கம்ப இராமாயணம் - இந் நின்றாள் என்னை ஈன்றாள்
பிள்ளைகளுக்கு நல்லது செய்கிறோம் என்று பெற்றோர் நிறைய காரியங்களை செய்வார்கள். பிற்காலத்தில் அந்தப் பிள்ளைகளே அவற்றை மறுதலித்து, பெற்றோர் பால் வெறுப்பு கொள்வார்கள்.
"...உனக்காகத்தானே நான் அவ்வளவு ஓடி ஓடி உழைத்தேன்...நீ நல்லா இருக்க வேண்டும் என்று தானே இதெல்லாம் செய்தேன் ..." என்று ஒரு தகப்பன் கூறுவதும்....
"...யாருக்கு வேணும் உன் பணம்...ஒரு நாளாவது என்னோடு உட்கார்ந்து அன்பா பேசி இருக்கிறாயா? கை பிடித்து நடந்து இருக்கிறாயா? கதை சொல்லி தூங்கப் பண்ணி இருக்கிறாயா? இப்ப வந்து பாசம் இல்லை, அன்பு இல்லை என்றால் எங்கிருந்து வரும்...நீ எனக்கு பணம் சேர்த்து வைத்தாய், இல்லை என்று சொல்லவில்லை...பதிலுக்கு நான் வேண்டுமானால் உனக்குப் பணம் தருகிறேன்..."
என்று மகன் சொல்லுவதும் நாம் காணக் கூடிய காட்சிதான்.
இது ஒரு உதாரணம். இப்படி பலப் பல சொல்லலாம்.
அன்பினால் செய்தேன் என்பதலாயே ஒன்று சரியாகி விடாது. எது சரி, எது தவறு என்று அறிவு கொண்டு சிந்திக்க வேண்டும். எது அறம், எது அறம் அல்லாதது என்ற அறிவு வேண்டும்.
பரதனுக்கு நாடு வேண்டும் என்று கைகேயி நினைத்ததில் என்ன தவறு? தன் பிள்ளைக்கு பெரிய இராஜ்யத்தை கொடுக்கிறோம். அவன் வந்து தன்னைக் கட்டிக் கொண்டு மகிழ்வான் என்று கைகேயி நினைத்து இருக்கக் கூடும்.
நடந்தது என்ன?
பரதனிடம், கைகேயைக் காட்டி குகன் கேட்கிறான் , "இவர் யார் என்று"
"பரதனுக்கு கோபமும், வெறுப்பும், அருவெறுப்பும் பொங்கி பொங்கி வருகிறது....
"உலகில் உள்ள அனைத்து துன்பங்களையும் படைத்தவள் இவள். படைத்தது மட்டும் அல்ல, அவற்றை வளர்த்து எடுப்பவளும் இவள். பாவியான என்னை மட்டும் அல்ல, இந்த உலகில் உள்ள அனைவர்க்கும் உயிர் வாழ்வதே வீண், உயிரை விட்டு விடலாம் என்று நினைக்கும் அளவுக்கு அவர்களை நடை பிணமாக்கியவள் இவள். இவ்வளவும் செய்து விட்டு ஒன்றும் செய்யாத மாதிரி எப்படி முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறாள் பார். இவள் யார் என்று இன்னுமா உனக்குத் தெரியவில்லை? இவள் என்னைப் பெற்ற தாய்"
என்று கைகேயியை, பரதன் குகனிடம் அறிமுகம் செய்கிறான்.
பாடல்
‘படர் எலாம் படைத்தாளை, பழி வளர்க்கும்
செவிலியை, தன் பாழ்த்த பாவிக்
குடரிலே நெடுங் காலம் கிடந்தேற்கும்
உயிர்ப் பாரம் குறைந்து தேய,
உடர் எலாம் உயிர் இலா எனத் தோன்றும்
உலகத்தே, ஒருத்தி அன்றே,
இடர் இலா முகத்தாளை, அறிந்திலையேல்,
இந் நின்றாள் என்னை ஈன்றாள்.’
பொருள்
‘படர் = துன்பம். பெரும் துன்பம்.
எலாம் படைத்தாளை = அனைத்து பெரிய துன்பங்களையும் உண்டாகியவளை
பழி வளர்க்கும் = பழியை வளர்க்கும்
செவிலியை = செவிலித்தாயை
தன் = தன்னுடைய
பாழ்த்த = பாழாய்ப்போன
பாவிக் குடரிலே = பாவம் செய்த குடலிலே
நெடுங் காலம் = நீண்ட காலம்
கிடந்தேற்கும் = கிடந்த எனக்கும்
உயிர்ப் பாரம் = உயிரே பாரமாய் ஆகும் படி. பாரத்தை எப்போது இறக்கி வைப்போம் என்று நினைப்பது போல, எப்போது இந்த உயிரை விடுவோம் என்ற என்று நினைக்கும் படி
குறைந்து தேய = குறைந்து தேய
உடர் எலாம் = உடல்கள் எல்லாம்
உயிர் இலா எனத் தோன்றும் = உயிரற்றவை என்று தோன்றும் படி
உலகத்தே = இந்த உலகத்தில்
ஒருத்தி அன்றே = சிறந்த ஒருத்தி
இடர் இலா முகத்தாளை = ஒன்றுமே நடக்காதது போல் முகத்தினை வைத்துக் கொண்டு
அறிந்திலையேல் = நீ இன்னுமா அறிந்து கொள்ளவில்லை
இந் நின்றாள் = இங்கே நிற்கிறாளே இவள்
என்னை ஈன்றாள் = என்னை பெற்றத் தாய்
என்று அறிமுகள் செய்கிறான்.
எல்லோரும் அருகில் இருக்கிறார்கள். ஒரு மூன்றாவது மனிதனிடம் தன் தாயைப் பற்றி பரதன் அவ்வாறு பேசுகிறான்.
கூனி அவளுடைய மனதை மாற்றும் வரை கைகேயி மிக நல்லவள். இராமனை தன் சொந்த மகனாக நினைத்தவள். தயரதனுக்கு அன்பு மனைவி.
பரதனையும் சீரும் சிறப்புமாகவே வளர்த்து இருப்பாள்.
"சிறு வயது முதலே அவள் அப்படித்தான்" என்று பரதன் குற்றம் சாற்ற முடியாது.
கைகேயி தவறு செய்து விட்டாள். அறம் தவறினாள். அதற்காக பெற்ற தாயை பரதன் இவ்வளவு கீழ்த்தரமாக பேசலாமா?
இத்தனைக்கும் அவள் பரதனுக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை.
ஆயிரம் இராமர், கோடி இராமர் உனக்கு ஈடாக மாட்டார்கள் என்று பாராட்டப் பெற்ற பரதன் தாயை இவ்வளவு தாழ்வாக பேசலாமா?
ஏன் பேசினான்?
முதலாவது, அன்பு, பாசம் இவற்றிருக்கு எல்லாம் மேலானது அறம். கைகேயி நடுவு நிலை தவறினாள். தன் பிள்ளை என்பதற்காக தர்மத்தை காற்றில் பறக்க விட்டாள். அன்பு என்ற போர்வைக்குள் அவள் செய்த முதல் தவறு.
இரண்டாவது, இறைவனுக்கும் பக்தனுக்கும் நடுவில் அவள் வந்து நின்றாள். பரதன் என்ற பக்தனை இராமன் என்ற பரம் பொருளிடம் இருந்து பிரித்து விட்டாள். அது ஒரு மிகப் பெரிய தவறு. பக்தி செலுத்துவோரை குழப்பக் கூடாது. கணவன் மனைவி உறவு போல் அது ஒரு புனிதமான உறவு. அதன் நடுவில் சென்று குழப்பம் விழைவிக்கக் கூடாது.
இராவணன் செய்த தவறு என்ன? சீதைக்கும் இராமனுக்கும் இடையில் அவன் வந்தான்.
யோசித்துப் பார்த்தால், எந்த உறவுக்கும் நடுவில் செல்வது தவறு என்றே படுகிறது. மகனுக்கும், மருமகளுக்கும் உள்ளை உறவின் நடுவே மாமியார் மூக்கை நுழைப்பதும் தவறுதான்.
மூன்றாவதாக, இறைவனை விட்டு விட்டு, உலக இன்பங்களில் நாட்டம் கொல்லுவது. இராமனை காட்டுக்கு அனுப்பி விட்டு, அரசை ஆள்வது எவ்வளவு அறிவான செயல் ? பலர் அப்படித்தான் செய்கிறார்கள். கடவுளைப் பற்றி அப்புறம் (பதினாலு வருடம்) சிந்திக்கலாம். இப்போதைக்கு வீடு, வாசல், சொத்து, பத்து என்று இருப்போம் என்று இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் கைகேயி என்றே உருவகம் செய்து கொள்ளலாம்.
உலகிலேயே தாயன்புதான் மிக உயர்ந்தது என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம்.
அது கூட அறத்துக்குப் பிறகுதான். அது கூட பக்திக்குப் பிறகுதான் என்று என்று சொல்கிறதோ நம் இலக்கியங்கள்....
சிந்திப்போம்.