வில்லி பாரதம் பிறந்த கதை
வில்லிபுத்துராழ்வார் ஒரு தீவிர வைணவ பக்தர். சிறந்த தமிழ் அறிஞர். தமிழில் வரும் படைப்புகளில் தவறு இருக்கக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறை உள்ளவர். புலவர், கவிஞர் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்களை அவர் வாதுக்கு அழைப்பார். அப்படி வாதிடும் போது ஒரு நிபந்தனை வைப்பார். இரும்பினால் செய்த கொக்கி போன்ற ஒரு கூறிய ஆயுதத்தை அவர்கள் காதில் மாட்டி அதன் ஒரு முனையையை தன் கையில் வைத்துக் கொள்வார். அதே போல் ஒன்றை தன் காதில் மாட்டி அவர்கள் கையில் கொடுத்து விடுவார். வாதில் வென்றவர் கொக்கியை ஒரு இழு இழுத்தார் தோற்றவரின் காது அறுந்து விழுந்து விடும். இப்படி பல பேரின் காதுகளை அறுத்தவர் வில்லிபுத்துராழ்வார்.
இதை கேள்விப் பட்ட அருணகிரிநாதர் , காதறுப்பது தகாது என்று எண்ணி, வில்லிபுத்துராழ்வாரோடு வாதுக்குப் போனார்.
வில்லியார் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அருணகிரி பெருமான் விடை பகர்ந்தார்.
பின் அருணகிரி நாதர் ஒரு பாடலை கூறி அதற்க்கு பொருள் கேட்டார். அதன் பொருள் தெரியாமல் வில்லிபுத்தாரழ்வார் திகைத்தார். "காதை அறுக்கலாமா " என்று அருணகிரி கேட்க, சரி என்றார் வில்லிபுத்துராழ்வார்.
அறுப்பாரா அருணகிரி ? காதறுப்பது தகாது என்று கூறி...காதறுத்த பாவம் போக தமிழில் பாரதம் பாடுக என்று அவரைப் பணித்தார்.
அருணகிரி பாடி, வில்லிபுத்துராழ்வார் பதில் தெரியாமல் தவித்த அந்தப் பாடல்
திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே”
வாரியார் ஸ்வாமிகள் அருளிய உரை
திதத்தத் தத்தித்த – “திதத்தத் தத்தித்த” என்னும் தாளமானங்களை,
திதி – திருநடனத்தால் காக்கின்ற
தாதை – பரமசிவனும்
தாத – பிரமனும்
துத்தி – படப்பொறியினையுடையதத்தி – பாம்பினுடைய
தா – இடத்தையும்
தித – நிலைபெற்று
தத்து – ததும்புகின்ற
அத்தி – சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி – தயிரானது
தித்தித்ததே – தித்திக்கின்றதென்று
து – உண்ட கண்ணனும்
துதித்து – துதி செய்து வணங்குகின்ற
இதத்து – பேரின்ப சொரூபியான
ஆதி – முதல்வனே!
தத்தத்து – தந்தத்தையுடைய
அத்தி – அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை – கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத – தொண்டனே!
தீதே – தீமையே
துதை – நெருங்கிய
தாது – சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து – மரணத்தோடும்
உதி – ஜனனத்தோடும்
தத்தும் – பல தத்துக்களோடும்
அத்து – இசைவுற்றதுமான
அத்தி – எலும்புகளை மூடிய
தித்தி – பையாகிய இவ்வுடல்
தீ – அக்கினியினால்
தீ – தகிக்கப்படுகின்ற
திதி – அந்நாளிலே
துதி – உன்னைத் துதிக்கும்
தீ – புத்தி
தொத்தது – உனக்கே அடிமையாகவேண்டும்