாளில் எப்படி எல்லாம் வெடிக்கப் போகிறது என்று பார்க்க இருக்கிறோம். 


அசுர குலத்தை அடியோடு வேர் அறுத்தது அவள் பட்ட அவமானம். 


யாருடைய தன்மானத்தையும் சீண்டிப் பார்க்கக் கூடாது. 


கூனியின் தன் மானத்தை சீண்டியதால் கானகம் வர நேர்ந்தது. 


சூர்பனகையின் தன்மானத்தை சீண்டியதால் சீதையை இழந்து எவ்வளவு சோகம்!


இராவணன் சீதையை கவர்ந்தது தவறு. அந்த தவற்றின் வேர் எங்கே இருந்தது?


சிந்திப்போம். 











1 comment: