Friday, January 26, 2024

கம்ப இராமாயணம் - சூர்பனகை - மானுடவர்க்கு ஆற்றாது

கம்ப இராமாயணம் -  சூர்பனகை - மானுடவர்க்கு ஆற்றாது


இலக்குவனால் மூக்கும், காதும், முலையும் துண்டிக்கப்பட்ட சூர்பனகை தன் அண்ணனான இராவணனை நினைத்து அழுகிறாள் ....


"இராவணா, நீ வாயு பகவானையும், அக்னி பகவானையும், கொடுமையான எமனையும், ஆகாயத்தையும், நவ கிரகங்களையும், ஆட்டிப் படைத்தாய். ஆனால், இன்று இந்த இரண்டு மானிடர்களுக்கு பயந்து சிவன் கொடுத்த வாளினையும் மறந்து பயந்து நின்று விட்டாயா?"


பாடல் 


 'காற்றினையும், புனலினையும், கனலினையும்,

     கடுங் காலக்

கூற்றினையும், விண்ணினையும், கோளினையும்,

     பணி கொண்டற்கு

ஆற்றினை நீ; ஈண்டு, இருவர்

     மானுடவர்க்கு ஆற்றாது

மாற்றினையோ, உன் வலத்தை? சிவன்

     தடக்கை வாள் கொண்டாய்!


பொருள் 


காற்றினையும் = காற்றின் கடவுளையும் (வாயு பகவான்)  

புனலினையும் = நீரின் கடவுளையும் (வருண பகவானையும்) 

கனலினையும் = தீயின் கடவுளையும் )அக்னி பகவானையும்) 

கடுங் காலக் கூற்றினையும் = கடுமையான கூற்றுவனையும் 


விண்ணினையும் = விண்ணுலகையும் 


கோளினையும் = ஒன்பது கிரகங்களையும் 


பணி கொண்டற்கு = உனக்கு வேலை செய்யும் படி 


ஆற்றினை நீ = வழி செய்தாய் நீ 


ஈண்டு = இன்று 


இருவர் = இரண்டு 


மானுடவர்க்கு  = மனிதர்களுக்கு 


ஆற்றாது = அடக்க முடியாமல் 


மாற்றினையோ = மாற்றி வைத்து விட்டாயா? 


உன் வலத்தை?  = உன் பலத்தை 


சிவன் = சிவனின் 


தடக்கை வாள் கொண்டாய்! - பெருமை கொண்ட வாளினைக் கொண்டாய் 


அவ்வளவு வலிமை இருந்தது உன்னிடம். சிவன் மேல் பக்தி கொண்டவன். சிவனிடம் தவம் செய்து வாளினைப் பெற்றவன். அப்பேற்பட்ட நீ இந்த மானிடற்கு பயந்து விட்டாயா?



1 comment:

  1. தவறு செய்தால் தண்டனை

    ReplyDelete